இவ்வாரம் மற்றும் கடந்த வாரத்தின் நீயா நானா அத்தியாயங்கள் மிகச்சிறப்பாக வந்துள்ளன. நகரத்தை நோக்கி வரவிரும்பும், கிராமத்து ஆண்களை மணமுடிக்க விரும்பாத நவீன பெண்களிடம் கோபிநாத் நீங்கள் பட்டியலின ஆண்களை மணமுடிப்பீர்களா எனக் கேட்டது கிளாஸிக். ஒரு பெண் கூட கைதூக்கவில்லை. சந்தர்ப்பவாதம், சுயமுன்னேற்றத்தை நாம் பல சமயங்களில் சமத்துவ சிந்தனை, முற்போக்குவாதம் எனத் தவறாக நினைத்துக் கொள்கிறோம். கருணை, அன்பு, சமத்துவம் ஆகிய லட்சியங்கள் அற்றதாக இன்றைய முன்னேற்றக் கருத்தியல் மாறிவிட்டது - சமவுரிமை என்பதை பதாகையாகப் பயன்படுத்தி என்னை மற்றும் முன்னேற்றுங்கள். மற்றவர்கள் எப்படிப் போனாலும் கவலையில்லை எனும் மனநிலை வளர்கிறது. இதைப் பக்கம்பக்கமாக எழுதிக் காட்டுவதை ஒரே கேள்வியில் நீயா நானா செய்துவிட்டது. பாராட்டுகள்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share