இரு பத்தாண்டுகளுக்கு முன்பு நான் ஒரு நாளிதழில் மொழிபெயர்ப்புப் பிரிவில் வேலை செய்தேன். பயனர்களை ஊக்கப்படுத்த ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள் - சில தொடர் கேள்விகளுக்கு சரியாக பதிலளித்தால் அப்போது முன்னணியில் உள்ள நடிகர் ஒருவருடன் ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்து சாப்பிடலாம். எனக்கு இது பெரிய ஹிட்டடிக்கும் என்று தோன்றியது. ஒன்று, அந்நடிகர் அப்போது பெரிய ஹிட்களைக் கொடுத்தவர். அபாரமான நடிகர். இரண்டாவது, அது பெரிய ஓட்டல். போட்டியில் நாற்பத்து சொச்சம் பேர் ஜெயித்தார்கள். எல்லாரையும் கூட்டி ரசிகர் சந்திப்பு போல ஏற்பாடு பண்ணி விருந்தும் அளிக்கலாம் என நிர்வாகம் முடிவு செய்தது. நடிகரும் ஏற்றுக்கொண்டார். இப்போது எங்கள் அணியில் இருந்து வெற்றி பெற்ற ஒவ்வொருவரையாக அழைத்து வரக் கேட்டோம். ஆனால் ஆச்சரியமாக அவர்களில் கணிசமானோர் வர மறுத்துவிட்டார்கள். அவருடன் விருந்து சாப்பிடவோ புகைப்படம் எடுக்கவோ அவ்வளவு தூரம் பயணித்து சென்னைக்கு வர முடியாது என்றார்கள். நாங்கள் திரும்பத் திரும்ப அழைத்ததில் எட்டு பேர்கள் ஒப்புக்கொண்டார்கள். அதிலும் நான்கு பேர்தாம் வந்தார்கள். கடைசியில் ரசிகர்கள் சந்திப்பு ஒருவாறு நடந்து முடிந்தது. அவர் அதன்பிறகு பல படங்களைச் செய்தார். இன்றும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
எனக்கு அந்தச் சம்பவத்தின்போது தான் நட்சத்திர பிம்பம் சிரமப்பட்டு கட்டமைக்கப்பட வேண்டியது, மிகமிகச் சிலருக்கே இயல்பாகவே பிரபல்யம் அமையும், அவர்கள் தோன்றினாலே மக்கள் திரள்வார்கள், அதுவும் சமய சந்தர்பங்களால் அமைவதுதான் என்று புரிந்தது. நல்ல கதை, இயக்கம், சகநடிகர்கள், அதிர்ஷ்டம் எல்லாம் அமையும்போது ஒருவர் நட்சத்திர நடிகர் ஆகிறார். தனியாக அவர் தோன்றினால் மதிப்பில்லை. அடுத்தடுத்த வெற்றிகள் வந்ததும் அவர் தனக்காவே படம் ஓடுகிறது என நம்ப வைக்க முயல்வார். சந்தை மதிப்பைப் பெருக்கித் தக்கவைத்த பிரயத்தனம் செய்வார். அது பல சமயங்களில் வேலையும் செய்யும்.
இன்னொன்று, நட்சத்திரங்களின் சிறப்பே அவர்கள் அரிதாகத் 'தோன்றுகிறார்கள்' என்பது. அதில் ஒரு வியப்பு உள்ளது. வியப்புதான் அவர்களது சந்தை மதிப்பு. திரையில் திடீரெனத் தோன்றும்போது வரும் வியப்பும் அத்தகையதே. அதை ரசிகர்களே ஒருபக்கம் அழிக்க விரும்ப மாட்டார்கள். இன்னொரு பக்கம், அந்த வியப்பு பல காரணங்களால் மிகப்பெரிதாக மாறும்போது அவர்களே அதைக் கலைத்து நெருங்க வேண்டும் என்றும் பெருவிருப்பம் கொள்வார்கள். தஸ்தாவஸ்கியின் "கரமசோவ் சகோதரர்கள்" நாவலில் வரும் Grand Inquisitor அத்தியாயம் இதனோடு ஒப்பிடத்தக்கது - அதில் ஏசு உயிர்த்தெழுந்து கத்தோலிக்க சாமியார் முன்வந்தால் என்னவாகும் எனும் கற்பனைக் கதையை வைத்து இவான் கடவுள் மறுப்பைப் பேச முயல்வார். ஏசுவைப் பார்க்கும் சாமியார் அவரைப் பிடித்து சிறையில் அடைக்கச் சொல்வார். அங்கு சென்று அவர் ஏசுவிடம் "அதிசயங்கள் செய்வதன் வழியாகவே ஒருவர் தெய்வமாகிறார். அதைச் செய்ய மறுத்து அல்லது அதை அன்றாட வழக்கமாக்கி நீ தெய்வீகத்தையே இல்லாமல் ஆக்குகிறாய். அதை மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீ தொடர்ந்து பூமியில் இருந்தால் மக்கள் கலவரம் பண்ணி தம்மையே அழித்துக் கொள்வார்கள். போய் விடு அல்லது இம்மக்களைப் பயன்படுத்தி உன்னை எரித்துக் கொல்வேன்" என்பார். உச்ச நட்சத்திரங்கள் நம்மிடையே புழங்கினால், நாம் காய்கறி வாங்கும்போது பக்கத்தில் வந்து நின்று தக்காளி அரைக்கிலோ போடுங்க என்றால் நமக்கு அது பெரும் தொந்தரவாகும். அவர்களை அடுத்து திரையில் பார்க்கும்போது திடீரென எங்கிருந்தோ வருகிறார்கள் எனும் அதிசய உணர்வு அந்தளவுக்கு வராது.