காஷ்மீரில் அமைதி ததும்புகிறது, அங்கு வருடத்திற்கு ரெண்டு கோடிக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் செல்கிறார்கள், கார்ப்பரேட்டுகள் பெருமுதலீடுகளைச் செய்யவிருக்கிறார்கள் எனும் செய்திகளைக் கேட்டபோது ஏதோ ஒன்று இடறலாகத் தோன்றியது. ஒரு மாநிலத்தின் எல்லா சிக்கல்களையும் சில ஆண்டுகளில் ஒழித்து சொர்க்க பூமியாக்க முடியாது. எந்த ஊரும் அதன் வரலாற்றின் தொடர்ச்சியிலே நின்றுகொண்டிருக்கிறது. வரலாறு எதையும் மறக்கவோ முழுக்க மாறவோ போவதில்லை. ஆனாலும் சற்று சபலம் ஏற்பட்டது, என் மாணவர் ஒருவர் காஷ்மீருக்கு சுற்றுலா வரும்படி கேட்டபோது. அங்கு அவரது வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என்று கூறியபோதும், அங்கு கிடைக்கும் இளஞ்சிவப்பு தேநீரை எனக்குப் பரிசளித்தபோதும். நல்லவேளை நான் என் விவாகரத்து செட்டில்மண்டின்போது ஏற்பட்ட கடனில் இருந்து மீளவில்லை. கடன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நான் பஞ்சப்பரதேசியாக இருப்பதனால் இம்மாதிரிப் பயணங்கள் செல்வதில்லை. இல்லாவிட்டால் காஷ்மீருக்குப் போய் ஒருவேளை சிக்கியிருப்பேன் எனத் தோன்றுகிறது, ஏனென்றால் அந்த அற்புதமான இயற்கைப் பேரெழிலின் தொட்டிலைக் காண்பது என் வாழ்நாள் கனவுகளில் ஒன்று.
இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம், ஏன் வணிக நோக்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தளர்த்தினார்கள் என்பதெல்லாம் வேறுவிசயம். அனேகமாக எல்லா தாக்குதல்களின் பின்னாலும் இப்படியான அரசியல் பொருளாதாரக் கணக்குகள் உள்ளன. இத்தனை பேர்கள் கொல்லப்பட்ட பிறகு தீவிரவாதிகளின் படத்தை அரசு வெளியிட்டிருக்கிறது. எதற்கு விருது கொடுப்பதற்கா? இவ்வளவு வேகமாக துல்லியமாக விவரத்தைத் தோண்டியெடுக்க முடியுமெனில் இவ்வளவு நாட்கள் என்ன செய்தார்கள்? பெஹல்கம் அருகிலுள்ள மலைப்பகுதியில் தீவிரவாதிகள் திரிவதாக கடந்த வாரம் செய்தி வந்துள்ளது. ஆனாலும் அங்கு பயணிகள் பாதுகாப்பற்றுத் திரிய அனுமதித்திருக்கிறது அரசும், காவல்துறையும், ராணுவமும். ஒவ்வொரு முறை தாக்குதல் நடக்கும்போதும் நாம் இதைச் சொல்லலாம். அதனால் எந்த பயனும் இருக்காது என நினைக்கிறேன். மக்கள் இம்மாதிரி பகுத்தறிந்து அரசைக் கேள்வி கேட்க மாட்டார்கள். அவர்கள் உணர்ச்சிகரமாகவே முடிவெடுப்பார்கள். அதனாலே நான் இந்த மயிர்பிளக்கும் விவாதங்களிலோ, வளர்ச்சிக் கதையாடலுக்காகவும், அரசியல் நோக்கத்துக்காகவும் அப்பட்டமான பாதுகாப்புப் பிரச்சினைகளை அரசு காணாமல் விடுவதன், நடந்தபின் பெரிய டிராமா போடுவதன் அபத்தத்தைப் பற்றிப் பேசுவதில் நம்பிக்கை இழந்துவிட்டேன்.
இந்தத் தாக்குதல் மிகப்பெரிய வடுவை இந்திய சமூகத்தில் ஏற்படுத்தும் - இஸ்லாமியர் அல்லாதோரை அடையாளம் கண்டு குறிவைத்துச் சுட்டிருக்கும் செய்தி வெறுப்பரசிலை வளர்க்க உதவும். அதை நினைத்தால்தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் சொல்வதைப்போல தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை. அவர்கள் எல்லைதாண்டி வருகிறார்கள், எப்போதெல்லாம் பாதுகாப்புப் படைகள் விலக்கப்படுகின்றனவோ அப்போதெல்லாம் அவர்கள் திட்டமிட்டுத் தாக்குவார்கள். மேலும் இது ஒரு வெளியுறவுத் துறை பிரச்சினை - பாகிஸ்தானின் பொருளாதாரம் உருக்குலைந்து வருகிறது. அங்கு நிலங்களை ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தனியாருக்கு தாரை வார்ப்பதால் பாதிக்கப்படும் மக்கள் போராடுகிறார்கள். அங்குள்ள ராணுவத்துக்கும் அரசுக்கும் இம்மாதிரி தாக்குதல்கள் மக்களைத் திசைதிருப்பும் காய்நகர்த்தல்கள். இதையெல்லாம் இரும்பு, உருக்கு, பித்தளைக் கரம் வைத்தெல்லாம் தடுக்க இயலாது. உஷாராக இருக்க மட்டுமே இயலும். பாகிஸ்தானில் தாக்குதல் தொடுக்காமல் அங்கு நேரடியாக பெரும் முதலீடுகளைச் செய்து அந்த அரசு, சமூகத்தின் நன்மதிப்பை வளர்த்து, பொருளாதார ரீதியாகவும் (சீனா இலங்கைக்குச் செய்வதைப்போல) நம்மைச் சார்ந்து இருக்கும் நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தினால் அவர்களுடைய ராணுவமும் நம் சொல்லுக்குக் கட்டுப்படும், இயல்பாகவே எல்லை தாண்டிய பயங்கரவாதம் அருகும். இதை நாம் கடந்த இரு பத்தாண்டுகளாக செய்திருக்க வேண்டும். இவர்கள் அரசியலின்பொருட்டு நேர்மாறாகவே செயல்படுகிறார்கள்.
கொல்லப்பட்ட 26 பேர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். பலரும் தேனிலவு கொண்டாடவும் சில நாட்கள் மகிழ்ந்திருக்கவும் சென்றவர்கள். குழந்தைகள் முன்னால் அப்பாவைக் கொல்வது கொடூரமானது. என்னமாதிரி மனிதர்கள் இவர்கள்! ரொம்ப பழமையான தீவிரவாதிகள் போதும் - ஆண்களைக் கொன்றாலே குடும்பம் நிலைகுலையும், நாடு தத்தளிக்கும் என நம்பி ஆண்களை மட்டுமே தேர்ந்து சுட்டிருக்கிறார்கள். காலம் மாறிவிட்டது - இன்றைய இந்திய சமூகம் ஆணின் உயிரைப் பெரிதாக மதிப்பதில்லை (ராணுவ வீர்கள் விதிவிலக்கு). அப்பெண்களும் 'விதவைகளாகப்' போவதில்லை. இது ஒரு பேரிழப்பு, அதிர்ச்சிதான் என்றாலும் படித்த அறிவுள்ள அவர்கள் மீண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள், சொந்தமாய் சம்பாதிது வாழ்வார்கள். அந்தக் குழந்தைகளைத்தாம் இது ஆயுள் முழுக்கவும் பாதிக்கும். அவர்களை பயமிக்கவர்களாகவோ வன்முறையாளர்களாகவோ மனச்சிக்கல் கொண்டவர்களகவோ மாற்றும். இது ஒரு கொடுங்கனவாக நீடிக்கும்.
இம்மாதிரித் தாக்குதல் நூறு கலவரங்களுக்குச் சமமானது. அது மக்களின் மனத்தில் நீங்காமல் நிலைத்திருக்கும். நமது புறநானூற்றுப் பாடல்களைப் பாருங்கள். பண்பாட்டு மனம் முழுக்க பிணங்களும் ரத்த ஆறுமே நிறைந்திருக்கிறது. எதிரியின் ரத்தத்தைக் கொண்டாடிப் பாடுவதும் நம் ரத்ததுக்காக காலங்காலமாய் இரங்குவதுமே சமூக உளவியல், இலக்கியம், பண்பாடு. இது உருவாக்கும் வெறுப்பரசியலைத்தான், ஆழமான சமூகப் பிளவைத்தான் நாம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது. தீவிரவாதிகளைக் கொன்றாலும் அது முடிவுறாது. அதற்கு இச்செய்திகளை நற்செய்திகளால் நிரப்ப வேண்டும். அதற்கு ஊடகங்களும், மத அமைப்புகளும், ஆளுமைகளும் ஒன்றிணைய வேண்டும்.
இந்த அமைதியற்ற காலம் முடிவுக்கு வரவேண்டும்.