ஜெயமோகனுடன் எனக்குள்ள கோட்பாட்டு, தத்துவ முரண்களை வெளிப்படையாகவே அறிவித்தே அவரை வாசித்தும் உரையாடியும் வந்திருக்கிறேன்.
ஜெயமோகனையும் பிறரையும் வாசித்தே இலக்கியத்துள் வந்தேன். அவருடனான ஆரம்பகால உரையாடல்கள் என்னை நெறிப்படுத்தவும், எனக்குள் நெருப்புப் பொறியொன்றை பிறப்பித்து வளர்க்கவும் உதவியது. ஆனால் அவரது கருத்துநிலைகள், நிலைப்பாடுகள் அனேகமாகத் தவறானவை எனும் முடிவுக்கு விரைவில் வந்தேன். அதைப் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தவும் எனது கோட்பாட்டு, தத்துவ, இலக்கிய வாசிப்புகள் உதவின. ஒரு விசதத்தின் உண்மைநிலையைப் புரிந்துகொள்ள வேண்டுமெனின் அவர் சொல்வதற்கு நேரெதிராகச் சிந்தித்தால்போதும் எனும் முடிவுக்கு வந்தேன். இது எனக்கு வெகுவாக உதவியது - ஒருவித எதிர் வரைபடம் அவர். அவர் கிழக்கென்றால் நாம் மேற்குக்கு சென்றுவிட வேண்டும். அவர் மேலே என்றால் கீழே போகவேண்டும். அப்போதே உண்மையை, இருத்தலின் ஆழத்தைப் புரிந்துகொள்ள இயலும். அவர் ஆசான் அல்ல, அவர் எதிர்-ஆசான்.
அண்மையில் நிகழ்ந்த சில சம்பவங்களின்போது அவர் அடிப்படையான அறவுணர்வு இல்லாதவர் எனும் எண்ணம் எனக்குள் வலுப்பெற்றது. இதனால் கடுமையான கசப்புணர்வு தோன்றியது. அதன்பிறகு தோன்றியது - இவரைவிட மோசமானவர்களாக, கொடூரமானவர்களாக பல எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள் என வாசித்தறிகிறோம். அதற்காக வெறுக்கத் தேவையில்லை என முடிவெடுத்தேன். என் மனம் தெளிவுற்றது. நிறைய நற்குணங்கள்ளும் இன்னதென்று விளக்க முடியாத கொடூரமும் நிறைந்த படைப்பாளி அவர். இனியும் அவர் மாறப் போவதில்லை. ஒரு வனத்தில் பாம்பு, கரடி, ஓநாய், பறவைகள், முயல் எல்லாம் இருக்கும்தானே. அவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வதே சரி.
நம் மொழியின் திறமையான, படுகுரூரமான எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்!