Skip to main content

ஷோபா சக்தியைச் சூழும் கேன்சல் கலாச்சாரவாதிகள் - ஆர். அபிலாஷ்



நூற்றுக்கும் மேற்பட்ட பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் எழுத்தாளர்களுமாகக் கையெழுத்திட்டு வெளியிட்ட ஷோபா சக்திக்கு எதிரான "குற்ற அறிக்கையை" அது வெளியான சமயத்தில் உடனடியாகப் படித்தேன். நான் அடிப்படையில் ஒழுக்கவாதியோ நியாயவாதியோ அல்லன். அதேநேரம் எனக்குள் அபத்தமான நீதியுணர்வு உண்டு, அதை மீறும் விழைவும் உண்டு. இந்த இரண்டு எதிர்விசைகளுக்கு நடுவே நிற்கும் எழுத்தாளர் நான். என் இடத்தில் இருந்து பார்க்கையில் அமைப்பின்மைவாதிகள் மீது தோன்றும் திகைப்பும் பயமுமே அறிக்கையில் தோன்றும் ஷோபா சக்தியின் சித்திரத்தைப் படிக்கையில் ஏற்பட்டது. அவர் கெட்டவரா எனும் அதிர்ச்சியல்ல, அது வேறொன்று - அதை இங்கு அபுனைவில் விளக்க முடியாது. (புனைவில் மட்டுமே இயலும்.)


ஷோபாவின் எதிர்வினையையும் அது வந்த உடனே படித்தேன்: அது சற்று பலவீனமானது - ஏனென்றால் ஒழுக்கமீறல், துரோகம் போன்ற மிக அந்தரங்கமான குற்றச்சாட்டுகளை ஏற்று பின்னர் நியாயப்படுத்த முடியாது. ஒன்று, நமது கட்டுரை வடிவம் அடிப்படையில் அறம் எனும் கட்டமைப்பினுள் எழுப்பப்பட்டது. புத்தொளிக் காலத்தில் மதக்கருத்துக்களை மறுத்து தோன்றிய புரட்சிகர சிந்தனைகளை வெளிப்படுத்தவும், தனிமனிதவாதத்தை முன்னெடுக்கவும் தோன்றிய வடிவமே கட்டுரை வடிவம். அது குற்றங்களுக்கு கடவுளிடம் அல்ல தனிமனிதனின் நடத்தையிலும் மனசாட்சியிலும் பதிலைக் கோரும் வடிவம். அதற்குள் நீங்கள் மனித நடத்தையின் குழப்பமான நிழலான பகுதிகளை விவரிக்கவோ நம்ப வைக்கவோ முடியாது. அடுத்து, நம் சமூகம் மிகவும் கட்டுப்பெட்டியானது. ஆணோ பெண்ணோ பாலியல் மீறலை அது மன்னிக்காது (ஆனால் தினம் தினம் அதில் ஈடுபட்டவாறும் இருக்கும்). 


இம்மாதிரிக் குற்றச்சாட்டுகளைப் பற்றி நான் ஏற்கனவே என் நூலில் விரிவாக என் கருத்துக்களைப் பதிவு செயதிருக்கிறேன். நான் இந்த woke பண்பாட்டை, அதன் அம்பலப்படுத்து, சமூகவிலக்கம் செய் என முழங்கும் cancel culture ஏற்கவில்லை. அது முற்றதிகாரத்தை நோக்கி உலகைக் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்பே என்று முன்பு எழுதியிருக்கிறேன் - இப்போது பாருங்கள் அமெரிக்காவில் டிரம்பின் சர்வாதிகாரத்திற்கு அடிகோலியதே woke பண்பாட்டுக்கு எதிரான வெறுப்பும், அவநம்பிக்கையும்தான். மேலும் இது உருவாக்கும் கும்பல் மனப்பான்மை, ஒற்றை உணர்வின் கீழ் மக்களை டிஜிட்டல் ஊடகத்தில் திரட்டும் முறைமை ஆபத்தானது, ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஏனென்றால் அது நீதியின் பெயரிலான அவநம்பிக்கையில் பிறக்கிறது, ஆனால் வினோதமாக நீதியைக் கோரவோ, பெறவோ செய்யாமலே மனதளவில் முற்றுமுழுமையான அமைதியை நாடுகிறது. அதற்காக குற்றம் சாட்டப்பட்டவரை மிகப்பெரிதாகப் பெருக்கி அவரை ஒற்றைத் தீமையாக நம் முன் நிறுத்துகிறது, அவரைப் போன்றவர்களையும் பட்டியலில் சேர்த்து அவரை மட்டுமே அந்நேரத்தில் நம் கண்முன்னால் பெருக்கிக் கொண்டே போகிறது. அவர் சமூகத் தீமைக்கு மொத்தமான உருவகமாகிறார். அதன்பின்னர் அது திருப்தியாகி நின்றுகொள்கிறது. அவரைக் காம வேட்டையாடி, வேட்டை மிருகம் என்று திரும்பத்திரும்பச் சொல்லும்போதே குற்றம் ஏன், எப்படி, எதனால் நடந்தது, அது குற்றம் தானா என்றெல்லாம் விசாரிக்கக் கூடாது என்கிறது. அதற்கான நியாயப்பாடுகளையும் அது சொல்கிறது. இது சமூகக்கூச்சம், பாதிக்கப்பட்டவருக்கான பாதிப்பு சம்மந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல என நினைக்கிறேன். மாறாக கவனம் முழுக்க ஒற்றை நபர் மீது வைப்பதற்கான உத்தி இது. அவரை "வெற்றுக் குறிப்பான்" ஆக்குவதே நோக்கம். அவர் அதன்பிறகு ஒரு பேயாக மாறுகிறார், எல்லாரும் அவரைப் பற்றி முணுமுணுப்பார்கள், ஆனால் அவரது வாழ்க்கை சட்டென நமக்கு உடலற்றதாக, மர்மமாக மாறுகிறது, அது தன் பொருண்மையை, அர்த்தத்தை இழக்கிறது, யாரும் அதை நாட மறுப்பார்கள். அதைத் தேடாதிருப்பதே அவருக்கான தண்டனை ஆகிறது. இம்மாதிரி கேன்சல் கலாச்சாரத்தில் "விசாரணையும் தண்டனையும்" இந்த நடைமுறையைக் கொண்டிருப்பதைத் திரும்பத்திரும்பப் பார்க்கிறேன். வெற்றுக்குறிப்பான் ஆக்கப்பட்டவர் அதன்பிறகு நம்மிடையே பேயாக மட்டுமே உலவ முடியும். அவரை ஆதரிப்பவர்களுக்கும் இதுவே நடக்கும்


முற்றதிகார வலதுசாரி அரசியலும் இதே நடைமுறையையே பின்பற்றுகிறது. நமக்குத் தோன்றலாம் அவர்களின் இலக்கும், கொள்கையும் வேறுவேறு என்று. ஆனால் முற்போக்கு தாராளவாத சிந்தனையின், பண்பாட்டின் முற்றதிகாரச் சார்பு, வலதுசாரி முற்றதிகாரத்துடன் தீவிர தாராளவாத முற்போக்காளர்கள் கைகுலுக்கும் சந்தி (intersection) இது. அதனாலே இந்த woke பண்பாட்டைத் தொடர்ந்து வலதுசாரி அரசியல் பெரும் எழுச்சி பெறுகிறது. உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இது நடக்கிறது. முந்தைய நடுநிலை முற்போக்காளர்கள் இப்படியான அரசியலை வரிக்க மாட்டார்கள். அவர்கள் சமநிலையான நிலைப்பாட்டை ஏற்பார்கள். அதை இந்த தீவிர தாராளவாத முற்போக்காளர்கள் ஏற்பதில்லை. ஒரு கட்டத்தில் முன்னவரை ஒழித்து woke அரசியல் செயல்பாட்டாளர்கள் மேடையை ஆக்கிரமித்துக் கொள்வார்கள், அவர்கள் அப்படியே அம்மேடையை அரசியல் மேடையாக்கி முற்றதிகாரிகளுக்கு கைமாற்றி விடுவார்கள். இந்தியாவில் இது 2013இல் காங்கிரஸின் கடைசி கட்டத்தில் நிர்பயா விசயத்தில் நடந்தது. நிர்பயா விவகாரத்தில் மக்களிடம் பரவலாக ஏற்பட்ட அவநம்பிக்கை நீதிமன்றம், காவல்துறை, சிவில் சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியாது, ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பதே. அதன்பிறகு மோடி வந்து இந்த நிறுவனங்களை ஒவ்வொன்றாக ஒழித்தார்


நிக்கோலே மாட்டேச்சி தன் இத்தாலிய தகவல் களஞ்சியம் டிரெக்கானிய நூலில் சொல்வதைப் பாருங்கள். முற்றதிகாரம் ஜனநாயக அமைப்புகள் மீது அவநம்பிக்கையை உருவாக்கி தனக்கான சித்தாந்தத்தின் அடிப்படையில் தீர்வைக் காணக் கோருகிறது எனும் அந்த விளக்கம் அப்படியே இந்த கேன்சல் பண்பாட்டுக்கும் பொருந்துகிறது: "In totalitarian regimes we have a charismatic bureaucracy alongside a terror-mongering secret police: the moment of legality and predictability is lost, as the enemy is not only the real one because it is possible to invent a target enemy, chosen by whomever has the sovereign power to interpret the ideology.” எட்கர் மோரின் தனது “For a Crisiology” நூலில் முற்றதிகார அரசுகள் பொதுவாக மற்றமைகளைத் தாக்கும்போது அவர்களுடைய நோக்கம் அச்சத்தை விளைவித்து எல்லாவிதமான எதிர்ப்புகளை ஒடுக்குவதாக இருக்கும் என்கிறார். அதாவது ஒழுக்க மீறலுக்கு சமூகத்தில் எப்போதுமே இடமிருக்கிறது. நேரடி வன்முறையை சமூகம் அனுமதிக்காது என்றாலும் அது அராஜகமான தனிமனிதர்களையும், அவர்களுடைய உறவுகளையும் ஒடுக்குவதில்லை. அவர்கள் - ஆணோ பெண்ணோ - ஒன்றுக்கு மேலான உறவுகளில் இருப்பார்கள், ஒரேசமயத்தில் கூட இருப்பார்கள், சரி-தவறு எனும் இருமைக்கு அப்பால் காதலிக்க முயல்வார்கள், பரஸ்பரம் மனதைக் காயப்படுத்துவார்கள், துரோகம் இழைப்பார்கள், அதை நியாயம் என நினைக்கவும் செய்வார்கள். ஆனால் அதுவும் சேர்ந்ததுதான் ஜனநாயக சமூகம். இவர்களை ஒழித்து பரிசுத்தமான sterile சமூகத்தை உருவாக்க முயலும்போது அது ஒழுக்கமீறல் குறித்த அபரிதமான பயத்தை சமூகத்தில் விதைக்கிறது, இது பின்னர் அரசதிகாரத்தை எதிர்ப்பதற்கான பயமாக உருவெடுக்கிறது. அப்கானிஸ்தானில் ஹசாரா இனக்குழுவினர் சிறுபான்மையினர். அவர்கள் ஷியா இஸ்லாமியர் எனினும் அப்பகுதியில் உள்ள பிரம்மாண்ட புத்தர் சிலைகள் அவர்களுக்கு கடந்த கால பெருமையின் சின்னமாக (வெற்றுக் குறிப்பானாக) இருந்தன. தாலிபான்கள் அவற்றை தகர்த்தபின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தில் ஹாசார மக்களால் எதையும் வைக்க முடியவில்லை. அவர்கள் தலைகுனிந்து தாலிபான்களை (இன்னொரு வெற்றுக்குறிப்பான்) ஏற்றுக்கொண்டு சமரசம் பண்ணிக்கொண்டனர். இந்தியாவில் இப்போது அது இஸ்லாமிய மத நிர்வாகத்தில் குறுக்கிடுவதன் வழியாக நடக்கிறது. பண்பாட்டளவில் கேன்சல் பண்பாட்டினர் ஆண்களில் சிலரைக் குறிவைத்து இதைச் செய்கிறார்கள். அவர்கள் தம்மைப் பாதிக்கப்பட்டவர்களாக முன்வைப்பதால் அவர்களுடைய செயலின் தாக்கம் நமக்கு உடனே விளங்காது - ஆனால் மறைமுகமாக அவர்களும் சமூகத்திற்கு நீதி பரிபாலனம் மீதுள்ள, தீவிர கண்காணிப்பு இன்றி வாழ்வதில் உள நம்பிக்கையைக் குலைக்க உதவுகிறார்கள். அதாவது நம்மால் கண்ணால் பார்க்க முடியாத சமூக அரசியல் பாதிப்புகளை இவர்கள் உருவாக்குகிறார்கள். ஸ்டீவன் கிரீன்ஹட் தன் கட்டுரையில் இதை ஒரு எதேச்சதிகாரப் போக்கு என அழைப்பது இதனால்தான். அவர் இப்போக்கு முன்பு ரஷ்யாவில் ஸ்டாலினிய குலாக்குகளின்போது தேசத்தை விமர்சிப்போரை அம்பலப்படுத்துவது எனும் நடைமுறையாக இருந்தது என்கிறார். ஜேம்ஸ் ரெனால்ட்ஸ் தனது கட்டுரையில் முற்றதிகாரம் ஒழிந்தாலும் அதன் தன்மைகள் சமூகத்தில் நீடிக்கும், சாதாரணர்களே அந்த போக்குகளை முன்னெடுப்பார்கள் என்று ஹானா ஆரெண்ட் சொன்னதைக் குறிப்பிட்டு இன்றுள்ள கேன்சல் கலாச்சாரம் அதன் நீட்சியே என்கிறார். ஏனென்றால் உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான எல்லைக்கோட்டை முழுக்க ஒரு நொடியில் அழித்துவிட்டு, தம்மால் சொல்ல்படுவன எல்லாமே பரிசீலனைக்கு அப்பாலான நிஜங்கள் என நம்பும்படி அவை கோருகின்றன. இது சமூகத்தை முற்றதிகாரத்துக்குப் பழக்குகிறது. ("For Arendt, a key feature of totalitarianism - in contrast to other forms of tyranny or dictatorship – is the toying with truth, deliberate confusion of fiction and reality, and incessant use of mass media to manipulate the way millions of people experience the world. In our era of fake news, targeted messaging and ‘cancel culture’, there is still something profound in this warning. Arendt is alerting us to the use of propaganda and conspiracy to change the perceived structure of reality on a whim.”)


லெய்டில் மற்றும் தாரியா தாம் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் கேன்சல் கலாச்சாரம் பெரும்பான்மைக்காக சிறுபான்மையை வாய்மூட வைக்கும் கருத்துச் சுதந்திர, ஜனநாயக ஒழிப்புச் செயல்பாடு எனும் பார்வையை வைக்கிறார்கள். “A distinctive feature of the new information culture is thepredominating discourse of the majority group, where the minority, under the threat of pressure, will strive not to express their opinion at all, since their views have ceased to fit into the dominant culture [Noelle-Neumann 1974].) அவர்கள் ரஷ்யா உக்ரேனில் படையெடுத்ததை ஒட்டி ஐரோப்பா முழுக்க ரஷ்ய கலைஞர்களும் சினிமாவும் எழுத்தாளர்களும்கேன்சல்செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, அவர்களிடத்தில் உக்ரேனிய ஜனாதிபதிக்கு மேடைகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்கிறார் (ஆனால் இப்போது அவரும் பின்னுக்குப் போய்விட்டார்). இந்த கலைஞர்கள் ரஷ்ய அரசின் நடவடிக்கைகளுக்கு ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டுமெனக் கேட்க இயலாது. அதன்பெயர் தான் கேன்சலேஷன். கேன்சல் கலாச்சாரம் கீழிருந்து குரலற்றவர்கள் அதிகாரத்தை எதிர்ப்பதற்கான கருவி அல்ல, அது அயலுறவு விவகாரங்களில் முற்றதிகாரத் தலைவர்களின் கருவியாகவும் மாறுகிறது என அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதனாலே - நான் ஏற்கனவே ஒருமுறைக் குறிப்பிட்டதைப் போல - இந்தியாவிலும் உற்பத்தி சாதனங்களை, முதலீட்டைக் கையில் வைத்திருப்போர் மீது கேன்சல் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதில்லை - முதல்வர், கட்சித் தலைவர், மதத்தலைவர், பெருமுதலாளிகள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பார்கள். உதாரணமாக ஜக்கியின் இஷா ஆசிரமத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களை விசாரிக்கவும் அந்த அறக்கட்டளையை தடைசெய்யும்படி ஏன் பெண்ணிய கேன்சல் கலாச்சாரக் குழுமங்கள் கோருவதில்லை? ஏன் தேவாலய மதகுருமார்கள் மிது அவர்கள் கேள்வி எழுப்புவதில்லை? அவர்கள் பண்ணாத அட்டகாசமா? பல ஆயிரம் பெண்களும் இளைஞர்களும் புழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் கேன்சல் கலாச்சாரவாதிகள் அவர்களுடன் நிற்க மாட்டார்கள். மோடி மீது குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைப் பாலியல் தொந்தரவு செய்ததாக, விசாரணை அமைப்புகளை அப்பெண்ணை உளவுசெய்ய அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தபோது ஏன் அவரை கேன்சல் செய்ய யாரும் கோரவில்லை? ஏனென்றால் கேன்சல் பிரச்சாரகர்களும் தேசத்தின் கருவிகளே. அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், பெருமுதலாளிகளுக்கு அப்பால் பிரபலங்களை எடுத்துக் கொண்டால்கூட அவர்கள் தம் மீது வைக்கப்படும் கேன்சல் கலாச்சாரப் பிரச்சாரத்தை தூசைப் போல தட்டிவிட்டுக் கொண்டு நகர்ந்து விடுகிறார்கள். ஏனென்றால் சமூக அவமதிப்பை மீறிச் செயல்படும் செல்வமும் அதிகாரமும் கட்டமைப்பும் அவர்களுக்கு உண்டு. .தா., ஆயிரம் கோடிக்கு லாபமீட்டும் படமெடுக்கும் நடிகர் மீது மீடூ குற்றச்சாட்டு எழுந்தால் அவர் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவரால் நீதிமன்றத்துக்குச் சென்று அதற்கு எதிராக தடையுத்தரவு வாங்க முடியும். அவர்களுடைய ஆதரவாளர்கள் பெரும் தடையரணாக எழுந்து அவர்களைப் பாதுகாப்பார்கள். .தா., ஒருவேளை உதயநிதி மீது மீடூ எழுந்தால் (எழ வேண்டுமென நான் கூறவில்லை) பல லட்சம் பேர்கள் அவரை ஆதரித்து எழுதுவார்கள், ஊடகங்களில் பலர் கருத்து தெரிவிக்கையில் இதை அரசியல் சதி என்பார்கள். ஆனால் எளிய மத்திய வர்க்க ஊழியர்களில் இருந்து தம் அதிகாரத்தை இழந்துவரும் சோபையிழந்த பிரபலங்கள் வரை சுலபத்தில் இரையாகிவிடுவார்கள். அவர்களே கேன்சல் கலாச்சாரத்தின் உண்மையான இலக்கு, அதிகாரவர்க்கம் அல்லர், கேன்சல் கலாச்சாரம் அதிகாரத்துக்கு எதிரான குரலற்றவர்களின் எழுச்சி அல்ல, அது குரலற்றவர்களை மேலும் ஊமையாக்கும் முயற்சியே என செயித் ஜிலானி சொல்கிறார். எனக்கு இது முற்றதிகாரச் சமூகங்களில் உள்ளசுயதணிக்கை, சுயகண்காணிப்புக் கருவிஎனவும் தோன்றுகிறது - 2020இல் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 60%க்கு மேலான மக்கள் தனக்கு அன்றாட வாழ்வில் சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்க பயமாக உள்ளதாகத் தெரிவித்தார்கள். டைம்ஸ் இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக இந்த கேன்சல் கலாச்சாரத்தை அஞ்சுவதாகத் தெரிய வந்தது (சாதி, மதம், இனம், பாலினம் என எதைப் பற்றியாவது தப்பாகப் பேசிவிடுவோமோ, அதனால் வேலை போய்விடுமோ, சமூக ஒதுக்கம் நடக்குமோ எனும் அச்சம்.). டுரோல்கள் பொதுவாக ஈடுபடுவதும் கேன்சல் கலாச்சாரத்திலே - இம்மாதிரி கேன்சல் டுரோக்களால் பாதிக்கப்பட்டு ஒரு பெண் எழுத்தாளர் ஓராண்டுக்கு மேலாக எழுத முடியாமல் போய் உளவியல் சிகிச்சை எடுக்க நேர்ந்ததாக என்னிடம் சொன்னார்.


 அதனாலே இதை வலதுசாரி கேன்சல் கலாச்சாரம் என்று இன்று அழைக்கிறார்கள் (conservative cancel culture). அமெரிக்காவில் ஆரம்பத்தில் இடதுசாரிகளே கேன்சல் கலாச்சாரத்தை ஊக்கப்படுத்துவதாக வலதுசாரிகள் கூறி வந்தனர், ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் தமக்கு எதிரான அரசியல் சக்திகளை ஒடுக்குவதற்கும், சிறுபான்மை இனத்தவர்களின், பாலினத்தின் உரிமையை மறுப்பதற்கு, நிதியை ரத்துசெய்வதற்கு மிகப்பெரிய அளவில் வலது கேன்சல் கலாச்சாரவாதிகளை அரசு பயன்படுத்துகிறது என வில்டெல் பிலார் சொல்கிறார். இந்தியாவில் கேன்சல் கலாச்சாரத்தின் இன்னொரு முகமாக உயர்கல்வி நிறுவனங்களில் நூல்களைத் தடைசெய்வது, எதிர்ப்பாளர்களை வாயை மூடவைப்பது பரவலாக நடக்கிறது. இரண்டு கேன்சல் கலாச்சாரங்கள் இருவேறு இலக்குகளைக் கொண்டிருப்பதாகத் தோன்றினாலும் ஒன்று மற்றொன்றை தன் முறைமையால் ஆதரிக்கிறது என்பதே உண்மை. டேவிட் பிரென்ச் சொல்வதைப் பாருங்கள்: There’s no question that the Left leads the way in academic cancel culture. Most attempted cancellations have come from the Left — a statistic that makes sense when one considers that the American academy is an overwhelmingly left-wing institution. But while fewer come from the Right, they are responsible for most of the cancellation attempts that included violent threats. அதாவது முற்போக்கு கேன்சல்வாதிகள் மூட்டும் நெருப்பை உலகம் முழுக்கப் பரப்பில் பெரும் அழிவாக மாற்றுவது வலது கேன்சல்வாதிகளே


முக்கியமாக இதனால் அதிகமாக பாதிக்கப்படுவோர் முற்போக்காளர்களே என்று செபாஸ்டியன் மில்பேங்க் சொல்கிறார் - ஏனென்றால் முற்போக்காளர்கள் கேன்சல் செய்ய அதிகமாக முயல்வது ஒழுங்குக்குள் வராத தமது சகபாடிகளையே


கத்தி ஒன்றுதான் - ஆனால் இன்று எல்லாருமே குத்துப்படுகிறார்கள். அதனாலே பாலியல் குற்றவிசாரணைகளை இம்மாதிரி ஊடக அம்பலப்படுத்தலாக, சமூக ஒதுக்கமாக, ரத்து செய்வதாக முன்னெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நியாயத்துக்காக பேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு பெண்ணியவாதிகளில் சிலர் வேறுவிதங்களில் அதிகமாக குரலற்ற மக்களை அழிக்கப் பயன்படுத்தப்படுகிற ஆயுதத்துக்கு தகுதியாக்கலை (validation) அளிக்கிறார்கள்


நாம் ஷோபா சக்திக்குத் திரும்ப வருவோம் - இந்த அறிக்கையை எழுதியோரும் அதில் குறிப்பிட்டப்படுவோரும் ஏன் மர்மமாக இருக்கிறார்கள் என அவர் கேட்கும் கேள்வி முக்கியமானது. அவர்களில் சிலர் ஏன் தன்னுடன் உறவு முறிந்தபின்னரும் நல்லுறவில் தொடர்ந்தார்கள் என்று கேட்கிறார். அவர்கள் தம்மைப் இருட்டில் வைத்திருக்க விரும்புவதில் நியாயமிருக்கலாம் - ஆனால் அறிக்கையின் எழுத்தாளர்கள் விசயத்தில் ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை? இதுவும் கேன்சல் கலாச்சாரத்தின் இயல்பே - வெளிப்படைத்தன்மையைக் கோருவதே தண்டனைதான் எனக் கூறி எல்லாரையும் அச்சுறுத்துவார்கள். வெளிப்பட்டால் அது ஒரு சிலரின் பிரச்சினை, வெளிப்படாதபோது அது எண்ணற்ற பெரும் தொகையொன்றின் பிரச்சினை. அது பூதாகாரமாகிவிடும். சரி ஏன் வெளிப்பட முடியாதெனில் அவர்களுக்கு அந்தரங்க வாழ்க்கை உள்ளது, அதைக் கெடுக்க முடியாதுதானே, டுரோல்களிடம் சிக்கி அழிய முடியாதுதானே எனக் கூறலாம். சரி, அவர்களே சொல்லுவதுபடி பார்த்தால் பாலியல் வன்முறையோ தாக்குதலோ நடக்கவில்லை. அப்பெண்களும் பால்புதுமையினரும் மாற்று உறவுக்குள் செல்லும்போது ஷோபா சக்தி அவர்களை விட்டுவிட மறுத்தார் என்பதும், அவர்களுடன் இருக்கையில் அவர் வேறு நபர்களுடன் உறவில் இருந்தார் என்பதுமே மீளமீள வரும் குற்றச்சாட்டு. இது சம்மந்தப்பட்ட நபர்கள் தமக்குள் பேசி ஏற்படுத்த வேண்டிய எல்லையல்லவா? திறந்தநிலை உறவில் வேறெப்படி இருப்பார்கள், இருக்க முடியும்? அவர்கள் விட்டுத் தொலைக்கவும் சுதந்திரமாக இருக்கவும் கட்டுப்படுத்தவும் உடைமையாகவும் தத்தளித்துக் கொண்டே இருப்பார்கள். இதைக் குற்றமாக பொதுச் சமூகத்தில் எடுத்து வரக்கூடாது. இன்னொரு குற்றச்சாட்டு ஷோபா சக்தி இப்பெண்களுக்கு துரோகம் இழைத்தார் என்பது - அதுதான் அவ்வுறவின் தாத்பரியம். ஆனால் உறவில் இருக்கும்போதுநீதான் என் உலகம், நீதான் எனக்கு காலமெல்லாம் உயிராக இருப்பாய்எனச் சொல்பவர்களும் இருப்பார்கள்

ஷோபாவால் பாதிக்கப்பட்டவர்களாக முன்வந்துள்ளவர்களுக்கு உள்ள  மற்றொரு முக்கியமான புகார் அவர் அவர்களை அடிப்படையான மரியாதையின்றி நடத்தி அதைக் குறித்த குற்றவுணர்ச்சி இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதே. இது ஆணின் அடிப்படையான பலவீனம் எனப் புரிந்துகொள்ள வேண்டும் - குற்றவுணர்வில் தள்ளாடுவது, பாவ மன்னிப்பு கோரி தெருவில் நின்று அழுவது, தண்டனையைக் கேட்டுப் பெறுவது ஆணை பலவீனமாக்கும். ஆண்கள் இதை வெளிப்படையாகச் செய்ய மாட்டார்கள். சுதந்திரவாதியான, அரசின்மைவாதியான ஷோபா சக்தியின் கதைகளில் மேற்சொன்ன பலவீனமான மனதுக்குள் குமுறிக்கொண்டே தம்மை அழித்துக்கொள்ள விழையும் ஆண்கள், மன்னிப்புக் கோரும் ஆண்கள் வரலாம். அது அவரது சுயமுரண். இயல்பில் ஒருவேளை அவரால் அது இயலாது போவதில் ஆச்சரியமில்லை. இயன்றால் அவர் அரசின்மைவாதியே அல்ல, அவர் ஒரு ரஸ்கோல்நிக்கோவ் மட்டுமே. ஷோபா சக்தி எதிர்காலத்தில் தன் கதைகளில் இந்த எதிர்-ரஸ்கோல்நிக்கோவ் மனநிலையைக் கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம்

  

இவ்விவகாரத்தில், விஸா வாங்கித் தருவதாகச் சொல்லி ஏமாற்றியதாகச் சொல்லுவது மட்டுமே குற்றமாக எனக்குத் தோன்றுகிறது. அதை ஆதாரத்துடன் சுலபத்தில் முன்வைத்து விவாதிக்க முடியும்

சரி, ஒரு ஆண் அதிகாரத்தின் குறியீடாக இருப்பதால் அவன் ஒழுக்கவிதியை மீறும்போது ஆதிக்கத்தை பெண் மீது சுமத்துவதில்லையா? இக்கேள்வியையே பெண்ணியவாதிகள் பொதுவாக எழுப்புகிறார்கள். பெண் துரோகம் செய்தால் அது துரோகம், ஆண் செய்தால் அது மேலாதிக்கம், சுரண்டல் என வகைப்படுத்துகிறார்கள். அதிகாரம் என்பது ஒரு செயலுக்கு புதிய பரிமாணத்தை அளிக்கும், அதிகாரத்தில் இருப்போர் அதிக நீதியுணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை ஏற்கிறேன். ஆனால் ஆண் எல்லா தளங்களிலும் சமயங்களிலும் அதிகாரத்துடன் இருப்பதில்லை. ஏனென்றால் ஆணாதிக்கம் (patriarchy) ஒரு பண்பாட்டுக் குறியீடு (ஆணாதிக்கம் எனும் சொல்லே பாசிசத்தன்மை கொண்டதே என்பது தனிப்பிரச்சினை.). அதற்குப் பல உடல்கள். எப்போதும் ஆணுடலை அது தரிப்பதில்லை. அக்கருத்து பெண்ணியத்தின் இரண்டாம் அலையுடன் வழக்கொழிந்து விட்டது. குறிப்பாக, உறவுக்குள் சிலநேரங்களில் ஆண் கவனத்திற்காக மன்றாடும் அதிகாரமற்றவனாகவும், குரலற்றவனாகவும் மாறுகிறான். வேறு சமயங்களில் அவன் கை ஓங்குகிறது. பணம், சமூக அடையாளம், ஆரோக்கியம், சாதி, மதம், அமைப்புகளின் ஆதரவு என பல விசயங்கள் ஆணாதிக்கத்தை சாத்தியமாக்குகிறது. ஆணை நிரந்தரமாக அதிகாரத்தின் முகமாகவும் பெண்ணை நிரந்தர பாதிக்கப்பட்டவராகவும் பார்ப்பது கண்மூடித்தனமான மனநிலையே. உறவுக்குள் பல முடிவுகளும் செயல்களும் அதிகாரத்தின் சஞ்சலம் மிக்கவையாக உள்ளன, நியாய தர்மத்துக்கு வெளியே இருக்கின்றன, சுயநலத்தால் நடத்தப்படுகின்றன எனும்போது அந்த பழுப்பான பகுதிக்குள் வெளியாள் நுழைந்து மேலாதிக்கவாதி யார் எனச் சொல்ல முடியாது. மேலும், அது பெண்ணிற்கு அதிகாரம் பெறும் வாய்ப்பை முழுமையாக ரத்து செய்யவும் செய்கிறது.     


 “குற்றப்பத்திரிகையில்வரும் வேறு பிரச்சினைகளைப் படிக்கையில் சிமன் டி பூவரின் The Woman Destroyed நாவல் நினைவுக்கு வந்தது - அதில் பூவர் தான் ஏன் தனக்குப் போட்டியாளராக வரப்போகும் இளம்பெண்ணை உறவுக்குள் தானே கொண்டு வந்தோம் என விசாரிப்பார். திறந்தநிலை உறவுகளில் எல்லாம் அனுமதிக்கப்படும் அனுமதிக்கபடாமலும் இருக்கும், அதைக் குறித்து சம்மந்தப்பட்டவர்கள் வருந்தவும் செய்வார்கள். இந்த பழுப்பான பக்கங்களை அவர்களேதாம் கையாண்டு நியதிகளை உருவாக்க வேண்டும்.    


பின்குறிப்பு:

 1) ஷோபா சக்தி என் நண்பரல்லர். நான் அவரது வாசகன், சக-எழுத்தாளன் எனும் கணக்கில் உரையாடி இருக்கிறேன். ஆனால் இவ்விசயத்தில் தன்னைப் பற்றி எழுத அவர் கேட்கவும் இல்லை. எனக்கு அவரைக் காபபற்றும் உத்தேசமில்லை. என் நோக்கம் இந்த கத்திக்குத்து கந்தன் நடைமுறையை, அதன் முற்றதிகாரத்தன்மையை எதிர்ப்பதே. இது சக்தி ஷோபாவாக இருந்தாலும் நான் இதையே எழுதுவேன்.  

2)இந்த கேன்சல் கலாச்சாரம் எதிர்காலத்தில் பெண்களுக்கு எதிராகத் திரும்பும் என நினைக்கிறேன் - பாலியல் ஒழிக்கம் மிகத்தீவிரமாக அவர்கள் மீது திணிக்கப்பட்டு அவர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பூதாகாரமாகப் பெருக்கப்படுவார்கள். இதேமாதிரி ஆனால் வேறு விழுமியங்களின் அடிப்படையில் (பரத்தை, துரோகி, திருமண அமைப்பிற்கு வெளியே நிற்கும் சூழ்ச்சிக்காரி) குற்ற அறிக்கைகள் வாசிக்கப்படும். நாம் அப்படியே நூறாண்டுகள் பின்னுக்குச் செல்வோம். இன்றுள்ள அடிப்படையான சுதந்திரம் பறிபோகும். நம்பிக்கை இல்லாவிட்டால் நான் கீழே தந்துள்ள தொடுவழிகளில் உள்ள கட்டுரைகளைப் படியுங்கள்.


https://www.wbur.org/onpoint/2022/04/26/women-fascists-democracy-backslides-abortion-rights


https://philosophynow.org/issues/148/The_Origins_of_Totalitarianism_by_Hannah_Arendt


 https://www.researchgate.net/publication/372100356_Cancel_culture_towards_Russia_and_how_to_deal_with_it [accessed Apr 17 2025].


https://www.persuasion.community/p/the-powerless-are-hurt-most-by-cancel


https://sapirjournal.org/cancellation/2022/when-right-cancels-right/


https://www.usnews.com/opinion/articles/2024-07-24/even-while-railing-against-it-the-republican-party-has-become-a-champion-of-cancel-culture


https://www.city-journal.org/article/cancel-culture-conservatives-social-trump

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...