கடந்த ஞாயிறன்று சேலத்துக்குச் சென்றிருந்தேன். சேலத்தில் என்னை அசரடித்தது இட்லி. நான் இதுவரைச் சாப்பிட்டதிலேயே சிறந்த இட்லி அங்கு ஶ்ரீகிருஷ்ணா எனும் ஓட்டலில் சுவைத்ததே. முருகன் இட்லி கடையில் கிடைக்கும் இட்லி மென்மையாக இருக்கும், ஆனால் இந்த இட்லியோ மென்மையுடன் தனித்த சுவையும் கொண்டது. ஒப்பற்றது (சாரு தன் "எக்ஸைலில்" இட்லியை நிதம்பத்துடன் ஒப்பிடுவாரே அதற்கு ரொம்ப பொருத்தமான இட்லி இது). சரி அந்த ஓட்டலின் சிறப்பு போல என நினைத்துக்கொண்டேன். அடுத்த நாள் ஒரு தெருவோர சிறிய கடையில் இட்லி வாங்கினேன். அது இந்தளவுக்கு மென்மையாக இல்லையென்றாலும் அபாரமான சுவையைக் கொண்டிருந்தது. இந்த ஊரின் மண்ணில் விளைகிற அரிசியில்தான் ஏதோ மாயம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். அன்று மதியம் சாப்பிட்ட பிரியாணியின் சீரகச் சம்பாவும் தித்தித்தது. அப்போதுதான் அந்த ஊர் அரிசியில் உள்ள சிறிய இனிப்பு, வித்தியாசமான அடிநாக்கில் பரவும் இனிப்பே இட்லியை அவ்வளவு ரம்மியமான அனுபவமாக மாற்றுகிறது என்று புரிந்தது. அன்று மாலை அதே சேலத்தில் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது இடைவேளையின்போது அரிசி விளம்பரம் போட்டார்கள். வேறெதாவது ஊரில் பார்த்தால் சிரித்திருப்பேன், ஆனால் உணவின் ராஜாவே அந்த அரிசிதான் எனும்போது திரையில் விளம்பரம் என்ன கோயில் கட்டி கும்பிடலாம்.
சேலத்துக்காரர்கள் உண்மையிலே கொடுத்து வைத்தவர்கள்தாம். அவர்களால் வேறு ஊர்களுக்குப் போய் அந்த ஊர் அரிசி வகைகளை, இட்லியை ரசிக்கவோ சகிக்கவோ சிரமமாக இருக்கும். நான் அரிசிச் சோற்றுக்கு இப்படி அடிமையாவேன் என்று நினைத்ததில்லை. ஆனால் பாருங்கள் நான் பேலியோ டயட்டில் இருக்கிறேன். பயணித்ததாலே அன்று டயட்டைக் கழற்றி மூலையில் போட்டேன். ஊர் திரும்பினால் பழையபடி பேலியோதான். அதனால் அங்கிருந்து அரிசி வாங்கவில்லை. ஒருநாள் மீண்டும் அங்கு போய் சாப்பிட வேண்டும்.