வரும் சனிக்கிழமை ஊட்டியில் இலக்கியத் திருவிழாவில் என்னுடைய "நிழல் பொம்மை" நாவல் குறித்து எழுத்தாளர் எம்.டி முத்துக்குமாரசாமியுடன் பேசுகிறேன். இது ஒரு உரையாடல் நிகழ்வு. நேரமிருந்தால் நாவலில் இருந்து சில பத்திகளையாவது வாசித்துக்காட்ட ஆசையுண்டு. ஒரு எழுத்தாளர் இப்படித்தான் தன் நூலைக் குறித்து உரையாடி வாசகர்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என நம்புகிறேன். அதனால் நானே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் விண்ணப்பம் வைத்து அமர்வை இவ்வாறு உருவாக்கச் சொன்னேன்.
பொதுவாக நம் இலக்கிய விழாக்களில் நடப்பதைப்போல எழுத்தாளரை அழைத்து அவரது படைப்புலகுக்கு சம்மந்தமில்லாமல் சங்க இலக்கியதில் குதிரைகள், சமகால கொங்கு இலக்கியத்தில் குரங்குகள், நெல்லை இலக்கியத்தில் யானைகள் போன்ற பொதுத்தலைப்புகளில் எழுத்தாளர் பேசலாகாது. எழுத்தாளரின் பணி இலக்கியத்தைப் பயிற்றுவிப்பது அல்ல, தன் எழுத்தைப் புரொமோட் செய்வதும் மற்றவர்களைத் தம்மைக் குறித்துப் பேச வைப்பதுமே.
எழுத்தாளர்கள் பொதுத்தலைப்புகளில் உரையாற்றினால், கல்யாண மண்டபங்களில் மைக்கில் வாழ்த்த வரும் பெரிசுகளைப் போல அவர்களை நடத்தும் சமூகம் மெல்லமெல்ல அவர்களைப் பேச்சாளர்களாக முத்திரை குத்தி இருட்டடிப்பு செய்துவிடும். எழுத்தாளரின் ஒவ்வொரு சொல்லும் தன்னையும் தன் எழுத்ததையும் தன் இலக்கிய கருத்தியலையும் நம்பிக்கையையும் தன் வகையான எழுத்தையும் நோக்கி மட்டுமே இருக்க வேண்டும்.
இதைப் புரிந்துகொள்ள நாம் இரு வெகுஜனப் படைப்பாளிகள் 90களில் எப்படித் தம்மை மேடைகளிலும் ஊடகத்திலும் முன்வைத்தார்கள், எதைப் பற்றிப் பேசினார்கள் என்று பார்த்தால் போதும்: வைரமுத்து, பாலகுமாரன். அவர்கள் தம் எழுத்துக்கு நேரடித் தொடர்பில்லாத ஒரு சொல்லைக் கூடப் பேசி நீங்கள் பார்க்க முடியாது. வைரமுத்து மதுரை மாவட்ட நாவல்களைப் பற்றிப் பேசி புரொமோட் செய்ய நேரத்தை வீணடிக்க மாட்டார். பாலக்குமாரன் தொடர்ந்து தன்னையும் யோகி ராம் சுரத்குமாரையும் பற்றி மட்டுமே பேசினார்.
ஏனென்றால் வசீகரமான பேச்சை வைத்துக்கூட இலக்கியத்தை விற்க முடியாது. எஸ்.ரா தல்ஸ்தாய் பற்றி ஒரு மணிநேரம் பேசுவதைக் கேட்டுவிட்டு நாம் அவரது உப பாண்டவத்தை வாங்க மாட்டோம் - தல்ஸ்தாயை வாசிக்கவோ எஸ் ரா தல்ஸ்தாய் பற்றி எழுதிய உரைநூலைப் படிக்கவோ தான் தலைப்படுவோம். அதனாலே முதலில் நாம் நம்மைப் பற்றி அதிகமாகப் பேச மேடைகளைப் பெறவேண்டும். அதன் பிறகு நிறைய அவகாசம் இருந்தால் முன்னோடிகளையும் சமகாலத்தவர்களையும் பற்றிப் பேச வேண்டும்.