சப்பைக்கட்டுக்காக சொல்லவில்லை - பிரான்ஸைப் போல இந்தியா முழுமையான மதசார்பற்ற நாடு அல்ல. இந்தியாவில் அரசியல்வாதிகள், பிரதமர்கள், முதல்வர்கள் எல்லாருமே வெளிப்படையாக மதச்சின்னங்களை பாவிப்பார்கள், நிகழ்வுகளில் பங்கு கொள்வதை பிரச்சாரம் ஆக்குவார்கள், அவர்களுடன் ஒட்டுறவில் இருக்கும் அதிகாரிகளும் இவ்வாறே இருப்பார்கள். சிறுபான்மை மத நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்களிலும் மதத்தை / மதக்கருத்துக்களை போதிப்பதில் சட்டரீதியாக தடையில்லை (ஆனால் துபாய் போன்ற நாடுகள் அனுமதிக்காததால் அங்கு இதைவிட நிபந்தனைக்குட்பட்ட மதசார்பின்மை உள்ளது.)
நாம் ஏன் மதவாத மதசார்பின்மை தேசமாக இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள 18-19ஆம் நூற்றாண்டுக்குப் போக வேண்டும் - இந்தியாவின் சமூக சீர்திருத்த, அரசியல் எழுச்சி அமைப்புகள், நிகழ்வுகள் மதத்தின் அடிப்படையில் தோன்றியவையே. நமது சுதந்திரப் போராட்டமும் அதன் நீட்சியே. நம்மை ஆண்ட பிரிட்டீஷ் அரசும் இதை ஊக்குவித்தது. அவர்கள் காலத்தில்தான் -1870இல் - கும்பமேளா மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது. பிரிட்டீஷார் இதை வருமான வழியாகவும், மதம்சார்ந்த தேச உருவாக்க உத்தியாகவும் கண்டார்கள். நேருவின் காலத்தில் தான் மிகப்பெரிய கும்ப மேளா நிகழ்ந்து அதில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டு கூட்ட நெரிசலில் மக்கள் இறந்தார்கள். இது அண்மையில் மோடி யுகம் வரை தொடர்கிறது. மதச்சடங்குகளில் அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் அமைச்சர்களும் பங்கேற்பது தமிழ்நாட்டிலும் நீள்கிறது.
இந்த வரலாற்றை கருத்திற் கொண்டு நாம் மதசார்பற்ற நாடு எனும் பாசாங்கை விட்டொழிக்க வேண்டும்.
இன்னொரு விசயம் - நம் ஊரில் மதப்பழக்கத்தை மூடநம்பிக்கை, பிற்போக்கு சிந்தனை, சாதியத்துடன் முடிச்சுப்போட்டு ஒரு பக்கம் இதைக் கண்டித்தபடியே பாசாங்காக உள்ளுக்குள் பின்பற்றுகிறோம். என்னிடம் கேட்டால் இதன் பயன் என்னவென வினவ வேண்டும் - இந்திய / தமிழ்ச் சமூகம் இந்த நவதாராளவாத நெருக்கடியில், பின்நவீன மனநிலையில் சிக்கிச் சிதறாதிருக்க, ஒற்றைத் திரளாக உணர்வதற்கு மதநம்பிக்கையும் கூட்டுச் சடங்குகளும் உதவுகின்றன, தற்கொலைகள், மனநிலைக் குலைவுகளைக் குறைக்கின்றன. சமூகமாகத் தொடர சில நன்மைகளை அளிக்கின்றன. ஆகையால் அரசியல், வரலாற்றுரீதியாகவும், சமூக உளவியல் ரீதியாகவும் மதம் இருந்தே ஆகும்.
இது சிறுபான்மைக்கு என்னவிதமான நெருக்கடியைக் கொணரும் என்பது மட்டுமே முக்கியமான ஒரே கேள்வி - இதை 100 ஆண்டுகளுக்கு முன்பே ஜின்னா எழுப்பினார். அவர் சொன்னது உண்மையாகி இருக்கிறது. அதற்குத் தீர்வு மக்களிடம்தான் இருக்கிறது.