ஒவ்வொரு தேர்தலின்போது ராஜ்தீப் சர்தேசாய் ஜனநாயகத்தின் வீழ்ச்சி, பாஜகவின் அட்டூழியத்தை சாடிப் பேசுவார், ஆனால் பாஜக பாராளுமன்ற தேர்தலில் "எதுக்கு பொண்டாட்டி" எனப் பாடியபடி வெல்லும். ராஜ்தீப்பும் தளராமல் 2019ஆம் ஆண்டு, 2024ஆம் ஆண்டுக்கான தன் தேர்தல் எழுத்துக்களைத் தொகுத்து நூல்களாகக் கொண்டு வருவார். இம்முறை ஊட்டி இலக்கிய விழாவிலும் அப்படியான தன் நூலொன்றைப் பற்றி ஶ்ரீனிவாசன் ஜெயினுடன் உரையாடினார். எனக்கு அவரது பார்வையில் உள்ள முக்கியமான முரண்பாடு அவர் மதவாதத்தை ஒரு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறார் என்பது. உலகம் முழுக்க பாசிசம், மதவாதம் எப்படி கைகோர்க்கின்றன, அதன் பின்னுள்ள சமூகப் பொருளாதாரக் காரணிகள் என்ன என்பதைப் பற்றின அக்கறை இல்லை. தாராளவாத குடியாட்சி ஆதரவாளர்களின் பிரச்சினை இது - நவதாராளவாதமும் அது ஏற்படுத்தும் நகரமய சமூக அமைப்புமே பாசிசத்தை ஏற்படுத்துகிறது அல்லது அதற்கு தோதான சமூக நிலையை ஏற்படுத்துகிறது என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மோடியும் ஷாவும் போய்விட்டால் மதவாதம் ஒழிந்துவிடும் என நம்புவார்கள். ஆனால் மதவாதம் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதுதான் வரலாறு. இவர்களுக்கு உண்மையிலேயே தாம் பேசுவது குறித்த அக்கறை உள்ளதா அல்லது உணர்ச்சிகரமான பேச்சு இதயத்தில் இருந்து வராமல் மூளையில் இருந்து வருகிறதா? நான் இதைப் பற்றி யோசிக்கயில் பார்வையாளர் தரப்பில் இருந்து ஆய்வாளர், கல்வியாளர் கணேஷ் டேவி ஒரு கேள்வியை ராஜ்தீப்பிடம் எழுப்பினார்: "கருத்துச் சுதந்திரத்தை அரசு பறிக்கிறதென்றால் நீங்கள் பத்திரிகையாளர்கள் சேர்ந்து காந்திய வழியில் போராட வேண்டியதுதானே. ஏன் செய்வதில்லை?"
ரொம்ப நல்ல கேள்வி இது. இதற்கு ராஜ்தீப் நேர்மையான பதிலும் இறுத்தார்: "நாங்கள் போராடினால் எங்களை சிறையில் தள்ளுவார்கள், வேலை போகும், எங்களுக்கு சம்பளம் வராது. அதனால் நாங்கள் போரடுவதில்லை. நாங்கள் மாதச் சம்பளத்தை நம்பி வாழ்பவர்கள்." மேலும் அவர் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் எப்படி தெருவில் திரள்வதற்கு எதிரான கடும் சட்டங்கள் உண்டு, இதையெல்லாம் எதிர்த்து யாராலும் இயங்க முடியாது என்று சொன்னார். அவர் பொதுவாக உயர்மத்திய வர்க்க ஊடகவியலாளர்களைப் பற்றி இதைச் சொன்னார் என்று வைத்துக் கொள்வோம். இது உண்மைதான் - நாளை நான் அரசை எதிர்த்து தெருவில் நின்று முழங்க முடியாது. ஏனென்றால் நான் கைதானால் அடுத்த நொடி வேலை போய்விடும். அதுதான் கிடுக்கிப்பிடி. கைதாவதோ மண்டபத்தில் இருப்பதோ சிறைக்குப் போவதோ கூட அல்ல. எல்லாருடைய குடுமியும் சம்பளத்தில்தான் இருக்கிறது. ஆனால் ராஜ்தீப் சொல்லாமல் விட்ட விசயம் ஒன்று உண்டு: ஏன் பஞ்சாபிய விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாக அசராமல் போராடினார்கள்? அவர்களால் முடிந்தது நன்கு படித்த, வசதியானவர்களால் முடியவில்லை? மத்திய வர்க்கத்துக்கு சம்பளம், வேலை பிரச்சினையென்றால் மேற்தட்டுக்கு தம் வர்க்கமே பிரச்சினை - அவர்களை சமூகத்தில் உள்ள பல பிரச்சினைகள் பாதிப்பதில்லை. அவர்கள் வருந்துவதும் கோபப்படுவதும் லட்சியபூர்வமாக மட்டுமே. அது மேலோட்டமான கொந்தளிப்பு. ஐந்து நட்சத்திர ஓட்டலில் டோஸ்டும் ஜூஸும் சாப்பிட்டபின் வரும் உப்புசத்துடன் கூடிய கொந்தளிப்பு. அதில் எந்த உண்மையான உணர்ச்சியும் இராது.
ஒரு தேசம் வளரவளர மக்களும் கூடச் சேர்ந்து செழிக்கிறார்கள் எனில் அவர்கள் அரசியலற்றுப் போய் முழு அடிமைகளாகி விடுவார்கள். இங்கே நாம் வளத்தை சற்று வித்தியாசமாகப் பார்க்க வேண்டும் - சொந்தமாக சொத்தும் நிலமும் இருந்து அதிலிருந்து மட்டுமே வருமானத்தைப் பெறுவோருக்கு தமது உழைப்பு, வருமானம் மீது உரிமையுணர்வு இருக்கும். தொழில், சேவைத் தொழில், வேலை போன்ற வருமான மார்க்கங்கள் நம்மை பணத்திலிருந்தும், பொருளில் இருந்தும் அந்நியப்படுத்துகின்றன. அப்போது நமக்கு சுரணையோ அறவுணர்வோ முழுக்க அற்றுப்போய் விடும். எந்திரம் போலப் பேசுவோம், செயல்படுவோம். பொய்யைத் துப்பும் பொம்மையாவோம். நான் இதைப் பற்றி "கடைசி விவசாயி" பற்றின என் கட்டுரையில் எழுதியிருந்தேன்.
ராஜ்தீப் மட்டுமல்ல பல்வேறு ஊடகவியாளர்கள் தம்மை அரசியல் முகவராகக் கருதும் இடத்துக்கு வந்து கட்சியின் பேச்சாளர்களாகவே போகப்போக மாறுவதும், மக்கள் ஊடகங்கள் மீது நம்பிக்கையிழந்து செய்தி வாசிப்பதை, பார்ப்பதை நிறுத்துவதும் இந்த அந்நியமாதலின் நீட்சிதான்.
மக்கள் தம் பொருளை தாமே நேரடியாக உற்பத்தி பண்ணும்வரையில், பணத்தை சார்ந்திராமல் சமூக உறவுகளை, சமூகத்தை, நிலத்தை, இயற்கையை சார்ந்திருக்கும் நிலை மீளாதவரையில் சர்வாதிகாரம், ஒடுக்குமுறையை ஆதரிக்கும் மனநிலை போகாது. ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது. ஜனநாயகத்தின் அசலான விரோதி ஒற்றைக் கட்சி தேர்தல் முறைக்கு இணையாக கட்டற்ற நகரமயமாக்கலும், நவதாராளவாதமுமே என்பதை நாம் இன்று அமெரிக்க, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளில் நிலவும் சுரண்டலையும் மனிதநேயமற்ற நடைமுறைகளையும் பார்த்தால் உணர முடியும். போராடுவது போக எதையும் எதிர்த்துக் கேட்கவோ யோசிக்கவோ திராணியற்ற ஜனங்களை இந்த பொருளாதார அமைப்பு பயிற்றுவித்து எடுக்கிறது. தாராளவாத பொருளாதாரத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட மக்களாட்சியை அதுவே உள்ளிருந்து தின்று அழிப்பதை நாம் இந்த காலகட்டத்தில் பார்க்கிறோம்.
நாளை கர்நாடகாவில் தர்ணா - ஒரு அரசு பேருந்து ஓட்டுநர் மொழிப்பிரச்சினை காரணமாக தாக்கப்பட்டதே காரணம். இங்குள்ள காங்கிரஸ் அரசு இதை ஏற்க மறுத்துவிட்டது. அது இப்போது "அரசு பேருந்துகளை ஒழித்தால் இந்த தர்ணா தொல்லை ஒழிந்துவிடும்" என நினைத்துக்கொண்டிருக்கும். ஏனென்றால் அரசு ஊழியர்களுக்கு தம் வேலை, சம்பாத்தியம் மீது உரிமையுணர்வு அதிகம், அந்நிய உணர்வு குறைவு, இந்த பேருந்துகள், இந்த சேவை தமது என நினைக்கிறார்கள், அங்கிருந்தே எதிர்ப்புணர்வு வருகிறது. மெல்லமெல்ல அந்த உணர்வை பறித்தெடுப்பதே அரசின், முதலாளிகளின் விருப்பம். பிரச்சினை தர்ணா அல்ல, பிரச்சினை ஒருநாள் சாலைகள் வெறிச்சோடுவது அல்ல, அந்த நட்டத்தை வியாபாரிகள் மாலையே அடுத்தடுத்த நாட்களிலே ஈடுகட்டுவார்கள். பிரச்சினை இந்த உரிமையுணர்வு, தன்மான உணர்வு. இதை எந்த அரசும், அமைப்பும் விரும்பாது. ஏனென்றால் அது மக்களாட்சியில் மக்களின் இடத்தை வலுப்படுத்தும். மக்களாட்சியில் இருந்து மக்களை வெளியேற்ற அவர்களை எல்லா இடங்களில் இருந்தும் உணர்வு ரீதியாக, பொருளாதார ரீதியாக, உரிமை ரீதியாக வெளியேற்ற வேண்டும். இதற்காகவே பொதுவாக தர்ணா குறித்த எரிச்சல், அது அமைதிக்கு குந்தகமானது எனும் சிந்தனை சமூகத்தில் தோற்றுவிக்கப்படுகிறது, அந்நியப்பட்ட மத்திய வர்க்கத்திற்கு அரசு ஊழியர்கள், திரளும் உரிமையுணர்வு கொண்டோர் மீதுள்ள பொறாமை இதற்கு ஆதரவு தரத் தூண்டுகிறது. அரசு இதனாலே இப்போது அரசு ஊழியர்களை வேலைக்கு எடுக்காமல் ஒப்பந்த ஊழியர்களை எடுக்கிறது. இலவச சேவைகளை வெட்டிச் செலவு என்கிறது. குறைந்தபட்ச கட்டணச் சேவைகளை பயனற்றவை என்கிறது. பிரச்சினை பணம் அல்ல - சாலைகளை, பாலங்களை, மெட்ரோவை அமைக்க, பயன்படுத்தாத ராணுவத் தளவாடங்களை வாங்க அரசிடம் நிதியுள்ளதே.
எனக்கு தர்ணாக்காரர்களையும் ராஜ்தீப் சர்தேசாய்களையும் பார்க்கையில் நினைவேக்கம் கலந்த துக்கம் வரும். ஏதோ பழையகாலம் ஒன்று எங்கிருந்தோ உயிர்ப்பெறுவதைப் போல, அதற்கும் இன்றைய யுகத்துக்கும் சம்மந்தமில்லாத ஒப்பாரிக் கலைஞர்கள் தோன்றி அழுவதைப் பார்ப்பதைப் போல.