Skip to main content

“நிழல் பொம்மை” - ஒரு நேர்முகம்




எழுத்தாளர் திலீப்குமார் எனக்கு மிகவும் பிடித்த புனைவெழுத்தாளர், அபாரமான உளவியல் கூர்மையுடன் மொழிக்கட்டுப்பாட்டுடன் மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியவர். அவர் எனது “நிழல் பொம்மை” நாவலைப் படித்துவிட்டு அது நன்றாக எழுதப்பட்டுள்ளதாகப் பாராட்டினார். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்தேன். அவர் எனது நாவல் குறித்து இவ்வாரம் நடைபெறவுள்ள ஊட்டி இலக்கிய விழாவில் என்னுடைய உரையாடவிருந்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட தவிர்க்க இயலாத நெருக்கடியால் அவரால் நிகழ்வுக்கு வர முடியவில்லை. அதனால் தன் கேள்விகளை என்னிடம் பகிர்ந்திருந்தார். அக்கேள்விகளுக்கான பதில்களை இங்கே பகிரலாம் என இருக்கிறேன்:
திலீப் குமார்: முதலில், "நிழல் பொம்மை" நாவலுக்காக என் வாழ்த்துகள்...
1) இந்த நாவலை எழுத உங்களுக்கு ஆரம்ப உந்துதலாக இருந்த ஓரிரு எழுத்தாளர்கள் குறித்தும் அதன் தொடர்ச்சியாக இந்த நாவல் உருவான விதம் குறித்தும் உங்கள் அறிமுக குறிப்பில் விளக்கியுள்ளீர்கள். அதையே இங்கு கூடியிருக்கும் வாசகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இன்னும் சற்று விரிவாக கூறமுடியுமா?
ஆர். அபிலாஷ்: வாழ்த்துகளுக்கு என் நன்றியும் அன்பும். காப்காவின் “விசாரணை” நாவலின் தாக்கம் குறித்து நாவலின் முன்னுரையில் சொல்லியிருந்தேன். அவரது “கோட்டை” நாவலையும் நான் குறிப்பிட வேண்டும். காப்காவின் இந்நாவல்களை இரு விதங்களில் படிக்கலாம்: ஒன்று, கண்ணுக்குப் புலப்படாத அதிகாரம், மர்மமான சர்வாதிகாரம் நம்மை தனக்கு ஏற்ப அலைகழிப்பதை, வடிவமைப்பதை, அதன் பிடியில் இருந்து விலக முடியாமல் நாம் தவிப்பதை, உள்ளும் புறமுமாக மேலதிகாரத்தின் தாக்கத்திற்கு எதிர்வினையாற்ற நாம் உருமாறுவதை காப்கா சித்தரிக்கிறார். இன்னொன்று, முழுக்க இருண்மையான, எங்குமே என்றுமே தோன்றாத, தோன்ற முடியாத தெய்வமொன்றை நோக்கிய தேடல், அதைக் குறித்த விசாரணை, அதன் வியர்த்தத்தை விவாதிக்கும் காப்கா மனிதன் தன் அடையாளத்தை, சுயத்தை, இருத்தலை அந்த முடிவற்ற தேடலின் ஊடாக காண்கிறானா இல்லையா எனும் கேள்வியையும் எழுப்புகிறார். இரு வாசிப்புகளும் நமக்கு அபாரமான திறப்புகளை அளிக்கின்றன. நான் என் நாவலுக்கு முதல் வாசிப்பு தந்த அக ஊக்கத்தை எடுத்துக்கொண்டேன். அதன் தடங்களில் பயணித்தே இந்நாவலை என் பாணியில் எழுதினேன். இதில் காப்காவின் இருத்தலியத்தையோ ஆன்மீகத்தையோ மொழியையோ பார்க்க முடியாது. முழுக்க என் பாணியிலான புனைவுதான் இது. காப்கா ஒரு தூண்டுகோல் மட்டுமே.
இன்னொரு எழுத்தாளர் கூட்ஸி. என்னால் கூட்ஸியின் “மானக்கேடு” நாவலின் நாயகனை ஒத்த பாத்திரத்தை உருவாக்க முடியவில்லை. அவனுக்கான இடம் நம் உலகில் இல்லை. அதனால் நிறைய பயப்படுகிற, குழப்பமாக எல்லாவற்றையும் எதிர்கொள்கிற சாமான்யனையே நாயகனாக்கினேன். அவனது பிறழ்வு, சிக்கல்கள், தாழ்வுணர்வை எதிர்கொள்கையில் அவன் தனக்கும் பிறருக்கும் ஏற்படுத்தும் பிரச்சினைகள் என்று எழுதினேன். மேலும் கூட்ஸியின் தென்னாப்பிரிக்காவில் இனவாத வெறுப்பு, அவநம்பிக்கை, ஒழுக்க மீறல், பாவம் குறித்த பிரக்ஞை பிரதானம் என்றால் இன்றைய உலகில் நிகழும் என் கதையில் நாயகின் தடைகள் முழுக்க வேறாக இருந்தன: அவன் இந்தியன் என்பதால் தான் யாரெனும் கேள்வி ஒவ்வொரு தவறின் உச்சத்தில் நிற்கும்போதும் அவனுக்கு எழுகிறது, அவன் தன்னைக் கடந்து செல்ல எத்தனித்தபடியே இருக்கிறான். இதற்கான ஆன்மீகமான தளத்தையும் நான் கதைக்குள் நாடினேன். அதற்கு பிளேட்டோவையும் நகுலனையும் பயன்படுத்தினேன். இப்படி பல இடங்களில் இருந்து பெற்ற தூண்டுதல்களைக் கொண்டு என் கதைக்குத் தேவைப்படுகிற உலகை, அதன் பாதைகளை, வரைபடத்தை, உடல்களை, அகவுலகை, தத்துவத்தை, விழுமியங்களை, கண்டுபிடிப்புகளை நானே உருவாக்கினேன்.
***
திலீப் குமார்: 2) இந்த நாவலின் பிரதான பாத்திரம் தமிழ் புனைவுகளில் இதுவரை உருவகிக்கபடாத ஒன்றாக உள்ளது. முற்றிலும் விசேஷமான ஒரு உடலமைப்பை கொண்ட இப்பாத்திரத்தை சிறிதும் மிகைப்படுத்தாமல் நம்பகத்தன்மை மிக்கதாக வார்ப்பதில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?
நான் முதலில் நாயகப் பாத்திரத்தை என்னைப் போன்றே உருவாக்கினேன். ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை. அதனால் என் நண்பர் ஒருவரை மனத்தில் கொண்டு புதிதாக எழுதினேன். அதற்காக ஆய்வுகளை மேற்கொண்டேன், புத்தகங்களைப் படித்தேன். ஆனாலும் ஒரு காட்சியை எழுதும்போது அவர் எந்த இடத்தில் இருக்கிறார், அவரால் என்னவெல்லாம் முடியும், முடியாது என கவனித்து எழுதுவது சிரமமாக இருந்தது. உ.தா., சிறுவயதில் அவர் எப்படி கழிப்பறைக்கு சென்று மூத்திரம் கழித்திருப்பார்? ஜன்னல் அவருக்கு மேலாக இருக்குமா? புத்தகத்தை கையில் வைத்து படிக்க சிரமமாக இருக்குமா? தன் குறியைத் தொடுமளவுக்கு அவரது கை நீளமாக இருக்குமா என ஏராளமான கேள்விகள் எனக்கு இருந்தன. என் நண்பரை உன்னிப்பாக தொடர்ந்து கவனிப்பது, கற்பனை செய்வது என மெனக்கெட வேண்டியிருந்தது. ஆனால் அந்த சவாலே என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
***
ஆர். அபிலாஷ்: 3) கருத்தியல் ரீதியாகவும் இப்படைப்பு
நம் சமகால வாழ்வின் பல முக்கிய புள்ளிகளைத் தொடுகிறது.
அரசியல் , பாலியல், அரசு எந்திரங்கள், நிறுவனங்கள் என்று பலவற்றை குறித்து நுட்பமாகவும விரிவாகவும் விவாதிக்கிறது இந்த நாவல்.
இன்றைய பின் நவீனத்துவ உலகில் ஒரு தனி மனிதனின் யதார்த்த மற்றும் உளவியல் அனுபவங்கள் அனைத்திலும் நிறுவனங்கள் ஊடுருவி கட்டுப்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன. தனிமனிதர்களுக்குரிய சுதந்திரமான, அந்தரங்க வெளி என்பது சிறுக சிறுக அபகரிக்கப்பட்டு வருகிறது. இந்த "தனிமனிதனுக்கும் நிறுவனயமாதலுக்கும்" இடையேயான போர்தான் இன்று நம் வாழ்வின் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த ஒடுக்குமுறையின் தீவிரத்தையும் அதை எதிர்கொள்வதில் உள்ள சிரமங்களையும், ஒரு பிரஜையாகவும் படைப்பாளியாகவும் நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
ஆர். அபிலாஷ்: மிகச்சிறந்த அவதானிப்பு இது. அற்புதமான இக்கேள்விக்கு நன்றி. நான் ஒரு பிரஜையாகவும் படைப்பாளியாகவும் மட்டுமல்ல தனிமனிதராகவே இச்சூழலால் மிகவும் பாதிக்கப்படுகிறேன். முற்றதிகாரமும் நிறுவனமயமாதலும் என்னை எந்தளவுக்கு மாற்றுகின்றன என உணர்ந்ததால் ஏற்பட்ட பரிதவிப்பைக் கடக்கவே இந்நாவலை ஓரே மூச்சில் கிட்டத்தட்ட 22 நாட்களில் இரவு பகலாக எழுதினேன். எழுதி முடித்ததும் சில மாதங்கள் நிம்மதியாக உணர்ந்தேன். ஆனால் அடுத்தடுத்து பல்வேறு சிக்கல்களை சகமனிதர்களிடையே காண்கையில் அதிகாரமும் நிறுவனமும் மனிதர்களை இந்தளவுக்கு எந்திரமாக, விழுமியமோ நேசமோ அற்றவர்களாக மாற்றுமோ என அதிர்ச்சியாகிறேன். இன்னும் நிறைய எழுதினால் ஒழிய என்னால் இந்தச் சூழலின் வருத்தங்களில் இருந்து, காயங்களில் இருந்து விடுபட முடியாது என நினைக்கிறேன். நான் எழுதி எழுதியே இதிலிருந்து வெளிவர வேண்டும்.
*****
திலீப் குமார்: 4) அழகியல் மற்றும் , கருத்தியல் ரீதியாக தமிழ்ச்சூழலில் இந்த நாவலின் பொருத்தப்பாடு குறித்து கூறுங்கள்.
ஆர். அபிலாஷ்: நான் வாசித்தவரையில் சமகாலத் தமிழ்ச்சூழலில் இவ்வகையான பாத்திரமோ நெருக்கடிகளோ இல்லை. ஆனால் எழுபது, எண்பதுகளுக்குப் போனால் ஆதவன், சம்பத், நகுலன் உள்ளிட்டு பலரும் இச்சூழலையும் ஆன்மீக நெருக்கடியையும் பற்றிப் பேசியிருக்கிறார்கள். என் நாவலின் பொருத்தப்பாடு 40-50 ஆண்டுகளுக்குப் பின்னால் உள்ள இலக்கியத்துடன்தான் என நினைக்கிறேன்.
***
திலீப் குமார்: 5) தமிழ் வாசகர்களிடையே இந்த நாவல் எத்தகைய வரவேற்பை பெற்றது?
ஆர். அபிலாஷ்: இன்னும் பரவலான எதிர்வினைகள் வரவில்லை. எழுத்தாள நண்பர்கள் வாசித்தவரையில் நல்ல வாசிப்பனுபவம் உள்ளதாகச் சொன்னார்கள். முருகேச பாண்டியன் வெகுவாகக் கொண்டாடினார். இரண்டு மணிநேரத்துக்கு மேலாக அவர் உற்சாகம் வடியாமல் நாவல் குறித்து பேசியது என்னை மகிழ்ச்சியில் தள்ளியது. அப்போதே நாவலுக்காக நான் பட்டபாடுகளுக்கு பலன் கிடைத்ததாக ஒரு எண்ணம் ஏற்பட்டது. மேலும் வாசகர்களின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
***
திலீப் குமார்: 6) பொதுவாக தற்கால நவீன தமிழ் இலக்கியம் குறித்து உங்கள் கருத்துகளை சுருக்கமாக பகிர்ந்து கொள்ள முடியுமா?
ஆர். அபிலாஷ்: புனைவுகள் மேலும் மேலும் புறவயமாக மாறிவருவதாக நினைக்கிறேன். புதிய அனுபவங்கள், தரவுகள் அதைக் குறித்த கவர்ச்சி வாசகர்களிடமும் அதிகமாகி வருகிறது. அடுத்து, கதையை சுவாரஸ்யமாக வேகமாக நகர்த்த வேண்டும் எனும் அழுத்தம் கூடி வருகிறது. மொழியை அடர்த்தியாக்கினால் அதை கூர்ந்து கவனித்து வாசிப்போர் குறைந்து வருகிறார்கள் என்று சொல்ல மாட்டேன், வேகமாக மேம்போக்காக படிக்கிற வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்பேன்; இதனால் கொஞ்சம் நுட்பமாக, வித்தியாசமாக எழுதினாலே கதை நகரவில்லை, குழப்பமாக உள்ளது என்று புகார் தெரிவிக்கிறார்கள். இது என் சக எழுத்தாளர்களுக்கு வரும் விமர்சனங்களை வைத்து நான் புரிந்துகொண்டுள்ள விசயம். அதாவது வாசகர் பரப்பு மிகவும் கலைந்து போயுள்ளது. இது புதிய புனைவுகளையும் பாதிக்கிறது. புனைவில் முன்பிருந்த வழிகாட்டிகள் இன்றில்லை, அல்லது அவர்களைப் பயன்படுத்த இளம் படைப்பாளிகள் பெரிதும் முயல்வதில்லை அல்லது ஒரு இடைவெளி விழுந்துவிட்டது. விமர்சித்தாலே முகம் சுண்டிப்போய் விடுகிறார்கள், உறவைத் துண்டிக்கிறார்கள் என்பதால் யாருமே வாசித்து உண்மையைச் சொல்லவோ விமர்சித்து காயப்படுத்தி விடுவார்கள் என அஞ்சி கரட்டுப் பிரதியை வாசிக்கக் கொடுக்கவோ தயங்குகிறார்கள். இதையும் மீறி பல நல்ல படைப்புகள் வருகின்றன. எதார்த்தம், பின்நவீன பரீட்சார்த்த இலக்கியம் எனும் இரு போக்குகள் முன்பிருந்ததைப் போன்றே தொடர்கின்றன. நுண்கதைகள் நல்ல கவனம் பெறுகின்றன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் படைப்பாளிகள் ஒருவிதமான அகநெருக்கடியை, போதாமையைக் கண்டுகொண்டு தமக்கான தனித்துவமான வழிகளில் அதைப் பின் தொடர்ந்து செல்வார்கள், கேள்விகளை எழுப்புவார்கள். அது சமகால புனைவுகளுக்கு இன்னும் நிகழவில்லை என்பது என் வாசிப்பு. ஆனால் அது விரைவில் நிகழத்தான் போகிறது. அதுவே முக்கியமான பாய்ச்சலாக இருக்கும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...