Skip to main content

எது சுதந்திரம்?



என் வாழ்வில் நான் கலந்துகொண்ட மிகச்சிறந்த இலக்கிய கூட்டங்களில் ஒன்று இந்த மார்ச் மாதம் நடந்த புரவி இலக்கியக் கூடுகை. இதை மிஸ் பண்ணிய படைப்பாளிகள் நிஜமாகவே மிகப்பெரிய அனுபவம் ஒன்றை இழந்துவிட்டார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. இந்தக் கூட்டத்தில் என் அனுபவங்களைப் பற்றி பிறகு எழுதுகிறேன். இன்னொரு விசயத்தை இங்கு குறிப்பாகச் சொல்ல வேண்டும் - எனக்கு கிடைத்த படிப்பினை.

கடந்த சில ஆண்டுகளாகவே நான் வெகுஜன ஊடகங்களைச் சேர்ந்த பிரபலங்களைச் சந்தித்தால் பிரியமாகப் போய்ப் பேசுவேன். என்னைச் சாதாரண மனிதராகவே அவர்களிடம் முன்வைப்பேன். அது ஒரு பிரச்சினையாகவே எனக்குத் தோன்றியதில்லை. ஆனால் புரவி கூடுகை என் எண்ணத்தை மாற்றியது. நீண்ட காலத்துக்குப் பிறகு நான் அங்கு ‘சமத்துவத்தை’ அனுபவித்தேன். இதைக் கேட்க உங்களுக்கு வினோதமாக இருக்கும். நாம் பொதுவாக சமமாக உள்ளதாகவே நம்புகிறேன் - அலுவலகத்தில், தெருவில், வீட்டில், நண்பர் குழாமில். ஆனால் அது உண்மையல்ல - ஏதோ ஒரு படிநிலை, ஒப்பீட்டு அலகு அங்கு செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. அங்கு மரியாதையோ ஏற்போ இல்லை, எடையிடப்படுவதும் நிலைவைக்கப்படுவதுமே உள்ளது. சாரு ‘சகஹிருதயர்’ எனும் சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார் அல்லவா, அதன் பொருள் நம்மைப் போன்றவர்கள் என்பதல்ல, அதன் பொருள் நம்மைப் போன்ற அகத்திறப்பும், மலர்ச்சியும் ஒளியும் படைத்தவர்கள் என்பதே. அக ஒத்திசைவால் நமக்கு இணையாக வருபவர்கள் என்பதே. இப்படியானவர்களிடம் இருக்கையில் மட்டுமே நாம் அந்த அபூர்வமான ‘சமத்துவத்தை’ உணர முடியும். புரவி கூடுகையின்போது மட்டுமே நான் என் வாழ்வில் அரிதாக என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமோ யாரையும் மதிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை என்று உணர்ந்தேன். இது முடிவோ தீர்மானமோ அல்ல, இது ஒரு விளக்க முடியாத உணர்வு.
இது எப்படி அங்கு நிகழ்ந்ததென்றால் அங்கு யாருக்கும் தனியிடம், அதிகமான முக்கியத்துவம் இல்லை, அங்கு யாரையும் யாரும் கட்டுப்படுத்துவதாக நான் உணரவில்லை. நான் முதல் நாள் அங்கு செல்லும்போதே கட்டுரை வாசித்த கல்விப்புலத்தைச் சேர்ந்த ஒரு இளம் விமர்சகரையும், ஒரு கவிஞரையும் பங்கேற்பாளர்கள் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். யாரும் அங்கு தலையிட்டு விவாதத்தை நெறிப்படுத்தி இதுதான் சரி, இது தவறு என ஒரு இருமைக்குள், கருத்தியலுக்குள் பேச்சைக் கட்டுப்படுத்த முயலவில்லை. நெறியாள்கை செய்ய ஒருவரும் கருத்துத் தெரிவித்து முறைப்படுத்த பா. வெங்கடேசனும் இருந்தாலும் அவர்கள் தாம் சொல்வதே சரியெனும் அணுகுமுறையுடன் உள்ளே நுழையவே இல்லை. அங்கிருந்த முழுமையான ஜனநாயகத் தன்மை என்னை அசர வைத்தது. ஏனென்றால் கடந்த 25 ஆண்டுகளில் அப்படியொரு சூழலை நான் தமிழ்நாட்டிலோ வேறெங்குமோ கண்டதில்லை. கடந்த சில பத்தாண்டுகளில் நாம் மெல்லமெல்ல இலக்கிய பாசிசத்தை நோக்கியே வெகுவாக நகர்ந்திருக்கிறோம், அதையே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம், இயல்பாக்கியிருக்கிறோம் என்பதும் என் மண்டைக்கு உறைத்தது. அப்போது பூக்கோ சோம்ஸ்கியுடனான உரையாடலில் தெரிவிக்கும் ஒரு கருத்து நினைவுக்கு வந்தது: “தனிமனிதர்கள் மீது மிக மேன்மையான கருத்துக்கள், சொல்லாடல்களின் பெயரிலேயே உச்சபட்சமான கலாச்சார வன்முறையும் ஒடுக்குமுறையும் செலுத்தப்படுகிறது.” இன்று நாம் எந்த கூட்டத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு மக்களைக் கட்டுப்படுத்துவதும் உரையாடல்காரர்களின் கருத்துக்களுக்கு கடிவாளம் போடுவதுமே மறைமுக லட்சியமாக உள்ளது. ஒழுங்கின்மை, சர்ச்சை ஆற்றலையும் நேரத்தையும் வீணடிக்கும் செயல் என்று சொல்லிச் சொல்லியே எல்லாரையும் வாய்மூட வைக்கிறார்கள். எல்லா தளங்களிலும் குட்டிக்குட்டி ஹிட்லர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறோம். வெகுஜனத் தளத்தை நோக்கி இலக்கிய உரையாடல்கள் நிகழ்ந்ததுமே இந்த ஆபத்தான போக்கு தோன்றிவிட்டதென நினைக்கிறேன். இதை நாம் சொற்களால் எதிர்க்கவோ தடுக்கவோ முடியாது, ஆனால் செயலால் முடியும் என்பதையே புரவி கூடுகை எனக்குக் காட்டியது. நாம் சுதந்திரமாக இருக்க முடிவு செய்தால், அதற்காக நம் மீது படிந்திருக்கும் மேலாதிக்க நம்பிக்கைகள், கருத்தியல்களின், விழுமியங்களின் பாசியைக் கழுவினாலே நம்மை யாரும் தடுக்க முடியாது.
புரவி கூட்டத்தில் நான் பேசிய, நான் பிறர் பேசிக்கேட்ட சில கருத்துக்களை தமிழ்நாட்டில் வேறெந்த சூழலிலுமே பேச முடியாது. உ.தா., எழுத்தில் அதிகார மையம், சாராம்சவாதம் உருவாவதற்கும் அறம் சார்ந்த விழுமியங்களுக்கும் தொடர்பு இல்லையா, அறம் எனும் அதிகாரக் கதையாடலை உடைக்காமல் நம்மால் இருத்தலை அறிய முடியுமா என்று நான் வினவ அதைக் குறித்து விவாதம் திரும்பியது. பா.வெ அப்போது பத்தாயின் “விழியின் கதை” நாவலைக் குறிப்பிட்டு நான் சொல்வது அதைப் பற்றியா என்று கேட்டார். நான் அந்த நாவலில் ஒரு பாதிரியார் கொல்லப்பட்டு அவரது பிரேதத்துடன் நாயகி உறவுகொள்ளும் காட்சியைக் குறிப்பிட்டுப் பேசினேன். அங்கு அதனால் எந்த விரோதமான எதிர்வினையும் எழவில்லை. எல்லாருமே அகம் லேசாகி, ஒழுக்கத்தின் முள்வேலிகள் தளர்ந்து சுதந்திரமாக இருந்ததால் புதிய கருத்துக்களை எதிர்கொள்ளும் அகத்தெளிவு கொண்டிருந்தார்கள். (தெளிவான நீரைப் போன்ற அகத்தெளிவே உண்மையான முதிர்ச்சி.) இதை நீங்கள் தமிழில் வேறெங்கு பேசினாலும் குழப்பமும் மேலோட்டமான எதிர்வினைகளுமே வரும் என்பதில் சந்தேகமில்லை. பா. வெ இதைச் சாத்தியப்படுத்த தெளிவாகவே கூட்டத்தில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை 50-60க்குள் நிறுத்திவிட்டார். நான் பேஸ்புக்கில் இந்நிகழ்வைப் பற்றி எழுதியபோது அவரிடம் சிலர் தொடர்புகொண்டு தம் பங்கேற்பைப் பதிவைச் செய்யக் கோரியிருக்கிறார்கள். அவர் மறுத்துவிட்டதுடன், சமூகவலைதளங்களில் நிகழ்வைப் பற்றி எழுத வேண்டாம் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். இவரென்ன ரகசியக் கூட்டமா நடத்துகிறார் என்று எனக்கு குழப்பமாக இருந்தது. எனக்கு அவர் எவ்வளவு முக்கியமான முடிவெடுத்திருக்கிறார் என்பதே பின்னரே புரிந்தது - கூட்டம் பெருகப்பெருக மக்களிடையே அந்நியத்தன்மையும் அதனாலே பதற்றமும் அதிகரிக்கிறது என்று டெஸ்மண்ட் மோரிஸ் சொல்லுவார் (The Human Zoo). சூழலில் அந்நியோன்யம் இல்லாதபோது நாம் உடனடியாக பற்றுகோலாக படிநிலையை நாடுவோம், நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடவும் மதிப்பிடவும் தொடங்குவோம், நம் கருத்துக்களுக்கு, மதிப்பீட்டுக்கு ஒரு தலைமைப் பீடத்தை நாடுவோம் - பெரும் இலக்கிய அமைப்புகளுக்கு உள்ள அடிப்படையான சிக்கல் இதுதான்: அவற்றை நீங்கள் சுலபத்தில் ஹிட்லரின் SS படையாக இலக்கியப் புலத்தில் மாற்றிவிட முடியும். நம் ஊரில் இன்று அலுவலகங்களில், இலக்கிய வெளி, சமூகவலைதள வெளி என கிட்டத்தட்ட எல்லா புலங்களுமே ஹிட்லரின் ஜெர்மனியைப் போல மாறிவருகின்றன. எந்தளவுக்கு என்றால் சனிக்கிழமை இலக்கியக் கூடுகை முடிந்து பெங்களூருக்குத் திரும்ப வேண்டும் என உணர்வு வந்தபோது எனக்குள் சட்டென்று “நான் சிறைக்குத் திரும்புகிறேன், பரோல் முடிந்து திரும்புகிறேன்” எனும் எண்ணம் உதித்தது. திடுக்கிட்டேன். ஆத்மார்த்தமான உணர்வு அது. வெட்டவெளியில் இருந்து அடைக்கப்பட்ட உலகுக்குள் போகும் பயம்.
இதற்குத் தீர்வு சிறு குழுக்களே - அணுக்குடும்பம் என்று சொல்கிறோமோ அதைப் போல அணுவளவிலான நட்புக் குழாம்கள் நமக்கு இன்று அவசியமாக உள்ளன. தலைமைப் பீடம் இல்லாத, அதேநேரம் விழுமியங்களும் திட்டவட்டமான சித்தாந்தமும் இலக்கும் இருந்தாலும் அவற்றை மக்கள் மீது திணிக்காத, அவற்றை மறுக்கவும் மக்களை அனுமதிக்கிற சூழல் அவசியப்படுகிறது. அப்படியான மிகச்சிறு குழுக்களில், அணுக்கமாக மனிதர் தம்மை அறிகிற குழுக்களில் அசலான முழுமையான சமத்துவம் சுலபத்தில் சாத்தியமாகிறது, அங்கு எல்லா அடையாளங்களையும் கலைக்கவும் வன்மம் இன்றி நடந்துகொள்ளவும் முடிகிறது. சமத்துவமே சுதந்திரம் (நினைத்ததைச் செய்வது அல்ல சுதந்திரம்).
இதை நான் புதிதாகச் சொல்லவில்லை - சுதந்திரத்தை நாடி காலங்காலமாக மக்கள் ரகசியக் குழுக்கள், cult குழுக்களுக்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அங்குதான் அவர்கள் ஏதோ ஒரு லட்சியவாதியால், போலி குருவால் முழுமையாக அடிமைப்படுத்தப்படுகிறார்கள். அரிதாகவே குருமார்களைக் கொன்று மிதித்தெழுகிற சூழல்கள் அமைந்து வருகின்றன.
கடைசியாக ஒன்று தோன்றுகிறது - உண்மையான சிறை என்பது சுவர்களாலும் இரும்புக் கம்பிகளாலும் ஆனது அல்ல. உண்மையான சிறையென்பது மற்றமையின் உலகமே. உண்மையான சுதந்திரமானது மற்றமையில்லாத வெளியே (இதனாலே மற்றமையை நரகம் என்று சார்த்தர் குறிப்பிட்டார் என நினைக்கிறேன் [Being and Nothingness மற்றும் No Exit].) நமது உலகைச் சாராதவர்கள், நம்மிடம் ஒத்திசைவு இல்லாதவர்களிடம், எதிர்-ஹிருதயர்களிடம் இறங்கிச் சென்று உரையாடாமல் இருப்பதே நமது சுதந்திரத்தைக் காப்பாற்றும். நமது உலகம் எந்தளவுக்கு சுருங்குகிறதோ, எந்தளவுக்கு கைப்பிடி மணலாக மாறுகிறதோ அந்தளவுக்கு நாம் விடுதலையுணர்வுடன் இருப்போம்.
நான் சொல்வது ஜனநாயக விரோதமாகத் தோன்றக்கூடும். ஆனால் ஜனநாயக வெளியிலே நாம் அதிகமாக பாசிசத்தைக் கண்டு பணிகிறோம். 'எழுத்தாளர் மக்களுடன் மக்களாக இருக்க வேண்டும்' என்பது எதேச்சதிகாரத்தை உள்ளடக்கிய தந்திரமான சொல்லாடல். இதைத் தமிழில் உணர்ந்து வெளிப்படுத்தியவர் சாரு மட்டும்தான்.
சரி மக்களோடு மக்களாக அல்லாமல் இருப்பது சாத்தியமா? நாம் வாழும் உலகில் இது முழுமையாகச் சாத்தியமில்லைதான், ஆனால் முயன்று பார்க்கலாம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...