விகடனின் டிராக் ரிக்கார்ட் சற்று குழப்பமானது. இதை கண்ணை மூடிக்கொண்டு கண்டிக்கவும் முடியவில்லை. திரைமறைவில் என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. கருத்துச் சுதந்திரத்துக்காக குரல் கொடுக்குமொது நம் குரலை யார் எப்படி வியாபாரம் செய்கிறார்கள், அதை வைத்து என்னென்ன பேரம் செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.
இதையே நான் திமுகவை தொடர்ச்சியாக ஆதரிக்கும் சில ஊடகங்களுக்கும் சொல்வேன் - அவர்கள் ஒருபக்கம் வலதுசாரிகளை எதிர்த்து களமாடிக்கொண்டே ஜக்கி, மணல் கொள்ளை, மலை உடைப்பு, கல்வி மாபியாக்களிடம் இருந்து பணம் வாங்கி ஜேப்பில் போட்டுக்கொள்கின்றன. அண்ணாமலையின் புரோஜெக்டிலும் மறைமுகமாக பங்கைப் பெற்று சிரிக்கிறார்கள். யாரையும் நம்ப முடியாத காலம் இது.
ஒரு ராஜாவுக்கு ரெண்டு மனைவிகள். ரெண்டு பேருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வரும்போது அல்லது அவர்கள் ராஜாவின் அதிகாரத்துக்குள் நிற்காதபோது அவர் ஆளுக்கு ஒன்று கன்னத்தில் வைத்து அடக்கி வைப்பார். கொஞ்சம் ஓலமிட்டுவிட்டு அவர்களும் இடம் வலம் என்று நின்றுகொள்வார்கள். நமது அதிகாரவர்க்கமும் முதலீட்டியமும் முற்போக்கு, சமூக நீதி மையவாத, தேசியவாத, வலதுசாரி, நடுவாந்திர புரட்சிகர மீடியாவை கலவையாக இப்படித்தான் நடத்துகின்றன. இம்மாதிரி குடும்ப விவகாரங்களில் தலையிடுவது அவசியமா எனத் தெரியவில்லை. (ஆண்-மைய இருதார குடும்பம் பொருத்தமான உதாரணம் என்பதாலே பயன்படுத்துகிறேன்.)
ஊடகங்கள் தனியாராக அல்லாமல், அவற்றின் பங்குகளும் லாபமும் மக்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டும். அல்லாதபோது இப்படித்தான் மக்களை குழப்பும் செய்திகள் வந்தபடி இருக்கும்.
ஜெர்மானிய சித்தாந்தம் எனும் கட்டுரை நூலில் மார்க்ஸ் போலிப் பிரக்ஞையைப் (false consciousness) பற்றி கோடிட்டுக் காட்டுகிறார் - முதலீட்டியம் தான் அடிமைபடுத்தும் உழைக்கும் வர்க்கத்தை கருத்தளவில் கட்டுப்படுத்த கருத்துருவங்களை உற்பத்தி பண்ணி அவர்கள் உண்மையைப் பார்க்கவிடாமல் பண்ணும் என்றார் (இதை பிளேட்டோவின் குகை கதையுடன் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம்.) லூக்காக்ஸ், அடோர்னோ, அல்தூஸர், கிராம்சி போன்றோரும் ஊடகங்கள், கல்வி நிலையங்கள், ராணுவம், காவல்துறை, அதிகார வர்க்கம், மதம் ஆகியவை எப்படி இந்த போலிப் பிரக்ஞையை பரப்புகிறது என்று விரிவாக விவாதித்தனர். உண்மையென்பது நமது பௌதிக உலகம் - ஏற்றத்தாழ்வாலும், சுரண்டலாலும் போதாமையாலும் உருவான நமது அன்றாட உலகம். போலியான பிரமையான உலகமென்றால் அரசு, பள்ளிகள், மத நிறுவனங்கள் நம் முன் எழுப்பும் சித்திரங்கள். இவற்றில் எதாவதொன்றில் உங்களைத் தொலைத்தால் ஜேப்பில் அக்கணம் பணமில்லை என்பதை மறப்போம். இதை போதை மருந்து / மதுப்பழக்கத்துடன் ஒப்பிடலாம். இன்று போலிப் பிரக்ஞையைப் பரப்பும் பணியை சமூக ஊடகம் மக்களிடமே ஒப்படைக்கிறது. நம்மை AI போல பயனடுத்துகிறார்கள். அவர்களுடைய பேரத்துக்குத் தேவையானதை நம்மைச் சிந்திக்கவும் பேசவும் வைக்கிறார்கள். செயற்கையான பரபரப்பை உண்டுபண்ணி அதிலேயே நம்மை நிரந்தரமாக வைத்திருக்கிறார்கள். விகடன், கருத்துச் சுதந்திரமெல்லாம் நம் பசியை மறக்க உருவாக்கப்படும் போதைப்பழக்கம். இந்த தோற்றத்தை உற்பத்தி செய்யும் உயர்த்தட்டினர், முதலீட்டிய வர்க்கம் தம் ஒவ்வொரு நிமிடத்திற்கும் கோடிக்கணக்கான ரூபாய் தம் கல்லாவில் விழும்படி பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒருபோதும் இதை நம்பி முழக்கமிட மாட்டார்கள்.
விகடனோ யாரோ - யாரைப் பற்றி கருத்துச் சுதந்திரப் பறிப்பு, தடையெனும் செய்தி வந்தாலும், எந்த புரட்சியையும், எதிர்ப்பையும் உடனடியாக நம்பாமல், யாருக்கும் பாதிக்கபட்டவர் அடையாளம் கொடுத்து இரக்கப்படாமல், கொதிப்படையாமல் வேடிக்கை பார்ப்பதும், சிந்தனை நம்மில் இருந்து, நம் நேரடி அனுபவத்தில் இருந்துதான் வருகிறதா என சிந்திப்பது அவசியம். (முன்பு சில சிறிய கட்சிகளேகூட சிறைக்குச் சென்றுவிட்டு வந்தபின்னர் உளவவுத்துறையின் அறிவுறுத்தலின்படி அதிகார்வர்க்கத்திற்கு ஆதரவாக நடந்துகொள்வதைப் பார்த்து அவர்கள் மாறியதாக நினைத்தோம், ஆனால் பின்னர்தான் அவர்களே மேடையேற்றியதும் சிறையில் தள்ளியதும்கூட ஒரே கைதான் என அறிந்தோம்.)
நாதஸ்கள் ஒருபோதும் திருந்துவதில்லை. நாதஸ்கள் மேலிருந்து நம்மை கண்காணித்துக் கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.