ராஜன் குறை அரசியல் மனம் கொண்டவரல்லர், அரசியல்வாதியின் மனம் கொண்டவர். ஒரு ஓநாய் ஊருக்கு வந்து ஆட்டுக்குட்டியை அடித்து இழுத்துச்சென்று விடுகிறது. அப்போது அந்த ஓநாயைப் பிடித்து அடித்து பிரியாணி போட வேண்டும், கல்லால் அடித்து துரத்த வேண்டும் என்பது தார்மீகக் கோபம். அதுவே பிரச்சினையைத் தீர்க்கும். எந்த குடியானவனும் அதையே செய்வான். ராஜன் குறையோ அங்கு வந்து ஓநாய் ஆட்டுக்குட்டியைப் பிடித்துக்கொண்டு போவது மிகப்பெரிய சமூக வலைப்பின்னலில் நிகழும் சின்னஞ்சிறு நிகழ்வு. அதற்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற காரணிகள் உள்ளன. அந்த கண்ணிகளைச் சரிசெய்யாமல் ஓநாய் வருவதை தடுக்க முடியாது. அதனால் ஓநாயுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவ்வப்போது சில ஆட்டுக்குட்டிகளை அதற்குக் கொடுப்பதே நடைமுறை சாத்தியமானது. இல்லாவிட்டால் இயற்கையின் அடிப்படையான வலைப்பின்னலே சிதைந்து போகும். ஓநாய் திருந்தி சைவத்துக்கு வர இன்னும் சில நூறாண்டுகள். அதுவரை அமைதியாக இருக்க வேண்டும், நிதானமாக பக்குவமாக இதைக்குறித்து உரையாட வேண்டும். கொந்தளிக்கவோ அறச்சீற்றம் கொள்ளவோ கூடாது என்று நீண்ட உரையாற்றுவார். இப்படி ஒரு லட்சிய சமூக அரசியல் கட்டமைப்பைக் காட்டி, அதுவே நடைமுறை சாத்தியம் என்று சொல்லி அனேகமாக எல்லா சீரழிவுகளையும் ஏற்றுக்கொள்ளவோ பொறுத்துக்கொள்ளவோ சொல்வார். ஜனநாயகத்துக்கும் வளர்ச்சிக்காகவும் ஊழல், குடும்ப அரசியலைக் கூட ஆதரித்து நீண்ட கட்டுரைகளை எழுதுவார். அவரது இந்த வழக்கறிஞர் அணுகுமுறையை என்னால் ஏற்றுக்கொள்ள ஒருபோதும் முடிந்ததில்லை. அவரது எழுத்தில் நீதியுணர்வும் கோபமும் இல்லாமையால், மாறிவரும் சூழலில் தோன்றும் பல்வேறு குற்றங்களையும், அநியாயங்களையும் விமர்சிக்காமல் தொடர்ச்சியாக ஒரே விசயத்தை, அமைப்பை, இயக்கத்தை தொடர்ந்து கண்மூடித்தனமாக ஆதரிக்கையில் அவர் ஏதோ கட்சியின் கி.ப.செ போன்றே தோன்றுகிறார். (ஆனால் அவரது கொள்கைப் பிடிப்பு ஒரு பாவனையோ என்றும் தோன்றுகிறது.) அதனாலே அவரை வாசிப்பதை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டேன். (ஆனால் அவர் நல்ல கல்வியாளர், தன் வாசிப்பை நன்றாகத் தொகுத்து எழுதுவதால் பலருக்கும் நன்மை பயப்பவர் என்பதால் அவர் மீது எப்போதும் மரியாதை உண்டு.)
மேலும், ராஜன் குறைக்கு இலக்கியம் என்பது சமூகக் கருவி மட்டுமே. அதாவது அது இருத்தலின் ஆழத்துக்குள் நம்மைக் கொண்டு செல்லும் அனுபவமோ, பல்வேறு காலங்களும் உலகங்களும் மோதி முயங்கும் நுண்ணுலகமோ அல்ல. இலக்கியச் செயல்பாடுகளை அவர் புரிந்துகொள்ளும் விதம் என் சிந்தனை மரபில் இருந்து வெகுவாக முரண்படுவது. உ.தா., கதர் துணியை காந்தியவாதி பார்ப்பதைப் போலவே எழுத்தாளர்கள் இலக்கியத்தை முன்னெடுக்கிறோம், முன்னெடுக்க வேண்டுமென அவர் நினைக்கிறார். கதரல்லாத துணிகளை எங்கு பார்ப்பாலும் எரிப்போம் என்று அந்த காலத்தில் சொல்லும் ஒரு தீவிரப் போராளியிடம் "பொறுமையாக இருங்கள், மக்கள் மாறுவதற்கு பல பத்தாண்டுகள் ஆகும், அதற்காக பக்குவமாக உரையாடி காத்திருங்கள்" என்பார். ஆனால் கதர் துணியைப் போல இலக்கியம் எங்களுக்கு கலாச்சார குறியீடு அல்ல. அது எங்கள் உயிர், எங்கள் வாழ்க்கை.
அதனாலே இலக்கியத் திருவிழாக்களை விமர்சிப்போரை தன் வழக்கப்படி கண்டித்து மனுஷ்ய புத்திரனின் கட்டுரையை வாழ்த்தி அவர் எழுதியிருப்பதைப் படித்தபோது எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. அவர் இதைச் செய்யாதிருந்தால் ஆச்சரியத்தில் மாரடைப்பே வந்திருக்கும். காப்பாற்றி விட்டார்.