Skip to main content

யானையென்றால் பானை

எழுத்தாளர்களுக்கு நிதியுதவி அளிப்பது மொழிக்கும், பண்பாட்டுக்கும் மிகப்பெரிய நல்விளைவுகளை ஏற்படுத்தும். சர்வதேச புத்தகக் கண்காட்சிக்காக விமான, ஐந்து நட்சத்திர அறைச் செலவுகளுக்காக நிதியில் கால்வாசி இருந்தாலே அரசு இதைச் செய்ய முடியும். ஒரு பட்டிமன்ற / வெகுஜனப் பேச்சாளர் ஒரு மணிநேரம் புத்தகத் திருவிழாவில் பேச ஒரு லட்சம் கொடுக்கிறார்கள். அதனால் சமூகத்துக்கு, பண்பாட்டுக்கு, மொழிக்கு என்ன பயன்? ஒன்றுமில்லை. பொதுச்சமூகமும் இதை வெற்றுக்கேளிக்கைக்கு மேல் முக்கியமாகப் பொருட்படுத்துவதில்லை. கேட்டதும் மறந்துவிடுகிறார்கள். நீங்கள் பாரதியின், பாரதிதாசனின் வரிகளை எடுத்துக்கொள்ளுங்கள், அவை இன்றுவரையிலும் மேற்கோள்காட்டப்பட்டுக் கொண்டும், பாடப்பட்டும் வருகின்றன. தமிழுக்கு வெளியே மாணவர்களுக்கு அறியப்பட்ட பெருமாள் முருகனாலும், இமையத்தாலும், அம்பையாலும் தமிழுக்கு எவ்வளவு பெருமையென்பதை மாற்றுமொழிக்காரர்கள் அவர்களை உயர்வாகப் பேசும்போது நாம் உணர்கிறோம். அண்மையில் பெருமாள் முருகன் வந்திருந்தபோது என் கல்லூரியில் ஆயிரத்துக்குமேல் மாணவர்கள் திரளத் தயாராக இருந்தார்கள். ஆனால் அரங்கில் இடமில்லாததால் 100 பேர்களுக்குள்ளாகவே அனுமதிக்க முடிந்தது; அதற்காக நிறைய பேர் என்னிடம் வருந்தினர்கள். அப்போதும், அவரது நூல்களில் கையெழுத்து வாங்க நீண்ட வரிசை தோன்றியபோதும் எனக்கு ஒரு சக தமிழ் எழுத்தாளராகப் பெருமையாக இருந்தது. இதுவே சாரு நிவேதிதா வந்து மாணவர்களிடம் உரையாற்றியபோதும் பெரும் உற்சாக அலை எழுந்தது. இதயபூர்வமாக அவர்களை அவரை நேசித்ததை நான் கண்டேன். இன்னும் சில தமிழ் எழுத்தாளர்கள் எங்கள் மாணவர்களிடம் முன்பு உரையாடும்போதும் நான் இதையே உணர்ந்திருக்கிறேன். இதுவே நான் திண்டுக்கல் லியோனியையும் பாரதி பாஸ்கரையும் விஜய்டிவி புகழ் ஈரோடு மகேஷையும் டெய்லர் அக்காவையும் மதுரை முத்துவையும் அழைத்துப் போயிருந்தால் இருந்திருக்குமா? கவன ஈர்ப்பு இருந்திருக்கும், ஆனால் நம்மையும் நம் மொழியையும் கேவலமாகப் பார்த்திருப்பார்கள். கேரளாவை எடுத்துக்கொள்வோம் - அவர்கள் சசி தரூரை, அருந்ததி ராயை, எம்.டியை தம் மொழியின் பெருமையாகப் பார்ப்பார்கள். ஒரு மிமிக்றி கலைஞரோ இன்புளுவன்ஸரோ தோன்றினால் அவர்கள் அதை ரசிக்கலாம். ஆனால் அவர்களுக்குத் தெரியும் ஷக்கீலாவுக்கும் சன்னி லியோனுக்கும் மேல் அவர்களுக்கு மதிப்பில்லை என்று. ஏனென்றால் தம் மனத்துக்குள் ஆழமாகப் போய் சிந்தனையை மாற்றும், கற்பனையை வளமாக்கும் படைப்பாளியே பொழுதுபோக்காளரை விட எக்காலத்திலும் மேலானவர். கம்பனின், இளங்கோவின் காலத்தில் வாழ்ந்த ஆடற்கலைஞர்களைப் பற்றி விதந்தோதும் குறிப்புகள் எங்காவது உண்டா? பாரதி பாஸ்கருக்கும், பர்வீன் சுல்தானாவுக்கும் உள்ள அறிவின் எல்லை அவ்வளவுதான். அவர்களுக்கு புக்கர் பரிசையோ நோபல் பரிசையோ அளித்து கௌரவிப்பார்களா? மதுரை முத்துவின் ஜோக்குகள் தமிழுக்குப் பெருமை என்று முதல்வர் என்றாவது டிவீட் போட்டு வாழ்த்துவாரா? அவருக்குத் தெரியும் சாகித்ய அகாடெமி விருதாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் வாழ்த்துப் போட்டாலே அது தமிழ்நாட்டுக்குப் பெருமையென்று. நான் இவர்களெல்லாம் பேசக்கூடாது என்று சொல்லவில்லை. அவர்கள் தாராளமாக ஊரூராகப் போய் கல்லா கட்டட்டும். அவர்கள் வருடத்திற்கு 30-50 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பார்கள் என்பது ஒரு கணக்கு. ஆனால் இவர்களுக்கு அரசின் வரிப்பணத்தை ஒரு லட்சத்தை ஒரு மணிநேரத்துக்கு கொடுக்காமல் ஒரு பெயர் பெற்ற எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுத நிதியுதவியாகக் கொடுத்தால் அவரால் மூன்று மாதங்களில் பணக்கவலையின்றி எழுதி பிரசுரிக்க முடியும். அந்நூல் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் புகழை நிலைநாட்டக் கூடும். போலிப் பேச்சாளர்களுக்கு இவ்வளவு பணம் கொடுத்து ஊக்கப்படுத்தும்போது அது விழலுக்கு இறைத்த நீர் எனப் புரிந்துகொள்வதில்லை என்பதே அவலம்.

தமிழ்நாட்டு அரசின் இலக்கும், திட்டங்களும் மிகச்சிறப்பானவை, உயரிய நோக்கம் கொண்டவை. ஆனால் அவற்றை செயல்படுத்த அனுப்பப்படும் சந்தர்ப்பவாத அமைப்பினரும், அதிகாரிகளும் இதை முடிந்தளவுக்கு சிதைக்கவே முயல்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இவ்வாறான உயரிய நோக்கமோ அதை நிறையேற்றும் அறிவோ இல்லை. ஒன்று தமக்குத் தேவையானவர்களுக்கு பணம் பெற்றுத்தர விரும்புகிறார்கள் அல்லது தரப்பட்ட வேலையை எப்படியாவது முடித்தால்போதும் என அலுத்துக்கொள்கிறார்கள். பம்மல் கே சம்மந்தத்தில் கமல் நீதிமன்ற வாயிலில் அமர்ந்து தட்டச்சு செய்பவரிடம் சொல்வாரே "யோவ் எதைச் சொன்னாலும் அப்படியே டைப் அடிச்சிருவியா?" என்று அப்படித்தான் இந்த அதிகாரிகள் நடந்துகொள்கிறார்கள். யார் என்ன பட்டியல் கொடுத்தாலும் கண்மூடிக்கொண்டு அழைத்து நடத்தி விடுவார்கள். யாரை மதிப்பது, யாரை விடுப்பது என ஒரு எழவும் தெரியாது. அதிகாரிகள் ஒருங்கிணைக்கும்வரை, சந்தர்ப்பவாதிகள் முடிவெடுக்கும்வரை இப்பிரச்சினைகள் இப்படித்தான் தொடரும்.

முதல்வரின் நல்ல ஆணைகள் எப்படியெல்லாம் கோளாறாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதற்கு வேறொரு உதாரணம் தருகிறேன் - ஒரு ஏழை எழுத்தாளருக்கு ஒன்றிய அரசின் உயரிய விருது கிடைக்கிறது. அவரை உடனே போய் நேரடியாகப் பார்த்து வாழ்த்துங்கள் என்று திமுக தலைமையிடம் இருந்து கட்டளை பறக்கிறது. அந்த ஊர்க்கார நிர்வாகிகள், பக்கத்து ஊர்க்காரர்கள், அதற்கடுத்த ஊர்க்காரர்கள், வட்டம், மாவட்டம் எனப் புற்றீசலாகப் பெருகி எழுத்தாளருக்கு வீட்டுக்குப் படையெடுக்கிறார்கள். அதனால் தான் மிகவும் நொந்து போனதாக அந்த எழுத்தாளர் சொன்னார். "இதெல்லாம் பெருமையல்லவா? நானெல்லாம் உங்கள் இடத்தில் இருந்திருந்தால் ஊரே கொண்டாடுகிறதே எனப் பெருமைப்பட்டிருப்பேனே" என்றேன் நான். அதற்கு அந்த எழுத்தாளர் தனக்கு நடந்த துயரத்தை விளக்கினார் - வரும் நிர்வாகிகள் மாலை போட்டு, பொன்னாடை போர்த்துகிறார்கள். (பணமொன்றும் கொண்டு வருவதில்லை). அவர்களை அமர வைக்க அவர் அவரது சிறியவீட்டில் வீட்டில் இடமில்லை. அதனால் முற்றத்தில் பந்தல் போடுகிறார். அதற்குப் பணம் வேண்டுமே. வட்டிக்கு வாங்குகிறார். அடுத்து வருகிறவர்களுக்கு தேநீரும் சிற்றுண்டியும் கொடுத்து உபசரிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் முழுக்க பொன்னாடை போர்த்த வந்தவர்களுக்கு உபசரணை செய்ததில் அந்த எழுத்தாளர் நொடிந்துபோய் கடனாளி ஆகிவிட்டார். தனக்கு மூன்று லட்சம் செலவு, அது சாகித்ய அகாடெமி பரிசுத்தொகையைவிட அதிகம் என்றார். யோசித்துப் பாருங்கள் - வாழ்த்திவிட்டு வரச்சொன்னால் வெறுங்கையோடா போவது? ஆளுக்கு ஆயிரம் ரூபாய் போட்டு நிதிதிரட்டிக் கொடுத்திருக்க வேண்டும். குறைந்தது கையில் வீட்டுதவிப் பொருட்கள், நகையென்று கொண்டு போயிருக்கலாம் (சாரு தன் கழுத்தின் தன் வாசகர் அளித்த கனத்த தங்கச்சங்கிலி மின்ன வருகிறார் பாருங்கள்.). அல்லது “ஐயா உங்கள் நிலை மோசமாக இருக்கிறது, நாங்கள் நிதிதிரட்டி உங்கள் வீட்டைப் பெரிதாக்கிக் கட்டித் தருகிறோம்” என்று இந்த கட்சி நிர்வாகிகள் சொல்லியிருக்க வேண்டும். (கேரளாவில் அப்படித்தான் ஒரு கவிஞருக்கு ஊரே திரண்டு வீடு கட்டுக்கொடுத்தது.) அந்த எழுத்தாளராவது சங்கோஜத்தைவிட்டு கேட்டிருக்கலாம். ஆனால் அவரால் முடியவில்லை - இப்படித்தான் முதல்வர் உயர்ந்த நோக்கத்துடன் எதையாவது உத்தரவிட்டால் இவர்கள் புகுந்து தலைகீழாக நிறைவேற்றுகிறார்கள். யானை என்றால் பானையாக்கி விடுகிறார்கள்.

இனி குமாரநந்தனின் பதிவைப் படியுங்கள்.
ஆர். அபிலாஷ்
*******

புத்தகக் கண்காட்சியில் பேசும் பேச்சாளர்களில் பத்துக்கு மூன்று பேரிடம், நீங்கள் இலக்கிய படைப்பாளர்களின் படைப்புகள் குறித்து வாசகர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படும் வகையில் பேச வேண்டும் என ஒரு நிபந்தனை விதித்துவிட்டால் போகிறது இதற்கு எதற்கு இத்தனை பிரச்னை?
அப்போ எழுத்தாளர்கள் புத்தகக் கண்காட்சி மேடையில் பேசக் கூடாது என்கிறீர்களா?
பேசலாமே? எழுத்தாளர்கள் என்றாலே அவர்களுக்கு பேச வராது என்பதாகவும் அல்லது மேடையில் சரளமாகப் பேசுபவர்கள் எழுத்தாளர்களாக இருக்க முடியாது என்பது போலவும் எதற்கு கட்டமைக்க வேண்டும்? பேச்சாளர்கள் எங்காவது கட்டண உரை நிகழ்த்துகிறார்களா? ஆனால் எத்தனை எழுத்தாளர்கள் கட்டண உரை நிகழ்த்துகிறார்கள்? இதிலிருந்தே தெரியவில்லையா? பேச்சாளர்களைவிடவும் நன்றாகப் பேசக் கூடிய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்று? அவர்களைப் போன்றவர்களைப் பேச வைக்கலாம். பேச்சாளர்களுக்குத் தருவதைப் போன்றே அவர்களுக்கும் சன்மானம் தரலாம்.
அப்போது மேடையில் சரளமாகப் பேசத் தெரியாத எழுத்தாளர்கள், பேசத் தெரிந்த எழுத்தாளர்கள் என அவர்களை இரண்டாகப் பிரித்து ஏற்ற தாழ்வுகளை உண்டாக்க வேண்டுமா?
வேண்டாமே அவர்களுக்கு பேச்சாளர்களைவிட அதிகம் சன்மானம் கொடுங்கள். சாகித்ய அகாடமி விருதுத் தொகையை 25 லட்சமாக உயர்த்துங்கள். நூலக ஆணை பெரும் புத்தகங்களுக்கு வெறும் பேப்பர் காசை விட குறைவாக மதிப்பிட்டு தொகை வழங்குவதற்கு பதிலாக எழுத்தாளர்களுக்கு வாரிக் கொடுங்கள். எழுத்தாளர்களாக இருந்தாலும் வாழ்வாதாரத்திற்காக வேறு பணிச் சுழலில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை அறிவித்து அவர்கள் முழு நேர எழுத்தாளர்களாக இயங்க ஊக்குவியுங்கள். ஒரு அரசு மனது வைத்தால் எழுத்தாளர்களை இன்னும் எப்படியெல்லாமோ மேன்மைப் படுத்தலாம்.
அப்படியெல்லாம் செய்தால் எழுத்தாளர்கள் எல்லாம் ஏன் எங்களைப் பேச விடுங்கள் பேச விடுங்கள் என புலம்பப் போகிறார்கள். தயவு செய்து என்னைப் பேசவெல்லாம் சொல்லாதீர்கள் நான் ஒரு எழுத்தாளன் என்று சொல்ல மாட்டார்களா?
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பேச்சாளர்களுக்கு அதிகப் பணம் கொடுப்பதால்தான் எழுத்தாளர்கள் புத்தகக் கண்காட்சி மேடையில் ஏன் பேச்சாளர்களைப் பேச வைக்கிறீர்கள்? என கேட்பதைப் போன்ற தொனி இருக்கிறதே?
அப்படி இல்லை. அடிப்படை என்னவோ புறக்கணிப்புக்கு எதிரான மனநிலைதான் என்றாலும் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என ஒரு குழுவினர் கூக்குரல் எழுப்பினால் ஏற்கனவே நல்ல கவனிப்பில் இருப்பவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பது அதன் அர்த்தம் அல்ல.

- குமார நந்தன்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...