Skip to main content

லட்சக்கணக்கில் மக்களைத் திரட்டும் வேட்கை



அக்டோபர் 6, 2024இல் மெரீனாவில் நடந்த வானூர்த்திக் கண்காட்சிக்காக 13 லட்சம் பேர்கள் எல்லா சிரமங்களையும் தாண்டி வந்தார்கள், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமுற்று, 4 பேர்கள் உயிரிழந்தார்கள் என்றால் அதற்கு சமூகவலைதளத்தில் கிடைத்த வைரல் கவனமும் அது விடுமுறை தினமென்பதும் மட்டுமல்ல காரணம் - இது முற்றதிகார சமூகங்களில் தோன்றும் ஒரு பெருவிழைவாகும்: நவதாராளவாதத்தின், நகரமயமாக்கலில், பணப்பெருக்கத்தின், அதனால் தோன்றும் தீவிர ஏற்றத்தாழ்வுகளின், தனிமனிதவாதத்தின், போதாமைகள், தனிமை, பதற்றத்தின் விளைவு என்னவென்றால் மக்கள் பெருங்கூட்டமாகத் திரள்வதற்கு ஒரு வாய்ப்புக்காக காத்துக்கிடப்பார்கள். ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தாலே மக்கள் கடலெனப் பெருகி வந்துவிடுவார்கள். பொழுதுபோக்குத் தளங்களில் பெருங்கூட்டம் பெருகுவதைப் பாருங்கள். காவல்துறை கட்டுப்பாடுகள் விதிக்காவிடில் திரண்டவர்களைக் கலைக்கவே முடியாது; விடியவிடிய ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டாடத் தலைப்படுவார்கள். ஏதோ ஒரு உணர்ச்சி உந்துததால் மக்கள் போய்த் திரண்டால் அதன் பிரதான அரசியல் / போராட்ட நோக்கத்தைக் கைவிட்டு வெற்றுக்கேளிக்கையாக, பிடிவாதமான கூடுகையாக அது நிலைக்கிறதுஉங்கள் கோரிக்கையை ஏற்கிறோம் என்று அரசு சொன்னால்கூட அதைச் செவிகொடுத்துக் கேட்காமல் எதாவது நொள்ளை சொல்லி கலைய மறுப்பார்கள். அரசே அடித்துக் கலைத்தால்தான் உண்டு. ஏனென்றால் திரளும் அதிகாரம் அவர்களுக்குக் கொடுக்கும் கிளுகிளுக்கும் சந்தோஷமும் தனிமையின்மையும் ஒப்பற்றவை. அதனால் தான் முற்றதிகார சமூகங்களில் பிரமாண்ட போராட்டங்களைக் கூட நீடித்தக் கேளிக்கை கொண்டாட்டமாக நாம் மாற்றுகிறோம். தமிழ்நாட்டில் நடந்த அரசியலற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இருந்து அண்மையில் கொல்கொத்தாவில் அரசுக்கு எதிராக நடந்த மருத்துவர்களின் பாட்டும் கொண்டாட்டமுமான தொடர் போராட்டமும் உதாரணங்கள். முன்பிருந்த நேரடிப் போர்கள் இன்றில்லை. செயற்கைத் தொழில்நுட்பத்தைக்கொண்டு ஏவுகளையும் குண்டுகளும் வீசி நடத்தும் தொலைதூரக் கட்டுப்பாட்டு யுத்தங்களில் மக்கள் கொல்லப்படுவார்கள், ஆனால் போரில் பங்கேற்று தேசத்துக்காக தியாகம் செய்து பெருந்திரள் அடையாளத்தின் பகுதியாகும் வாய்ப்பு மக்களுக்கு இன்று கிடைப்பதில்லை. அந்த இல்லாமையையும் இத்தகைய கூட்டங்கள் ஈடுசெய்கின்றன என நினைக்கிறேன். இந்த திரளுதல்கள் இன்று வெகுமக்களின் வன்முறையற்ற மென்யுத்தமாகிறது.


இந்தியாவில் இது மோடியிடமிருந்துதான் ஆரம்பித்தது - அவரது பிரச்சாரம் என்பது முழுமையான கேளிக்கை விளையாட்டுதான். அதன் நாயகன், மையம் அவர்தான். டிவி, சமூகவலைதளம் மூலமாக அவர் இப்பிரச்சாரக் கூட்டங்களில் தன்னையும் பார்வையாளர்களையும் பலகோடி மடங்குப் பெருக்கிக்கொண்டார். மெய்நிகர் பிரமாண்டக் கூட்டத்தின் அதிகாரத்தை அவர் பயன்படுத்துவதுடன் மக்களையும் அதை உணரவைப்பார். மற்றபடி அவர் மக்களின் அண்மையை விரும்பாதவர், கவனத்துக்காக மட்டும் ஆசைப்படுபவர். அவர் ஒரு கூட்டத்தின் நடுவே போய்நின்று மக்களுடன் கலந்து கொண்டாட விரும்பமாட்டார். அதனாலே அவருக்கு ஊடகங்கள் தேவைப்படுகின்றன. அதனாலே அவரது கூட்டங்களில் மக்கள் போய்த் திரண்டு தள்ளுமுள்ளு, நெரிசல், மிதியோட்டம் எதிலும் ஈடுபடமாட்டார்கள். இன்னொரு விசயம், மக்கள் இன்று தலைவர்கள், சித்தாந்தம், லட்சியத்துக்காகத் திரள விரும்புவதில்லை. அவர்கள் தமக்காகவே, தமது மகிழ்ச்சிக்காகவே, தமது போதாமையை திரளின் ஆற்றலால் நிரப்புவதற்காகவே திரள்கிறார்கள். ஆகையால் தற்படம் எடுக்கவும் விளையாடவும் சுயவிளம்பரம், சுயதகவல்பரப்பு செய்யவுமே திரள்கிறார்கள். தம்மை மறக்கவும் தம்மைப் பிறர் மறக்காதிருக்கவுமே திரள்கிறார்கள்


முற்றதிகாரத்தை நோக்கி நகரும் சமூகங்களில் இத்தகைய சமுத்திரத் திரளலுக்காக மக்கள் ஏங்கிக்கொண்டே இருப்பதை நம்மால் சுலபத்தில் புரிந்துகொள்ள முடியாது. அது நம் உபமனத்தில் இருந்து நம்மை செலுத்தும். ஒருமுறை புத்தாண்டு இரவின்போது நான் கடற்கரை நோக்கிச் செல்ல முயன்று சில மணிநேரங்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டதும், எப்படியாவது அங்கு போய்சேரவேண்டும் என்று என் மனம் யோசிக்காமலே யோசித்துக்கொண்டிருந்ததையும் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். நான் ஏன் மக்கள் கூட்டத்தின் நடுவே போக அன்றிரவு ஆசைப்பட்டேன்? எது என்னைப் பிடிவாதமாக செலுத்திக்கொண்டிருந்தது? கண்களைக் கட்டிவிட்டதைப் போல என்னை மாற்றியது எது? அதுதன் அண்மையில் மெரினாவை நோக்கியும் 13 லட்சம் பேர்களை செலுத்தியிருக்கிறது. 1930களில் ஜெர்மனியில் ஹிட்லரைப் பார்க்க அவர் எங்குபோனாலும் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் திரண்ட மக்கள் அவரைப் பார்ப்பதையே தம்மை மகத்தானவர்களாக உணரவைக்கும் என்பதாலே திரண்டார்கள். அதற்கான கதையாடலை உருவாக்கியது, தன்னை அதீதமானத் திறமையும் ஆற்றலும் அதிகாரமும் படைத்தவராக நிகழ்த்தியதுமட்டுமே ஹிட்லரின் சாதனை. இம்மாதிரிக் கூட்டங்களில் ஹிட்லர் அவற்றின் துவக்கத்தையும் முடிவையும் நியாயத்தையும் மட்டுமே அளித்தார். மிச்சத்தை மக்களே தம் உணர்ச்சிப்பெருக்கால் ஏற்படுத்திக்கொண்டார்கள். அவரைப் பயன்படுத்தி தனிமனிதர்கள் தம்மைக்கடந்து ஹிட்லரைவிட பிரமாண்டமான ஒரு இருப்பாக தம்மை உணர்ந்துகொண்டார்கள். இன்றைய சமூகங்களுக்கு ஹிடலர் கூடத் தேவையில்லை - ஹிட்லரின் தோற்றமயக்கம், மெய்நிகர் குறியீடு போதும். பத்தாயிரம் அடி நீளத் தோசை, பத்து லட்சம் ஏக்கர் நீளமான சாலை, கடலளவுக்குப் பெரிய நீச்சல்குளம் என எதைக் காட்டினாலும் கோடிக்கணக்கானவர்கள் வந்துவிடுவார்கள். பார்க்க அல்ல, தம்மை தோசையாக, சாலையாக, நீச்சல்குளமாக மாற்றிக்கொள்ள


நாம் இதை நிர்வாகக் குறைபாடு என்று விமர்சிக்கலாம். உண்மைதான். ஆனால் நோய் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பதைப்போலத்தான் அது. உண்மையில் அது தீர்வல்ல. அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூட்டமோ கட்டுப்படுத்தும் கட்டமைப்புகள், பாதுகாப்பு ஏற்பாடுகளோ அல்ல பிரச்சினை, இந்த அரசியலின்மை, முழுமையான கேளிக்கை நோக்கிலான கூட்டங்களே அடிப்படையில் அதிக ஆபத்தானவை. கண்மூடித்தனமாக மக்களை சாவை நோக்கிப் பிடித்துத்தள்ளுவது அரசியலின்மையின் செலுத்துவிசைதான். இந்த சமூக நோய்மையிலிருந்து மக்களை விடுவிக்கவேண்டும்.


 பிரமாண்ட கூட்டங்களை விட சிறிய கூட்டங்களே ஆரோக்கியமானவை. அதாவது மக்கள் திருவிழாக்களில் தம் சொந்த ஊர்களில், சொந்த கிராமத்தினருடன் மட்டும் திரள்வது, நகரங்களிலும் ஒவ்வொரு பகுதியிலாக நண்பர்கள், பரிச்சயக்காரர்களுடன் திரள்வது, ஒரு நோக்கத்துக்காக, அரசியல் லட்சியத்துக்காகத் திரள்வது ஆரோக்கியமானது. முற்றதிகாரத்தைத் தோற்கடிக்க நாம் பிரமாண்டத்தை முதலில் எதிர்க்கவேண்டும்.


பின்குறிப்பு: வானூர்தி கண்காட்சிக்காக 13 லட்சம் பேர்கள் வருவதைப் பார்க்கும்போது விஷ்ணுபுரம் கூட்டத்திற்கு ஆயிரம் பேர் திரள்வது ஒன்றும் பெரிய விசயமில்லை, அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது. எப்படி வானூர்த்திகளைப் பார்ப்பவர்களை விட வானூர்திகளைத் தாம் பார்ப்பதை வேடிக்கை பார்க்கத் திரள்பவர்களே அதிகமாக வருகிறார்களோ அப்படித்தான் இலக்கியத்துக்காக அன்றி இலக்கியத்துக்காகக் கூடும் தம்மைப் பார்க்கவே சிறிய கூட்டமாக மக்கள் வருகிறார்கள். அவர்கள் பங்கேற்பாளர்கள் அல்ல கேளிக்கை விரும்பிகள், சுயநுகர்வோர்கள். வெற்றாக மேம்போக்காக வேடிக்கைப் பார்ப்பது, பொழுதை அந்த இன்மையால் நிரப்பி திகைப்பதுதான் அவர்களின் நோக்கம். கூட்டம் முடியும்போது நீங்கள் மகத்தான ஒன்றை அடைந்துவிட்டீர்கள் என்று ஜெயமோகன் அவர்களை நோக்கி கிறித்துவப் போதகரைப் போலச் சொல்லிவிடுவார். எதையோ செய்துவிட்டோம் எனும் திருப்தியை விட முடிஞ்சுது எனும் திருப்தியையே அது அவர்களுக்குக் கொடுக்கும். ஏனென்றால் இத்தகைய கூட்டங்களில் பதற்றமே நாம் நமது தனிமைக்கு, போதாமைக்குத் மீண்டும் திரும்பவேண்டுமே எனும் அச்சம்தான். அதனால் முடித்துவைக்க முத்தாய்ப்பான உரைகள் அவசியம்.  

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...