கடந்த சில நாட்களாக எம்.கே மணியைப் பற்றி எழுதப்படும் பல உணர்ச்சிகரமான அஞ்சலிக் குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன். எந்த உள்நோக்கமும் இல்லாமல் மனதில் இருந்து பகிரப்படும் வருத்தமும் மரியாதையும். ஒருவருடைய மதிப்பையும் அன்பையும் பெற நாம் அவர்களை முதலில் சமமாக மதிக்க வேண்டும், அவர்களுக்கு எதிர்பார்ப்பின்றி நேரத்தை கொடுக்க வேண்டும். நேரம் மதிப்பற்றது, நாம் அதை வீணடிப்போமே அன்றி அடுத்தவருக்கு கொடுக்க மாட்டோம். எம்.கே மணி இதையெல்லாம் செய்திருக்கிறார், முன்தீர்மானம் இன்றி, மதிப்பிடாமல், ஒதுக்காமல் பழகியிருக்கிறார். அதனால் தான் இத்தனை பேர்களை அவரது இழப்பு சஞ்சலப்படுத்தியிருக்கிறது. இயக்குநர் மிஷ்கின் மணியின் கடைசிக் கால மருத்துவ செலவுகளைப் பார்த்திருக்கிறார் எனத் தெரிய வந்த போது மிகவும் நெகிழ்ந்தேன். மிஷ்கின் இதே போல தனக்கு தெரியாதவர்களுக்காகவும் யோசிக்காமல் உதவ தலைப்படக் கூடியவர் தான். இம்மாதிரி நல்ல விசயங்களை ஒரு இழப்பின் போதுதான் தெரிந்துகொள்கிறோம், அது துரதிஷ்டமானது என்றாலும் வாழ்க்கை மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு சின்ன விசயத்துக்கும் எதாவது ஒரு பெறுமதியை திரும்ப எதிர்பார்த்து நம்மை நாடுவோர் சூழ்ந்த உலகில் இப்படியான ஒரு தரப்பும் இருப்பது ஒரு அற்புதம்.
எம்.கே மணியின் எழுத்தைப் படித்திருக்கிறேன். அவரிடம் உரையாடியதில்லை. அவருடைய பாணியும், நம்பிக்கைகளும் என்னுடையவற்றில் இருந்து வெகுவாக விலகி நிற்பவை. பிறந்தநாள் வாழ்த்துக்களை சியர்ஸோடு அவர் சொல்வதை ஏற்றிருக்கிறேன். கமல் விசயத்தில் சண்டை போட்டிருக்கிறேன். ரொம்ப கூலான ஒரு சினிமா ரசிகர் என்றே நினைத்தேன். ஆனால் அவரது வாழ்க்கை இவ்வளவு துயரானதாக, எழுத்தில் சாகசம் புரிபவராக இருந்திருக்கிறார் எனத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அவரை அணுகி பழகியிருப்பேன்.
அவரது கதைகளில் ஒரு வினோதமான மனநிலை இருக்கும் என பலரும் சொல்வது உண்மை தான் - அவை துல்லியமான கதையாகாமல் இருக்கலாம், ஆனால் பாத்திர அமைப்பில், நடையில் அவருடைய ஒரு தனித்துவம் இருக்கும். தன் இறுதி சில ஆண்டுகளில் மட்டுமே ஏகத்துக்கு எழுதியிருக்கிறார். ரெட்டை வேட சினிமாவில் ஒரு நாயகன் வேறு ஊருக்கு குடும்பத்திற்கு அடையாளம் மாறி வந்து பரபரப்பாக நடந்துகொண்டு அசத்துவாரே அதே மாதிரி.
அவருக்கு என் அஞ்சலி!
