Skip to main content

கைவிடப்பட்ட திரளும் அதற்கான அரசியலும்


திமுக கூட்டணி 40 தொகுதிகளை அடித்திருப்பது பாராட்டத்தக்கது. தெளிவான அரசியல் இலக்கு, கூட்டணி ஒற்றுமை, உழைப்பு, ஸ்டாலினின் தலைமை, ஊடகங்கள், தொண்டர்கள் என பல காரணிகள் இதன் பின்னால் உள்ளனர். இருந்தாலும் திமுகவின் வாக்கு சதவீதம் சற்றே குறைந்துள்ளது (5-6%). முற்போக்காளர்கள் என்னதான கேலி பேசினாலும், மறுத்தாலும் நாம் தமிழர்கள் 4% மேல் முன்னேறி உள்ளனர். நாம் தமிழர் கட்சி முன்பு பலமுறை அதிமுகவுக்கும், அதற்கு முன்பும் பின்பும் ஒன்றியத்தில் ஆளும் அரசுகளுக்கும் விலை போய் உள்ளது அல்லது அவர்களிடம் இருந்து நிதியும், உளவுத்துறையின் வழிகாட்டுதலையும் பெற்றது. அண்மையில் அண்ணாமலையின் நிதி நல்கைத் திட்டத்தின் கீழும் இருந்தார்கள். ஒருவிதத்தில் இம்மாதிரியான நிதியுதவியையும் பெரிய அண்ணன்களின் ஆதரவையும் கொண்டே எந்த இடத்தையும் வெல்லாத ஒரு கட்சியாக அவர்கள் இப்படித்தான் தம் அரசியல் இடத்தை தக்க வைத்தும் கொண்டார்கள். ஆனால் அதையும் மீறி அவர்களுடைய ஆர்ப்பாட்டமான பேச்சுக்கு ஒரு இடம் இளைஞர்கள் மத்தியில் உள்ளது. எனக்குத் தெரிந்த சில இளம் நண்பர்களே நா.த.கவில் உறுப்பினர்களாகவோ சிறு பொறுப்புகளிலோ இருக்கிறார்கள். அங்கு அவர்கள் சொந்தம் கொண்டாட மிகச்சிறியதாக இருந்தாலும் ஊசிகுத்தும் இடமாவது உள்ளதாக நினைக்கிறார்கள். இப்படியான ஒரு திரளுக்கு நா.த.க இடமளிக்கிறது. இரு நூறாண்டுகளுக்கு மேல் ஆயுள் உள்ள தமிழ் தேசியத்தை அவர்கள் தமது வசதிக்கு ஏற்ப அர்த்தப்படுத்தி அதற்கான அடையாளமாக தம்மைக் காட்டிக் கொள்கிறார்கள். திமுக அதன் கௌரவமான நிதானமான கட்டுக்கோப்பான முகம் எனில் அதன் பொறுப்பற்ற வெகுஜன அரசியல் முகமாக நா.த.க இருக்கிறார்கள். எப்போதுமே பொறுப்பின்மையின் முகம் தான் இளைஞர்களை ஆக்கிரமிக்கும், ஈர்க்கும், அவர்களுக்கு அதில் இடமுள்ளதாக நம்ப வைக்கும். இதுவே வரலாறு. தமிழின பெருமிதவாததை எதிர்ப்பரசியலாக முன்வைப்பது ஆர்வமூட்டும், கனவு காண வைக்கும், பங்கேற்போருக்கு இடமளிப்பதாக கற்பனையைத் தரும். ஆனால் அதுவே நிறுவனமயமாகும் போது வெறுமனே அதிகாரப் பெருமிதமும் இனவுணர்வும் கொள்ள மட்டுமே வைக்கும். ஒன்று காலியிடத்தை நோக்கி சமூகத்தின் விளிம்பை ஈர்க்க, மற்றதோ நிரப்பப்பட்ட இடத்தைக் குறித்து நிறைவுகொள்ள மட்டும் வைக்கும்.

நியாயமாக நா.த.கவின் இடத்தை இங்குள்ள இடதுசாரி இயக்கங்களும், தாழ்த்தப்பட்டோருக்கான அமைப்புகளும் எடுத்திருக்க வேண்டும். அவர்கள் செய்யும் தவறு வாக்கரசியலில் ஆர்வத்தை குறைத்துக்கொண்டு ஆட்சியதிகாரத்தில் இடம் பெற முயல்வதே. இது அவர்களுக்கு அங்கீகாரத்தை கொடுக்கும் அதே நேரம் அவர்ளுடைய தனிப்பட்ட வாக்கு சதவீதத்தை குறைக்கிறது. அவர்களால் கூட்டணிக்குள் இருந்தபடி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முடியாது. ஆகையால் அவர்கள் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 'என்னவெல்லாம்' செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் வேறு வகையான அரசியலை மட்டும் செய்கிறார்கள். எதிர்க்கட்சி கூட்டணியாக இருக்கும் போதும் கூட அவர்கள் எதிர்க்கட்சி அரசியலை மட்டுமே செய்வார்கள், எதிர்ப்பரசியலை அல்ல, இரு பெரும் கட்சிகளுக்கும் தாம் மாற்று எனும் நம்பிக்கையை ஏற்படுத்துவதை அல்ல.

நா.த.கவின் நோக்கம் அடுத்த சில பத்தாண்டுகளில் 20% தாண்டுவதும் இரண்டாவது அணியின் கூட்டணிக் கட்சி ஆவதும். அதிமுகவின் மீளெழுச்சி நிகழாத பட்சத்தில் அது சாத்தியப்படும். ஸ்டாலினின் கீழ் திமுக ஒரு கார்ப்பரேட் பாணி கட்சியாக மாறிவருவதால் அவர்கள் தமது வாக்கு சதவீதத்தை முன்னேற்ற அடுத்து நிச்சயம் முயல்வார்கள். அவர்கள் ஏற்கனவே இதை அலசவும் தீர்வுகளை யோசிக்கவும் தொடங்கியிருப்பார்கள்.

பாஜகவின் வாக்கு சதவீதம் 3.58% இல் இருந்து 11%க்கு மேல் வந்துள்ளது. பாஜகவின் சின்னத்தில் நின்றவர்களில் பாதிக்கும் மேல் சொந்த கட்சிக்காரர்கள் அல்ல, அவர்கள் அதிக தொகுதிகளில் நின்றார்கள் எனினும் இது கவனிக்கத்தக்க வளர்ச்சியே. நான் கர்நாடகாவிலும் தமிழகத்திலும் கவனித்தவரை பாஜகவின் புதிய ஆதரவாளர்கள் சந்தர்ப்பவாதிகள் தாம் - கட்சி ஆட்சிக்கு வரும் போது வெளிவருவார்கள், கட்சி பின்வாங்கும் போது இவர்களும் பதுங்குவார்கள். அவர்கள் (நா.த.கவைப் போல) சித்தாந்த தொண்டர்கள் அல்ல. உடனடி பணம், அதிகாரம், பொறுப்பு ஆகியவற்றுக்காக வருபவர்கள். அவர்களுக்கு இந்துத்துவா கனவே இல்லை. வெவ்வேறு கட்சிகளில் ஏற்கனவே இருந்தவர்கள். இவர்களுக்காக தென்னிந்தியாவில் பாஜக மிகப்பெரும் நிதியை செலவிடுகிறது. இவர்களுடைய ஊடக, யுடியூப் ஆதரவாளர்களும் சம்பள ரோலில் இருப்பவர்களே. வருமானம் வராவிடில் அடுத்த கட்சியைத் தேடிப் போவார்கள். அண்ணாமலை வந்த பிறகு பல ஊர்களில் பாஜகவில் சேர்பவர்களுக்கு பொறுப்புகளும் பணமும் அள்ளி வழங்கப்பட்டன (ரௌடிகளை நான் இதில் சேர்க்கவில்லை). வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கும் அங்கிள்களுக்கும், குடும்பங்களுக்கும் இது நற்பேறாகியது. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பிரச்சாரத்துக்கு அதிக அளவில் ஆட்களை வேலைக்கெடுத்து கால் செண்டர் நடத்தி போன் மூலமாகவும் நேரில் வீட்டுக்கு சென்றும் வாக்கு சேகரித்தார்கள். 90களில் கோக், பெப்ஸி நிறுவனங்கள் இங்கு வந்த போது விளம்பரத்துக்கும் வணிக ஊடுருவலுக்கும் பயன்படுத்திய கார்ப்பரேட் உத்திகளையே பாஜக பயன்படுத்தியது. ஏற்கனவே வலதுசாரி மனநிலை கொண்டவர்கள், நவபொருளாதார முதலீட்டிய, சந்தை ஆதிக்க கொள்கையை கொண்டவர்கள் மற்றும் மதவாதிகளையும் இந்த 'பெரும் கட்சிகளால் கைவிடப்பட்ட மக்கள் திரளுடன்' பாஜகவினர் சேர்த்துக் கொண்டார்கள். நான் இவர்களை 'சித்தாந்த அரசியலற்ற பொருளாதார ரீதியிலான வாக்குத்திரள்' என நினைக்கிறேன். இவர்கள் ஒரிஜினல் பாஜக ஆதரவாளர்கள் (intelligensia) அல்லர். ஆனால் அவர்களையும் 'வேலைக்கு சேர்த்ததன்' பலனை அதிக வாக்குகளாக பாஜக பெற்றது.

2029இல் பாஜக முழுமையாக வீழுமானால் இந்த 'அரசியலற்ற ஆதரவுத் திரள்' மீண்டும் 'ஊசலாடும் வாக்காளர்கள்' ஆவார்கள் அல்லது பாஜக கூட்டணியாக இருக்கும் சிறு கட்சிகளைப் போல பெருங்கட்சிகளிடம் போவார்கள் என ஊகிக்கிறேன்.

எப்படியும் ஒவ்வொரு கால் நூற்றாண்டிலும் ஒரு புதிய தலைமுறை தன் இருபது, முப்பதுகளில் தோன்றி தனக்கான அதிகாரத்தை கோரும். இவர்கள் போக, திராவிட கதையாடலில் அதிருப்தி கொள்ளத் தொடங்கும் சில / பல லட்சம் மக்கள் என்றும் இருப்பார்கள். இவர்கள் முன்பு ஊசலாடும் வாக்காளர்களாக இருந்திருப்பார்கள். இன்று அவர்களும் கால் பதிக்க இடம் நாடுகிறார்கள் என நினைக்கிறேன். தமிழகத்தைப் போன்ற ஒவ்வொரு கால் நூற்றாண்டிலும் தொழில் வளர்ச்சியையும் வருமான பெருக்கத்தையும் காணும் ஒரு மாநிலத்தில் புதிதாக தோன்றும் அடுத்த கட்ட முதலீட்டியர்களுக்கு, தொழிலதிபர்களுக்கு, மேல்மத்திய வர்க்கத்துக்கு ஒரு அதிகார பங்கீடு தேவைப்படும். அவர்களும் இயல்பாகவே புதிய அரசியல் களங்கள் உருவாக விரும்பி அதற்கு நிதியும் இடமும் அளிப்பார்கள். உ.தா., முதலாம் உலகப்போருக்குப் பிறகு ஜெர்மனியில் ஆளுங்கட்சிக்கு எதிராக இடதுசாரிகளும் தொழிற்சங்கங்களும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போது அங்குள்ள தொழிலதிபர்கள் ஒரு தேசியவாத கட்சியை இடதுசாரிகளுக்கு மாற்றாக கொண்டு வர வேண்டும் எனக் கருதி நாஜி கட்சியை வளர்த்தெடுத்தனர். இது உலக வரலாற்றையே மாற்றும் நிகழ்வானது. தமிழகத்திலும் எங்கெல்லாம் கடந்த சில பத்தாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி அதிகமாகி புதிய ஆதிக்க வர்க்கங்கள் தோன்றியனவோ அங்கிருந்தெல்லாம் அதிமுகவுக்கும் பின்னர் பாஜகவுக்கும் ஆதரவு கிடைத்தது மற்றொரு ஈடான வரலாறு.

இத்துடன், வேறேதோ ஒரு சமூக உளவியலும் இதற்குப்பின் உள்ளது. அதை சமுக ஆர்வலர்களும் ஊடகங்களும் கட்சிகளும் சேர்ந்து ஆராய வேண்டும். 'கைவிடப்பட்ட திரளுக்கும்', புதிய முதலீட்டிய சக்திகளுக்கும் நம்பிக்கையையும் பொறுப்பு உள்ளிட்ட வாய்ப்புகளையும் வழங்க வேண்டும். இது பாஜக போன்ற தேசிய கட்சிகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையிடும்.

சித்தாந்தத்தையும் பரப்புரையையும் கொண்டு வளரும் நா.த.கவை யாரும் தடுக்க முடியாது என நினைக்கிறேன். ஆனால் அந்த வளர்ச்சியை அறுவடை செய்ய அவர்கள் 2050ஐ கடந்தும் களத்தில் உடையாமல் இருக்க வேண்டும், கூட்டணி கட்சியாக மாறாமல் இருக்க வேண்டும், அதே நேரம் பல கட்டத் தலைமையையும், உள்கட்டமைப்பையும் வளர்க்க வேண்டும் என்பதையும் நிபந்தனையாக சேர்க்கிறேன். அது மட்டுமே ஐயத்துக்கு உரியது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...