காங்கிரஸ் கட்சியின் ஊடக சந்திப்பில் தேர்தல் கூட்டணிக்கு வெளியே உள்ள கட்சிகளின் ஆதரவை ஆட்சி அமைக்கத் தேடுவீர்களா என நிதீஷையும் சந்திரபாபு காருவையும் மனத்தில் வைத்து ஒரு பத்திரிகையாளர் கேட்க ராகுலும் கார்க்கேவும் நாளை கூட்டணிக் கட்சிகளுடன் விவாதித்து முடிவெடுப்போம் என்றார்கள். சமயோஜிதமான முடிவு.
ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கும். கூட்டணிக்கு வெளியே இருந்து வந்தவர்களுக்கு கேட்டதைக் கொடுத்தால் உள்ளே இருக்கும் கட்சியினர் கோபித்துக் கொண்டு போய் விட்டால் பஞ்சாயத்தாகி விடும். ஏற்கனவே மம்தாவும், ஸ்டாலினும் தில்லிக்குப் போகவில்லை. ஆக அவர்களிடமும் கேட்டுவிட்டு பகிர்ந்து முடிவெடுப்பதே ஆதாயம்.
இது காங்கிரஸை விட மோடி-ஷா தலைக்கட்டுகளுக்கே பெரிய குடைச்சலாக இருக்கும். நிதீஷைப் போன்றவர்கள் சும்மாவே ஆனையைக் கொடு, பூனையைக் கொடு எனக் கேட்பார்கள். காங்கிரஸ் எதையும் இழக்கப் போவதில்லை. அவர்கள் பரிசீலிக்கலாம். ஆனால் நம் தலைக்கட்டுகளுக்கு அது ஆபத்தானது. பொம்மை அமைச்சரவையை ஆட்டி வைத்துக்கொண்டு விமானத்தில் பறந்து, பாராளுமன்றத்தில் தலைகாட்டாமலும், மொத்த வருமானத்தையும் தானும் கூட்டாளியுமாக ஆட்டையைப் போட்டதெல்லாம் இனி சாத்தியப்படாது. ரொம்ப காரசாரமான போட்டியாக இருக்கும். லாபம் நிதீஷ் மற்றும் பாபு காருவுக்குத் தான்.
தலையைக் கொடுத்தாவது பாஜக ஆட்சியமைக்கும், பின்னாளில் அதிகாரம் நிலைப்பெற்றதும் சில கூட்டணி எம்.பிக்களை விலைக்கு வாங்கி தம் கட்சியில் சேர்த்து மாநில கட்சியினரை பஞ்சராக்கி ஜம்பமாக உட்கார பார்க்கும் என்றாலும் கூட மோடி ஜிக்கு திக்திக்கென்றே இருக்கும். ஒருவிதத்தில் மோடியின் ஜம்பம் குறைவது, ஷாவின் ஆட்டம் கட்டுக்குள் வருவது மக்களுக்கு நல்லது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினுள் மோடியை விரும்பாத அணிகளுக்கும் நல்லது. அவர்கள் வளர்ந்து வர முடியும்.
என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளுக்கோ காங்கிரஸ் கூட்டணிக்குப் போனால் கிடைக்கும் பெரும் அதிகாரம், சுதந்திரம், பாதுகாப்பு ஒரு போதும் பாஜக கூட்டணியில் இருக்காது. அடுத்த தேர்தலுக்குள் பாபு காருவை காலி பண்ணி நிதீஷையும் முழுங்கி விடவே பாஜக முயலும்.
காங்கிரஸுக்கும் கூட்டணி அமைப்பதில் சிக்கல் உள்ளது. ஆட்சி சரியாக அமையாமல் நிதி நிலைமை, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் அதிகமானால் அது அடுத்த தேர்தலில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை பாதிக்க கூடும். ஏனென்றால் மக்கள் இதை காங்கிரஸின் கூட்டணி அரசென்றே பார்ப்பார்கள். ஜெ மறைவுடன் திமுக அதிமுகவின் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தில் அமர வாய்ப்பிருந்தது. ஆனால் அதனால் பாஜகவிடம் தாம் சிக்கி சீரழிய நேர்வதுடன், மக்களிடம் பெயர் கேட்டுப் போக நேரும் என்பதால் ஸ்டாலின் பொறுமை காக்க முடிவெடுத்தார். அது அவருக்கு பயன் தந்தது. இன்னொரு பக்கம் ஸ்டாலினுக்கு அன்றிருந்த நிச்சயத்தன்மை, தன்னம்பிக்கை, நிர்வாக கட்டமைப்பு, கட்சி வலிமை, நிதியாதாரம் காங்கிரஸிடம் இன்று இருக்கிறதா? இல்லை. அடுத்த ஐந்தாண்டுகள் காத்திருந்தால் அன்று இந்த எதிர்ப்பலை இருக்குமா? அன்று இந்த கூட்டணிக் கட்சிகள் அவர்களுடன் இருப்பார்களா? நிதியாதாரம் இருக்குமா? இதை பிரியங்காவே ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அதிகாரத்தில் இல்லாமல் போனால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவநம்பிக்கையில் சோர்ந்து போவதுடன் வேலை பார்க்காமலே இருப்பார்கள். ஏற்கவே காங்கிரஸ் மிகவும் பலவீனமான நிலையிலே இந்த தேர்தலை சந்தத்தது. ராகுலும், தென்னக கட்சித்தலைமைகளுமே காங்கிரஸை செலுத்தினர்.
இது காங்கிரஸுக்கு இருமுனைக் கத்தி. எந்த பக்கம் அமர்ந்தாலும் டவுசர் கிழியும். சில கட்சிகளின் தன்னலத்தை பயன்படுத்தியும் வேறு சிலரை சமாதானப்படுத்தியும் கூட்டணி அமைத்து அந்த ஆட்சியில் அதிர்ஷ்டவசமாக நல்ல வளர்ச்சியும் ஏற்பட்டு விட்டால் மட்டுமே அந்த ஒரு முனை வசதியான அரியணையாகும். அப்படி ஒன்று நடக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.