ஹாய் அபிலாஷ்,
‘ரசிகன்’ நாவலை வாசித்தேன்.
உங்களுடைய அ-புனைவு நூல்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். அவற்றையும் தங்களின் கட்டுரைகளையும் வைத்துச் சொல்வதானால் நீங்கள் எனது அபிமான எழுத்தாளர். ஆனால் உங்களின் சிறுகதைத் தொகுப்பான ‘தேவி’ என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. அதனாலேயே உங்களின் புனைவெழுத்து பக்கம் வர தாமதாகிவிட்டது. ’தேவி’ படித்துவிட்டு நான் வந்த ஒரு முன்முடிவு ‘அபிலாஷுக்கு புனைவு கைகூடவில்லை’ என்பது. அ-புனைவு எழுத்தாளராக இருக்கும்போது ஏற்படும் தர்க்க நோக்கம் புனைவழகியலை நெருங்கவிடாமல் செய்கிறதோ என்ற சந்தேகமும் இருந்தது. ‘ரசிகன்’ என் முன்முடிவுகளையெல்லாம் தகர்த்துவிட்டது.
இந்நூலைப் பற்றி எனக்கு ஏற்பட்ட முதல் அபிப்பிராயம், இது முழுக்க முழுக்க இலக்கியத்தைப் பற்றிய Spoof நாவல். தமிழ் சினிமாவுக்கு மிர்சி சிவாவின் ‘தமிழ்ப்படம்’ போல ‘ரசிகன்’ தமிழிலக்கியத்தைப் பகடி செய்வதாகவே நினைக்கிறேன்.
நாவலின் முதலிரு பகுதிகளில் பல இடங்களில் சிரித்துக்கொண்டே படித்தேன். ஆனால் இறுதி அத்தியாயம் முற்றிலும் மாறுபட்ட உணர்வை அளித்தது. சாதிக் தன் நாவலை எரிக்கும் அத்தியாயம் உண்மையில் மெய் சிலிர்க்க வைத்தது. அறிவின் மீது அகங்காரத்தைப் புகுத்திப் பார்த்த சாதிக் கடைசியில் மூளை சிதறி சாவது போன்ற படிமம் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. நான் வாசித்த வரையில் சாதிக்கின் மரணம் அளவுக்கு வேறெந்த புனைவுக் கதாபாத்திரத்தின் இறப்பும் என்னை பாதித்ததில்லை. அதற்குக் காரணம், இது நீண்ட நாவல் என்பதாலா அல்லது சாதிக்கின் ஏதோவொரு குணாதிசயம் நெருக்கமாக இருக்கிறது என்பதாலா எனத் தெரியவில்லை!
இந்நாவலுக்காக நீங்கள் கையிலெடுத்திருக்கும் அபத்தவாத எழுத்து முறை ஆரம்பத்தில் பல இடங்களில் முகம் சுளிக்க வைத்தாலும், இந்தப் படைப்பு கோரும் எழுத்துமுறை அதுவே! குறிப்பாக, சாதிக்கின் பிணத்தைக் கட்டித் தழுவி பிரவீணா அழும்போது சுற்றி நின்றவர்கள் அவளைக் காமத்துடன் பார்க்கும் படிமத்தை மறக்கவே முடியாது. அவுட்ஸ்டாண்டிங்!
அடுத்ததாக ‘கால்கள்’ வாசிக்க இருக்கிறேன். ‘நிழல் பொம்மை’ நாவலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.
அன்புடன்