தேர்தலின் கடைசி நாள் 6 மணிக்கு முடியவில்லை. தேர்தல் நாளன்று எட்டு மணி வரை மக்கள் தொடர்ந்து வாக்களிக்க வந்துகொண்டிருப்பது இயல்பே. ஆனால் நேற்றைக்கு கோ-டி மீடியா வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளை அவர்கள் நேற்று காலையிலே முடித்து தொகுத்திருக்க வேண்டும். அது அப்படியே பாஜக தேர்தலுக்கு முன்பு கோரியதை பிரதிபலிப்பதைப் பார்க்கும் போது இந்த ஒட்டுமொத்த அபத்தத்தின் நோக்கம் என்ன எனும் கேள்விதான் எழுகிறது. "இது மோடிஜியின் மீடியாவின் மிகு கற்பனை" என ராகுல் காந்தி சொல்வது சரிதான் போல.
குறிப்பாக, வடக்கே இடங்கள் குறைந்து தெற்கே அதிகரிக்கும் என சொல்வது, தமிழகத்தில் பாஜக கூட்டணி 16 இடங்களை வரை வெல்லும் என்பதெல்லாம் நடக்குமா? இதெல்லாம் ஓவராக இல்லை?
இன்னொரு பிரச்சினை இது ஒட்டுமொத்த இந்திய வாக்காளர்கள் இடையே 0.02% மக்களிடம் மட்டும் எடுத்த கணிப்பு என்கிறார்கள். ஆனால் அதிக வாக்காளர்களிடம் கருத்துக் கேட்பது அவசியமல்ல என்று சி.எஸ்.டி.எஸ்ஸின் பேராசிரியர் சஞ்சய் குமார் சொல்கிறார். 1996இல் சி.எஸ்.டி.எஸ்ஸால் 17,604 வாக்காளர்களை கருத்துக்கணிப்பு செய்து கட்சிகளின் தொகுதி-வாரி வாக்குகளின் பங்கீட்டை துல்லியமாக கணிக்க முடிந்தது, இந்த வாக்காளர்களின் எண்ணிக்கையை பின்னர் ஊட்காங்களின் நெருக்கடியால் அதிகரிக்க நேர்ந்தது என்றும், அதன் பின்னர் தமது கணிப்புகள் சில நேரங்களில் பொய்த்துள்ளன என்று அவர் சொல்கிறார். பலவிதமான சாதி, மத, பொருளாதார நிலை, வயது, பாலின பின்னணிகளை சேர்ந்தவர்களை ஒழுங்காக பேட்டி கண்டால் மட்டுமே ஓரளவுக்கு துல்லியமான கணிப்பை நல்க முடியும் என்கிறார் அவர். பாஜகவுக்கு 370க்கு மேல் இடங்கள் கிடைக்கும் என சொல்பவர்கள் இந்த முறைமையை பின்பற்றினார்களா அல்லது கற்பனையாக வாக்காளர் கருத்துக்களை எழுதினார்களா அல்லது திரித்து சொல்கிறார்களா எனத் தெரியவில்லை.
ஒருவேளை இந்தியா கூட்டணி வெல்லும் என இவர்கள் சொல்லியிருந்தால் நாம் இதைக் கேட்டிருப்போமா? அது பொதுவாக நாடு முழுக்க உள்ள அதிருப்தி அலையை பிரதிபலிப்பதால் சற்று ஐயப்பாட்டுடன் ஒத்துக் கொண்டிருப்போம்.
இந்த கணிப்பு விசயத்தில் மூன்று பிரச்சினைகள்: இந்த கணிப்புகளை செய்ய முகமை நிறுவனங்களை அமர்த்திய டிவி ஊடகங்கள் ஏற்கனவே பெரும்பாலும் விலைபோய் விட்டவை. இவை தேர்தலுக்கு முன்பும் மோடிக்கு சாமரம் வீசியவையே. அடுத்து, இது தேசத்தில் உள்ள அதிருப்தி அலைக்கு நேர்மாறாக உள்ளது. கடைசியாக, என்ன மாதிரி முறைமையை பின்பற்றினார்கள், ஏன் கடைசி நாள் தேர்தல் 8 மணிக்கு முடியும் வரை அவர்கள் பொறுக்கவில்லை, ஏன் இன்று வெளியிடவில்லை, நேற்று வெளியிடும்படி ஏன் அவ்வளவு அழுத்தம் எனும் கேள்விகள் எழுகின்றன.