காலையில் தூக்கம் கலைந்து போர்வையை முழுக்க மூடிக்கொண்டு அரைத்தூக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். வெளியே உச்சா போய்விட்டு வந்த புத்தா (என்னுடைய காக்கர் ஸ்பானியல் நாய்) வழக்கம் போல தாவி படுக்கையில் ஏற முயன்றது. ஆனால் இம்முறை அதனால் வழியில் படுத்திருந்த என்னை சரியாக தாண்ட முடியவில்லை. விடிகாலை முழு விரைப்பு கொண்டிருந்த என் ஆண்மையில் ஒரு கால் தடுக்கிட இன்னொரு பக்கம் மென்மையான என் விதைப்பையில் காலை அழுத்திவிட்டு எப்படியோ தாவிப் போய் விட்டது (நல்லவேளை தடுக்கி விழவில்லை!). நான் வலியில் கத்த அது பதறிப் போய் திரும்ப வந்து நாம் மிதித்த இடம் எதுவென முகந்து பார்த்தது. “ஓ இதுவா, ஆமாம் அந்த வாசனை தான், ஆனால் இது ஏன் இப்படி இருக்கிறது?” இந்த நடத்தை என்னை வெகுவாக ஆச்சரியப்படுத்தியது. ஒருவருக்கு வலியை ஏற்படுத்தினால் நமக்கு பிரச்சினை வரலாம் என பயந்து சுதாரிப்பது நாயின் இயல்பு. ஆனால் என்ன நடந்தது, எந்த இடத்தில் தவறு செய்வோம் என சோதிக்கும் ஆற்றல் அதற்கு இல்லை. அதாவது காரண காரியத்தை ஆராயும் திறன் இல்லை, அது மனிதனுக்கு மட்டுமே உரித்தானது என்று தான் நம்பிக்கொண்டிருந்தேன். உதாரணமாக ஒருவருடைய காலை தெரியாமல் மிதித்தால் அவர் கத்தும் போது அவர் கத்துகிறார் என்றல்ல அவரை கத்த வைத்துவிட்டோம் என்றும், எதனால் அவர் கத்துகிறார், எந்த இடத்தில் மிதித்தோம் என்றும் நம் மூளை பரிசீலிக்கும். காலை உடனடியாகப் பார்ப்போம். சாலையில் வாகனத்தை கொண்டு மோதும் போதும் நம் கண்கள் மோதப்பட்ட இடத்தைப் பார்க்கும். மனதுக்குள் எதையாவது மறைத்து வைத்துப் பேசும் போது கைகளை பாக்கெட்டிலோ மேஜைக்கு கீழே வைத்துக் கொள்வோம். எட்ஜ் கொடுத்து ஸ்லிப்பில் கேட்ச் பிடித்ததும் மட்டையாளர் தன் மட்டையின் விளிம்பைப் பார்ப்பார். காரணியை அறியவோ மறைக்கவோ முயல்வோம்.
இதைப் புரிந்துகொள்ள முடியுமெனில் இந்த நாய்க்கு வேறென்னெல்லாம் தெரியும் என வியப்பு ஏற்படுகிறது. பேசத் தெரியாது என்பதால் என்னைப் பற்றி ஏகப்பட்ட உண்மைகளை மனசுக்குள் வைத்தபடி அமுக்குணி போல் இருக்கிறது என நினைக்கிறேன்.