
ராம் கோபால் வர்மா ரஹ்மான் செய்யும் ‘அறிவுத் திருட்டு’ பற்றி அவரது அண்மை பேட்டியில் சொன்னது உண்மை தான் என நினைக்கிறேன். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஆர்.ஜெ.வி அதை ‘திருட்டு’ எனக் கருதவில்லை. அதை ஒரு தெளிவான கலை உருவாக்க அணுகுமுறை என்கிறார். அவர் சொல்வது படி பார்த்தால் நீண்டகாலமாகவே ரஹ்மான் இந்த பாணியைப் பின்பற்றி வந்திருக்கிறார் - இளம் பாடகர்களின் மெட்டுகளை வாங்கி, விதவிதமான இசைக்கலைஞர்களின் இசைக்கோவைகளைப் பதிவு பண்ணி வைத்துக்கொண்டு (எல்லாருக்கும் அவரவருக்கான பரிசைக் கொடுத்துதான்) தேவைப்படும் போது அவற்றைக் கலந்து ஒரு பாடலாக்குகிறார். அதனால் தான் அவர் என் பாடல்களின் மூலத்தைத் தேடாதீர்கள் என யஷ் கய்யிடம் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். அதாவது ரஹ்மான் இசையமைப்பாளர் அல்ல, இசை இயக்குநர். ஒரு இயக்குநர் தன் சொந்த கதையை, வசனங்களைக் கொண்டு படமெடுக்க அவசியமில்லை. இசை, நடிப்பு, அரங்கு அமைப்பு, ஒலியமைப்பு, தொகுப்பு என பல்வேறு கலைஞர்களின் பங்களிப்புதான் அப்படமா என்றால் முழுக்க இல்லை, அதில் இயக்குநரின் ஒருங்கிணைப்புத் திறன், வாழ்க்கைப் பார்வையும் இருக்கிறது என சொல்கிறோம் அல்லவா, அதைத்தான் ரஹ்மான் செய்வதாக ஆர்.ஜெ.வி சொல்கிறார். ஆர்.ஜெ.வி இதை தரிசனம் என்றல்ல, ‘தேர்வு’ என்கிறார்.
இதுவே ரஹ்மானை 'வெற்றிகரமான இசையமைப்பாளர்’ ஆக்கியது. ஏனெனில் அவர் இசையை உருவாக்கவில்லை, தேர்வு செய்து தன் ரசனைப்படி தொகுத்து வடிவமைப்பதே அவர் செய்வது. அதனாலே வேறு யாரிடமும் இல்லாத ஒரு எதிர்பாராத இசைத்தன்மை, வேறுபட்ட வகைமைகள், ஒலிகள் அவரிடம் இருந்து வெளிப்பட்டது. அவருடைய ரசனையின் சாயலே அவரது இசையில் வெளிப்படும் சாயல். அந்த கலவையின் நீட்சியே அவரது ஆளுமை. அவர் இசையமைப்பதைப் பற்றி சொல்லும் பாடகர்கள் அவர் ஒரு அடிப்படையான மெட்டைக் கொடுத்து அதை தமது பாணியில் பாடச்சொல்லி பதிவு பண்ணி அதில் இருந்து சில பகுதிகளை வெட்டியெடுத்து இசைக்கோவையுடன் ஒரு பாடலாக்கி விடுவார் என சொல்வார்கள். பாடகர்களின் படைப்பாக்கத்தையும் தன் மெட்டுக்காக அவர் பயன்படுத்துவதால் அவரது இசை அவ்வளவு புதுமையாக இருக்கிறது. மேலும், சில நாட்டார் பாடகர்களும், வித்தியாசமான இசைக்கருவியை இசைக்கும் நாட்டுப்புற கலைஞர்களும் அவரது ஸ்டுடியோவை நாடிச்சென்று இசைத்து பணம் வாங்கிப் போவார்கள், அதை ரஹ்மான் பதிவு பண்ணி தன் ஆர்க்கைவ்வில் வைத்துக்கொள்வார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு தனிமனிதர் தனது படைப்பாக்கத் திறன், அனுபவம், அறிவைக் கொண்டு இதை செய்வதானால் இவ்வளவு பன்முகத்தன்மை, மாறுபட்ட வகைமைகள் அவரது இசையில் வரவே முடியாது. ரஹ்மானுக்குப் பின் வந்தவர்கள் சர்வதேச இசைக்கலைஞர்களின் உரிமம் பெற்று மெட்டையும் கோவைகளையும் பெற்று தம் பாடல்களில் பயன்படுத்துவதாக கேபிள் சங்கர் சொல்கிறார். நாம் வழமையான இசையமைப்பாளர்களிடம் உள்ள அசலான படைப்பாக்கத்தை, சுயத்தை ரஹ்மானிடம் தேடக் கூடாது. ரஹ்மான் ஒரு ஒரிஜினல் இசை சாட் ஜி.பி.டி. இசையில் சாட் ஜி.பி.டியின் முன்னோடி அவர் தான். இதை நான் கிண்டலாக சொல்லவில்லை. இதை அவர் தெரிந்தே தெளிவாக யோசித்தே செய்திருக்கிறார் - தன் திறமையென்ன, தன் சாதனை என்ன என்று அவருக்குத் தெரியும். தமிழில் யாரும் இதை யோசிக்காத காலத்தில் செய்து இந்திய அளவுக்கு தமிழ் திரைப்பட இசையை அவர் புகழடைய செய்தார். இதுவும் ஒரு தனித்திறன் தானே. அவரால் மற்ற இசையமைப்பாளர்களைப் போல மெட்டமைக்க முடியாது. ஆனால் அவருக்கு முடிகிற ஒன்று ராஜாவுக்கும் தானே முடியாது. ராஜா ஒரு படைப்பாளி எனில் இவர் ஒருவித இசைப்பொறியியலாளர். அவர் மனிதர், இவர் மனித உருவிலான சாட் ஜி.பி.டி.
இன்னொரு விசயம் - வேறு இசையமைப்பாளர்களும் மெட்டைத் திருடியிருக்கிறார்கள். ரஹ்மான் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறார் என்பதே வித்தியாசம்.
ஒரே பிரச்சினை மெட்டுக்கான அங்கீகாரத்தை அவர் இந்த பாடகர்களுக்கும், கலைஞர்களுக்கும் கொடுக்கவில்லை என்பதே. அப்படி கொடுத்திருந்தாலும் என்ன ஆகியிருக்கும்? “ஜெய் ஹோவின்” மெட்டு சுக்வீந்தருடையது என்பதால் ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்திருக்காது. ஆனால் ரசிகர்கள் அவரை என்றும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அவர் மீதான வியப்பு சற்று குறைந்திருக்கும், ஆனால் பிராண்ட் மதிப்பு இருந்திருக்கும். ஒருவேளை அதை செய்யும் துணிச்சல் ரஹ்மானுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். சினிமாவுக்குள் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று, ஊடகவியலாளர்கள் பேசத் தலைப்படாத ஒன்று நமக்கு மட்டும் தெரியவில்லை. நஸ்ரீன் முன்னி கபீர் தான் எழுதிய AR Rahman: The Spirit of Music நூலிலும் சொல்லவில்லை. ஆஸ்கார் குழுவினருக்கும் தெரிய வருகிறது. இப்போது ஒரு காணொளி வழியாக தெரிய வந்திருக்கிறது.
பி.கு: சுக்வீந்தர் சிங்கை வைத்து இப்போது மறுப்பு வெளியிட்டிருப்பதும் ஒருவித பி.ஆர் வேலையாகவே தெரிகிறது.