Skip to main content

கண்ணுக்குத் தெரியாத ஒன்று

பரகலா பிரபாகர் இவ்வளவு தீவிரமாக மோடியை எதிர்ப்பதும் அதற்கு சம்மந்தமே இல்லாமல் அவர் மனைவி மத்திய அமைச்சராக இருப்பதும் சாதாரண விசயம் அல்ல. அவர்கள் ஒரு உத்தமமான தம்பதியாக அல்லாத பட்சத்தில் கணவர் இவ்வளவு கடுமையாக அரசைத் தாக்கிய பின்னர் மனைவியால் அவரது முகத்தைப் பார்த்துப் பேசக் கூட இயலாது. அதையும் மீறி அவர்கள் கண்ணியத்துடன் பொதுவெளியில் இப்பிரச்சினையை கையாள்வதாக நான் ஆரம்பத்தில் நினைத்து சிலாகித்தேன். ஆனால் இப்போதெல்லாம் நான் யாரையும் சுலபத்தில் நம்புவதில்லை. அரசியலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருப்பவர்களின் எல்லா பேட்டிகள், பொதுவெளி கருத்துக்களுக்கும் பின்னால் ஒரு அஜெண்டா இருக்கும். பிரபாகருக்கும் நிச்சயமாக இருந்தாக வேண்டும்? அது என்ன என்பது இப்போதைக்கு தெளிவாக இல்லை.

பரகலா பிரபாகரின் பெற்றோர் காங்கிரஸை சேர்ந்தவர்கள். சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். பிரபாகர் இளமையில் லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனனாமிக்ஸிலும் ஜெ.என்.யுவிலும் படித்தார், அங்கே நிர்மலா சீத்தாராமனை சந்திக்க் இருவரும் காதலித்து மணந்தார்கள்  என்றும் அறிவோம். ஆனால் இவை புறவயமான தகவல்களே. ஆனால் சுவாரஸ்யமான தகவல் அவர் 2000இன் துவக்கத்தில் பா.ஜ.கவின் ஆந்திர பிரதேச செய்தித் தொடர்பாளராக இருந்தவர் என்பது. (பின்னரே பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு போகிறார். ) ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள்ளின், மோடியின் அரசியலை, சித்தாந்தத்தை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கும் ஒருவர் எப்படி ஒன்றுமே அறியாமலா அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தார்? அதுவும் காங்கிரஸ் கட்சி பின்னணி கொண்டவர் எனும் போது? அதுவும் பாபர் மசூதி இடிப்பு, இஸ்லாமியருக்கு எதிரான கலவரங்கள் நடந்து முடிந்து சூடு ஆறாத காலம் அது எனும் போது? மதவாதத்திற்கு எதிராக புத்தகம் ஏழுதும் ஒருவருக்கு அப்போது நடந்தவை எல்லாம் கொடூரங்களாக,நாட்டின் மத சார்பின்மையை ஒழித்து இந்தியாவை சில நூற்றாண்டுகள் பின்னுக்கு நகர்த்தியதாகத் தோன்றவில்லையா?

அடுத்து 2018இல் சந்திரபாபு நாயுடுவுக்கும் பாஜகவுக்குமான உறவு கசக்கும் வரை பிரபாகர் முதல்வரின் ஆலோசகர் எனும் தன் பதவியை பாஜக கூட்டணி அரசில் தக்க வைத்திருந்தார். நாயுடு மோடியைத் தாக்கிப் பேசியதால் மனம் புண்பட்டே அவர் பதவியை ராஜினாமா பண்ணினார். அதுவரை ஒன்றிய அரசுக்கு நெருக்கமாகவே இருந்தார். கடந்த 6 ஆண்டுகளாகத் தான் ஜனநாயக காவலராக, முற்போக்கு அரசியல் சிந்தனையாளராக
அவருக்கு புத்துயிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனாலே திடீர் புனிதர்கள் சந்தேகத்துக்கு உரியவர்கள்.    

கரன் தாப்பர் ஒரு கேள்வியின் போது நிர்மலா சீத்தாராமனின் பெயரைக் குறிப்பிட்டு "நான் இவ்வளவு நேரமும் தெளிவாகவே அவர் பெயரைக் குறிப்பிடாமல் இருக்கிறேன்" என்று சொல்லி விட்டு நகர்ந்த போது பிரபாகரின் முகத்தில் ஒரு பதற்றம் தெரிந்தது. அதன் பிறகு சில நிமிடங்கள் அவர் மோடி மீதான விமர்சனத்தைக் குறைத்துக் கொண்டு பூசி மெழுகினார். அவர் இயல்பு நிலைக்கு வர சற்று நேரமெடுத்தது. இதை தன் விமர்சனத்தை தனிப்பட்ட உறவு சார்ந்ததாக மாற்றக் கூடாது எனும் கண்ணியமாகப் பார்க்கலாம். அல்லது ஏதோ ஒரு விதத்தில் நிர்மலா சீத்தாராமனின் தூண்டுதலினாலே பிரபாகர் அவ்வப்போது வந்து கடுமையாக ஒன்றிய அரசை விமர்சிக்கிறார் என்றும் பார்க்கலாம். ஒருவர் அமைச்சரவையில் இருப்பதாலே அவர் முழு திருப்தியுடன் அதிகாரத்துடன் இருக்கிறார் எனப் பொருளில்லை. சில நேரங்களில் கட்சிக்குள் இருந்தபடி உட்கட்சி கோபங்களை இப்படி வெளியே  ஆளை வைத்து தீர்த்துக் கொள்வார்கள். கேட்டால் அவர் வேறு கட்சி, நான் வேறு கட்சி என சொல்லிக் கொள்ளலாம். தமிழக அரசியலில் கூட இப்படி சொந்த கட்சிக்கு வெளியே இருந்து - கருத்தாளர்கள், காசுக்கு கூவும் யுடியூபர்கள், ஓய்வுபெற்ற ஊடகக்காரர்களை வைத்து - கட்சித் தலைமையைத் தாக்க வைக்கும்  தலைவர்களைப் பார்த்திருக்கிறோம். கட்சிக்குள் அழுத்தத்தை உண்டு பண்ண, சில அணிகளை பலவீனமாக்க இந்த உத்தியை பயன்படுத்துவார்கள். இவ்விசயத்திலும் அப்படி இருக்கலாம். அல்லது கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு வேறேதோ நோக்கம் இருக்கலாம். அல்லது இது வெறும் ஊகமாக தவறாகவும் கூட இருக்கலாம்.

ஆனால் ஒன்று, மேற்தட்டினரைப் பொறுத்தவரையில் அவர்கள் அரசியல் பேசினால் ஏதாவது ஒரு ஆதாயம், அதற்கான அஜெண்டா, தொலைநோக்குத் திட்டம் இருந்தே தீரும். வெற்று லட்சியவாதத்துக்காக காலத்தையும் தொண்டையையும் வீணடிப்பவர்கள் மத்திய வர்க்க தொண்டர்கள் மட்டுமே.

பின்னால் நடப்பது தெரியாத வரை முன்னால் நடப்பது அழகாகத் தான் தெரியும். அவர் சொல்வதெல்லாம் சரியே, ஆனால் "அவர்" ஏன் பேசுகிறார் என்பது பிரச்சினையாக உள்ளது. நீங்கள் ஒன்றும் அந்தளவுக்கு நல்லவர்கள் இல்லையே பாஸ்? கணவனுக்கும் மனைவிக்கும் தெரிந்தே தான் இந்த முரண் அரசியல் நிகழ்கிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...