Skip to main content

மதமும் சர்வாதிகாரமும் - அந்தரங்கத்தில் இருந்து பொதுவெளிக்கு - ஆர். அபிலாஷ் (4)


ராமரைக் கொல்வது:

ஒரு கட்சியின், தலைமையின் மத ஈடுபாடு, நம்பிக்கை, வழிபாட்டுப் பழக்கங்களுக்கும் ஆட்சி, சமூக வளர்ச்சி, மக்களின் சமூக அடையாளம், பாதுகாப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உதாரணமாக, ராகுல் காந்தி மக்கள் முன்னிலையில் பூஜை செய்தாலோ யோகா டெமோ நிகழ்த்தினாலோ இத்திரளுக்கு அதனால் லாபமில்லை. ஏற்கனவே அவர்கள் வீட்டிலும் தெருவிலும் நடப்பதை ஒரு தலைவர் எதற்காக ஒரு நிகழ்வாக்கிக் காட்ட வேண்டும்?

 
இந்துக் கோயில்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். இதைக் காணும் இந்துக்களுக்கு எந்த பாதுகாப்பின்மையும் ஏற்படலாகாது. ஆனால் பெரும் பதற்றமும் பயமும் அதனாலான கசப்பும் கோபமும் தோன்றுகிறது. இதை பாஜக உருவாக்கவில்லை, ஆனால் பயன்படுத்திக் கொள்கிறது. அதற்காகவே ஒரு கோயிலுக்குப் போவதை, பூஜை செய்வதை ஒரு மதத்தை, பக்தியைக் கடந்த ஒன்றாக மாற்றி பக்தர்களை அ-பக்தர்கள் ஆக்குகிறார்கள். இந்துக்களை அ-இந்துக்கள் ஆக்குகிறார்கள். இந்து மதத்தை கடந்து போவதே இந்துத்துவம் ஆகிறது. அதன் மூலம் இந்த தனித்து விடப்பட்ட திரள் உணர்ச்சிகரமான கனவு ஒன்றுடன் பிணைக்கப்படுகிறார்கள். கடவுள், மதம், ஆன்மீக போன்ற விழுமியங்களுக்கு, கருத்துக்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லாத கலவரங்கள் நடத்துவதற்கு இவற்றை முதலில் ஒழிக்க வேண்டும். அதாவது கடவுளின் பெயரால் கடவுளையும், மதத்தின் பெயரால் மதத்தையும் ஒழிக்க வேண்டும். ராமர் கோயிலைக் கட்டி அதை நாடு முழுக்க ஒரு பிரம்மாண்ட கொண்டாட்ட நிகழ்வாக்கியதன் வழியாக மோடி ராமரைக் ‘கொல்கிறார்’. ராமரைக் கொல்வதற்காகவே அவர் ராம நாமத்தை தொடர்ந்து ஜெபிக்கவும், விளக்குகளை ஏற்றவும் பொதுவெளியில் திரண்டு டிவியில் அந்நிகழ்வைப் பார்க்கவும் அழைக்கிறார். மதரீதியாக மக்களைத் திரட்டுவது அல்ல, மதத்தை ஒழித்து அதனிடத்தில் ஒரு கனவு ராஜ்ஜியத்தை உருவாக்குவதே அவருடைய இலக்கு.
பொதுவாக சர்வாதிகாரம் என்பது தொடர்ந்து இயக்கத்தில் இருப்பது, மக்களை எதையாவது செய்துகொண்டே இருக்க வைப்பது என்கிறார் ஆரெண்ட். ஒரு செயலின் பொருள் என்ன என யோசிக்கும் முன்பு அடுத்தடுத்த இடுபணிகளை மக்களுக்கு / தொண்டர்களுக்கு அளிப்பது, ஒட்டுமொத்த தேசத்தையும் இப்படி பரபரப்பாகவே வைத்திருப்பது. இதனாலே சர்வாதிகாரத் தலைவர்கள் எளிதில் வீழ்த்தப்படுகிறார்கள், ஆனால் சர்வாதிகாரம் நிலுவையில் வெவ்வேறு வடிவங்களில் இருந்துகொண்டிருக்கும் என்கிறார் ஆரெண்ட். இப்படி ஒரு மையத்தில் இருந்து, உள்ளார்ந்த சாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டே இருப்பதே சர்வாதிகாரம், இந்துத்துவ அரசியல். இப்படி வெளியேற்றப்படும் இந்து மெல்ல மெல்ல கடவுள் நம்பிக்கையை ஒரு கொள்கையாக்குகிறான், ஆனால் அதன் மீதான உணர்வுரீதியான பிடிப்பை இழக்கிறான். கடவுள் ஒரு காதலணுர்வு என்பதில் இருந்து, பித்து என்பதில் இருந்து அது ஒரு நடைமுறை கோட்பாடாகிறது. இதன் விளைவாக ஒரு வினோதம் நிகழ்கிறது - என் அனுபவத்திலும் வரலாற்று வாசிப்பிலும் கணிசமான இந்துத்துவர்கள் நாத்திகர்களாக இருக்கிறார்கள். அதாவது அவர்களுடைய ஆத்திகம் ஒரு நிகழ்த்துதல் மட்டுமே. உள்ளுக்குள் அவர்களுக்கு இறைநம்பிக்கை அவசியமற்றது. ஒருவேளை கடவுள் இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால் இந்து மதம் நிச்சயமாக உண்டு என நம்புவார்கள். ஒரு தீவிர பக்தனோ இந்து மதம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் கடவுள் நிச்சயமாக உண்டு என்பான். தீவிர நாத்திகராக இருந்த என் அப்பா ஒரு மென் வலதுசாரியின் நம்பிக்கைகளுடன் இருந்தார். தீவிர ஆத்திகரான என் அம்மாவோ பாஜகவுக்கு ஒரு போதும் வாக்களித்ததில்லை. என் அம்மாவைப் போன்ற எத்தனையோ பேரை நான் அனுதினமும் பார்க்கிறேன். இவர்களைப் பார்க்கும் போது அண்மைக் காலமாக திமுக “இந்துக்களின் மனத்தைப் புண்படுத்துகிறது” என பாஜக குற்றம் சாட்டுவதன் பொருள் விளங்குகிறது. மிகவும் அண்மையில் ராமர் கோயில் திறப்பன்று பாஜகவினர் தமிழ்நாட்டுக் கோயில்களில் எல்.இ.டி டிவியை வைத்து அந்நிகழ்வை நேரலையில் காட்ட முயல, அதை அரசு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் புகார் தெரிவித்தார். திட்டமிட்டு எங்களை ஒடுக்குகிறார்கள் என்று அவர் புலம்பினார். ஆனால் இந்த “நாங்களும்”, “இந்துக்களும்” இந்து பக்தர்கள் அல்ல, அவர்கள் கருத்து வடிவிலான, புறவயப்பட்ட இந்துக்கள். அரசியல் செயல்பாட்டு இந்துக்கள். நிர்மலா சீத்தாராமனின் உண்மையான புகார் உணர்வுவயமான இந்துக்களை கடத்திக்கொண்டு போய் பொதுவயப்படுத்த திமுக அனுமதிக்கவில்லை என்பதே, இந்து தெய்வங்களைக் கொல்ல இடமளிக்கவில்லை என்பதே.
எந்த மாநிலங்களில் எல்லாம் இந்துக்கள் தம் வரலாற்றுச் சூழல் காரணமாக புறவயப்பட, பக்தியை மதப்பற்றாக மாற்றி நிறுவனமயப்பட தேவை ஏற்பட்டதோ அந்த மாநிலங்களில் எல்லாம் பாஜகவின் செயல்திட்டம் உடனடியாக பலனளிக்கிறது. அத்தகைய வரலாற்றுப் பின்னணி இல்லாத மாநிலங்களில் பல்லிளிக்கிறது. ஆனால் அதே நேரம் மேற்தட்டு, மத்திய வர்க்கத்தை சேர்ந்த படித்த, பண்பட்ட, அறிவார்ந்த சமூகங்களிடமும் வாழ்க்கை மீதான அவநம்பிக்கை, ஆர்வமின்மை, எதிர்மறை உணர்வுகள் இன்று அதிகரித்து வருகின்றன. வேலை, குடும்பம், சமூகம் எதிலும் பிடிப்பற்ற, எதனாலும் பலனில்லை, தனிமனித இன்ப நாட்டத்தை, சுயபுகழ்ச்சியைத் தவிர எனும் மனநிலை கொண்ட அறிவார்ந்த திரளும் கீழ்த்தட்டை சேர்ந்த திரளின் அதே வெறியை நாம் காண முடியும் என்கிறார் ஆரெண்ட். இது சமூகத்துடன் இணங்கி சென்று குழுவாக வாழ்ந்த மக்கள் இன்று தனித்தனி மனங்களாக பார்க்கப்படுவதால் ஏற்பட்ட தனிமையும், பற்றின்மையும் உண்டாக்கிய சர்வாதிகார மனநிலையாகும் என்கிறார் அவர். அவர் அடையாளம் கண்ட இந்த இருவகையான திரள்களை கடந்த சில பத்தாண்டுகளாக இந்தியாவில் நாம் வெளிப்படையாகவே காண முடிகிறது. வாக்களிப்பு, அரசு உதவிகள், நலத்திட்டங்கள், பொதுவயமாக்கப்பட்ட மத சடங்குகள் வழியாக கீழ்த்தட்டு மக்கள் திரளும், இணையம், போலி செய்திகளில் பரவல், வெறுப்பரசியல், சர்வதேசியத்தில் (சீனா vs இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு தேசங்கள் vs இந்தியா) இந்தியாவின் தனிமை, கற்பனையான ஒடுக்குமுறை வழியாக மேற்தட்டினரும் பாஜகவின் பங்களிப்பாளர்களாக மாறி உள்ளனர். விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகளில் இருந்து தொழிலதிபர்கள், நடிகர்கள் வரை பாசிசத்தை கேள்வியின்றி, எந்த நேரடி பயனும் இன்றி ஏற்றுக்கொண்டு அதன் காலாட்படைகளாக மாறியிருப்பது இவ்வாறு தான்.
நானும் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அந்த நண்பரும் இந்திரா காந்திக்கும் மோடிக்கும் பாசிசத்தை நிறுவுவதில் இருந்த மாறுபாடுகளைப் பற்றி பேசிக்கொண்டோம். இந்திராவின் அரசியலை நுணுக்கமாக ஆராய்ந்து அதில் இருந்து எப்படி சர்வாதிகாரத்தை முன்னெடுக்கலாகாது எனப் பெற்ற பாடங்களைக் கொண்டே பாஜக இந்தளவுக்கு முறியடிக்க முடியாத சக்தியாக மாறியும் அல்லது அவ்வாறு தன்னைக் காட்டிக்கொண்டும் இருக்க முடிகிறது, பாஜக மீது ஆயிரம் விமர்சனங்கள் மக்களுக்கு இருந்தாலும் தொடர்ந்து இருமுறைகள் நாடாளுமன்ற தேர்தலில் வென்றுள்ளது என்று நண்பர் என்னிடம் தெரிவித்தார். இந்திரா காந்தியை மோடியுடன் ஒப்பிட்டால் சர்வாதிகாரம் கால மாற்றத்துக்கு ஏற்ப எப்படித் தன்னை தகவமைத்துள்ளது, இப்போதுள்ள சர்வாதிகாரத்தை விட முந்தையதை விட எவ்வளவு சிக்கலும் ஆபத்தும் நிறைந்தது என்பது விளங்கும்.
1975-77இன் போது இந்திராவால் நெருக்கடி நிலை பிரகடனம் பண்ணப்பட்ட போதும் இங்கு சர்வாதிகாரம் இருந்தது. ஆனால் இந்திராவால் அதைத் தக்க வைக்க முடியவில்லை. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடும் எதிர்ப்பு, கண்டனங்கள். எதிர்க்கட்சி தளராமல் வலுப்பெற்றது. 1977இல் தேர்தல் நடந்த போது மக்கள் வெறியுடன் இந்திராவைத் தோற்கடித்தனர். இந்திரா மீதான வெறுப்பிலேயே ஜனதா கட்சி கூட்டணியை வெற்றிபெற செய்தனர். நெருக்கடி நிலை இந்திராவை விட எதிர்க்கட்சிகளுக்கே 100% வெகுவாக உதவியது. ஆனால் இந்திராவுக்கு இணையான சர்வாதிகாரத்தை மோடி நிறுவியிருக்கிறார். இந்திராவை விட முழுமையான கட்டுப்பாட்டை ஊடகங்கள், நீதித்துறை, ராணுவம் மீது அவர் செலுத்தினார், எதிர்க்கட்சிகளை செயல்பட முடியாதவளவுக்கு அவர்களுடைய நிதி நிலையை பலவீனமாக்கினார். இந்திராவைப் போன்றே பாராளுமன்றத்தில் எந்த விவாதங்களும், எதிர்ப்பும் இல்லாமல் சுலபத்தில் சட்டங்களை நிறைவேற்றினார். இந்திராவை விட பிரம்மாண்டமான தனிநபர் வழிபாட்டு அரசியலை உருவாக்கி இருக்கிறார். “இந்திரா தான் இந்தியா, இந்தியாவே இந்திரா” என்பதை மோடியே பாரதம், பாரதமே மோடி என மாற்றியிருக்கிறார். இந்திரா அச்சத்தினாலும் காவல்துறை, ராணுவத்தாலும் அந்த கோஷத்தை மக்களிடையே நிறுவினால் மோடியோ ஒரு மந்திரவாதியைப் போல மக்களைக் கட்டுப்படுத்தி, அவர்கள் முழுமையான சுதந்திரத்துடன் மோடியையும் இந்துத்துவாவையும் கொண்டாடும்படியாக தேசம் தழுவிய அடிமை மனநிலையை உண்டாக்கி இருக்கிறார். இந்திரா எதிர்கொண்ட எதிர்ப்புக்கு நூற்றில் ஒரு சதவீதத்தைக் கூட மோடி எதிர்கொள்ளவில்லை. இத்தனைக்கும் இரண்டு முறைகள் அவர் தொடர்ந்து ஆண்டு தன் பிரதமர் ஆட்சிக் காலத்தை முடிக்கப் போகிறார். இந்திரா நெருக்கடி நிலையை கட்டாயமாக அறிவித்து கொண்டு வந்தால் மோடியோ அதை அறிவிக்காமலே மக்களை முழுமையான மகிழ்ச்சியுடன் தம் சுதந்திரத்தை ஆளுங்கட்சிக்கு தாரை வார்க்க வைக்கிறார். நெருக்கடியின் நிலையின் போது ஊடகங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு எதிர்க்கட்சியினர் சிறையில் தள்ளப்பட்டு இருந்தாலும் மக்களுக்குள் கடுங்கோபம் இதற்கு எதிராகத் திரண்டு இருந்ததை, இந்திரா பேசும் கூட்டங்களில் கொண்டு வரப்பட்ட பெருங்கூட்டம் கூட எந்த எதிர்வினையும் காட்டாமல் மௌனமாக வீற்றிருப்பர் என குல்தீப் நய்யார் தெரிவிக்கிறார். ஆனால் மோடியின் ஆட்சிக்காலத்திலோ ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் மீது தடையேதும் இல்லை, சிறைத்தண்டனையும் இல்லை, ஆனால் முன்னெப்போதும் இல்லாதபடி பணத்தாலும் செயலின்மையாலும் அவர்கள் முடக்கப்பட்டு விட்டனர். மிகக்கொடுமையான நிர்வாகக் கோளாறுகள், அதனால் விளைந்த ஆயிரக்கணக்கான மரணங்கள், லட்சக்கணக்கானோர் அனுபவித்த துன்பங்கள், கடும் பண வீக்கம், பரவலான வேலை நீக்கம் எவையும் மோடியின் புகழை மாய்க்கவில்லை; மாறாக அவரால் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்களே அவரை தெய்வமாக கொண்டாடுகிறார்கள். இந்திராதன் மக்களை நோக்கி நீங்கள் என அடிமைகள், என்னையோ என் மகனையோ எதிர்த்தோ விமர்சித்து எவரும் வாய் திறக்க கூடாது என்று சொன்னார் எனில் மோடியோ மக்களுடைய வாயைக் கொண்டு தாமாகவே நாங்கள் உங்கள் அடிமை, உங்களையோ உங்கள் அரசையோ எதிர்த்து நாங்கள் பேச மாட்டோம், யாரையும் பேச அனுமதிக்க மாட்டோம் என சொல்ல வைக்கிறார். எந்த கட்டாயமுமின்றி, எந்த பிரதிபலனையும் தராமல். இந்திரா காந்திக்கும் மோடிக்குமான வித்தியாசம் என்ன? இந்திராவின் தோல்வியில் இருந்து இவர்கள் பெற்ற படிப்பினைகள் எவை? இந்திரா தோற்ற இடத்தில் ஒரு சர்வாதிகாரியாக மோடி எப்படி வெல்கிறார்?
இதைப் புரிந்துகொள்ள நாம் மீண்டும் ஹானா ஆரிண்டிடம் செல்ல வேண்டும். “சர்வாதிகாரத்தின் தோற்றுவாயின்” ‘சர்வாதிகாரம்’ எனும் பகுதியில் அவர் ஜெர்மனியிலும் சோவியத் ரஷ்யாவிலும் உருப்பெற்ற சர்வாதிகார அரசுகளை அலசுகிறார். அப்போது அவர் சர்வாதிகாரம் ஒரு குறிப்பிட்ட தலைவரிடமோ கட்சியின் கொள்கையிடமோ தோன்றுவதல்ல, அது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் சமூகப்பொருளாதார காரணிகளின் விளைவு என்று கண்டறிகிறார். அதாவது நவீன உற்பத்தி உறவுகளே, அவற்றால் தோன்றும் அன்றாட உலகமும் அதன் பண்பாடுமே சர்வாதிகாரத்தின் தோற்றுவாய். அவரது காலத்தில் எந்திரமயமாக்கலும், தொழில்வளர்ச்சியின் அடிப்படையிலான நகரமயமாக்கலும் மக்களைத் திரட்டி அடையாளமற்றவர்களாக்கி சர்வாதிகாரத்தின் இரைகளாகத் தயாராக இருந்தனர். மக்கள் முதன்முறையாக ‘தனிமையை’ உணர்ந்தனர். இதை ஆரெண்ட் சமூக அணுவாக்கம் (social atomization) என்கிறார். இந்திய சுதந்திர போராட்டத்தின் போது கிளர்ந்தெழுந்த மக்கள் தமது செயல்களும் தியாகங்களும் தேசத்துக்காக என்றல்ல, உடனடியாக நிகழ வேண்டிய விடுதலைக்காக என நினைத்தவர்கள். அன்றைய போராளிகள் என்றோ தோன்றக் கூடிய லட்சிய தேசத்துக்காக ரத்தம் சிந்தவில்லை. அதனாலே காந்தி அந்நிய உடை உள்ளிட்ட பொருட்களின் பகிஷ்கரிப்பு, உப்பு சத்தியாகிரகம் என குறிப்பிட்ட நேரடி இலக்குகளை வைத்தே போராட்டங்களை ஒருங்கிணைத்தார். எந்த போராட்டத்தையும் அவர் காலவரையற்றதாக மாற்றவில்லை. மேலும் இப்போராளிகள் தமது உடனடி சமூகங்களையும் போராட்டத்தை நோக்கி ஈர்த்தனர். பெண்கள் அதிகளவில் கலந்துகொண்டது இப்படித்தான். அன்று தனிமனிதவாதம் பலவீனமாக இருந்ததாலும், தன்னலமற்ற சமூகமாக்கலில் பரவலாக அவர்கள் ஈடுபட்டதாலும் ஒரு கற்பனையான மற்றமை வெறுப்பு இல்லாதவர்களாக இருந்தனர். தனிமனிதர்களாக அன்றி சமூக மனிதர்களாக அவர்கள் முன்னெடுத்ததாலே அப்போராட்டம் சர்வாதிகாரத்தை நோக்கிப் போய் முடியவில்லை. ஆனால் சர்வாதிகாரத்துக்கு அடிமையாகும் “திரள் மனிதனின் அடிப்படையான குணாதசியம் முரட்டுத்தனமும், பிற்போக்கும் அல்ல, அவனுடைய தனிமையும், இயல்பான சமூக உறவுகளின் இன்மையுமே ஆகும்” என்கிறார் ஆரெண்ட். இவர்களிடம் உள்ளது “வாழ்க்கை மீதான பகைமை” என்கிறார் அவர்.
(தொடரும்)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...