Skip to main content

மதமும் சர்வாதிகாரமும் - அந்தரங்கத்தில் இருந்து பொதுவெளிக்கு (3) - ஆர். அபிலாஷ்





திரள் மனிதனின் கடவுள்:
ஆரெண்ட் தன் ஆய்வில் 19ஆம் நூற்றாண்டில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை ஐரோப்பாவில் தோன்றிய மக்கள் திரள் வர்க்க உணர்வையும், வளர்ச்சியையும் பாதுகாப்பையும் முக்கியமென கருதாததவர்களாக மாறியதைக் குறிப்பிடுகிறார். நீண்ட காலமாக அவர்கள் ஆட்சியாளர்களின் கவனத்தில் இல்லாமல் போனதும், அதனாலே தாம் சமூக அதிகாரம் இழந்து போனதாக ஒரு ஏமாற்றமும் கோபமும் அவர்களுக்குள் திரண்டு வெடித்ததாகவும், அதுவே சர்வாதிகாரத்தின் எழுச்சிக்கு விசையாக அவர்களை மாற்றியது என்கிறார். இந்தியாவில் சாதியமும் நிலவுடைமை சமூகங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வாழ்ந்த காலத்தில் இந்த திரளின் குரலாக சில மேற்தட்டை சேர்ந்த ஆதிக்க சாதி தலைவர்கள் செயல்பட்டனர. உற்பத்தி முறை மாறி தொழில்மயமாக்கல் தீவிரமாக்கப்பட்ட நேருவிய யுகத்தில் தான் இங்கு மாற்றங்கள் தென்படத் துவங்குகின்றன. நேருவின் மறைவுக்குப் பின்பு இந்திரா காந்தியை சிறிது வருத்தத்துடன் மூத்த தலைவர்கள் ஏற்றுக்கொண்டு ஆட்சியை நடத்திய காலத்தில் இங்கு கடும் வறுமையும் பஞ்சங்களும் நிலவின. அதற்கு மழை பொய்த்தது மட்டும் காரணம் அல்ல, புதிய பொருளாதாரத்துக்கு இந்தியா தயாராகி வரும் போது ஏற்பட்ட சில இடர்களுமே காரணம். வறுமையை ஒழிப்போம் எனும் முழக்கத்துடன் ஆட்சியைப் பிடித்து பாகிஸ்தான் போருடன் மகத்தான மக்கள் தலைவராக உயர்ந்தார் இந்திரா. இந்த காலகட்டத்தை நாம் பார்த்தோமானால் ஆரெண்ட் குறிப்பிடும் அடையாளம் இழந்த, சுய அக்கறையில் ஆர்வம் இழந்து வரும் எரிச்சலுற்ற ஒரு மக்கள் திரளை கவனிக்க முடியும். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுடைய பிரச்சினைகளைப் பேச முயன்றதே இந்திராவின் எழுச்சிக்கு வித்திட்டது. இந்திராவின் முயற்சிகளுக்குப் பின்னாலும் 70களின் துவக்கத்தில் பொருளாதார நிலை மேம்படவில்லை. முகமற்ற திரள் இப்போது மீண்டும் கவலையுற்றது, அது வட இந்தியா முழுக்க தொழிலாளர் போராட்டம், வேலை நிறுத்தம் என எழுச்சியாக மாற இந்திரா பதறினார். ஜனதா கட்சியும் கூட்டணிக் கட்சிகளும் இந்த எழுச்சிக்கு தலைமை தாங்க அவர் பலவீனமானார். அதை மறைக்கும் நோக்கிலே நெருக்கடியை நிலையை அறிவித்தார். ஆனால் தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் வந்த போது வட இந்திய மாநிலங்கள் - இந்த திரள் வலுவாக இருக்கும் பகுதிகள் - இந்திராவையும் சஞ்சய்யையும் முறியடித்து, தாம் எந்த விதத்திலும் தலைமையாக ஏற்காத ஜனதா கட்சியையும் அதன் தலைவர்களையும் வேறு வழியின்றி ஆட்சிக்கு கொண்டு வந்தது. அத்தேர்தல் ஒரு கோப வெளிப்பாடு மட்டுமே, ஆட்சியாளர்களின் தேர்வு அல்ல. இந்த கோபத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதே தம் தவறு என இந்திரா புரிந்துகொண்டு விரைவில் மீண்டு வந்தார், வென்றார். அதன் பிறகு ஒவ்வொரு பத்து, இருபதாண்டுகளுக்கு ஒருமுறையும் இந்தியாவில் இந்த விட்டேந்தியான அவ்வப்போது வெகுண்டெழும் திரளை வலதுசாரிகள் மதவாதத்தின் பெயரால் ஒன்றாக்கி அரசியல்படுத்தி பொதுவயப்படுத்தி காங்கிரஸை வீழ்த்தியதை நாம் வரலாற்றில் காண்கிறோம். திரும்ப ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தம் தோல்விக்கு தொழில் வளர்ச்சியின்மையால் ஏற்பட்ட மந்த நிலையே காரணம் எனக் கண்டு உலகமயமாக்கல், நகரமயமாக்கல் முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்தியது. ஆனால் சுயமேம்பாட்டில் ஆர்வம் இழந்த திரள் மனிதன் பிரச்சினையை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதனாலே ஆஷிஸ் நந்தி சொல்வதைப் போல இது ஒவ்வொரு முறை இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வந்து நகரங்களில் வணிகமும் பணப்புழக்கமும் அதிகமாகும் போதும் பாஜகவும் வலதுசாரி கூட்டணியும் இன்னும் அதிகமாக வலுப்பெற்று அதிகாரத்தை நெருங்கின. 2014இல் அவர்கள் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதும் ஒரு பெரும் பொருளாதார எழுச்சிக்குப் பின்பான மந்த நிலையின் போதுதான். அப்போதும் அரசியல் உணர்வு பெற்ற, சமூக வளர்ச்சியால் அதிகாரம் பெற முடியும் என நம்பின வர்க்கங்கள் அல்ல எந்த அரசியல் உணர்வுமற்ற ஒரு திரளே தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும்படி ஒன்றாக பாஜகவுக்கு வாக்களித்தது. நாடு இரண்டு பகுதிகளாக உடைந்தது - அரசியல்பட்ட, சமூக வளர்ச்சியில் பங்குபெற்ற ஒரு கூட்டம், இதில் எந்த விதத்திலும் உடன்படாத இன்னொரு கூட்டம் எதிர்ப்பக்கம். இந்த விட்டேத்தியான அரசியலற்ற திரள் ஏழைகளோ வீடற்றவர்களோ அகதிகளோ அல்ல. இவர்கள் பாதிக்கப்பட்டவர்களும் அல்ல. இவர்களில் கணிசமானோர் மத்திய, மேல்மத்திய வர்க்கமாகவும் இருந்தனர். ஆனால் அவர்கள் தம் விரோதிகளாக, முன்னேற்றத்தில் இருந்து, சுய-அறிதலில் இருந்து தம்மை விலக்கி வைப்போராக கருதியது ஆங்கிலம் பேசும் படித்த வர்க்கத்தையே. ஒரு கட்டத்தில் இந்து விரோதிகள், தேச விரோதிகள், “அர்பன் நக்ஸல்கள்”, சிறுபான்மை ஆதரவாளர்கள், துரோகிகள் என பலவிதங்களில் இந்த மற்றமையை அவர்கள் அடையாளப்படுத்தினர். சொல்லப் போனால் சிறுபான்மையினர் அல்ல, இந்த “உள்-மற்றமையே” (‘துரோகிகள்’) பாஜகவின் வெறுப்பரசியலின் இலக்காக இருந்து வருகிறார்கள். இந்த திரளின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்றே காங்கிரஸ் குடியுரிமை திருத்தச் சட்டம் துவங்கி பல்வேறு மக்கள் விரோத முடிவுகளுக்கு எதிரான போராட்டங்களில் நேரடியாகப் பங்கெடுக்கத் தயங்கியது. ராமர் கோயில் விவகாரத்தில் கூட காங்கிரஸால் அக்கோயிலின் வரலாற்றுத் தவறுகளை, நோக்கத்தை காட்டமாக விமர்சிக்கவோ எதிர்க்கவோ முடியவில்லை. திரும்பத் திரும்ப இந்து விரோதிகள் எனும் முத்திரை காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் மீது விழும் போது தாம் நம்பிக்கையான இந்துக்களே எனக் காட்டினாலும் திரளின் சந்தேகம் தீர்வதில்லை. அதே நேரம் காங்கிரஸ் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆபத்து வரும் போது ஆதரவு தெரிவிக்கத் தயங்குவதில்லை. என்ன பிரச்சினையெனில் அதற்கான வாய்ப்புகளை கடந்த பத்தாண்டுகளில் பாஜக அதிகமாக அமைத்துத் தரவில்லை. சிறுபான்மையினரும் முக்கியமே, ஆனால் அவர்களுக்கு சிறப்புரிமை கொடுப்பதை ஏற்க மாட்டோம் என்கிறார்கள் பாஜகவினர். யார் எப்போது சிறப்புரிமை, அந்தஸ்து கொடுத்தார்கள் என்றால் அதற்கான நடைமுறை ஆதாரங்களைக் காண்பது அரிது. சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை நடத்துவது சுதந்திரத்துக்கு முன்பே துவங்கி விட்டது. மத சிறுபான்மையினரை விட அதிகமாக இணையாகவே இங்கு சமூக ரீதியான கல்வி நிலையங்களும் உள்ளன. இந்து பெரும்பான்மை ஆட்சி நடப்பதான தோற்றம் வரக்கூடாது எனும் நோக்கத்தில் நேருவின் அரசு சிறுபான்மையினரின் இந்த வேண்டுகோளை அனுமதித்திருக்கலாம் என்றாலும் அது காங்கிரஸின் செயல்திட்டம் கூட அல்ல. இருந்திருந்தால் வேறு தொழிற்துறைகளில் ஒதுக்கீடு கொண்டு வந்திருப்பார்கள். இதில் சட்டரீதியாக மாற்றம் கொண்டு வரப் போவதாக பாஜக சொல்லவில்லை. ஆனால் சிறுபான்மையினருக்கு தமது மதத்தை பிரச்சாரம் செய்ய, அதன் அடிப்படையில் கல்வித் தொழிலில் ஈடுபட சலுகை கொடுத்திருப்பதாக ஒரு கோபம் இந்த திரளிடம் உள்ளது. யோசித்துப் பார்த்தால், இதில் எந்த லாஜிக்கும் இல்லை. இந்த கல்வி நிலையங்களால் இந்து திரளுக்கு எந்த நடைமுறை நஷ்டமும் இல்லை. இந்துக்கள் தம் மதத்தை பறைசாற்றுவதில் பொதுவெளியில் தடையும் இல்லை. இவ்வளவு கோயில்கள், விழாக்கள், சடங்குகள், அரசு அலுவலகங்களில், அரசியல் களத்தில் மதச்சின்னங்களை பட்டவர்த்தமாக அணிவது, வழிபடுவது இந்துக்களைப் போல உலகில் வேறு எந்த மதத்தவருக்கும் இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனாலும் தமக்கு இல்லாத ஏதோ ஒன்று மற்றமைக்கு உள்ளது, தமக்கு தீர்க்க முடியாத ஒரு போதாமை உள்ளது எனும் சினம் இத்திரளிடம் திரண்டு வருகிறது. அதற்கு காங்கிரஸை இலக்காக முடிந்ததே, அதற்கு மதச்சாயல் கொண்ட ஒரு கதையாடலை உருவாக்க முடிந்ததே பாஜகவின் முக்கிய வெற்றிகளில் ஒன்று.
(தொடரும்)
(உயிர்மையில் வெளியான கட்டுரையின் மூன்றாம் பாகம்)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...