கேள்வி: ஹாய் அபிலாஷ், கதாநாயகரின் வீழ்ச்சி (tragic fall) எனப்படுவது என்ன? அதற்கு உதாரணங்கள் தர முடியுமா?
பதில்: முதலில் இது ஒரு நல்ல கேள்வி. என் வாழ்த்துகள். மகாபாரதக் கதை முழுக்கவே மகத்தான வீழ்ச்சிகள் பற்றின கதைகள் தாம் உள்ளன. பாரதக் கதையின் துவக்கம் கௌரவர்களின் வீழ்ச்சி எனில் முடிவு பாண்டவர்களின் வீழ்ச்சி. வீழ்ச்சியைப் பற்றி மட்டும் பேசினால் அது துன்பியல் கதை. கடைசி நொடியில் சுதாரித்து நாயகன் தப்பித்து மீள்வதையும் பாடம் கற்றுக்கொள்வதையும் சொன்னால் அது இன்பியல். பாட்டி வடை சுட்ட கதையில் காகம் திருடுவது வரை துன்பியல். சூழ்ச்சிக்காரனை எப்படி ஏமாற்றி பாடம் கற்பிப்பது என நரி கற்றுக் கொடுக்கும் போது அது இன்பியல் ஆகிறது. நாம் படித்ததில் மறக்க விரும்பாதது துன்பியல், அதிகம் படிக்க விரும்புவது இன்பியல்.
துன்பியல் நாடகத்தின் அடிப்படையே ஒரு மகத்தான மனிதனின் வீழ்ச்சி என்பது அவருடைய நம்பிக்கை. ஏன் மகத்தானவனின் வீழ்ச்சி என்றால் ‘சல்லிப்பயல்களின்’ வீழ்ச்சியைப் பற்றி யாருக்கும் பெரிய அக்கறை இல்லை என்று அரிஸ்டாட்டில் கூறுகிறார். இது ஓரளவுக்கு நிஜம் தான். வீழ்ச்சி என்றாலே உயரத்தில் இருந்து கீழே விழுவது தானே. நான் என் படுக்கையில் புரண்டு படுத்தால் அது வீழ்ச்சி ஆகாது, ஆனால் புரளும் போது தரையில் பொத்தென விழுந்தால் அது வீழ்ச்சி. ஆனால் அது போதாது. வீழ்ச்சியின் தீவிரத்தன்மையே அதை பொருட்படுத்தத் தக்கதாக்குகிறது. நான் படுக்கையில் இருந்து விழாமல் பால்கனியில் நிற்கும் போது ஏதோ ஒரு ஆர்வத்தில் கீழே எட்டிப்பார்க்கும் போது கால்வழுக்கியோ வேறெப்படியோ தடுமாறி கீழே விழுந்து விடுகிறேன். அதுவும் எட்டாவது மாடியில் இருந்து. இப்போது இது செய்தியாகிறது. போலீஸ் விசாரிக்கிறது. அது கொலையா, தற்கொலையா அல்லது விபத்தா என நீங்கள் யோசிக்கிறீர்கள், அலசுகிறீர்கள், அனுமானிக்கிறீர்கள். இதுவே வாழ்வில் நேர்கிற பிரச்சனைகள், அவற்றின் விளைவான அழிவுக்கும் பொருந்துகிறது. பேருந்தோ ஆட்டோவோ கிடைக்காமல் அலுவலகத்துக்கு தாமதமாகப் போவது ஒரு எரிச்சலான அனுபவம் தான், ஆனால் அது ஒரு கதைக்குரிய வீழ்ச்சி அல்ல. அந்த தாமதத்தால் வேலை இழப்பு, அதனால் குடும்பத்தில் பல நெருக்கடிகள், தாமதத்தால் ஒரு உறவு முறிவது, உங்களைப் பற்றி நிர்வாகத்தில் மோசமான அபிப்ராயம் ஏற்படுவது, அதனால் ஒரு இழப்பு ஏற்படுவது அல்லது நட்பொன்று முறிந்து அதன் விளைவாக உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடுகிற பிரச்சனைகள் ஏற்பட்டால அது வீழ்ச்சியாகிறது.
கதாநாயகர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள “நாவல் வகுப்பில்” இணையுங்கள். வகுப்பு இன்னும் மூன்று நாட்களில் ஆரம்பிக்கவுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு 9790929153 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அல்லது இன்பாக்ஸில் கேளுங்கள்.