பொதுவாக தமிழ் நவீன கவிஞர்களுக்கு என்று ஒரு தனித்த உலகம் இருக்கும். அந்த உலகுக்கு என்றே குறிப்பான உருவகங்கள், நிலவெளி, பாத்திரங்கள், கவிதைசொல்லி, சொல்லாட்சி என இருக்கும். தேவதேவனுக்கும் இது உண்டு. ஜெயமோகன் இதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் - பறவை, மரம், வீடு, வானம் ஆகிய உருவகங்களை அவர் ஒரு படிநிலையாக, தொடர் உருவகங்களாகக் கண்டு விளக்கியது தமிழ் நவீன கவிதை விமர்சனத்தில் தேவதேவனைப் புரிந்துகொள்ள மிகவும் உதவியது. ஆனால் தேவதேவனுக்கு இந்த உருவகங்கள் எங்கிருந்து வந்தன, அவர் எவருடைய தொடர்ச்சி என ஜெயமோகன் பேசியதில்லை. தேவதேவனின் தனித்துவமான, அதே சமயம் மரபார்ந்த இருத்தலை அறிந்துகொள்ள அதுவும் அவசியம் தான்.
முதலில் தேவதேவனின் தனித்துவம்.
தேவதேவனிடம் சில அ-நவீனத்துவ லட்சணங்கள் உண்டு. அவர் கட்டுறுதியான சுருக்கமான கவிதைகளை அதிகமாக எழுதுவதில்லை. ஒரு பெரிய அகத்தோற்றத்தை கவிதை வழியாக கைப்பிடிக்குள் வரும்படி அவர் எடுத்து தருவதில்லை. அவர் அறைக்குள் இருந்தபடி ஜன்னல் வழியாக வெளியே நோக்கிய தோரணையில் எழுதுவதில்லை. நான் இதைப் பற்றி தனியாக ஆய்வொன்றை - ஐம்பதுகள் துவங்கி தொண்ணூறுகள் வரையிலான நவீனத்துவ கவிதைகள் மீது - செய்த போது கணிசமான தமிழ்க் கவிஞர்களின் உலகம் அவர்களுடைய வீடு, அறை, ஜன்னல், கதவு ஆகிய உருவகங்களால் வரையறுக்கப்பட்டதை உணர்ந்தேன். இந்த விசயங்கள் நவீன கவிஞர்களின் தன்னிலைக்கான /ஆன்மாவுக்கான படிப்படியான உருவகங்கள். எப்படி ஜெயமோகனின் வாசிப்பின் படி மரத்தில் இருந்து வானுக்குத் தாவ முனையும் தன்னிலைக்கான தொடர்புப் புள்ளியாக, வாகனமாக தேவதேவனின் பறவை இருக்கிறதோ அவ்வாறே கணிசமான நவீனத்துவ கவிஞர்களுக்கு வீடு, அறை, ஜன்னல் இருக்கின்றன. தன்னையும், புலனுலகையும் கடந்து வானம் எனும் அப்பாலை நிலைக்குத் தாவிட முயலும் ஒரு தன்னிலையின் பயணத்தை மரத்தில் அமர்ந்து கூடு கட்டி அங்கிருந்து வானுக்குப் பறக்கும், திரும்ப கிளைக்கு வரும் பறவையின் செயல்களாக்கி தேவதேவன் பரிசீலிக்கிறார் எனில் இந்த நவீனத்துவ கவிஞர்களோ தெரு, அலுவலகம், கடற்கரை என வெளியே புறப்பட்டாலும் தம் வீட்டுக்கு, அறைக்கே திரும்பி விடுகிறார்கள், அவர்கள் அகாயத்தின் பரிசுத்தத்தைக் கண்டு வியந்தாலும் திரும்ப தம் அறையின் மங்கலான ஒளியிலே அடைக்கலம் கொள்கிறார்கள், இந்த வெளி-உள் பயணத்தின் வழியே தாம் அவர்கள் இருத்தலின் அர்த்தத்தை அடைகிறார்கள். இப்பயணம் தேவதேவனின் கவிதைகளிலோ வெளியே உள்ள பரந்துபட்ட நிலவெளி மற்றும் இயற்கையில் இருந்து ஆகாயத்திற்கும், அங்கிருந்து அதற்கு அப்பாலுள்ள மீபொருண்மை உலகுக்கும் செல்வதாகிறது; அதுவே அவரது இருத்தலின் அர்த்தமாகிறது. இந்த முற்றிலும் புதிய பயணமே அவரை நவீனத்துவத்தில் இருந்து வெளியே தள்ளிவிடுகிறது.
நவீனத்துவவாதிகளுக்கு ஆன்மா குறித்து சந்தேகங்கள் உண்டு. குறிப்பாக தமிழ் நவீனத்துவ படைப்பாளிகளுக்கு. ஆனால் அவர்கள் உலக நவீனத்துவர்களைப் போல ஆன்மாவை முழுக்க மறுத்துவிட்டு உடலாலும் உளவியலாலும் அமைந்த தன்னிலையை, அதன் சிதைவுகளை கவனப்படுத்த முயலவில்லை. அவர்கள் தாகூரைப் போல, பாரதியாரைப் போல ஆன்மீகத்தை முழுமையாக ஏற்கவும் இல்லை. நடுவில் மாட்டிக்கொண்டார்கள். அதனாலே வெளி-உள் எனும் பயணத் தோற்றம் அவர்களுக்கு அவசியப்பட்டது. அதாவது அவர்களுடைய ஆன்மாவுக்கான வெளியானது புலன் உலகினுள்ளே அடங்கி விடுகிறது, அதை அவர்கள் அவ்வப்போது வெளியே செல்கையில் ஒரு கொத்து கறிவேப்பிலை போல அள்ளி எடுத்து தம் பைக்குள் இட்டு வீட்டுக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள். அதைப் பற்றியே தொடர்ந்து கவிதையில் விசாரிக்கிறார்கள். தமிழ் நவீனத்துவத்தில் மீபொருண்மைவாதம் (metaphysicality) உண்டு, ஆனால் அது தாளிப்புக்கான ஒரு ஸ்பூன் கடுகைப் போன்றது. (என் நினைவுத்திறன் சரியென்றால் தேவதேவன் [பல நவீனத்துவர்களுக்கும் பிரியமான] கடல் உருவகத்தையும் அதிகமாக பயன்படுத்துவதில்லை. கடல் தான் பூமியைச் சுற்றுவதுடன் நிறுத்திவிடுகிறதே, அதைத் தாண்டிப் போக நம்மை அனுமதிப்பதில்லையே!) இந்த ஐயங்கள் தேவதேவனிடம் இல்லை - அவர் அதனாலே சுலபமாக ஒரு கட்டற்ற தன்னிலை மீறலை தன் கவிதைகளில் அடைகிறார். கட்டற்றது என்பதாலே அவரது அனுபவங்கள் பத்திருபது வரிகளில் அடங்கத் தேவையிருக்கவில்லை. முந்தைய கவிஞர்களின் அடர்த்தியின் இடத்தில் அவர் நீர்மையை, நெகிழ்வைக் கொண்டு வந்தார். சிறிய, சற்றே பெரிய கவிதைகளின் இடத்தில் அவர் பெருங்கவிதைகளை, நெடுங்கவிதைகளை எழுதினார். அவருடைய பிரபஞ்சம் மிகப்பெரியது எனும் உணர்வைத் தந்தார். (தேவதேவனுக்கு அடுத்து பெரும் கவிதைகளை இங்கு எழுதுபவர் மனுஷ்ய புத்திரன். தேவதேவனுக்கு பூமியில் இருந்து ஆகாயத்துக்கு அப்பால் எனில் மனுஷ்ய புத்திரனுக்கு தன்னில் இருந்து சமூகம், காலம் வழி தனக்கு அப்பால். இதைப் பேச இருவருக்குமே அந்த பெரிய விரிவு தேவைப்படுகிறது; இருவருமே தமிழில் நிறைய கவிதைகளை எழுதுபவர்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களில் தொகுப்பு வெளியிடுபவர்கள்.)
எல்லையற்ற இயற்கையையும், எல்லையற்ற ஆன்மாவின் பிரம்மாண்டத்தையும், தன்னைக் கடந்து செல்ல முடியாத தவிப்பையும் விம்மலையும், இயற்கையுடன் முயங்கி தன்னை மறக்கும் போது இயற்கை என்பது தன்னால் அடைய இயலாத பிரம்மாண்டம் எனும் பிரமிப்பில் வரும் உணர்ச்சி மேலிடல், மயக்கம், நெகிழ்வை தேவதேவன் பேசும் போது அதனாலே நம் நெஞ்சம் ஒரு கணம் உடைகிறது. ஆனால் இது உணர்ச்சிகளாலான நெகிழ்வோ, தனிமனித போதாமையினால் ஏற்படும் அணை உடைத்த வெள்ளமோ அல்ல. தமிழில் இந்த தனிமனித ஆன்மாவின் போதாமையை அடிப்படையாக சித்தரித்தவர்களில் தன்னிரக்கத்தைப் பேசாதவர் தேவதேவன் மட்டுமே எனத் தோன்றுகிறது. ஏனெனில் தேவதேவனில் தன்னிலை என்பது ஒரு உளவியல் கட்டமைப்பு அல்ல, அது ஒரு அடையாளம் அல்ல, அது தன்னை மீறிச் செல்கையில் ஒருவர் ஊடுருவிப் போகும் இருத்தல் மட்டுமே. இந்த உணர்வானது தமிழில் மிக மிக அரிதாக ஒரு கவிதை வாசகனுக்கு கிடைப்பது. அதுவே தேவதேவனின் மிகப்பெரிய சாதனை.
தேவதேவனின் இந்த கண்டடைதல் நமது பக்தி மரபில் இருந்து வருவது வெளிப்படையானது. குறிப்பாக வைணவ மரபு. அக்கவிதைகளிலும் நாம் காண்பது இறைநிலையை அடைவதல்ல, இறைநிலையை தன் ஆன்மாவின் போதாமையை, அதை மீறிச் சென்று வெல்லும் ஆவேசத்தையே. இதை ஒன்று இறைவனை ஒரு பெயருக்குள், அடையாளத்துக்குள் வைத்து உரையாடி, மன்றாடி, கேவி காதலனாக சித்தரித்து அதன் வழியாக தானற்று மாறி நம் ஆண் / பெண் கவிஞர்கள் சித்தரித்தார்கள். இதில் கவனிக்க வேண்டியது இறைநிலை அடைந்து இறையாகவே ஆவதை யாரும் பாடுவதில்லை, மாறாக அடைதலை விட அடையும் முன்பான செயல்பாடுகள், ஒரு பூச்சி சுடரில் கருகுவதை விட சுடரின் நுனியைப் பற்றிப் பிடித்து அது ஏறுகிற அனுபவத்தையே பேசினார்கள் என்பது. இந்த மனநிலையை நாம் வைதீக மரபின் உபநிடங்களிலும் காண்கிறோம் தாம். அத்வைதத்தின் சாரம் இது. நாம் இதையே தேவதேவனிடம் காண்கிறோம், அதனாலே தேவதேவன் நம்மை பரவசம் கொள்ள வைக்கிறார்.
ஒரு பக்தராக தேவதேவன் பேசுவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். கோபிகையர், கரையேறுதல் போன்ற குறிப்பான்களை நாம் அவரிடம் காண்பதுண்டு என்றாலும் தேவதேவன் ஒரு மதப் பண்பாட்டுக்குள் தன் கவிப்பரப்பை இணைக்க விரும்புவதில்லை. “தான் என்றும் ஒசத்தி என்றும் சறுக்கி விழுந்து விட்ட” மானுடரின் மத அமைப்புடன் தன்னைப் பொருத்தவும் அவரது மனம் இடம்கொடுக்கவில்லை; இன்னொரு பக்கம் துல்லிய எடைத்தராசாக மாறி இப்பிரபஞ்சத்தை அளவிடும் மார்க்ஸியம் போன்ற பொருளியல், இவ்வுலக தத்துவத்தையும் அவரால் ஏற்க முடியவில்லை. அதற்காகவே அவர் கற்பனாவாத மரபுக்குப் போகிறார் என நினைக்கிறேன். அவரது கவிதைகளின் பிரதான உருவகங்களான பறவை, வானம் ஆகியவற்றை நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில கற்பனாவாத கவிதைகளில் (ஷெல்லி, கீட்ஸ்) அடையாளம் காணலாம். குறிப்பாக ஷெல்லியின் கவிதைகளுக்கும் தேவதேவனுக்கும் விரல் தொடும் தொலைவு உள்ளது. அதே போலத்தான் எமர்சனின் கட்டுரைகள். தேவதேவன் இந்த மேற்கு-கிழக்கு இணைப்பின் வழியே பக்திக் கவிதை மரபின் மதசார்பில் இருந்து, கூட்டில் இருந்து பறந்து தனதான ஆகாயத்தைத் தொடுகிறார். இதைப் பற்றி கவிதை விமர்சனத்தில் நாம் போதுமானபடிக்கு பேசவில்லை என நினைக்கிறேன்.
“நடைமண்டலம்” என தலைப்பிடப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் தேவதேவன் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நவீனத்துவ உலகுக்கு தன்னுடைய மெய்யியல் நோக்குடன் பயணிக்கிறார். நகரத்து வாழ்வு, நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இளம்பெண்கள், “அறைக்குள் அடைந்து கிடக்கும் அவனை சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கும் சூரியன்”, வீட்டையும் சாலையையும் பெருக்குவோர், போக்குவரத்து சிக்னல் விளக்கு, “கைப்பேச்சியை செவிவைத்து மலர்ந்த முகத்துடன்” கடவுளிடம் பேசுவோர், தொலைந்து போன காதலைத் தேடியோ தேடாமலோ பூங்கா இருக்கையில் அமர்ந்திருக்கும் இணையர்கள், அவர்கள் முன் பார்வையினின்று நீண்டு செல்லும் பட்டாம்பூச்சிகளின் பாதை, நகரத்துக் குழந்தைகள், பெற்றோர்கள், நாய்களுடன் காலைநடை செல்வோர், சமையலறையில் கருங்கூந்தல் சூழ்ந்த முகத்திற்கு இணையான நிலவை இயற்றும் ஒரு பெண் என நிறைய சின்னக் கவிதைகளில் மனிதனின் அகச்சுதந்திரத்தை திறந்து பார்க்க முயன்றிருகிறார். அதாவது தன்னிலை, அறை, ஜன்னல், தெரு என இடுங்கி சுருங்கிப் போயிருந்த நவீனத்துவ கவிதைக்கு தேவதேவன் தனது இயற்கை உருவகங்களைக் கொண்டு வந்து ஒரு கடப்புநிலைவாத அற்புதத்தை நிகழ்த்துகிறார். நவீனத்துவத்துக்குப் பின் தோன்றிய கவிதை என ஜெயமோகன் வர்ணித்த தன் கவியுலகை ஒரு யூடர்ன் எடுத்து நவீனத்துவ காலத்துக்கு கொண்டு சென்று அதே சமயம் சமகாலத்தில் நின்றபடியே, நகரம் எனும் புலனுலகின் நுண்ணுணர்வை மாற்றியமைக்க முயன்றிருக்கிறார். தேவதேவன் அண்மைக் காலமாக பெங்களூர் நகரத்தில் வாழ்ந்து வருவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இக்கவிதைகளில் நாம் மீள மீள பார்க்கும் உருவகங்கள் பயணம், பாதை, கால்கள் தாம். பறவைகள் குறைவாகவே வருகின்றன. நெடுமரங்கள் நிற்கும் வழிகள் வருகின்றன. மரங்களை பூமிக்கு வந்த தேவவிரதர்களாக, வழிப்போக்கர்களாக ஒரு கவிதையில் சித்தரிக்கிறார். கூடவே நாம் இந்த சாலைமரங்களாக சாதாரணமானவர்களாகவும் வழிப்போக்கர்களாக தேவர்களாக அசாதாராணமானவர்களாகவும் வாழ வேண்டியவர்கள் என்கிறார். அவரது முந்தைய மரம், பறவை, வீடு, ஆகாயம், அதற்கும் அப்பால் எனும் மெய்யியல் தேடலை இவ்வாறு மரத்தையே பூமிக்கு வந்த பறவையாக மாற்றி முன்னெடுக்கிறார். இன்னொரு அழகிய கவிதையில் “முழுமனிதனின் இதயம் போல் அமைதியாக, அசையாமல் (…) உத்தரத்திலிருந்தோ மரக்கிளையிலிருந்தோ” தொங்கவிடப்பட்டு “ஒரு உயிர்மூச்சு மட்டுமேயாய் உயிரையும் விட்டுவிடத் தயாராய் அசைந்து” கொண்டிருக்கும் ஒரு ஊஞ்சலையும் தன் பறவை உருவகத்துக்கு ஈடான ஒன்றாக பயன்படுத்துகிறார்.
என்னை வெகுவாக கவர்ந்தது அவர் அழகிய ஸ்டைலான நாகரிக இளம்பெண்களை, அவர்களுடைய நடைமுறை நாட்டங்களாலும் அற்பத்தனமான அலைபாய்ச்சல்களாலும் ஆன உலகை முற்றிலும் மற்றொன்றாக, ஆண்டாள், காரைக்கால் அம்மையாரின் அகவுலகாக, மாற்றும் மாயம் தான். எப்போதும் ஒரே ஆடையை அணிய விரும்பாமல் ஆடைகளாக வாங்கிக் குவிக்கும் பெண்ணொருத்தியை கலாய்க்கும் அவளுடைய கணவனோ காதலனோ. ஒருநாள் “அவள் அவனைத் தோற்கடித்தாள் / வீதியில் நடந்துவரும் / நூறு பெண்களும் அவளேயாகி / அவள் அத்தனை ஆடைகளையும் அணிந்துகொண்டு வருவதைக் கண்டாள்” என முடியும் கவிதையோ
“எத்துணை கவித்துவமிக்க
அழகழகான ஆடைகள்!
கட்டி அணைத்த அணைப்புவிடா
எத்துணை பாசம் மிக்க
குளிராடைகள்!
அத்தனையையும் அவிழ்த்துப்போட்டு விட்டு
அப்படி என்ன காமம் வேண்டிக் கிடக்கிறது” எனும் கவிதையையோ மகத்தான படைப்புகள் என்பேன். குறிப்பாக, மரத்திற்கும், அதிலுள்ள கூட்டுக்கும், பறவைக்கும் வானுக்குமான கண்ணித் தொடர், பிணைப்புறவு, விட்டு வெளியேறி மற்றொன்றாகும் தவிப்பை ஆடைகளுக்கும் உடலுக்கும், உடலுக்கும் மற்றொரு உடலுக்குமான பாச அணைப்பு, காம அணைப்பு என தேவதேவன் நீட்டிப்பதைப் பார்க்கும் போது, இதை அவரது முந்தைய குளித்துக் கரையேறாத கோபிகையரின் உருவகத்துடன் ஒப்பிடுகையில், ஆடை, நிர்வாணம் ஆகிய உருவகங்களுக்கு வைணவத்தில் உள்ள முக்கியத்துவத்தை மனதில் வைத்து இதை வாசிக்கும் போது தேவதேவனின் மேதைமை விளங்கும்.
தேவதேவன் எனும் மானுட தேவனுக்கும் இக்கவிதைகளுள் நுழையப் போகும் உங்களுக்கும் என் வாழ்த்துகள்!
உசாத்துணை:
ஜெயமோகன். “நவீனத்துவத்திற்குப் பின் கவிதை: தேவதேவனை முன்வைத்து”. தமிழினி பதிப்பகம், 2008. அச்சுநூல்.
Defoe, Drea. An Analysis of the Birds in Poetry by Percy B. Shelley and John Keats. Hubpages. Online.
Doggett, Frank. “Romanticism’s Singing Bird”. Studies in English Literature, 1500-1900. Vol. 14, No. 4, Nineteenth Century (Autumn, 1974). Pp. 547-561.