பாரிஸ் ரெவ்யூ பேட்டி ஒன்றில் வில்லியம் ஸ்டைரனிடம் அவர் படித்த பல்கலையில் ஒரு மாணவராக பங்கெடுத்த புனைவு எழுதும் கலை வகுப்பைப் பற்றிக் கேட்கிறார்கள். அந்த வகுப்பில் தான் தனக்கு நாவல் எழுதும் ஆர்வம் மேலெடுத்து தீவிரமாக எழுத வந்ததாக குறிப்பிடுகிறார். கூடவே இன்னொரு விசயத்தையும் சொல்கிறார் - அமெரிக்காவில் புனைவுக் கலையை கற்பிக்கும் வகுப்புகள் அதிகம். கூடவே வேறு நுண்கலைகளையும் இலக்கிய நூல் வாசிப்பு, கொஞ்சம் கோட்பாடு என கலந்து ஒரு பட்டயப் படிப்பாகவே நடக்கும். ஆண்டு தோறும் பல்லாயிரம் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுவார்கள். இவர்களில் எத்தனை பேர் எழுத்தாளர்களாகி நிலைப்பெறுவார்கள்? மிகச்சிலர் தாம். மிச்ச பேர்? அவர்கள் அத்திறனைக் கொண்டு வேறு துறைகளில் நுழையலாம். ஆனால் முக்கியமான கேள்வி வேறு: எழுதுவதற்கான திறமை தான் ஒருவருடைய வெற்றியைத் தீர்மானிக்கிறதா அல்லது பயிற்சியும் அறிவுமா? ஸ்டைரன் இயல்பான திறமையே அடிப்படையான காரணி என்கிறார். ஒரு புனைவுக் கலை ஆசிரியரின் உண்மையான பணி உமியை அரிசியில் இருந்து பிரிப்பது, தவறான ஆட்களை ஊக்கப்படுத்தி நேரத்தை வீணடிக்காமல் இருப்பது தான் என்றும் சொல்கிறார். இதைக் கேட்க சரிதான் எனத் தோன்றினாலும் இது மிகவும் சிக்கலானது. திறமையை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது.
நான் ஆன்லைனில் நாவல் வகுப்பை ஆரம்பிக்கும் முன்பு கல்லூரியில் இளம் மாணவர்களுக்கு நாவல் வகுப்பெடுத்தேன். அப்போது சிலருடைய எழுத்தைப் பார்த்ததும் அவர்களுக்கு உள்ள அபாரமான திறமையை அடையாளம் கண்டுகொள்வேன். அவர்களை சற்று கூடுதலாக ஊக்கப்படுத்தி எழுத தூண்டுவேன். பின்னரே நான் புரிந்துகொண்டேன் திறமையென்பது வக்கணையான நடையோ பாத்திர அமைப்பிலும் காட்சி ஒழுங்கிலும் உள்ள பிடிப்போ அல்ல என்று. சிலருக்கு சின்னச்சின்ன அவதானிப்புகள் இயல்பாகவே வரும். மொழியிலும் ஒரு லாவகம் இருக்கும். ஆனால் இதுவல்ல திறமை. இவை எழுத்தின் ஒரு அங்கம் மட்டுமே. நான் குத்துச்சண்டை பயில ஆரம்பித்த போது என் பயிற்சியாளர் உன்னிடம் கை வேகம் இருக்கிறது என்றார். அப்போது எனக்கு ஜில்லென்று இருந்தது. எனக்குத் திறமை உண்டென நினைத்தேன். ஆனால் போகப் போகத் தான் அது ஒரு கடல், வாழ்நாள் முழுமையையும் கோரும் தேடல் எனப் புரிந்துகொண்டேன். வேகம் எல்லாம் சரிதான், ஆனால் தடுக்கத் தெரியாவிட்டால் என்ன பயன்? ஒரு நிமிடத்துக்கு மேல் ஆடும் போது மூச்சுக் கிடைக்காவிட்டால் என்ன பயன்? தளர்ந்ததும் குத்தில் வலு இல்லாமல் போனால் என்ன பயன்? புதிய உத்திகளை மனத்தால் கற்பனை செய்து கண்ணிமைக்கும் நேரத்தில் செயல்படுத்த முடியாவிட்டால் என்ன பயன்? பயிற்சி, உழைப்பின் போது ஒருவருக்குள் அதுவரை உறங்கிக்கொண்டிருந்த திறமை மலர்கிறது, இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வரும் ஒரு மலரைப் போல. அதற்கான முயற்சியை எடுப்பதும் திறமையின் பகுதி தான். ஆற்றலும் திறமை தான், மனமும் திறமை தான், உடலும் திறமை தான், ஒழுக்கமும் திறமை தான். இதில் ஒன்றை மற்றொன்றில் இருந்து பிரிக்க முடியாது. இது எழுத்துக்கும் அப்படியே பொருந்தும் எனப் பின்னர் நான் புரிந்துகொண்டேன். என்னுடைய வகுப்பில் அப்போது மிகவும் திறமையாளர்கள் என அடையாளம் காண்கிறவர்கள் ஒரு கதையையோ நாவலையோ எழுதி முடிக்கத் திணறுவார்கள், கொஞ்சம் சுமார் என நினைத்தவர்களோ திறமையற்றவர் என முடிவு செய்தவரோ தம் படைப்பை தொடர்ந்து முயன்று முடிக்கும் போது வாவ் எனத் தோன்றும். இன்னும் சில ஆண்டுகளில் அவர் மேம்பட்டுக் கொண்டே வரும் போது பெருமையாக இருக்கும். இத்திறமை இவ்வளவு நாளும் எங்கே இருந்தது? அத்திறமை எங்கே போயிற்று? அதனாலே நான் திறமையாளர்களை அடையாளம் காண்பதை நிறுத்தினேன். சில எழுத்தாளர்களிடம் இயல்பிலேயே ஒரு தேடல் இருக்கும், ஒரு வினோதம் இருக்கும், அது அவர்களுக்கு ஒரு கூர்மையைக் கொடுக்கும், ஆனால் அது எல்லாரிடமும் உள்ளதுதான், அதை சிலர் கண்டுபிடிக்கிறார்கள், சிலர் அதன் மீது மண்ணைப் போட்டு மூடிவிடுகிறார்கள். இந்த உண்மையை நான் வெகுபின்னால் தான் புரிந்துகொண்டேன். அதனாலே நான் ஒரு இளம் படைப்பாளியைப் படித்ததும் இவர் வேஸ்ட் என நினைப்பதை நிறுத்தினேன். இந்த உலகில் வீண் என யாரும் இல்லை என இப்போது நம்புகிறேன். எழுத்து என்பது ஒரு ஆன்மீக மலர்ச்சி. திறமையில்லை எனக் கருதுவது ஒருவருக்கு ஆன்மாவே இல்லை என நம்புவதற்கு சமம். சிலருக்கு தம் ஆன்மாவை மூடியிருக்கும் இருட்டை விலக்கி அதன் மீது கிடக்கும் கண்டாமுண்டா சாமான்களை அகற்றி கண்டுபிடிக்கவே ஒரு ஆயுள் ஆகிவிடும், சிலருக்கு அது ஒரு வருடத்திற்குள், சில நாட்களுக்குள் நடக்கும். ஆனால் அதற்கான முயற்சி அனைவருக்கும் ஆனது.
எழுத்தோ எந்த ஒரு கலையைப் பயில்வதோ அது மட்டுமே அல்ல. அது வாழ்க்கையைப் பயின்று நம்மையே கண்டடைவது. அதில் ஒரு பயிற்சியாளர் / ஆசிரியர் ஒரு வழிகாட்டி, நெறியாளர், அறிவு ஆசான் மட்டுமே. என்ன மாதிரி படைப்பை அவர் எழுதுவார் என்பது இரண்டாம் பட்சமே. அவர் தன் தேடலைக் கண்டடைகிறாரா என்பதே முக்கியம். அவர் சில தோல்வி அடைந்த நாவல்களை எழுதி தன் ஆன்மாவைத் திறக்கிறார் எனில் திறக்கட்டுமே!
ஒரு பாட்டி கறுத்த பித்தளைப் பாத்திரங்களை எடுத்துப்போட்டு மண்ணையும் புளியையும் வைத்து தேய்த்துக் கழுவுகிறார். பளபளவென அவை துலங்கும் வரை தேய்க்கிறார். அங்கு மண்ணும் புளியுமா முக்கியம்?
கூடுதல் தகவல்: பிப்ரவரி-மே மாதங்கள் நடக்கும் 2024 ஆண்டிற்கான நாவல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள் ஆன்லைன் வகுப்பு இருக்கைகளுக்கான பதிவு ஆரம்பித்தாகிற்று. ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்ள 9790929153