பாரிஸ் ரெவ்யூ பேட்டி ஒன்றில் வில்லியம் ஸ்டைரனிடம் அவர் படித்த பல்கலையில் ஒரு மாணவராக பங்கெடுத்த புனைவு எழுதும் கலை வகுப்பைப் பற்றிக் கேட்கிறார்கள். அந்த வகுப்பில் தான் தனக்கு நாவல் எழுதும் ஆர்வம் மேலெடுத்து தீவிரமாக எழுத வந்ததாக குறிப்பிடுகிறார். கூடவே இன்னொரு விசயத்தையும் சொல்கிறார் - அமெரிக்காவில் புனைவுக் கலையை கற்பிக்கும் வகுப்புகள் அதிகம். கூடவே வேறு நுண்கலைகளையும் இலக்கிய நூல் வாசிப்பு, கொஞ்சம் கோட்பாடு என கலந்து ஒரு பட்டயப் படிப்பாகவே நடக்கும். ஆண்டு தோறும் பல்லாயிரம் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுவார்கள். இவர்களில் எத்தனை பேர் எழுத்தாளர்களாகி நிலைப்பெறுவார்கள்? மிகச்சிலர் தாம். மிச்ச பேர்? அவர்கள் அத்திறனைக் கொண்டு வேறு துறைகளில் நுழையலாம். ஆனால் முக்கியமான கேள்வி வேறு: எழுதுவதற்கான திறமை தான் ஒருவருடைய வெற்றியைத் தீர்மானிக்கிறதா அல்லது பயிற்சியும் அறிவுமா? ஸ்டைரன் இயல்பான திறமையே அடிப்படையான காரணி என்கிறார். ஒரு புனைவுக் கலை ஆசிரியரின் உண்மையான பணி உமியை அரிசியில் இருந்து பிரிப்பது, தவறான ஆட்களை ஊக்கப்படுத்தி நேரத்தை வீணடிக்காமல் இருப்பது தான் என்றும் சொல்கிறார். இதைக் கேட்க ...