ஐ.பி.எல் ஏலம் வந்த பிறகு வறிய எளிய சூழலில் இருந்து வரும் இளம் வீரர்களின் நிலை ஒரே நாளில் வானுக்கு ஏவப்பட்ட ஏவுகணையைப் போல் ஆகிறது. இம்முறை ஏலத்தில் எந்த வீரர்களுக்கு எல்லாம் வாய்ப்பு அதிகம் என கிரிக் இன்போ தளத்தில் ஒரு கட்டுரையில் பட்டியலொன்றை வெளியிட்டிருந்தார்கள். அந்த வீரர்களின் ஆட்டத்தையும் வேறு விபரங்களையும் தேடிப் பார்த்தேன். ஒரு சில ஆல்ரவுண்டர்கள் எடுக்கப்படவில்லை, ஆனால் இரண்டு கீப்பர் மட்டையாளர்கள் எடுக்கப்பட்டார்கள். ஒருவர் ராபின் மின்ஸ் (குஜராத் லயன்ஸ்). மற்றொருவர் சமீர் ரிஸ்வி (சென்னை சூப்பர் கிங்ஸ்).
எனக்கு இருவரில் ரிஸ்வியே மேலான மட்டையாளர் எனத் தோன்றுகிறது. அவரது ஆட்டத்தில் ஒரு முழுமை உள்ளது. ஆக்ரோஷமானவர். எல்லா திசைகளிலும் அடிக்கக் கூடியவர். கீப்பிங்கும் நன்றாக உள்ளது. அதனால் எட்டரை கோடி சரியான தொகை தான். நம்மூர் பட்லர் (இங்கிலாந்து அணி) போல இருப்பார். அதுவும் சுழலை நன்றாக அடிப்பவர் என்பதால் சென்னை ஆடுதளங்களுக்கு ஏற்றவர்.
அடுத்து ராபின் மின்ஸ். இவர் ஐ.பி.எல்லில் எடுக்கப்படும் முதல் பழங்குடி வீரர் எனும் அளவில் பரவலான கவனத்தை ஊடகங்களில் பெற்றார். எனக்கு இவரது ஆட்டம் கிறிஸ் கெயிலை அல்ல, வினோத் காம்பிளியையே நினைவுபடுத்தியது. அடுத்து ஹெட்மெயிரையும் நினைவுபடுத்தினார். மரண அடி. எந்த பந்து முழுநீளத்தில் விழுந்தாலும் மிட் விக்கெட், லாங் ஆன் பகுதிகளில் கொலைவெறியில் அடிக்கிறார். பட்டாலே சிக்ஸர் தான். செமையான தோள் பலம். இடுப்பில் இருந்து கைகளுக்கு ஆற்றல் செல்லும்படியான ஸ்விங்கும், உடல் அசைவுகளும். ஆனால் இவருக்கு முக்கியமான பலவீனம் உண்டு - எக்ஸ்டிரா கவருக்கு மேல் பந்தை சிக்ஸருக்குத் தூக்கி அடிப்பதைத் தவிர ஆப் சைடில் ஷாட்கள் அதிகமாக இல்லை. பந்து கொஞ்சம் வெளியே திரும்பினாலோ மெதுவான ஆடுதளங்களில் நின்று வந்தாலோ பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து வைடாக வெளியே மெதுப்பந்தைகளை சுற்றி விட்டாலோ சிக்கிக் கொள்வார். மிட் விக்கெட், லாங் ஆபில் கேட்ச்கள் கொடுப்பார். இதனால் தான் ஏலத்தில் ஒரு அளவுக்கு மேல் பணம் கொடுத்து இவரை எடுக்க சென்னை அணி நிர்வாகம் தலைப்படவில்லை.
ஒருவேளை நேராக அடிக்கவும், ஆப் பக்கத்தில் டிரைவ், கட் செய்யவும் திறன்களை வளர்த்துக் கொண்டு கொஞ்சம் பொறுமையாக நின்று ஆட முயன்றால் இரண்டே ஆண்டுகளில் இந்திய டி20 அணியில் இடம்பெறுவார்.

