எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளிலும் கம்பீரமான அழகான ஆண்மை மிக்க நாயகர்கள் தோன்றினார்கள். சரத்குமார், நெப்போலியன், விஜய்காந்த் போல. எனக்கு இவர்களில் விஜயகாந்தே குழந்தைப்பருவத்தில் மிகவும் பிடித்தமானவராக இருந்தார். அவரது ஆக்ஷன் படங்களின் ரசிகனாக இருந்தேன், அவர் சண்டையிடும் போது நானும் இருந்த இடத்திலே சண்டையிடுவேன். அவரது எகத்தாளம், எடுத்தெறிந்து பேசும் பாணி, குரல், அந்த பழுத்த குண்டுக் கண்கள், அழுந்த வாராத முள்ளம்பன்றி முடி, குண்டுக் கன்னங்கள், அழகான கறுப்பு, இப்படித்தான் நடப்பேன் என்பதைப் போன்ற நடை. குறிப்பாக, எடுத்ததுமே எதிரியில் முகத்தில் குத்தும், திரும்பி நின்று எத்தும் (புரூஸ் லீயை மோசமாக காப்பியடித்து ஒரு கட்டத்தில் தன்னுடையதாக மாற்றிக்கொண்ட) பாணி; அடிக்கும் போது அவரது உடம்பின் கனம் எதிரியை வந்து கும்மென வீழ்த்துவதாகத் தோன்றும். ஏனோ எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அந்த காலத்தில் அளித்தது. வளர்ந்த பின்னர் குறிப்பாக பதின்பருவத்தில் எனக்கு விஜயகாந்தைப் பிடிக்காமல் போய்விட்டது. நான் கல்லூரியில் படிக்கையில் நண்பர்கள் குழு என்னை வற்புறுத்தி ஒரு படத்துக்கு அழைத்துப் போனார்கள். “வானத்தைப் போல”. என்னடா படம் இது என நான் இருக்கையில் நெளிய ரீகன் எனும் என் நண்பன் ஒருவன் மிகவும் கோபமாக “இது சீரியஸான படம், மெதுவாத் தான் போகும், கவனிச்சுப் பாக்கணும், எப்போ பார்த்தாலும் சும்மா ஜிங்ஜிங்குன்னு ஆட்டிக்கிட்டு இருக்க முடியுமா, பார்லெ” என அடக்கினானே நான் அசந்துவிட்டேன். அந்த கொடுமைக்குப் பிறகு நான் விஜய்காந்த் படங்களைப் பார்க்கவே இல்லை. இணையமும், யுடியூபும் வந்த பிறகு அவரது பழைய படங்களை திரும்பப் பார்த்தேன். எம்.ஜி.ஆருக்கு இருந்த திரை ஆளுகை (screen presence) அவருக்கு இருந்தது உண்மை தான் (ஜெய்சங்கரிடமும் இருந்தது). மற்ற நாயக நடிகர்களிடம் ஒரு சின்ன தயக்கம், கவனம் இருக்கும். “நான் ஏன் நடிக்கணும், நான் இப்படித்தான் வந்து நிப்பேன்” எனும் மனநிலை இவரிடம் இருந்தது. அதுவே கவர்ந்தது. தெலுங்குப் படங்களைப் போல அவரது படங்களை கதையையோ உணர்வுகளையோ எதிர்பார்க்காமல் மகிழ்ச்சியாக கொண்டாட்டமாக ரசிக்க முடியும். எதையும் நியாயம், நீதி என கொள்கையாக்கம் செய்யும் கட்டாயமற்ற படங்களில் ஒரு சுதந்திரம் உள்ளது. பிள்ளைப் பிடிகாரர்களிடம் இருந்து தப்பித்த கொண்டாட்ட கலை என இப்படங்களை சொல்வேன். ஆம் அவரது படங்களின் கருத்துக்களுடன் நமக்கு சில நேரங்களில் உடன்பாடில்லாமல் இருக்கலாம். சில நேரங்களில் உடன்பாடு இருக்கலாம். ஆனால் கருத்து என்பது நிஜம் அல்ல, கருத்து என்பது மகிழ்ச்சியும் அல்ல, கருத்து ஒரு பொய், ஒரு சுமை. (சூசன் சொண்டாகின் Against Interpretation படித்துப் பாருங்கள்.)
ஏன் எப்போ பார்த்தாலும் தோளில் துண்டு போட்டுட்டு தனியா தெக்கும் வடக்குமா நடக்கிறார் எனத் தோன்றினாலும் “சின்ன கவுண்டர்” எனக்கு மிகவும் பிடித்த படம். அதில் வரும் பஞ்சாயத்து காட்சி மிகையென்றாலும் நமது நீதிமன்றங்கள் பற்றியுள்ள விமர்சனம் மிகவும் உண்மையானது. “சத்திரியன்” மற்றொரு கிளாஸிக் (ஏன் திரும்ப வேலைக்குப் போகும் முன் விஜயகாந்த் திடீரென தொப்பையுடன் வார்ம் அப் பண்ணி எக்ஸர்ஸைஸ் பண்ணி ஆக்ரோஷமாகிறார் என்பது மட்டும் புரியவில்லை; எந்த ஜிம்மில் புதிதாக வருகிறவரைப் பார்த்தாலும் எனக்கு இக்காட்சி நினைவுக்கு வரும்.). “புலன் விசாரணை”, “கேப்டன் பிரபாகரன்” ஆகிய முழு ஆக்ஷன் படங்கள் நம்மை அங்கே இங்கே அசைய விடாமல் ‘ஜென்நிலையில்’ பார்க்க வைக்கும் திரைக்கதை கொண்டவை (கொஞ்சம் அசைந்து யோசித்தால் சிரித்துவிடுவோம் என்பதால்). அப்படங்களில் ஒன்று விஜயகாந்தின் வலுவான ஆகிருதி இருக்கும், அல்லது கொடூரமான அதே சமயம் நெடிதுயர்ந்த வன மரத்தைப் போன்ற வில்லனின் அசாத்திய தன்னம்பிக்கை, கெத்து இருக்கும், நாயகன் இல்லாத போதும் அவருடைய மட்டற்ற ஆண்மை காற்றில் இருப்பதாகத் தோன்றும். நிறைய யானைகள் பரஸ்பரம் மோதுவதைப் போன்ற உணர்வு இருக்கும். இப்படங்களின் விசை அந்த ஆண்மையின் இருப்பிலும் இன்மையில் இருந்தும் வருவதாகத் தோன்றுகிறது. (இன்று தெலுங்கில் மட்டுமே அந்த விசை மீதமிருக்கிறது.) நிறைய இளைஞர்கள் அன்று அந்த மாய இருப்பில் இருந்தே தம் உடல்மொழியை அன்று வரித்துக்கொண்டார்கள். வெகுஜன சினிமாவுக்கு அது ஒரு நல்ல காலகட்டம். அதற்கு அடுத்தடுத்த தலைமுறைகளில் எப்போதும் குனிந்து நடக்கும், வெட்கப்படும் பூஞ்சையான ஆண்களையே சினிமா உடல் நமக்கு அளித்தது. துணிச்சலில், தற்சார்பில் இருந்து யாரையாவது அண்டி, சாய்ந்து நிற்கும் மனநிலைக்கு நாம் நகர்ந்துவிட்டோம். அதில் இருந்தே இன்றைய மிதமிஞ்சிய கேளிக்கை, மதுப்பழக்கம், போதை மருந்து, தன்னழிப்பு இயல்பு வந்திருக்கிறது. அவ்விதத்தில் விஜயகாந்த், ஓரளவு சரத்குமார் பாணி படங்கள் நமக்கு முக்கியமானவை. ஒரு முக்கியமான இழப்பு.
விஜயகாந்த் சண்டைக்காட்சிகளில் மிகுந்த ஆர்வமெடுத்து நடிப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அவருக்கு சண்டைக் காட்சியில் பங்கெடுக்கும் உடற்தகுதி இல்லை, சண்டைக் கலைஞர்கள் சில வினாடிகள் அவருக்காக தாமதித்து ஈடுகொடுக்கிறார் என்பதை இன்று நாம் கவனிக்க முடியும். சில காட்சிகளில் அவர்கள் அவரைத் தம் கைகளில் தாங்கி நிற்பார்கள், அவர் அதன் பிறகே ரோட் ரோலரைப் போல உருண்டு வந்து பக்கத்தில் வரும் வில்லனை காலால் உதைத்து இறங்குவார், ஆட்கள் ஒவ்வொருவராக வந்து அடிவாங்கிப் போவார்கள். அவரது ஹூக்கும் பெரும்பாலும் தப்பான இடத்திலே படும். ஆனால் எம்.ஜி.ஆருக்கு இருந்த வேகமும் உடற்தகுதியும் சண்டைப்பயிற்சியும் இல்லையென்றாலும் விஜயகாந்த் தன் உடல்மொழியால் ஓரளவுக்கு சமாளித்துவிட்டார். (அவருடன் நடித்த சண்டைக்கலைஞர்கள் பாராட்டத்தக்கவர்கள்.) நடிப்பிலும் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் தன் மிளகாய்ப் பொடி தூவினதைப் போன்ற கலங்கலான கண்களாலும், அழகான வளைந்த புருவங்களாலும் குரலின் சின்னச்சின்ன மாற்றங்களாலும் சில நொடிகளிலே கவர்ந்துவிடுவார், வேறு எந்த பகுதியும் நடிக்காது என்றாலும். அவர் நடிக்கவில்லை என்பதை நீங்கள் கவனிக்கவே இடம் வைக்க மாட்டார். பார்ரா, நான் நடிக்கலையா என மிரட்டி ஏற்க வைப்பதைப் போலவே இருக்கும், நம்மால் மறுக்கவே முடியாது. அலங்கமலங்க முழிப்பது, வெட்டி வெட்டித் திரும்புவதை வைத்து நன்றாக நகைச்சுவையும் செய்வார், குறிப்பாக அப்பாவி நகைச்சுவை வேடம் அவருக்கு நன்றாகப் பொருந்தும் (“நானே ராஜா நானே மந்திரி”).
ஒரு தலைமுறைக்கு இன்மையும் இருப்புமாக ஆண்மையின் ஆகிருதியைக் காட்டிய விஜயகாந்துக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்!
பி.கு: அவரது அரசியலிலும் தனிமனித இயல்பிலும் எனக்கு ஆர்வமோ அறிவோ இல்லை என்பதால் அதைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. என்னுடையது அவரது திரைப் பிம்பம் பற்றின பார்வை மட்டுமே