எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளிலும் கம்பீரமான அழகான ஆண்மை மிக்க நாயகர்கள் தோன்றினார்கள். சரத்குமார், நெப்போலியன், விஜய்காந்த் போல. எனக்கு இவர்களில் விஜயகாந்தே குழந்தைப்பருவத்தில் மிகவும் பிடித்தமானவராக இருந்தார். அவரது ஆக்ஷன் படங்களின் ரசிகனாக இருந்தேன், அவர் சண்டையிடும் போது நானும் இருந்த இடத்திலே சண்டையிடுவேன். அவரது எகத்தாளம், எடுத்தெறிந்து பேசும் பாணி, குரல், அந்த பழுத்த குண்டுக் கண்கள், அழுந்த வாராத முள்ளம்பன்றி முடி, குண்டுக் கன்னங்கள், அழகான கறுப்பு, இப்படித்தான் நடப்பேன் என்பதைப் போன்ற நடை. குறிப்பாக, எடுத்ததுமே எதிரியில் முகத்தில் குத்தும், திரும்பி நின்று எத்தும் (புரூஸ் லீயை மோசமாக காப்பியடித்து ஒரு கட்டத்தில் தன்னுடையதாக மாற்றிக்கொண்ட) பாணி; அடிக்கும் போது அவரது உடம்பின் கனம் எதிரியை வந்து கும்மென வீழ்த்துவதாகத் தோன்றும். ஏனோ எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அந்த காலத்தில் அளித்தது. வளர்ந்த பின்னர் குறிப்பாக பதின்பருவத்தில் எனக்கு விஜயகாந்தைப் பிடிக்காமல் போய்விட்டது. நான் கல்லூரியில் படிக்கையில் நண்பர்கள் குழு என்னை வற்புறுத்தி ஒரு படத்துக்கு அழைத்துப் போனார்கள். “வானத...