நீங்கள் ஒரு நாவலைப் பிரசுரிக்க முடிவெடுக்கும் முன்பு சந்தையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கு ஒரு வருடத்திற்கு எவ்வளவு நாவல்கள் வருகின்றன, எந்தெந்த பதிப்பகங்கள் அதிகமாக நாவல்களைப் பிரசுரிக்கிறார்கள், யார் இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த, உற்சாகப்படுத்த தலைப்படுகிறார்கள், எந்த பதிப்பகத்தில் நாவல்களுக்கு அதிக கவனம் கிடைக்கிறது என்கிற தகவல்களை சேகரியுங்கள். இதற்கு நீங்கள் பேஸ்புக்கில் வரும் புத்தக விளம்பரங்களை கவனித்து, பதிப்பாளர்களை சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்தாலே போதும். கூடுதலாக, நீங்கள் புத்தகத் திருவிழாக்களுக்கு சென்று முக்கிய பதிப்பக ஸ்டால்களில் முன்வரிசையில் வைக்கப்பட்டுள்ள நாவல்களை கவனியுங்கள். அடுத்து நாவல்களின் பொதுவான பக்க அளவைப் பாருங்கள். சில பதிப்பகங்களில் அதிகமாக 200-250 பக்க நாவல்கள் வரும். சில பதிப்பகங்கள் 350 பக்கங்களுக்கு மேல் பிரசுப்பார்கள். மிக மிக அரிதாகவே 500, 600 பக்கங்களுக்கு மேல் நாவல்கள் வரும். இதை நான் எழுதும் போது தமிழில் 200 பக்க நாவலுக்கு 220-250 ரூ விலை வைக்கிறார்கள். 300 பக்கங்கள் எனில் 350 ரூபாய். நீங்கள் எந்த அளவுக்கான நாவலை எழுத விரும்புகிறீர்கள்? இதைப் பற்றி சிந்தியுங்கள். உங்கள் அளவுக்கு ஏற்ப, உங்கள் அரசியல், எழுத்தின் அழகியலுக்கு ஏற்ப ஒரு பதிப்பகத்தைத் தேர்ந்தெடுங்கள். பதிப்பாளர்கள் செய்யப் போகும் முதலீட்டில் இருந்து அவர்களுடைய அரசியல், பதிப்பு மரபு, ரசனை வரை தெரிந்து கொள்வது சிறப்பு.
பொதுவாக 300 பக்கங்கள் வரை பதிப்பகங்கள் நாவலை வாங்கிப் பிரசுரிக்க தயங்க மாட்டார்கள். ஆனால் பக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக ஆக பதிப்பாளரின் முதலீடும், நஷ்டமாகும் அபாயமும் / லாபமடையும் அதிர்ஷ்டமும் அதிகரிக்கிறது. இந்த வியாபாரக் கணக்கை நீங்கள் புரிந்து கொள்வது முக்கியம்.
இன்று புத்தகத்தின் காகிதமும் அட்டையும் சேர்த்து 200 பக்க புத்தகத்துக்கு சுமார் 100–120 ரூபாய் வரை செலவாகிறது (அச்சு செலவு மட்டுமே). பதிப்பாளர்களுக்கு 80 ரூபாய் தலா ஒரு பிரதியில் லாபமாக கிடைக்கும். புத்தகங்களை பாதுகாப்பாக வைத்திருந்து வருடம் முழுக்க சந்தையில் கிடைக்க வைப்பது, புத்தகத் திருவிழாக்களுக்கு கொண்டு போகும் செலவு, இணைய அங்காடிகளுக்கு கொடுக்கும் கழிவு ஆகியவற்றை நான் இங்கு கணக்கில் கொள்ளவில்லை. குறைவான எண்ணிக்கையில் பிரசுரிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் விற்கப்படுகிற ஒரு நாவலையே இலக்காக வைத்துப் பேசுகிறேன். இன்றுள்ள இந்நிலையில் உங்கள் 180–200 பக்க நாவல் 50 பிரதிகள் அச்சிடப்படுகின்றன என்றால் எவ்வளவு முதலீடு? 5000–6000 ரூபாய். அதன் மீது அட்டைப்பட வடிவமைப்பு, நூலின் வடிவமைப்பு செலவை சேருங்கள். ஒரு பதிப்பகம் பல நூல்களைக் கொண்டு வருகிறது எனும் போது முழுநேர வடிவமைப்பாளர்களை வைத்திருப்பார்கள். அப்போது இச்செலவு குறையும். அல்லாவிடில் குறைந்தது 2500 ரூபாயாவது தயாரிப்பு செலவாக சேரும். மொத்தமாக 7500–8500 ரூபாய். ஐம்பது பிரதிகள் விற்றால் உங்கள் பதிப்பாளருக்கு 12,500 ரூபாய் கிடைக்கும். (இதில் 10% உங்களுக்கான உரிமத் தொகை). அதாவது 4000–5000 ரூபாய் பதிப்பாளருக்கான லாபம். இது ஓரளவுக்கு நல்ல வியாபாரம் தானே என உங்களுக்குத் தோன்றும். இன்றைய சமூக வலைதள சூழலில் 50 பிரதிகளை விற்பது பெரிய காரியமில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் பிரச்சினை என்னவென்றால் புத்தக பிரசுரம் ஒரு நூலை மட்டும் சார்ந்தது அல்ல. நிறைய நூல்களில் முதலீடு செய்து அதிலிருந்து பெறும் லாப நட்டத்தை சமநிலைப்படுத்த முயல்வார்கள் பதிப்பளர்கள். சில நாவ்லளில் பெரும் முதலீட்டை செய்து விற்க முடியாமல் விழி பிதுங்குவார்கள். பதிப்பகத்துக்கு வெளியே சிலர் தவறாக முதலீடு செய்து அந்நட்டத்தை புத்தகங்கள் வழியாக சரிகட்டவும் முயல்வார்கள். இதனாலே சில பதிப்பாளர்கள் நட்டமடைகிறார்கள், ஆனால் பெரும்பாலானோர் சமாளிக்கிறார்கள், சிலர் நிச்சயமாக லாபமடைகிறார்கள். இந்த தள்ளுமுள்ளு கூட்டத்தில் நீங்கள் ஒரு இளம் எழுத்தாளராக வரிசையில் முந்திப் போய் பதிப்பாளரிடம் உங்கள் நாவலின் எழுத்துப் பிரதியை நீட்டும் போது அவரது முதல் கேள்வி “இந்நாவலை வெளியிட்டு என்னால் நட்டமடையாமல் தப்பிக்க முடியுமா?” என்பதே. அவர் ஏற்கனவே மிகுதியாக முதலீடு செய்து கையை சுட்டிருந்தால் இன்னொரு நிச்சயமில்லாத நாவல் மீது பணம் கட்டத் தயங்குவார். அவர் தைரியமானவர் என்றால் சீட்டை இறக்குவார். ஆக நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் நாவல் அதன் எழுத்தின் தரத்தால் மட்டுமே ஏற்கவோ நிராகரிக்கவோ படுவதில்லை எனப் புரிந்து கொள்வதே. இந்த வியாபாரத்தின் இயங்கியலைப் புரிந்துகொள்ளுங்கள். பதிப்பு முதலில் ஒரு வியாபாரம். அங்கு பணமே முதல் அளவுகோல்.
ஆகையால் உங்களால் குறைந்தது 50–100 பிரதிகளாவது விற்க முடியும் எனும் நம்பிக்கையை அளிக்க முடியுமா? வெறும் சொல்லால் அல்ல செயலால் காட்ட முடியுமா? நீங்கள் “சின்னத்தம்பி” குஷ்புவைப் போல மாடமாளிகைக்குள் ஒளிந்திருக்காமல் வாய்க்கால் வரப்பு என குதித்தோடும் இளம் எழுத்தாளராக இருந்தால் முடியும். நீங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில், இணையதளங்களில், அச்சிதழ்களில் பரபரப்பாக எழுதிக்கொண்டிருந்தால், வாசகர்களின் நன்னம்பிக்கையைப் பெற்றால், உங்களை ஒரு பண்டமாக விளம்பரம் செய்யத் தெரிந்தால் இது நிச்சயமாக சாத்தியம்.
சில அரிதான மிகச்சிறிய பதிப்பகங்கள், தற்சார்பு பதிப்பகங்களே விதிவிலக்கு. அவர்கள் தம் லட்சியத்துக்கு நியாயம் செய்கிற சில நாவல்களை வெளியிடுவார்கள். அங்கு மட்டுமே உங்கள் எழுத்தின் தரம் நிர்ணய அலகாகும். அத்தகைய பதிப்பகங்களை நடத்துவோர் எழுத்தாளர்களாகவும் இருப்பர். அவர்கள் ஒரு குழுவாக செயல்படுவர். சிலர் இணைய இதழ்களை வைத்து நடத்துவர். அவர்களுடன் உங்களால் நட்பு கொண்டு நல்லுறவு பாராட்டி இணைந்து செயல்பட முடிந்தால் உங்கள் நாவலின் பிரசுர சாத்தியம் பிரகாசமாகும். இவர்கள் ஓரளவுக்கு வாசகர்களிடம் கவனம் பெற்றவர்கள் எனில் இவர்களிடம் பிரசுரிப்பதன் அனுகூலம் உங்களுடைய நாவலை இவர்கள் நன்றாக விளம்பரப்படுத்துவார்கள், விருதுகளுக்கும் விமர்சனத்திற்கும் அனுப்பி உங்களைக் கொண்டாடுவார்கள் என்பது. இது பெற்றோரை எதிர்த்த காதல் திருமணத்தைப் போல. இங்கு பரஸ்பர ஆதரவும் நெருக்கமும் உயிர்த்திருப்பதற்கு மிக அவசியம். நல்ல நாவல்கள் இத்தகைய பதிப்பகங்கள் மூலம் வந்ததும் பெரும் கவனம் பெறுவதுண்டு.
பெரும் பதிப்பகங்கள் எனில் உங்கள் நாவல் ஒரு பரவலான வாசகர் / எழுத்தாளர் குழுவின் கவனத்திற்கு உடனடியாக போகக் கூடும். பத்தோடு பதினொன்றாக கவனிக்கப்படாமலும் போகலாம். எல்லாம் உங்கள் எழுத்தின் சுவாரஸ்யத்தை, தரத்தைப் பொறுத்தது.
சில பதிப்பகங்கள் (எழுத்து, டிஸ்கவரி புக்பேலஸ்) நாவல் போட்டிகளை நடத்துவதுண்டு. அவற்றில் பங்குபெற்றால் அவர்களே உங்கள் நாவலைப் படித்து தேர்வு செய்து ஒன்று பரிசளிக்கவோ அல்லது பிரசுரிக்கவோ செய்வார்கள். எப்படிப் பார்த்தாலும் கவனம் (சில நேரங்களில் சன்மானமும்) கிடைக்கும்.
காலச்சுவடு போன்ற மிக மிக அரிதான பதிப்பகங்களே ஆசிரியக் குழுவை வைத்து உங்கள் நாவலை கரட்டு வடிவில் படித்து விவாதித்து மதிப்பிட்டு தேர்ந்தெடுத்து திருத்தங்கள் சொல்லி தம் எதிர்பார்ப்பின் படி வடிவமைப்பார்கள். பெரும்பாலான பதிப்பகங்கள் ஒன்று பதிப்பாளரே வாசிப்பார் அல்லது சில நேரங்களில் நீங்கள் கவனிக்கப்பட்ட எழுத்தாளர் எனில் முழுமையாகப் படிக்காமல் அப்படியே பதிப்பிப்பதும் உண்டு. ஆக, நீங்கள் தேர்வு செய்யும் பதிப்பகத்தைப் பொறுத்து உங்கள் நாவல் வெளிவருவதற்கான கால அளவும் அமையும்.
சரி, உங்கள் நாவலை யாருமே பிரசுரிக்கத் தயாராக இல்லை. அப்போது என்ன செய்வது? உங்களுடைய நட்பில் இருக்கும் நுட்பமான, கூர்மையான, அனுபவமுள்ள வாசகர்கள், மூத்த எழுத்தாளர்களிடம் கொடுத்து கருத்துக் கேளுங்கள். நண்பர்களிடம் மட்டுமன்றி பரவலாக பலரிடமும் கேளுங்கள். (முடிந்தவரையில் வாசிப்புப் பழக்கமில்லாதவர்களின் கருத்துக்களைப் பொருட்படுத்தாதீர்கள்.) அவர்கள் தரும் அறிவுரைகளை, பரிந்துரைகளைக் கொண்டு உங்கள் நாவலைத் திருத்த வேண்டுமா என பரிசீலியுங்கள். அடுத்து, மீண்டும் பதிப்பகங்களிடம் சென்று விண்ணப்பியுங்கள். சந்தையின் சூழலும் தேவையும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் இன்று நிராகரிக்கப்படும் ஒருவர் ஓரிரு ஆண்டுகளிலே அரவணைத்து ஏற்கப்படலாம். அப்படி காலம் கனியவே இல்லை எனில் நீங்களே பிரசுரியுங்கள். அதற்கு எவ்வளவு முதலீடு ஆகும் என ஏற்கனவே சொல்லிவிட்டேன். தரமான, சிக்கனமான வடிவமைப்பாளர்கள், அச்சகத்தாரைத் தேடிக் கண்டடைந்து மிகக்குறைவான பிரதிகளை (POD முறையில்) பிரசுரியுங்கள். தீவிரமாக விளம்பரப்படுத்தி விற்றுக் காட்டுங்கள். அதில் கிடைக்கும் லாபம் பிடித்திருந்தால் (அட, உரிமத் தொகையை விட இது அதிகமாச்சே என நினைத்தால்) தொடர்ந்து சுயபிரசுரத்தில் ஈடுபடுங்கள். அல்லாவிடில் இரண்டாம் பதிப்புக்கு பதிப்பாளரை நாடுங்கள். மகளின் காதலனை முறைத்த மாமனார் அவரே மாப்பிள்ளையானதும் வாய் நிறைய சிரிப்புடன் வரவேற்பதைப் போல இம்முறை பதிப்பாளர்கள் உங்களை எதிர்கொள்வர்.
ஒருவேளை நீங்கள் இந்தியாவில் இல்லை, உலகின் ஏதோ ஒரு மூலையில் வாழ்கிறீர்கள் அல்லது கிராமத்தில் இருந்து, பதிப்பகத்தார், இலக்கிய கூட்டங்கள் என்று பயணிக்கும், சமூகமாக்கல் செய்யும் எந்த வசதி வாய்ப்பும் இன்றி இருக்கிறீர்கள், எனில் எந்த செலவுமின்றி கிண்டிலில் உங்கள் நாவலை மின்நூலாக உடனே பிரசுரியுங்கள். அது மிக மிக சுலபம். (உரிமத் தொகையும் 80% வரை கிடைக்கும்.)
கடைசியாக, ஒரு நாவலை பதிப்பாளருக்கு / அச்சுக்கு அனுப்பும் முன் அதன் அடிப்படையான வடிவம், அதிலிருக்க வேண்டிய பகுதிகளைப் பற்றி சொல்கிறேன். முதலில், யூனிகோடில் தட்டச்சு செய்யுங்கள். முதல் பக்கத்தில் நாவலின் தலைப்பையும், தவறாமல் உங்கள் பெயரை அதற்கு கீழும் எழுதுங்கள் (சில இளம் எழுத்தாளர்கள் தம் பெயரை பணிவாலோ கூச்சத்தாலோ கவனக்குறைவாலோ எழுதாமல் விடுகிறார்கள். இதனால் பதிப்பாளர் துப்பறிவாளராகும் நிலை ஏற்படுகிறது.) அடுத்த பக்கத்தில் பக்கத்தில் உங்களைப் பற்றின ஒரு அறிமுகக் குறிப்பை எழுதுங்கள். அடுத்த பக்கத்தில் உங்கள் நாவலை யாருக்காவது சமர்ப்பிக்க விரும்பினால் அதைக் குறிப்பிடுங்கள். அதற்கு அடுத்து நீங்கள் உங்கள் நாவலுக்கு எழுதிய அறிமுகக் குறிப்பையோ ஒரு விமர்சகர் உங்கள் நாவலை அலசியோ பாராட்டியோ பரிந்துரைத்தோ எழுதிய குறிப்பையோ சேர்த்திடுங்கள். (இது ஒன்று கட்டாயம் அல்ல.) அடுத்து உங்கள் நாவலின் அத்தியாயங்கள் வர வேண்டும். உங்கள் எழுத்துப் பிரதியை நன்றாக ஒருமுறை பிழைபார்த்து விடுவது நல்லது. அப்போது அத்தியாயங்கள் வரிசைப்படி வருகின்றனவா, தகவல் பிழைகள், பாத்திரங்களின் பெயர்களில் குழப்பங்கள் உள்ளனவா, எதாவது ஒரு அத்தியாயம் பாதியில் விடுபட்டிருக்கிறதா என்பதை கவனித்து தேவைப்பட்டால் திருத்துங்கள். கூடவே உங்கள் நாவலுக்கான ஒரு பின்னட்டைக் குறிப்பையும் 50 சொற்களுக்குள் எழுதுங்கள். இக்குறிப்பில் உங்கள் நாவலின் கதைச்சுருக்கமோ, சாரமோ வர வேண்டாம். உங்கள் நாவலைப் படிக்கத் தூண்டும் அழகான வாக்கியங்களை எழுதுங்கள். உங்கள் நாவலுக்கும் இக்குறிப்புக்கும் நேரடித் தொடர்பு இருக்கும் தேவை கூட இல்லை. சில நேரங்களில் சம்மந்தமில்லாத வரிகள் அழகான அறிமுகமாக மாறுவதுண்டு. எந்தளவுக்கு மர்மமாக, கவித்துவமாக, நகைமுரணாக, நகைச்சுவையாக, உணர்ச்சிகரமாக உள்ளதோ அந்தளவுக்கு நல்லது. கடைசியாக உங்களுடைய தரமான நிழற்படம் ஒன்றையும் இணையுங்கள். அவ்வளவுதான், உங்கள் எழுத்துப் பிரதி அச்சுக்குத் தயார்.
இவ்வளவு வாய்ப்புகள் முப்பது ஆண்டுகளுக்கு முன் இல்லை. அன்று மிகச்சிலருக்கு மட்டுமே தம் நாவலை பிரசுரிக்க வாய்ப்பு இருந்தது. வருடத்திற்கு இரண்டு, மூன்று நாவல்களே வரும். இளம் எழுத்தாளர்கள் தம் சேமிப்பைக் கொண்டோ சொத்துக்கள், நகைகளை அடமானம் வைத்தோ புத்தகம் பிரசுரித்த, நட்டமடைந்து வறியவர்களான வரலாறு நமக்கு உண்டு. மேலும் அன்று உலகம் முழுக்க தம் எழுத்தை இளம் படைப்பாளிகளால் கொண்டு செல்லவோ விளம்பரப்படுத்தவோ வழிவகை இல்லை. ஒரு கதையை அனுப்பிவிட்டு அது பிரசுரமாக வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இன்று அச்சிதழ்களோ, இணைய இதழ்களோ அனேகமாக எந்த தரமான (சில நேரங்களில் தரமில்லாத) கதையையும் நிராகரிக்காமல் பிரசுரிக்கிறார்கள். இன்று நாம் செய்ய வேண்டியது சோம்பித் திரியாமல் தன்னொழுக்கத்துடன், ஊக்கத்துடன் தொடர்ச்சியாக எழுதுவதும் செயல்படுவதுமே. இன்று பலருக்கும் எழுத நேரம் இல்லை. ஏனென்றால் நேர மேலாண்மை செய்யத் தெரியவில்லை. அத்திறனையும் ஒரு இளம் நாவலாசிரியர் வளர்த்துக் கொண்டால் வெற்றிப்படிக்கட்டுகள் அவர்கள் முன் புலப்படுவது நிச்சயம்.
(விரைவில் வெளிவரப்போகும் "நாவல் எழுதும் கலை" நூலில் இருந்து)