Skip to main content

ஆலம்

 


ஜெயமோகனின் கடந்த ஒரு தசாப்த கதைகளில் எனக்குள்ள ஒரு சிறு உவப்பின்மை, உடன்பாடின்மை அல்லது ஒவ்வாமை அதில் வரும் நம்பகத்தன்மையற்ற மானுட அறவாதம். “அறம்” தொகுப்பிலுள்ள கதைகளைப் படிக்கையில் பரபரப்பாக உயிரோட்டமாக இருக்கும், ஆனால் ஒரு கட்டத்தில் அவை ஏதோ வெற்றுகிரகத்தில் நடப்பவை போலிருக்கும். “ஏழாம் உலகம்” இந்த வேற்றுகிரகத்தில் இருந்து கோபத்துடன் பூலோகத்துவாசிகளைப் பார்த்து புழுதி வாரித்தூற்றுவதைப் போலொரு நாவல். அதிலுள்ள அநீதிச் சித்தரிப்புகளில் ஒரு தேவையில்லாத மிகை உண்டு. ஆனால் நம் கண்முன்னால் அத்தகைய மனிதர்கள் மிக இயல்பாக வாழ்ந்து போவார்கள், அன்றாட வாழ்வில் உள்ளோரும் அவர்களை எந்த கூச்சமும் இன்றி கடந்துபோவார்கள். ஹேனா ஆரிண்ட் தன் கட்டுரை நூல் ஒன்றில் இதை “தீமையின் சகஜத்தன்மை” என்பார். அந்த சகஜத்தன்மையை அப்படியே எதிர்கொண்டு விவாதிப்பதே நம் புரையேறிய மனதை அறுத்து சீழை வெளியேற்றும், அதை மிகையாக்கி மற்றமையாக்கினால் அதில் இருந்து தப்பித்துவிடுவோம் என்பதே என் வருத்தம். நீதி, நியாயம், அறம் போன்ற சொல்லாடல்கள் நாம் கண்ணை இறுக மூடித் தப்பிப்பதற்கான ஒரு சுயமைதுனம் மட்டும் தான். மானுட செயல்பாடுகளில் தீமை அகத்தில் இருந்தல்ல, புறத்தே இருந்து சமூக கட்டமைப்புகளில் இருந்து, பொருளாதாரம், சட்டம், அரச இறையாண்மையில் இருந்து தோன்றுகின்றன, இதை நாம் போதுமான அளவுக்கு இலக்கியத்திலோ வெகுஜன ஊடகத்திலோ அறிவார்ந்த உரையாடல்களிலோ பேசுவதில்லை. நீங்கள் ஐம்பதில் இருந்து எண்பதுகள் வரையிலான இலக்கிய படைப்புகள், சினிமாக்களில் பார்த்தால் அவற்றில் வரும் சமூக விமர்சனம் இன்றுள்ள சமூக நிலைக்கு மிகப்பொருத்தமாக இருப்பதைக் காண முடியும். ஆனால் போகப் போக நாம் அந்த அநீதியை, தீமையை ஏற்றுக்கொண்டோம். ஏனென்றால் நகரமயமாக்கல், பொருளாதார நடைமுறைகள், அவற்றுக்காக ஏற்பட்ட சமூக மாற்றங்களை (சட்டம், பொருளாதாரம், வணிக நடைமுறைகள்) ஏற்றுக் கொண்டதுடன் அவற்றின் பகுதியாகி பலன் கண்டோம். இப்போது நம்மால் ஐம்பது வருடங்களுக்கு முன்னிருந்ததைப் போல ஒரு மற்றமையை விமர்சிக்க முடியவில்லை (பாரப்பா பழனியப்பா, எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு�பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே). இப்போது நாம் அதற்குப் பதிலாக உலகமே சொர்க்கபுரி, நாங்கள் தேவர்கள் என்று பேசுகிறோம். கண்ணுக்கு முன் நடக்கும் அநியாயத்தைப் பார்த்ததும் அன்பு, பண்பு, நம்பு, அடிப்பம்பு எனப் பேச ஆரம்பிக்கிறோம். இந்த பாசாங்கை பெரும்பாலானோர் பகடி செய்வதோ விமர்சிப்பதோ இல்லை. தன்னிரக்க கதைகள், மானுட மேன்மையைப் பேசும் உணர்ச்சிகர நாடகங்கள், வன்முறையை ஹீரோயிசமாக மட்டுமே காட்டும் கதைகள், குடும்ப தழுதழுப்புக் கதைகள், குடும்ப வரலாற்று மழுமழுப்புக் கதைகள் என தமக்குள் ஒடுங்குகிறோம். இதையெல்லாம் படிக்கையில் எனக்கு ஹேனா ஆரிண்ட் ஹிட்லர் கால ஜெர்மனியில் யூதர்களும் ஆரியர்களும் இருந்த சமூக உளவியலைப் பற்றி, அதன் தத்துவார்த்த நெருக்கடியைப் பற்றி சொன்னதே நினைவுக்கு வருகிறது - யூதர்கள் தமக்குள் இருந்தே அந்நியப்பட்டு தாம் யூதர் அல்லர் என நினைக்க (உள் இடப்பெயர்வு), ஆரியர்கள் தம்மை வேறுவகை ஆரியர்களாக கற்பனை பண்ணிக் கொண்டார்கள். நாம் நமது நீதியில் இருந்து அந்நியமாகி, தீமையில் இருந்து உள்-இடம்பெயர்ந்து உலகப்பெரும் உத்தமர்களாக கற்பனை பண்ணிக் கொள்கிறோம். அதே நேரத்தில் நம்மையே உலகப்பெரும் பாவிகளாகவும் கருதுகிறோம். மிகவும் தன்னுணர்வு கொண்டவர்களாக, அரசியல் சரிநிலையை தீவிரமாக பேணுகிறவர்களாக மாறுகிறோம். சுலபத்தில் எலல இடங்களிலும் சரி-தவறுகளை அடையாளம் கண்டு விட்டு ஆனாலும் 'என் உலகம்' அதி அற்புதமானது எனப் பெருமை கொள்கிறோம். வாசிக்கிறது ராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோயிலை என்பது நம் காலத்துக்கு மிகவும் பொருந்தும் சொலவடை. நமது தன்னிலையும் மற்றமையும் இன்று ஒரு முழுக்கற்பனை. சமூகப்பொருளாதார உலகில் எந்த அடித்தளமும் இல்லாத கற்பிதம்.

மானுடருக்கு அகம் என ஒன்று இருக்கிறது என்பதே ஒரு கற்பனை தான். அது அவர்களை ஏமாற்றி தொடர்ந்து அடிமைப்படுத்துதற்காக உருவாக்கப்பட்டது. “ஆலம்” குறுநாவலில் ஜெயமோகன் அந்த புள்ளியைத் தொடுகிறார். சமகாலத்தின் முக்கியமான நெருக்கடி ஒன்றை அவர் கண்ணைத் திறந்து பார்த்தன் விளைவு அது எனத் தோன்றுகிறது. குறிப்பாக கடைசி 5-6 அத்தியாயங்கள்.

நாவல் துவங்கும் போது ஜெயமோகன் வைரஸ்கள், பாக்டிரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிர்களை மனிதர்களையும், பிற விலங்குகளையும் கட்டுப்படுத்தி தம் வாகனமாக்குவதைப் பற்றிப் பேசுகிறார். (அவர் நாவலை சரியான இடத்தில் துவங்குவதில் சமர்த்தர்.) இதைப் பற்றி நிறைய ஆய்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக, சிறுகுடலில் உள்ள நுண்ணுயிர்களுக்கு மூளையுடன் உள்ள தொடர்புச் சங்கிலி, நம் உடல் அணுக்களின் மையமாக உள்ள நுண்ணியிர்களின் மைட்டோகாண்டிரியா என இப்போது வந்துள்ள ஆய்வுகளை வைத்தே மனிதனின் சுயம், முடிவெடிக்கும் ஆற்றல் கேள்விக்குள்ளாக்க முடியும். ஆனால் ஜெயமோகன் இந்த நுண்ணுயிர்களின் மறைமுக ‘பிக்பாஸ் நிர்வாகத்தை’ மானுட வன்முறையின், கட்டற்ற தீமையின் ‘உருவகமாக’ மாற்றுகிறார்.
அடுத்து அவர் செய்கிற நல்ல விசயம் குற்றங்களுக்கும் நீதி அமைப்புக்குமான தொடர்புவலைக்கு, கூட்டுறவுக்கு கதையைக் கொண்டு செல்வது. அதற்கு தன் கதையின் நாயகனை ஒரு வக்கீல் ஆக்குகிறார். இவர் “ஜெய்பீமில்” வரும் அமானுட வக்கீல் அல்ல. இவர் நாம் அன்றாடம் பார்க்க இயல்கிற, பூஞ்சையைப் போல நீதிமன்ற வளாகங்களில் படர்ந்திருக்கிற வக்கீல்களில் ஒருவர். நம்மைப் போலொரு மானுடர். தீமை என்பது குற்றங்களுக்கும் நீதி பரிபாலனத்துக்குமான கைகுலுக்கலில் தோன்றுவது என உணர்ந்து கொள்ளத் தயங்குபவர். அவரிடம் மிகச்சிறிதளவு ஈரம் மிச்சமிருக்கிறது. நாவலின் முடிவில் இந்த ஈரம் முழுக்க உலர்ந்து அவர் இந்த அமைப்பின் அப்பழுக்கற்ற சிறு திருகாணியாக மாறுகிறார். அப்போதும் கூட அவர் தன்னால் ஏதோ ஒரு காவிய அறத்தை நிறுவ முடியும் என வேடிக்கையான ஆசையைக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த முடிவு தான் நாவலுக்கு “அறம்”, “ஏழாம் உலகம்” உள்ளிட்ட படைப்புகளுக்கு இல்லாத உண்மைத்தன்மையை அளிக்கிறது. எனக்கு “ஆலம்” தகழி சிவசங்கர பிள்ளையின் “ஏணிப்படிகள்” நாவலை நினைவுபடுத்தியது.

“ஆலம்” என்பது நஞ்சு. சிவபெருமானாலும் முழுங்கவோ துப்பவோ முடியாமல் தொண்டையில் வைத்துக்கொண்ட நஞ்சு. இங்கு அது அகக்கோளாறின் உருவகம். ஜெயமோகன் இந்த உருவகத்தைப் பின் தொடர்ந்து போய் நம்மால் ஏற்கவோ மறுக்கவோ முடியாத, நம்மால் ஆரம்பமோ முடிவோ காண இயலாத, நம்மால் உருவாக்கவோ அழிக்கவோ முடியாத பிரம்மத்தைப் போன்ற விடமாக தீமையைக் கட்டமைக்கிறார். அவர் இந்த தத்துவச் சிக்கலுக்குள் இன்னும் ஆழ்ந்து சென்றிருக்க முடியும், ஆனால் இந்த நாவலில் அதற்கான இடமில்லை எனக் கருதியிருக்கலாம்.

இந்த கதையை நிறைய பேர் குடிப்பகை, கட்டற்ற வன்மம், குற்றங்களின் தொடர்ச்சி, அதன் தோற்றுவாய் பற்றின துப்பறியும் கதை எனக் காண்கிறார்கள். ஆனால் அது ஒரு மேம்போக்கான தோற்றம், ஒரு புகைமூட்டம் மட்டுமே. அதைக் கலைத்தால் எஞ்சும் நிஜமான கதைக்கரு நாம் ஏன் தீயோராகிறோம், அத்தீமையை வைத்து என்ன செய்வது எனும் கேள்வியே.

இந்நாவலின் பலவீனங்கள் என்ன?

முதலில் ஜெயமோகன் இதை ஒரு நாவலாகத் திட்டமிட்டு எழுதவில்லை. ஒரு நெடுந்தொடருக்கான கதையாக எழுதுகிறார். அத்தியாயங்களாக திட்டமிடும் போது ஒவ்வொன்றின் முடிவிலும் ஒரு உணர்ச்சிகரமான நாடகீயமான கண்ணீரும் கம்பலையுமான காட்சியை வைக்க முனைகிறார். அக்காட்சிகள் எந்த முகாந்திரமும் இன்றி சட்டெனத் தோன்றுவதால் எடுபடவில்லை.

கதாபாத்திரங்களின் உணர்ச்சிகர முடிவுகள், நிலைமாற்றங்கள், உருமாற்றங்கள் நம்பகத்தன்மையுடன் இல்லை. ஏனெனில் அவர் காட்சிகளை இவ்வாறு முடிய வேண்டும் என நினைத்து பாத்திரங்களை அவ்வழியே நகர்த்துகிறார், பாத்திரங்களை அவர்களுடைய செயல்வழி பின் தொடரவில்லை. மாற்றங்களுக்கான நியாயமான தர்க்கத்தை உருவாக்கவில்லை. இது இப்படைப்பின் எதார்த்தத்தன்மையை வெகுவாக சிதைக்கிறது.

சில பாத்திரங்களை காட்சி ஊடகத்தை மனத்தில் வைத்து பளிச்சென மனதில் நிற்கும் வசனங்களை சொல்ல வைப்பது.

பாத்திரங்கள் இடைவெளியின்றி நிறைய பேசுவது. (அந்த வசனங்களை கதைசொல்லியின் தரப்பில் இருந்து சுருக்கித் தொகுத்திருக்கலாம்.)

சாதியின் அடிப்படையில் ஒரு பாத்திரத்தை சுபாவத்தை முடிவு பண்ணுவது (ஐயர், மறவர், வேளாண் குடிகள்).

இந்நாவலின் பலம்?

ஒவ்வொரு பாத்திரத்துக்குமான உரையாடல் மொழியை தனித்துவமாக கொடுத்திருப்பது.

திசைதெரியா பறவையைப் போல ஆரம்பித்தாலும், திரைக்கதை சுருக்கம் போலப் போகிறதே என சற்றே அலுப்புறும் போது பாதிக்கு மேல் கதையை சரியாக கட்டுக்குள் கொண்டு வந்து ஒரு விரிவான சமூகச் சித்திரத்தை நீதிமன்ற-குற்றவாளி கூட்டுறவின் வழியாக அளித்திருப்பது. சின்னச்சின்ன தீற்றல்களாக தெரிந்த சட்டகத்தை சட்டென ஒரு முழு ஓவியமாக சில அத்தியாயங்களில் அவர் மாற்றியுள்ள மேஜிக். நாவலின் முடிவிற்கு வந்ததும் “எழுதித் தேர்ந்த கையய்யா” என்று தோன்றியது.

தனிப்பட்ட முறையில் நான் பார்த்த வகையிலான வக்கீல்களும் நீதிபதிகளுமே இக்கதையிலும் வருகிறார்கள். முக்கியமாக வக்கீலை வில்லனாக்கி இருப்பது. “நமக்கு வேறு வழியில்லையா, இந்த சீரழிவின் பகுதியாகத்தான் வேண்டுமா ?” என்று நாயகன் தன் சீனியரிடம் முடிவில் கேட்கும் இடம், இதற்குள் இப்படித்தான் இருக்க முடியும், அப்போதே வெல்ல முடியும், வென்றாலே வாழ முடியும், அதற்கு சிலர் சாகத்தான் வேண்டும் என சீனியர் கோப்ரா அதற்கு பதில் சொல்லும் இடம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...