Skip to main content

அஞ்சலிப் பாப்பா கிரிக்கெட்


எனக்கு ஆரம்பத்தில் தமிழ் கிரிக்கெட் வர்ணனை பிடிக்கவில்லை. ஆனால் போகப் போக அது கொண்டு வரும் கொண்டாட்ட மனநிலை, குதூகலம், விளையாட்டுத்தனம், கன்னாபின்னா கலாட்டா பிடித்தது. அதற்கு முக்கிய காரணம் ஆர். ஜெ பாலாஜி. அவருக்கு முன் தமிழ் வர்ணனை உண்மையிலேயே மரண மொக்கையாக இருந்தது. பெரிதாக அலசலோ விவாதமோ இராது, சரளமான தமிழின்றி கொச்சைத் தமிழில் அரட்டை அடிப்பார்கள். ஆர். ஜெ அதை கிரிக்கெட்டுக்கு சம்மந்தமில்லாத கலாய்ப்பு தமிழாக மாற்றினார். இதன் அனுகூலம் மிக அலுப்பான ஆட்டமோ, பரபரப்பான நெருக்கடியான ஆட்டமோ நம்மால் லகுவாக, மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. இது தமிழ் வர்ணனையில் மட்டுமே உள்ளது. ஆங்கில வர்ணனை இன்றும் துளி கூட நகைச்சுவையே இல்லாத தீவிரமான உரையாடலாகவே சற்று உலர்வாக இருக்கிறது. அதுவா இதுவா எனில் நான் இதுவே போதும் என்பேன். ஏனென்றால் ஆங்கில வர்ணனையில் அரசியலும் நாடகமும் அதிகமாகி விட்டது. அவ்வளவு உணர்ச்சி மேலிடல், லட்சியவாதம் தேவையில்லையே, இது ஒரு பொழுதுபோக்கு தானே, நீங்கள் காசுக்குத் தானே பேசுகிறீர்கள் என்று தோன்றுகிறது.
 முன்பு ஆங்கில வர்ணனையில் ஒரு கல்வி புகட்டும் போக்கு இருந்தது (கவாஸ்கர், கிரெக் சாப்பல்). அதற்காகவே நான் கவனித்துக் கேட்டேன். இப்போது மிகச்சிலர் மட்டுமே பார்வையாளர்களைப் பயிற்றுவிக்கிறார்கள். சும்மா டிராமா தான். மேலும் இன்று முன்பை விட பார்வையாளர்களின் கிரிக்கெட் அறிவு அதிகமாகி விட்டது. முன்பு சைனாமேன் பந்துவீச்சு, ரிவர்ஸ் ஸ்விங், ஸ்லிப் பொஸிஷனிங், நுட்பமான ஷாட்களை வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டத் தேவையிருந்தது. இன்று பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கிறது. அந்தளவுக்கு தகவல்கள் மலிந்திருக்கின்றன. ஓரளவுக்கு கிரிக்கெட்டை கவனிக்கிறவர்களுக்கு வர்ணனையின் வழிகாட்டுதல் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால் கொஞ்சம் ஆய்வு செய்தால் ஒரு ஆட்டத்தின் ஸ்கோரை ஒவ்வொரு பத்து ஓவருக்கும் நம்மால் கணிக்க முடிகிறது. கொஞ்சம் கவனித்தால் அடுத்தடுத்து பந்துகள் எங்கு விழப் போகிறது, பெரிய ஷாட்கள் எப்போது வரப்போகின்றன என நிகழும் முன்பே கண்ணில் தெரிகிறது. வர்ணனை நம் சந்தோஷத்துக்கு மட்டுமே. 
பழைய ஆங்கில வர்ணனையாளர்களிடம் மொழி அழகு இருந்தது. ஷாட்களை வர்ணிப்பதைக் கேட்க அவ்வளவு சிலாக்கியமாக இருக்கும். அது ஒரு தனி புலனனுபவத்தைத் தரும். இன்றைய ஆங்கில வர்ணனையாளர்களுக்கு அந்த மொழி வளம் இல்லை.

மேலும் ஆங்கிலத்தில் உள்ள ஒரு எரிச்சல், பொறாமை, கசப்பு, கோபம், ஏகப்பட்ட அரசியல் அவரவர் பிராந்திய, தேசிய அடையாளம் சார்ந்து இருக்கும். தமிழில் அது இல்லை. தமிழ் வர்ணனை சற்று பத்தாம்பசலியாக, வேடிக்கையாக, களங்கமற்றதாக உள்ளது. எப்போதாவது ஶ்ரீகாந்த் “ஓத்த கோலி” என்று மிக இயல்பாக சொல்வார். அதுவும் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆங்கிலத்தில் யாரும் “பக்கிங் கோலி” என்று சொல்லப் போவதில்லை. சொன்னால் அது பெரிய சர்ச்சையாகி அவரை சிலுவையில் ஏற்றிவிடுவார்கள். தமிழில் அந்தளவுக்கு இல்லை. கிரிக்கெட்டை அவ்வளவு சீரியஸாக பார்க்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். திரையில் சண்டையிடும் எம்.ஜி.ஆரை நோக்கி “வாத்யாரே பிடிச்சுக்கோ” என கத்தியை வீசியவர்களின் மரபில் வந்தவர்கள் அல்லவா நாம்!

தமிழ் வர்ணனையில் பிராமண கொச்சையும் இன்று வெகுவாக குறைந்து வருகிறது. “காற்று வெளியிடை” என பத்ரி நம்மை கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார். அங்கிருந்து பச்சைப் புல்லு பத்திக்கிச்சுக்கு வந்திருக்கிறார். ஓரளவுக்கு தமிழ் சொற்களைப் பேச முயல்கிறார்கள். இது ஒரு முன்னேற்றம் தான். போகப் போக தமிழ் வர்ணனை இன்னும் மேம்படும் என நினைக்கிறேன்.

இன்னொன்று - கிட்டத்த ஒன்பது பத்து மணிநேரத்திற்கு ஆளாளுக்கு மாற்றி மாற்றி பேசினாலும் ஒருவர் தலா 2-3 மணிநேரங்கள் இடைவிடாமல் பேச வேண்டியிருக்கும். தொடர்ச்சியாக ஒன்றை விவாதிக்க முடியாது. சுருக்கமாக மேலதிகமாக ஓரிரு நிமிடங்களில் சொல்லிவிட்டு விவரணை, கேள்வி, பதில், புள்ளி விபரங்கள் எனப் போய்க்கொண்டே இருக்க வேண்டும், சுவாரஸ்யத்தை தக்க வைக்க வேண்டும். போட்டி குறித்த விபரங்களில் அப்டேட்டாக இருக்க வேண்டும். காதில் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சொல்வதைக் கேட்டு தடுமாறாமல் போகிற போக்கில் தமக்குத் தெரிந்ததைப் போல சொல்ல வேண்டும். வார்த்தை பிசிறக் கூடாது. இதெல்லாம் எளிதல்ல. கேட்க வெட்டி அரட்டை போலத் தோன்றும். ஆனால் நிறைய உழைப்பு இருக்கிறது. (நல்ல ஊதியமும் உண்டு தான்!)

எனக்கு ஒரே ஒரு புகார் தான் - ஆட்டத்தின் போக்கை, கள அமைப்பை, அணித்தலைவரின் வியூகத்தை, அடுத்து விழப்போகும் பந்தை தமிழ் வர்ணனையாளர்கள் கணித்துப் பேசுவது இல்லை. சில நேரங்களில் அரட்டையின் சுவாரஸ்யத்தில் பந்து எங்கே போகிறது என்றே கவனிப்பதில்லை. அது வர்ணனையாளர்களின் தவறு மட்டும் அல்ல. முரளி விஜய் கூர்மையானவர். ரமேஷும் தான். நானி கிட்டத்தட்ட துல்லியமாக பந்து வீச்சாளரின் வியூகத்தை, திசை, நீளத்தை பந்து விழும் முன்பே கணித்து சொல்வதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அத்தகைய புத்தி கூர்மைக்கு போதுமான இடமிருப்பதில்லை. அதற்கு நாம் ஆர்.ஜெ பாலாஜியைப் பழிக்க முடியாது. நிகழ்ச்சியின் இயக்குநர் / தயாரிப்பாளர் கேளிக்கையையே அறிவினடத்தில் தேர்வு செய்கிறார். அதனாலே அவர் பாலாஜியை மொத்த ஷோவையும் வழிநடத்த விடுகிறார். மெல்ல மெல்ல மற்ற வர்ணனையாளர்கள் அவருடைய பாணியில் பேச ஆரம்பித்ததும் இதனாலே. இது தமிழ் வர்ணனையின் குணநலன் மட்டுமே.

 நான் மலையாள, இந்தி வர்ணனைகளை கவனிப்பதுண்டு. கொஞ்சம் தெலுங்கு வர்ணனையைக் கூடக் கேட்டு தக்கணூண்டு புரிந்துகொள்வேன். இங்குள்ள வேடிக்கை வினோத விக்கல் நக்கல் அங்கு இல்லை. அதுவும் ஶ்ரீகாந்தும் பாலாஜியும் வந்தால் நான் சிரித்துக்கொண்டே இருப்பேன். இந்தியாவே தோற்றாலும் அவர்கள் நம்மை அழ விட மாட்டார்கள். ஒரு களத்தடுப்பு சொதப்பலுக்கு கொந்தளிக்க விடமாட்டார்கள். மோசமான ஷாட் ஆடி அவுட் ஆனாலும் அதையும் அஞ்சலி பாப்பாவின் சேஷ்டைகளைப் போல் காட்டி புன்னகைக்க வைப்பார்கள். சிரிப்பை விட அருமருந்து வேறுண்டா?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...