"சாய் வித் சித்ராவில்" தேவிபாலாவின் பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் இளைஞனாக இருந்த போது அவரையும், பின்னர் அவரது பேட்டிகளையும் படித்திருக்கிறேன். தெளிவான மனிதர். ஆனால் 'உழைப்பாளி' என்று கூற முடியாது.
கடுமையான இலக்கை வைத்து அதை நோக்கி அன்றாடம் முயல்வதையே நான் உழைப்பென்று சொல்வேன். பார்முலா படி தினமும் பக்கங்களாக எழுதித் தள்ளுவது அசல் உழைப்பல்ல. அது எந்திரத்தனமாக உடலையும் மேலோட்டமாக மூளையையும் பயன்படுத்தும் உழைப்பு மட்டுமே. உ.தா., ஒரு முறை ஆனந்த விகடன் நிறுவனர் அவரது பத்திரிகையில் தான் எழுதி வந்த தொடரில் சில ஆய்வுத் தகவல்களை சேர்க்கும்படி கோப்புகளை, பேப்பர் கட்டிங்குகளைத் தந்து சொன்னதாகக் குறிப்பிடுகிறார். ஒரு எழுத்தாளன் உண்மையில் இந்த ஆய்வுகளை சில மாதங்கள், ஆண்டுகளாவது செய்திருப்பான். நூறு பக்கங்களை எழுதும் முன்பு நீண்ட காலம் சிந்தித்துத் திட்டமிட்டு அத்திட்டத்தைத் திருத்தி, அதற்காக ஆய்வுகள் செய்து எழுதி முடித்து அதையும் பத்திருபது முறைகள் முழுமையாகத் திருத்தினாலே ஒரு நல்ல (வணிக / இலக்கிய) நாவல் உருவாகும். மேற்கில் சில வணிக எழுத்தாளர்கள் கூட இந்தளவுக்கு நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் தமிழில் என்னாயிற்று என்றால் தொடர்கதை, பாக்கெட் நாவல் எனும் பெயரில் வணிக எழுத்தாளர்கள் கண்மண் தெரியாமல் உழைக்கும் கூலிகளாக மாற்றப்பட்டார்கள். தினமும் நான்கு, ஐந்து நாவல்களை எழுத வைக்கப்பட்டார்கள். அக்கதைகளுக்குள் அவர்கள் ஈடுபடவோ சிந்தித்து திட்டமிட்டு எழுதி செதுக்கவோ கால அவகாசம் இல்லை. பாலகுமாரன் பேசியே கொடுத்து விடுவார். அவரது செயலாளர் அதை எழுதி அச்சுக்கு கொடுப்பார். இன்று எனில் அவர் கூகிளின் பேச்சில்-இருந்து-எழுத்துக்கு மென்பொருளை பயன்படுத்தி இருப்பார். எனக்கு சில நாட்கள் வேறொரு படைப்பை எழுதிவிட்டு திரும்ப நாவலுக்கு சென்றால் சில சங்கதிகள் மறந்து தொடர்புவிட்டுப் போயிருக்கும். திரும்ப விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்க வாசித்து எடிட் செய்து மனம் லயிக்க வேண்டும். இவர்களுக்கு அப்படியான எந்த வாய்ப்புகளும் இருக்கவில்லை. ஒரு மாதம் 5-8 நாவல்கள், வருடத்திற்கு 50-10, பத்தாண்டுகளுக்கு ஆயிரம் என எழுதினார்கள். இது மூட்டை தூக்குவதைப் போல எழுதினாலே சாத்தியம். சரியாக உழைத்தால் இருபது ஆண்டுகளில் 10-20 நாவல்களே சாத்தியம். நான் இலக்கிய நாவல்களை சொல்லவில்லை. மேற்கில் கூட சிறந்த / பிரசித்த வணிக எழுத்தாளர்கள் 1500 நாவல்களை எழுதியதில்லை. மலையாளத்திலும் இருக்காது என நினைக்கிறேன்.
ஒருவிதத்தில், நமது சமூகத்தில் 50-75% மக்கள் வணிக நாவல்களைப் படித்திருந்தால் இவர்கள் வருடத்திற்கு இவ்வளவு நாவல்களை எழுதத் தேவையிருந்திருக்காது. நம் காலத்தில் வாழும் சேத்தன் பகத்தைப் பாருங்கள். கொஞ்சமாக எழுதி அதை பல கோடி பிரதிகள் விற்று சம்பாதித்து சொகுசாக வாழ்ந்திருக்கலாம். நம் சமூகத்தில் மிக சொற்பமானவர்களே அந்த காலத்திலும் இந்த வணிக நாவல்களைப் படித்தார்கள் என்பதே எதார்த்தம். அதனாலே வணிக எழுத்தாளர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் எழுதும் துன்பமான வாழ்க்கை வாய்த்தது. இன்னொரு விசயம் எல்லா சமூகங்களிலும் வணிக வாசிப்புக்கு ஒரு நிலையான நுகர்வோர் / வாசகர்கள் இருப்பார்கள். நீங்கள் அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ கடந்த 300 ஆண்டுகளாக வணிக இலக்கியத்தின் வரலாற்றைத் தொட்டுக் காட்ட முடியும். ஆனால் தமிழில் மட்டுமே தொலைக்காட்சி தொடர்களுடன் தொடர்கதைகளும் வணிக நாவல்களும் நின்று மெல்ல மெல்ல காணாமல் போயின. அதன் பொருள் அவர்களுக்கு நிலையான வாசகர்கள் இல்லை, தற்காலிக வாசகர்களே என்பது. கூத்துக்கலை, மேடை நாடகம் போன்ற வெகுஜன கலைகளுக்கும், வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடங்கள், பொருட்களுக்கும் இதைச் சொல்லலாம். நாம் ஆணுறையைப் போலவே வெகுஜன கலைகளையும், வரலாற்றையும் பாவிக்கிறோம். அந்தந்த காலத்துக்கு ஏற்ப பயன்படுத்திவிட்டு உருவி கடாசி விடுகிறோம். இது மற்றொரு அவலம்.
கல்கி, சாண்டில்யன் போன்றவர்கள் கூட இவர்களை விட அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் இவர்களை விட கூடுதலான நேரமும் வசதியும் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அவர்களுடைய நாவல்களை இன்றும் ஓரளவுக்கு ரசித்துப் படிக்க முடிகிறது. 80, 90களில் இந்த ஆயிரக்கணக்கில் எழுதியவர்களுடைய படைப்புகளை இன்று அவர்களாலே படிக்க முடியாது. மனித உழைப்பை அர்த்தமற்றதாக்கி வீணடிப்பதென்றால் உண்மையில் இதுதான். தெளிவாக சொல்கிறேன் - வணிக இலக்கியத்தை நான் வீண் என்று கூறவில்லை; எந்திரத்தில் மாவரைப்பதைப் போல அதைப் பண்ண வைப்பது நேர வீணடிப்பு என்கிறேன். இது உழைப்புக்கே அவமானம் விளைவிப்பது என்கிறேன்.
வார இதழ்களின் இந்த மலைமலையான தேவைக்கு ஏற்ப வணிக எழுத்து மாவைத் துப்பும் எந்திரமாக்கப்பட்ட பின்னர் அத்தகைய பணியை செய்யத்தக்கவர்களே ஊக்கப்படுத்தப்பட்டார்கள். அதனாலே சுஜாதா தேவி பாலாவிடம் “இவ்வளவு வேகமா எழுதாதே” என அறிவுரை கூறுகிறார். ஆனால் நான் சுஜாதாவே அதிகமாக எழுதியவர் என்பேன். அவர் தான் எழுதியதை 10% ஆகக் குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். குறிப்பாக அந்த துப்பறியும் கதைகளும், விஞ்ஞானப் புனைவு சிறுகதைகளும். சுஜாதாவின் படைப்பு மனம் சென்ற இடம் பெண் மனமும், ஆண் - பெண் உறவைப் பற்றின மத்தியமர் கதைகளுமே. வேறு கதைகளில் அவர் பார்முலா படி எழுதுவார். ஆனால் அதிலும் எழுத்து நடையில் ஒரு நேர்த்தியைக் கடைபிடித்தார். வேறு வேலை இருந்ததால் அவருக்குப் பிறரைப் போல “மூட்டை தூக்கும்” அவசியம் ஏற்படவில்லை.
நான் சொல்வதை தேவிபாலா போன்றவர்களும் உணர்ந்திருப்பார்கள். என்ன அவர்களுக்கு உலகியல் தெளிவு அதிகம் - முழுநேர எழுத்தாளராகி வீடு, சொத்து என வாங்கிக் குவித்தார்கள். அவர்கள் தாம் எழுதியதைத் திரும்பிப் பார்க்கப் போவதில்லை. பார்க்க வங்கி இருப்புத் தொகையும் சொத்துக்களும் இருக்கின்றன.
ஆனால் தேவி பாலாவைப் போன்றவர்கள் மேல்மட்டம் மட்டுமே. அவர்களுக்குக் கீழ் எந்த வகையிலும் பொருளீட்ட இயலாத அப்பாவி கூலி படைப்பாளிகள் இருக்கிறார்கள். அவர்களும் கடுமையான உழைப்பாளிகள் தாம் - நான் இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். நான் ஆரம்பத்தில் வேலை பார்த்த ஈ பப்ளிஷிங் நிறுவனத்தில் ஒரு காவலர் இருந்தார். அவரை ஒருமுறை பத்திரிகையில் பேட்டி எடுக்க வந்தார்கள். யார்ரா இவர் என விசாரித்தால் அவர் தான் ஆயிரக்கணக்கில் கதைகளை பிரசுத்துள்ளதாக சொன்னார். ஆனால் அவர் பணமீட்டவோ பெயர் பெறவோ இல்லை.
அதே நேரம் இம்முறை சித்ரா லஷ்மணனின் பேட்டியைப் பார்த்த போது மேலும் சில விசயங்கள் தோன்றின -
வணிக எழுத்தாளர்களோ இலக்கிய எழுத்தாளர்களோ அவர்களுக்கு மனிதர்களை அவதானிக்கும் பண்பு, ஒரு கூர்மை இருக்கிறது.
ஆனால் வணிக எழுத்தாளர்களுக்கு இயல்பாகவே சமூகமாக்கல் பண்பு இருக்கிறது. சமூகப்பொருளாதார வளம் மிக்கவர்களைப் புழகத் தெரிகிறது. அப்பண்பு இன்றைய இலக்கிய படைப்பாளிகளுக்கும் வந்துவிட்டது. இதில் விதிவிலக்கே இல்லை. இதை நான் ஒரு தர மதிப்பீடாகவும் வைக்கவில்லை. நாம் வாழ்வது பணத்தாலும் அதிகாரத்தாலும் ஆன உலகம். இங்கு அப்படி மட்டுமே வாழ முடியும். இந்த பேட்டியை பார்த்த நாட்களில் நான் சாரு க.நா.சு பற்றி பேசிய மாஸ்டர் கிளாஸையும் பார்த்துக்கொண்டிருந்தேன். க.நா.சுவைப் போல ஒரு படைப்பாளி இந்த காலத்தில் வாழவே முடியாது என உறுதியாகக் கூறுவேன். ஒரு மனிதனைக் குடும்பத்துக்குள், உறவுகளுக்குள் வைத்துப் பாதுகாக்கும் பண்பு அன்று இருந்தது. வேலையே பார்க்காமல் யாரோடும் ஒட்டாமல் அவன் நாடோடியாகத் திரிந்தாலும் காப்பாற்றப்படுவான். ஆனால் இன்று பணவீக்கம், பண மதிப்பு வெகுவாக குறைந்து, குடும்பங்கள் உடைந்து மனிதர்கள் தனித்தனியாகி அனாதைகள் ஆகி விட்டார்கள். இன்று க.நா.சு பிறந்தால் ஒன்று சாமர்த்தியசாலியாக மாறி வசதியாக இருந்திருப்பார் அல்லது தெருவில் கிடந்து இறந்திருப்பார். யாராவது ஒரு யுடியூப் சேனல்காரர் அவரை பிரசித்தமாக்கி சில வாரங்களுக்கு கண்டெண்ட் ஆக்கியிருப்பார். இதையே நான் விக்கிரமாதித்யனுக்கும் சொல்வேன். ஜி.நாகராஜன் எனில் இந்த காலத்தை வேறுவகையில் ரசித்திருப்பார். அவர் வேறு வகை. காலமே - சமூக நிலை + பொருளாதாரம் - மனிதர்களின் இயல்பைத் தீர்மானிக்கிறது.
ஒரு சந்தேகம் - உழைத்து முடித்த பின் பாக்கெட் நாவல் படிக்காத, சினிமா பார்க்காத, இசை கேட்காத நேரத்தில் நமது 90% மக்கள் என்ன செய்திருப்பார்கள்? 70களுக்குப் பிறகு மக்கள் தொகையும் குறைந்துவிட்டது. இன்று செல்பேசியும் இணையமும் வந்த பின்னர் மக்கள் செக்ஸை அனுபவிக்கும் நேரமும் குறைந்துவிட்டது. இன்று அந்த செல்பேசிக்குள் உற்றுப்பார்த்தபடி என்ன பண்ணுகிறார்கள் எனப் புரிகிறது. ஆனால் அன்று இரண்டுக்கு மேல் வேண்டாம் பாப்பா என அரசாங்கம் மிரட்டிக்கொண்டிருந்த போது வெகுமக்கள் என்னதான் செய்திருப்பார்கள்?
எனக்குத் தெரிந்து தமிழகத்தில் இரு துறைகள் மட்டுமே காலந்தோறும் வளர்ந்து வந்திருக்கிறது. மது (இன்றைய கஞ்சா) + உணவு. அதாவது செக்ஸின் தேவை குறைந்த பின்னரும் கூட இவற்றின் தேவை அதிகரித்திருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும் போது நம் சமூகத்தைப் பற்றி என்ன தெரிகிறது?