Skip to main content

கல்வி மீதான விமர்சனத்தை ஒரு சதிக்கோட்பாடாகப் பார்க்கும் அபத்தம்



கல்வி விமர்சனம் குறித்தான இவ்வார “நீயா நானா” நானாவைப் பார்த்தேன். அதில் கல்வி சார்பாகப் பேசிய தரப்பினரின் வாதம் மொத்தமாக பெரும் அபத்தமாக இருந்தது.

முக்கியமாக, நிறைய பேர் தவற விட்ட ஒரு கோணம் - யாரும் இங்கு கல்வி வேண்டாம் எனக் கூறவில்லை. நவீன கல்வியில் நிறைய பிரச்சினைகள் உள்ளன, அவற்றைப் பரிசீலிக்க வேண்டும் என்பதே கோரிக்கை. உடனே இதை கல்வியை ஒழிக்க சொல்கிறார்கள் என்று புரிந்துகொள்ளக் கூடாது. திருமணம் வேண்டாம் என்பவர்கள் திருமணத்துக்கோ குழந்தைப்பிறப்புக்கோ எதிராக சதி செய்பவர்கள் அல்ல. அவர்கள் நவீன திருமணத்தின் பிரச்சினைகளை கவனப்படுத்துவதற்காக அவ்வாறு சொல்கிறவர்கள். அதுவே கல்விக்கும் பொருந்தும். என்ன பிரச்சினை எனில் இவ்விமர்சனங்களை எதிர்கொள்ளவே கல்வி வீராச்சாமிகள் தயாராக இல்லை; ஏனென்றால் அவர்கள் கல்வி வீராச்சாமிகள் அல்ல, தனியார்மயமாக்கலை உள்ளுக்குள் நேசிக்கும், நவீன தாராளவாத சந்தையைப் பார்த்து விரைப்பாகும் வீராச்சாமிகள். இந்த விவாதம் கல்வி சந்தையை, தனியார் சந்தையை கேள்விக்குள்ளாக்கக் கூடும் என்பதை அவர்கள் உள்ளூர அறிவார்கள். இந்த சந்தை பல லட்சம் கோடிகள் மதிப்பிலானது. உடனே அவர்கள் இந்த மொத்த விவாதத்தையும் ஆதிக்க சாதி - தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு எதிரான ஒரு மோதலாக, தாழ்த்தப்பட்டவர்களை ஆதிக்கவாதிகள் ஏமாற்றுவதற்காக திரிக்கப்பட்ட வாதமாக மாற்றி விட்டார்கள். நீயா நானா விவாதம் அப்படியே அமைந்தது. எதையும் திசைதிருப்பி இல்லாமல் ஆக்குவதில் நம் ஆட்கள் வல்லவர்கள்.
குறிப்பாக இந்த நிகழ்வில் பேராசிரியர் அழகிரி சொன்னதெல்லாம் வேடிக்கையாக உள்ளது - கல்வியை விமர்சிப்பதே மேற்தட்டினர் (அவர் குறிப்பது மேல்சாதியினர்) பொதுக் கல்வியை ஒழிப்பதற்கான சதித்திட்டம் என்கிறார். யோசித்துப் பாருங்கள் -
அ) மேல்சாதியினராக (அல்லது மத்திய சாதியினர்) இருப்பவர்கள் முதலீடுகளை கையில் வைத்திருப்பவர்கள் என்று கூறப்படுகிறது. இன்று தமிழகத்தில் 13500க்கு மேல் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. 2008இல் இருந்து பத்தே ஆண்டுகளில் 36.5%க்கு தனியார் பள்ளிகள் அதிகரித்திருக்கின்றன. இப்போது இன்னும் அதிகமாக இருக்கும். கடந்த பத்தாண்டுகளில் அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போயிருக்கிறது. இது தமிழகத்தில் என்றில்லை, இந்தியா முழுக்க கல்வியில் தனியார்மயமாக்கல் ஒரு புற்றுநோய் போல வேகமாகப் பரவி வருகிறது. இதில் அரசுப்பள்ளிகளை ஒரு கல்வி விமர்சன உரையாடலை மேலெடுத்து தான் ஒழிக்க வேண்டுமா? ஆவின் பாலை மக்கள் அதிகமாகக் குடித்து நாட்டு மாட்டை ஒழிக்கிறார்கள் என சொல்வதைப் போலிருக்கிறது.
ஆ) அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வேலைப்பளுவும் நேரமும் அதிகரித்திருக்கிறது. இது பொதுக்கல்வியின் தரத்தை மேம்படுத்தி இருக்கிறது என நாராயணமூர்த்தியைப் போல அழகிரி கோருகிறார். இது சரியெனில் அரசு ஆசிரியர்களின் வேலை நேரத்தை 10 மணிநேரங்களில் இருந்து 20 மணிநேரங்களாக உயர்த்தி ஒரேயடியாக சமூகத்தை பல ஆயிரம் மடங்கு உயர்த்தி விடலாமே? இதற்கெல்லாம் ஏதாவது தர்க்கம் இருக்கிறதா? எங்காவது ஆய்வு செய்து நிரூபித்திருக்கிறார்களா குழந்தைகள் யோசிக்கவோ செயல்படவோ செய்யாமல் தினமும் 12-16 மணிநேரங்கள் மனப்பாடம் பண்ணி வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டே இருந்தால் அறிவும் திறனும் வளரும் என்று? பழைய பண்ணை முதலாளிகளைப் போல எல்லாரும் முதுகொடிய வேலை பண்ணிக்கொண்டே இருங்க எனப் பேசி விட்டு கேட்டால் நான் பேசுவது “சமூக நீதி”, நீ என்னை எதிர்ப்பது மேல்சாதி மனப்பான்மை என்கிறார்கள். என்ன பைத்தியக்காரத்தனம் இது?
இ) ஒரு உயர்கல்வி நிலையத்தில் செய்த ஆய்வில், ஏழை மாணவர்கள் அங்கு கிடைக்கும் கல்வியையும் வசதியையும் உயர்வாக மதிப்பிட்டதாகவும், உயர்த்தட்டு மாணவர்கள் எதிர்மறையாக மதிப்பிட்டதாகவும் அழகிரி சொல்கிறார். இது தானமா கிடைத்த மாட்டுக்கு பல்லைப் பிடித்துப் பார்க்காதே என நம் பழைய தலைமுறையினர் சொல்வதைப் போல இருக்கிறது. என்னதான் தானமாகக் கிடைத்த மாடு என்றாலும் வேறு இரு கேள்விகள் எழுகின்றன: 1) இந்த கல்வியை எத்தனை சதவீதத்தினர் அரசுக் கல்வி நிறுவனங்களில் மட்டுமே கற்கிறார்கள்? அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பது எதார்த்தம். ஆகையால் நாம் எல்லா வாதங்களையும் அரசுப்பள்ளி மாணவர்கள் எனும் தரப்பை வைத்து முடிவு செய்தலாகாது.
2) இந்த கல்விக்குப் பின் இவர்கள் எங்கே போகிறார்கள்? எதாவது பூலோக சொர்க்கத்துக்கா? வானுலகத்துக்கா? இல்லை. அழகிரியைப் போன்றவர்கள் (அவர் அரசுப் பேராசிரியர் எனில்) அவர் காலத்தில் அரசு வேலையை வாங்கிக்கொண்டு மாதம் மூன்று லட்சங்கள் வாங்கி சொகுசாக இருக்கலாம். நீங்கள் இந்த பட்டத்தை வாங்கிக்கொண்டு வேலை தேடச் செல்லும் மாணவர்களிடம் பேச வேண்டும் - அவர்களில் எத்தனை பேருக்கு அரசு வேலை கிடைக்கிறது? .05% கூட இருக்க மாட்டார்கள். ‘எங்கள் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆக வேண்டும், எங்களுக்கு கல்வி முக்கியம்’ எனப் பேசுகிறவர்களும் மிகைப்படுத்துகிறார்கள். 1% மருத்துவர்கள் ஆகிறார்களா? இன்று வருடாவருடம் பணவீக்கம் 7.5%. இங்கு பட்டம் பெறும் மத்திய, மேல்-மத்திய வர்க்கத்தினர் ஒரு சராசரியான சம்பளத்துக்கு வேலைக்குப் போகிறார்கள். இப்படி வேலை சந்தைக்கு வருகிறவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே அரசு கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் இது ஒரு நல்ல முதலீடே. என்னை எடுத்துக் கொள்ளுங்கள். நான் மொத்தமாக சிறுவயதில் இருந்து முதுகலைப் படிப்பு வரை என் படிப்புக்கு 15,000 செலவு பண்ணியிருப்பேன். (நான் சுதீர் செந்தில் அண்ணனிடம் இதைக் குறிப்பிட்ட போது அவர் “நானெல்லாம் பள்ளிக்கூடத்தில் இருந்து பொறியியல் வரை படிக்க மொத்தமா 3000 தான் செலவு பண்ணினேன்.” என்றார்.) அதுவும் நான் முதுகலையை என் ஊரிலேயே பண்ணியிருந்தால் என் மொத்த வாழ்க்கைக்கான கல்வி செலவே 8000க்குள் முடிந்திருக்கும். எனக்கு முந்தின தலைமுறையினர் அதை விடக் குறைவாக செலவு பண்ணியிருப்பார்கள். எனக்கும், எனக்கு முந்தைய தலைமுறையினருக்கும் இந்த பட்டத்தினால் கிடைத்த வேலையும் சம்பளமும் பயனுள்ளதே, வளர்ச்சியே. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் இன்று இது சாத்தியமா? இல்லை.
பெரும்பாலான மத்திய வர்க்க ஊழியர்களுக்கு இல்லை (நான் லட்சங்களில் சம்பளம் பெறும் பொறியாளர்களின் சிறிய தரப்பை இங்கு கருதவில்லை). இன்று சராசரியாக ஒருவர் படித்து பட்டம் பெற 30 லட்சம் ஆகிறது என எக்கனாமிக் டைம்ஸ் சொல்கிறது. இதை நீங்கள் பாதியாக எடுத்துக்கொண்டாலும் ஒருவர் அவ்வளவு செலவு பண்ணி படித்து மாதம் 20,000-30,000 வாங்கி அந்த பணம் இந்த பணவீக்கத்தில் செலவுக்கே சரியாக இருக்கும் போது அது லாபமா நட்டமா? கல்விக்காக முதலிட்ட பணத்தின் வட்டியென்ன? அதை நீங்கள் திரும்ப எடுக்க லாபம் பெற எத்தனை ஆண்டுகள் ஆகும்? அது எல்லாருக்கும் சாத்தியமா? அரசுக் கல்வி பெற்றவர்களுக்கு தம் நேரத்தையும் உழைப்பையையும் தவிர முதலீடு பெரிதாக இல்லை என்றாலும் அவர்களில் இன்று எத்தனை பேரால் ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள் வேலை பார்த்து வீடு கட்டி, கல்யாணம் பண்ணி தம் பிள்ளைகளைப் படிக்க வைத்து மகிழ்ச்சியாக வாழ முடியும்? அவர்களில் எத்தனை பேர் வருடமெல்லாம் தவணை கட்டி அடிப்படை வசதிகளைப் பெற்று வாழப் போகிறார்கள்? அதுவும் தினமும் 12-14 மணிநேர வேலை, தினந்தோறும் பாதுகாப்பின்மை, உளவியல் பிரச்சினைகள், நோய்கள் என்று? உடனே எலிக்கறி தின்பதற்கு இது மேல் என தானம் பிடித்த மாட்டை… என ஆரம்பிக்கக் கூடாது?
படிக்க வேண்டாம் என்பதல்ல எங்கள் கருத்து - படிப்பிற்கு பின்பான வாழ்க்கையின் மீதான சமூகப்பொருளாதார வாழ்க்கையின் மீதான விமர்சனமே எங்களுடையது. அதை சரி செய்யுங்கள் என்கிறோம். உடனே கல்வி வேறு, அதற்குப் பின்பான சமூகப்பொருளாதாரம் வேறு என்று திரும்பவும் தானம் கிடைத்த மாட்டுக்கு வரக் கூடாது. எல்லாமே ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. இந்த வேலை சந்தையை நம்பித்தான் கல்வி சந்தைக்கு இருக்கிறது. இதை நம்பித்தான் மக்கள் தம் பிள்ளைகளை இவ்வளவு உழைத்து செலவு செய்து பள்ளிக்கும் கல்லூரிக்கும் அனுப்புகிறார்கள். அவர்கள் தம் பிள்ளைகளின் வாழ்க்கை கல்விக்குப் பின் என்னவாகும் என யோசிப்பதும், கேள்வி கேட்பதும் முக்கியம். அதற்கான தகுதி அவர்களுக்கு உள்ளது. செலவு செய்து வாங்கிய டிவி முதல் நாளே ஓடவில்லை என்றால் கேட்க மாட்டீர்களா? இன்று ஏகப்பட்ட பெற்றோர்கள் கேம்பஸ் பிளேஸ்மண்ட் உண்டா எனக் கேட்டே உயர்கல்வி நிறுவனத்துக்கே வருகிறார்கள். வேலைகள் குறையும் போது, ஊதியம் குறைந்து, பண வீக்கம் ஜெட் வேகத்துக்கு உயரும் போது கல்வி மீது விமர்சனம் வரத்தான் செய்யும். அதை சாதிகள் இடையிலான மோதலாக திரித்து ஏற்றி விடக் கூடாது. அது கயவாளித்தனம்.
ஒருவர் தன் வாழ்க்கையில் 20% பணமாகவும் நேரமாகவும் செலவழித்து படிக்கையில் அதில் இருந்து நல்ல வருமானமும் பாதுகாப்பும் கொண்ட வாழ்க்கையை மிச்ச 80% காலமும் எதிர்பார்ப்பதே நியாயம். அது கிடைக்காத போது விமர்சிக்கவே வேண்டும். அப்போது வந்து கல்வியா செல்வமா வீரமா என டியூனை எடுத்துக்கொண்டு கல்வி என்றால் சரஸ்வதி, செல்வம் என்றால் விஷ்ணு இருவரும் வேறுவேறு எனக் கூறக்கூடாது. இன்று கல்வியும் வேலையும் பணம் தான். பணத்தைப் பணமாக மட்டுமே பார்க்க வேண்டும், அதை சமூக நீதி, மரியாதை, தன்மானம், சாதி, சமத்துவம் என ஜல்லியடித்து ஏமாற்றக் கூடாது. பணத்துக்காகத் தான் படிக்கிறோம், வேலை பார்க்கிறோம், இதுவே எதார்த்தம்! (இது கீழ்த்தட்டு, மத்திய, மேல் மத்திய தட்டுகள் எல்லாருக்கும் பொருந்தும்) மிச்சமெல்லாம் சில்லறையை சிதற விட சமூக ஊடகங்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் நாம் போடும் வேஷம்.
இ) அழகிரி மற்றொரு ஆய்வைக் குறிப்பிட்டு மேல்தட்டு பிள்ளைகள் தம் செல்பேசிகளைப் பொழுதுபோக்குக்கும் கீழ்த்தட்டு மாணவர்களை அவற்றை படிப்புக்கும் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டதாக சொல்லிவிட்டு செல்பேசிகளை மாணவர்கள் படம் பார்க்கவும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் நேரம் செலவழிக்கவுமே பயன்படுத்துவதாக சொல்வது ஏழை மாணவர்களிடம் இருந்து கல்வியைப் பறிப்பதற்கான சதித்திட்டம் என்கிறார். அடேயப்பா, இவர்களைப் போன்றவர்களின் முற்போக்கு சிந்தனையைப் பார்த்து தலை சுற்றுகிறது. ஐம்பது, நூறு பேர்களை வைத்து செய்யும் ஆய்வைக் கொண்டு பொத்தாம் பொதுவாக எந்த முடிவுக்கும் வர முடியாது. மாணவர்கள் இன்று திறன்பேசியை பொழுதுபோக்குக்கு இணையாக படிப்புக்கும் வேலைக்கும் பயன்படுத்துகிறார்கள், இவர்களில் மேல்தட்டு, கீழ்த்தட்டு எனும் பாகுபாடு இல்லை, இன்னும் சொல்லப்போனால் கல்வி நிறுவனங்கள் மீதான விமர்சனத்திலும் இவ்வாறான வர்க்க வேறுபாடு இல்லை என்பதே ஒரு கல்வியாளனாக என் அனுபவம். எதார்த்த உலகம் பற்றின எந்த புரிதலும் இல்லாமல் வானில் மிதக்கும் தாராளமயமாக்கல் வீராச்சாமிகள் ஏட்டுப் படிப்பைக் கொண்டு இஷ்டத்துக்கு அளந்து விடுகிறார்கள்.
ஈ) கல்வியை விட தொழில்முனைவால் அதிகமாக பணம் சம்பாதித்து சேர்க்க முடியுமா இல்லையா என ஒரு கருத்து நீயா நானாவில் வருகிறது. இன்று பெரும் அளவில் மத்திய, மேல்மத்திய வர்க்க இளைஞர்கள் இக்கருத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். இதற்கான காரணம் என்னவென யோசிக்க வேண்டும் - மோடிக்குப் பின் பணவீக்கம் அதிகமாகி, சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைந்துவிட்டது. மாத சம்பளக்காரர்களின் வரி விகிதம் பல மடங்கு அதிகமாகி, பெருமுதலாளிகளின் வரி விகிதம் பெருமளவு குறைந்துவிட்டது. நீங்கள் 100 ரூபாய் சம்பாதித்தால் வரி போக கையில் 70 ரூபாய் எஞ்சுகிறது. அதிலும் பாதிக்கு மேல் பணவீக்கத்தினால் காணாமல் போகிறது. ஆனால் ஒரு பெருமுதலாளிக்கோ 100 ரூபாய் அப்படியே கையில் போகிறது. அல்லது 120 ஆகிறது. அதனால் 100 ரூபாயில் உங்களுக்கும் அவருக்கும் வித்தியாசம் 30-50 ரூபாய். இதனால் தான் மோடிக்குப் பிறகு ஒரு பக்கம் பணவீக்கம் அதிகமாகி வெகு மக்கள் கையில் பணமில்லாமல் தவிக்க அம்பானி, அதானிகள் 50-100% மேல் வளர்ந்தார்கள். உலகின் முதல் 10 பணக்காரர்கள் வரிசையில் வந்தார்கள். இதை நான் சொல்லவில்லை. ஆனந்த ஶ்ரீனிவாசன் அண்மையில் கூறியிருக்கிறார். இக்கருத்து சமூகத்தில் பரவலாக நிலவுவதால் ஏற்படும் விரக்தியால் தான் மேற்சொன்ன தொழில்முனைவு ஆர்வம் தோன்றுகிறது. இதை மேற்சொன்ன நீயா நானாவில் ஒருவர் குறிப்பிட்டதும் அதைக் கேட்ட ஒரு முற்போக்கு விராசாமி “சார் சொசைட்டியில பிரிவிலேஜ் உள்ளவங்களால தான் தொழில்முனைவோர் ஆக முடியும், நாங்க முதல் தலைமுறை படிப்பாளிகள்…” என மோஸிங் வாசிக்கத் தொடங்கினார். வணிக சமூகங்களை சேர்ந்த எந்த பண முதலீடுகளும் இல்லாத சிலர் தம் முயற்சியாலும், உழைப்பாலும், சமூகத்தொடர்புகள் மற்றும் அதிர்ஷ்டத்தாலும் தொழில்முனைவில் ஈடுபட்டு முன்னேறி வளமானதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். சமூகத்தொடர்பு + அதிர்ஷ்டத்தை நாம் சமூக முதலீடு எனக் கூறலாம். ஆனால் அது எப்போதுமே சிறப்புரிமையோ, சலுகையோ ஆகாது. அதை எந்த சமூகத்தாலும் தம் சுயமுயற்சியால் உருவாக்கிக் கொள்ள முடியும். அனைவரும் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
இப்படி இவ்வார நீயா நானாவில் பொய்யையும் புனைவையும் சமூக நீதி லட்சியம் எனும் பெயரில் வைத்து, நடைமுறை பொருளாதார சமூக நிலையை கருத்தில் கொள்ளாமல் தலையை சிலுப்பி சிலுப்பி பேசும் வீரச்சாமிகளைப் பார்த்து களைத்துவிட்டேன். பேராசிரியர் அ. ராமசாமி கடைசியில் பேசுவதைக் கேட்க ஆசைப்பட்டேன். ஆனால் அதுவரைப் பொறுமையாக பார்த்திருக்கும் நெஞ்சுரம் இப்போதைக்கு இல்லை. அதனால் பாதியிலே நிகழ்ச்சியை நிறுத்தி விட்டு காற்றாற வெளியே வந்து நின்றுகொண்டேன். மீதத்தைப் பார்த்தால் இன்னொரு இருபது பக்கங்கள் எழுத வேண்டி வரும். எனக்கு நேரமில்லை. இவர்கள் பேசுவதைக் கேட்பதற்கு பழைய ஷக்கீலா படங்களைப் பார்க்கலாம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...