என்னுடைய கணிப்பு இந்த ஆடுதளத்தில் இந்தியா 250-275 எடுத்தால் அது வெற்றி இலக்காக அமையும் என்பது. ஆனால் இந்திய மட்டையாளர்கள் இதுவரை 300ஐ இலக்காக வைத்து வேகமாக அடிக்க முயன்று ஒற்றை, இரட்டை இலக்கங்களை நாடாமல் பவுண்டரி அடிக்க முயன்று, குறிப்பாக இறங்கி வந்து தூக்கி அடிக்க முயன்று, பந்து மெதுவாக வருவதாக உள்வட்டத்துக்கு உள்ளாகவே கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார்கள். இப்போது கூட அவர்கள் சற்று பொறுமையாக ஆடி 240-250 இலக்கை எட்டினாலே வெல்ல முடியும். அப்படி இலக்கை எடுத்தால் முகமது ஷமி இந்த ஆடுதளத்தில் நன்றாக வீசி குறைந்தது 3 விக்கெட்டுகளும், ஜடேஜா குறைந்தது 2 விக்கெட்டுகளும் எடுப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் பந்து பெரிதாக பவுன்ஸ் ஆகவில்லை, கொஞ்சமாக ஸீம் ஆகிறது, மெதுவாக வருகிறது என்பதால் இவர்கள் இருவருடைய பந்துவீச்சு பாணி எடுபடும் என நினைக்கிறேன்.
ஆனால் பெரிய இலக்கை எடுக்க முயன்று (இரவில் பனி அதிகமாக விழும் எனும் பயத்தில்) இந்தியா 220க்கு கீழே சுருண்டு விட்டால் இங்கிலாந்து சுலபத்தில் வெல்லும் என கணிக்கிறேன்.
இந்தியாவின் இலக்கு இப்போதைக்கு 40 ஓவர்களில் 180-200 என்பதாகவும், கடைசி பத்து ஓவர்களில் 7 விக்கெட்டுகள் வரை கொடுத்து 60-80 வரை எடுப்பதுமே நோக்கமாக இருக்க வேண்டும். அதுவே போதும் என நினைக்கிறேன். ரோஹித் பொறுமையாக 40 ஓவர் வரை நின்று ஆட வேண்டும். பவுண்டரிகளுக்காக அதிகம் முயலக் கூடாது. சுழலர்களை ஸ்வீப் பண்ணாமல் மிட் ஆப், மிட் ஆனை நோக்கி நேராக அடிக்க வேன்டும்.
என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்!