இந்தியாவுக்கே வாய்ப்பதிகம். நியுசிலாந்து பொதுவாக தம் பந்து வீச்சு, களத்தடுப்பின் ஆற்றலால் வெல்வார்கள். இந்த உலகக்கோப்பையில் முதன்முறையாக அதிரடி மட்டையாட்டத்தினால் பெரிய ஸ்கோர்களைக் குவித்து வென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய மட்டையாட்டத்தை மென்னியைப் பிடித்து நிறுத்தி ஓடினது போதும், வாக்கிங் போ என சொல்லத்தக்க பந்துவீச்சு இந்தியாவுக்கு உண்டு. எதிரணி 350 அடிக்க வேண்டிய ஆடுதளங்களில் கூட 300க்கு நிறுத்தியிருக்கிறார்கள் இந்திய வீச்சாளர்கள். குறிப்பாக மத்திய ஓவர்களில் (30-45). முதல் பத்து ஓவர்களில் கொஞ்சமே ஸ்விங் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தி சில விக்கெட்டுகளை எடுக்க முடியும் அவர்களால். கேள்வியெல்லாம் 30-40 ரன்கள் குறைவாக உள்ள ஒரு இலக்கை வைத்து இந்தியாவின் மட்டையாட்டத்தைக் கட்டுப்படுத்தி வெல்ல நியுசிலாந்து வீச்சாளர்களால் இயலுமா என்பதே.
இந்தியாவுக்கு இது நல்ல போட்டியாக இருக்கும். இருதரப்பு போட்டித்தொடர் போல தன்னம்பிக்கையுடன் கூலாக ஆடி வருகிறார்கள். எப்படியோ ஒரே நேரத்தில் மட்டையாளர்கள், பந்துவீச்சாளர்கள் நல்ல ஆட்டநிலைக்கு வந்துவிட்டார்கள். மகிழ்ச்சியாக ஆடுகிறார்கள் என்பது அவர்கள் காத்திருப்பு அறையில் இருப்பதைப் பார்க்கையில் தெரிகிறது. அதுவும் முதல் போட்டியில் ஆஸி வீச்சாளர்களுக்கு எதிராக கோலியும் ராகுலும் காப்பாற்றி வெற்றிக்கு அழைத்துப் போனது இந்திய அணிக்கு ஒரு பெரிய உற்சாகத்தை, நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது என நினைக்கிறேன். அதன் பிறகு அவர்கள் நெருக்கடியை எதிர்கொள்ளவே இல்லை.
ஹர்த்திக் பாண்டியாவின் காயம் கூட நான்கைந்து போட்டிகளுக்குள் சரியாகி விடும் என நினைக்கிறேன். அதுவரை ஹர்த்திக்கின் இடத்தில் சூர்யாவும் (இன்றைய போட்டியில் சூர்யாவுக்கு காயம் இருப்பதால் ஒருவேளை இஷான் கிஷன்), தாகூரை விலக்கிவிட்டு அவரிடத்தில் ஷமி / அஷ்வினும் வந்தால் அணி இன்னும் வலுவாகி விடும். எப்படியும் தாகூர் நல்ல மட்டையாட்ட நிலையில் இல்லை என்பதால் 5 ஓவர்களில் 50 அடிக்க வேண்டிய நிலையில் 7 / 8 விக்கெட்டுகளை இழந்தால் அவரால் காப்பாற்ற முடியாது. பந்து வீச்சிலும் அவரை விட நன்றாக வீச ஆளிருக்கையில் அவருடைய இடத்தில் யாரையும் கொண்டு வரலாம்.
இந்தியா இப்போட்டியில் வென்றாலும் தோன்றாலும் பெரிதாகக் கவலைப்பட மாட்டார்கள். இது அரை இறுதி அல்லவே! ஆனால் அடுத்த இரு போட்டிகளில் வென்று அரை இறுதி இடத்தை உறுதி செய்து விட்டு ஆறுதலாக ஆட ஆரம்பித்து அரை இறுதிக்கு மனரீதியாக தயாராவார்கள். அரை இறுதி ல கொல்கொத்தாவில் என்றால் அங்கு ஷமி + பும்ரா நன்றாக வீசுவார்கள் என்பதால், பவுன்ஸ் குறைவாக இருக்கும் என்பதால் இந்தியாவுக்கு நல்ல வெற்றி வாய்ப்புண்டு. மும்பையில் நடந்தாலும் சமாளிப்பார்கள். பதற்றத்தில் சொதப்பாமல் இருந்தால் சரி. அனேகமாக எல்லா ஆடுதளங்களுக்கும் ஏற்ற பந்து வீச்சு இந்தியாவிடம் உண்டு. பாண்டே சில போட்டிகளில் இல்லாவிடினும் அது இந்திய பந்துவீச்சை வலுப்படுத்தவே செய்யும்.
நியுசிலாந்தின் பெரிய வலிமை அவர்கள் எந்த எதிர்பார்ப்பின் சுமையும் இன்றி ஜாலியாக ஆடுவார்கள் என்பது. அவர்கள் சில உலகக்கோப்பைகளை வென்று வருடாவருடம் நிறைய போட்டிகளில் ஆடும் நிலை வரும் வரை இப்படி “சமைஞ்சேன் இதுக்குத்தான்” என ஜாலியாக ஆடுவார்கள்.
இத்தொடரில் என்னை வெகுவாக கவர்ந்த மட்டையாளர் ரச்சின் ரவீந்திரா. அவர் ஆடும் போது ஒரு இளவரசர் உலா வருவதைப் போல இருக்கும். ஒருவேளை இந்தியாவுக்காக ஆடி கில்லுடன் இணை சேர்ந்திருந்தால் கம்பீரமான துவக்க வீரர்களாக இருந்திருப்பார்கள். அவரது அப்பா தேவையில்லாமல் நியுசிலாந்துக்கு வேலை தேடிப் போய் விட்டார்.
இப்போது என்னுடைய கணிப்பு:
இம்முறை ஆடுதளம் மட்டையாட்டத்திற்கு நன்றாக இருந்தால் நியுசிலாந்து முதலில் மட்டையாடி 270க்குள் முடித்தால் இந்தியாவால் சுலபத்தில் அடித்தாடி வெல்ல முடியும். இந்தியா முதலில் மட்டையாடி 290-300 அடித்தாலும் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெல்வார்கள்.
ஆனால் ஒருவேளை இது 250 ஆடு தளம் எனில், முதலில் பந்து ஸ்விங் ஆகி, பின்னர் மெதுவாக மாறி சற்றே திரும்பும் எனில், டாஸை வெல்லும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். எனில் நியுசிலாந்து ஆட்டத்துக்குள் வருவார்கள். இந்தியாவுக்கு கடும் நெருக்கடி இருக்கும். இங்கு தான் நியுசிலாந்து இஷ் சோதியை ஆடுவார்களா இல்லையா என்பது முக்கியமான முடிவாகும். சோதியின் காயமோ என்னவோ அவரை இதுவரை தொடருக்குள் கொண்டு வரவில்லை. ஆனால் அவரும் சாண்ட்னருக்கும் பதில் ரச்சினும் சாண்ட்னரும் இணைந்து வீசினால் அந்த தாக்கம் இருக்காது. இந்தியா இஷானையும் ஜடேஜாவையும் கொண்டு வந்து அவர்களை சமாளிக்க முடியும். ஒரு கால்சுழலரின் ஆபத்தே தனி. அதை நியுசிலாந்து மிஸ் பண்ணுவார்களா? ஆம் பண்ணுவார்கள்.
ஆடுதளத்தை நான் இன்னும் டிவியில் பார்க்கவில்லை. இது ஒரு குத்துமதிப்பான கணிப்பு மட்டுமே. தலைகீழாக நடந்தால் என்னை வையாதீர்கள்.
