Skip to main content

சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் சொதப்புவதற்கான நிஜக் காரணம்

நாம் இந்திய மட்டையாளர்கள் அனைவரும் சுழல் பந்தை சிறப்பாக ஆடத்தக்கவர்கள் என கற்பனையைக் கொண்டுள்ளோம். ஆனால் அது உண்மையல்ல. சூழலை ஆடும் திறன் மாநிலங்களைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக தமிழக, ஆந்திர வீரர்கள் சிறப்பாக சுழலை ஆடுவார்கள், ஆனால் மும்பை வீரர்களுக்கு - கவாஸ்கருக்குப் பிறகு வந்தவர்கள் குறிப்பாக - சச்சின், ரோஹித், ரஹானே உள்ளிட்டு சுழலை ஆடுவதில் ஒரு பிரச்சினை உள்ளது. (ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமே விதிவிலக்கு) குறிப்பாக எல்.பி.டபுள்யூ, பவுல்ட் ஆவது. சச்சின் ஸ்வீப் ஆடி இந்த குறையை எதிர்கொண்டாலும் அவரும் தன் கடைசிக் காலத்தில் இவ்வாறே தொடர்ந்து சுழல் பந்துக்கு அவுட் ஆகிக் கொண்டிருந்தார். என்னுடைய கணிப்பு படி மும்பை மட்டையாளர்களில் பலருக்கும் சுழல் பந்தை வீச்சாளரின் கையில் இருந்தே வாசித்து அதற்கு ஏற்ப காலாட்டத்தை முன்னெடுக்கும் திறன் இல்லை. அவர்கள் பந்து ஆடுதளத்தில் விழுந்த பிறகே அதை கணித்தாடுகிறார்கள். ஆகையால் அது திரும்புமா நேராக வருமா என்பதை ஊகிக்க முடியாமல் ஒன்று கண்மூடித்தனமாக ஸ்வீப் செய்கிறார்கள் அல்லது பின்னங்காலுக்கு சென்று தடுத்தாட முயன்று அவுட் ஆகிறார்கள்.

சூர்யகுமாரைப் பொறுத்தவரையில் அவர் டி20 போட்டிகளில் சுழல் பந்தை மிட்விக்கெட்டுக்கு ஸ்பீவ் செய்வதாலும் இறங்கி லாங்க் ஆன், லாங் ஆப்புக்கு மேலே சிக்ஸர் அடிப்பதாலும் நாம் அவரை சுழலுக்கு எதிரான நல்ல மட்டையாளர் என நினைக்கிறோம். ஆனால் அதிரடி என்பது பல சமயங்களில் ஒருவரது பலவீனத்தை மறைப்பதற்கான உத்தி மட்டுமே. சமகால மே.இ தீவு மட்டையாளர்களை எடுத்துக் கொண்டால் அவர்களாலும் இம்மாதிரி சுழலை விளாச முடியும். ஆனால் இயல்பாக ஆட சொன்னால் சூர்யகுமாரைப் போன்றே அவுட் ஆகிவிடுவார்கள். சூர்யாவும் முழுநீளத்தில் விழுந்து சுழலும் பந்தின் / குறைவும் வேகப்பந்தின் திசையை கணிக்க முடியாமலே கடந்த முறை இந்தியாவில் ஆஸி அணிக்கு எதிராக தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளில் டக் அடித்தார். அதே அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும் சுழலும் ஆடுதளத்தில் அவர் தடுத்தாட முடியாமல் தான் அவுட் ஆனார். இது அவருக்கு தடுப்பாட்டத்தின் போது பந்தின் திசையை கணித்து கால்களை நகர்த்தும் திறன் குறைவு என்பதைக் காட்டுகிறது. காலாட்டத்தைப் பொறுத்தவரையில் வேகமாக ஸ்விங் ஆகும் பந்தை சமாளிப்பதும் சுழன்று திரும்பும் பந்தை எதிர்கொள்வதும் ஒன்றே. இரண்டிலும் முன்கூட்டிய கணிப்பும் காலாட்டத்தைக் கொண்டு சரியாக எதிர்கொள்ளலும் அவசியம். சூர்யாவின் இந்த பலவீனமே சில நேரங்களில் அவர் ஸ்விங் பந்துக்கும் திணற வைக்கிறது.

சூர்யாவின் ஐ.பி.எல் ஸ்டிரைக் ரேட்டைப் பார்ப்போம். அவர் இடதுகை சுழலர்களுக்கு எதிராக 109 ஸ்டிரைக் ரேட்டிலே ஆடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர் இந்த வகை பந்துக்கு எதிராகவே அதிக முறை அவுட் ஆகி உள்ளார். ஆனால் ஐ.பி.எல்லில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவர் 151-159 ஸ்டிரைக் ரேட்டில் ஆடுகிறார். சுழல் பந்திற்கு எதிராக 141 ஸ்டிரைக் ரேட்டில் அடிக்கிறார். இதற்கு கால் சுழலர்கள் அந்தளவுக்கு கட்டுப்பாட்டுடன் வீச மாட்டார்கள் என்பதும், டி20களில் அவர்கள் சற்று வைடாக வீச முயல்வார்கள், சூர்யா அப்போது அவர்கள் கவருக்கு மேலாக அடித்துவிடுவார் அல்லது பாயிண்ட் பகுதிக்கு வெட்டி ஆடுவார் என்பதும் காரணம் என நினைக்கிறேன். பந்தை அவர்கள் நேராக வீச ஆரம்பித்தால் சூர்யா திணறுவார். 

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சூர்யா இந்தியாவில் 19 சராசரியையும் வெளிநாடுகளில் 27 சராசரியையும் கொண்டுள்ளார். ஏனென்றால் வெளிநாடுகளில் அவர் அதிகமாக தரமான சுழல் பந்தை ஆடத் தேவையிருக்கவில்லை. சர்வதேச டி20 போட்டிகளில் அவரை அதிகமுறை அவுட் ஆக்கியுள்ளவர்கள் கால்சுழலர்கள் - இஷ் சோதி மற்றும் ரஷீத். அதே போல சர்வதேச டி20 போட்டிகளில் இடதுகை வேகவீச்சாளர்களுக்கு எதிராக சூர்யாவின் சராசரி 43.25. ஆனால் இடதுகை சுழலுக்கு எதிரான சராசரி 16.75. ஒருநாள் போட்டிகளில் இடதுகை சுழலுக்கு எதிராக அவர் 4 முறைகள் எல்.பி.டபுள்யு ஆகியிருக்கிறார்.

சூர்யாவின் இந்த பலவீனத்தை சுட்டிக் காட்டிய ஒரே கிரிக்கெட் நிபுணர் இங்கிலாந்தின் நசீர் ஹுசேன் தான். இவர் தான் முன்பு சச்சினின் இதே பலவீனத்தை கணித்து ஆஷ்லி கைல்ஸ் எனும் இடதுகை சுழலரை ரவுண்ட் தெ விக்கெட் வந்து போட வைத்து சச்சினைக் கட்டுப்படுத்தி வீழ்த்தவும் செய்தார்.

டி20களில் சூர்யாவின் ஆட்டம் அதிரிபுதிரானது. அதற்கு ஒரு முக்கிய காரணம் அவர் ஆடும் ஓவர்களில் (சராசரியாக 10-18 அல்லது 14-20) தரமான சுழல் பந்தை அதிகம் ஆட வேண்டி வராது என்பதே. வேகப்பந்தை எதிர்பாராத பல இடங்களில் அடிக்கும் அபாரமான திறன் அவருக்கு உள்ளதும், அவருக்கு எதிராக அந்த ஓவர்களில் தோளுக்கு மேல் துள்ளும் உயரப்பந்துகளை வேகவீச்சாளர்களால் வீச முடியாது என்பதும் மற்றொரு காரணம். ஆக சூர்யாவின் வலிமையும் டி20யின் வடிவமும் அவர் ஆடுகிற சந்தர்பத்தின் அழுத்தங்களும் அவருக்கு சாதகமாகி விடுகின்றன. வீச்சாளர்கள் அவரை எப்படி கட்டுப்படுத்துவது என்று மட்டுமே யோசித்து வீசுகையில் அவர்களை பலவிதங்களில் அடிக்கிற கடமை மட்டுமே சூர்யாவுக்கு இருக்கும். அவுட் ஆவதைப் பற்றின சிந்தனையே இருக்காது. அதே நேரம் சூர்யா ஐம்பது ஓவர் போட்டிகளில் ஆட வரும் போது அவர் தரமான சுழலை தடுத்தும் ஒற்றை ஓட்டங்களுக்கு கறந்தும் ஆட வேண்டி வருகிறது. அதுவே அவரது பலவீனம். பெரிய ஷாட்டுகளுக்கு சென்று அவர்களுடைய ஆட்டமுறையை இவர் கட்டுப்படுத்த முடியாது. அவர்களுடைய பந்தின் திசையை சரியாக கணித்து தடுத்தாடவும் இவருக்கு வராது. அதை மறைக்க தொடர்ந்து ஸ்வீப் செய்ய முயன்றும் பின்னங்காலுக்கு சென்றும் கவர் பகுதியில் தட்டிவிட முயன்றும் அவுட் ஆவதே சூர்யாவுக்கு வழக்கம். ஆனால் நம் வர்ணனையாளர்களும் நிபுணர்களும் சூர்யாவுக்கு இன்னும் ஐம்பது ஓவர் போட்டிகளின் வேகம் பிடிபடவில்லை எனத் தவறாக இதைப் பார்க்கிறார்கள். இந்திய அணி நிர்வாகமோ அவரை 50 ஓவர் போட்டியின் கடைசி 20 ஓவர்களில் ஆட வைத்தால் பிரச்சினையை சரிசெய்யலாம் என நினைக்கிறார்கள். ஆனால் இந்திய மத்திய மட்டை வரிசை பலவீனமானது என்பதால் சூர்யா 5வது எண்ணில் ஆடினாலும் 30 ஓவர்களுக்குள் ஆட வேண்டி வருகிறது. அவர் அங்குதான் சிக்கிக் கொள்கிறார்.

சூர்யா டி20யில் ஒரு மேதையாகத் தெரிவதன் காரணம் அவர் சுழலும் ஆடுதளங்களிலோ சிறந்த சுழல்பந்துக்கு எதிராகவோ ஆடத் தேவையிருப்பதில்லை என்பதே. இந்த சுழல் பந்து பலவீனத்தை எப்படியாவது சரிபண்ணாமல் அவரால் 50 ஓவர், டெஸ்ட் போட்டி வடிவங்களில் மத்திய ஓவர்களில் ஆட முடியாது. அவருக்கு அதிக வாய்ப்புகள் அளிப்பதால் மட்டுமே அவரை ஒரு சிறந்த வீரராக்க முடியாது. கூரை மீதேற்றி பறக்க விட்டால் மட்டும் கோழி வானில் உயரப்பறக்கப் போவதில்லை.  

ப்போதைக்கு சூர்யாவுக்கு வாய்ப்பளித்து நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக சுழலை நன்றாக ஆடக் கூடிய சஞ்சு சாம்சனுக்கு அவ்வாய்ப்புகளைக் கொடுக்கலாம். 24 போட்டிகளில் 23 சராசரி கொண்டுள்ளார் சூர்யா. ஆனால் சஞ்சுவோ 11 ஒருநாள் போட்டிகள் ஆடி 66 சராசரி கொண்டுள்ளார்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...