மணிப்பூர் ‘கலவரத்தின்’ போது குக்கி இனப்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட நிர்வாணமாக நடத்தி செல்லப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரதமரே ‘இறங்கி வந்து’ கண்டித்தார். நிர்பயா வண்புணர்ந்து கொல்லப்பட்ட போது அளிக்கப்பட்ட கவனத்தை ஊடகங்கள் இதற்கு அளிக்கவில்லை என்றாலும் நாடு முழுக்க எதிர்ப்பு பேரணிகள் நடந்தன. நம்மில் சிலர் பிரதமர் வெட்கம் கெட்டவர், அவர் பதவி விலக வேண்டும், பாஜக ஆளும் தகுதியற்ற கட்சி என்றெல்லாம் சொன்னோம். ஆனால் நாம் கவனிக்காமல் விட்ட இரண்டு முரண்பாடுகள் உண்டு. அந்த கொந்தளிப்பான மனநிலையில் அதைச் சொல்ல வேண்டாம் எனக் கருதியதால் இப்போது சொல்கிறேன்:
பாஜக இதையே தான் 30 ஆண்டுகளுக்கு மேலாக பலமுறை பண்ணி ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிறது. குருதியில் வெற்றிக் கையெழுத்து இடுவது அவர்களுடைய தேர்தல் உத்தி. இதை சட்டத்தாலோ தேர்தல் ஆணையத்தாலோ கேள்வி கேட்க முடியாது. அயோத்தியா வன்முறை நடந்து இத்தனை பத்தாண்டுகள் ஆகியும் அதைத் திட்டமிட்டு நடத்திய தலைவர்கள் தண்டிக்கப்படவில்லை. மாறாக அந்த குற்ற சம்பவத்தைக் கொண்டே பாஜக ஒரு மாபெரும் கட்சியாக வளர்ந்து ஆட்சியைக் கைப்பற்றியது. இதை நீதிமன்றத்தால் தடுக்க முடியாது. ஏனென்றால் நமது அரசியலமைப்பு யாரைக் கொன்றும், பலாத்காரம் பண்ணியும் அதிகாரத்தைப் பிடிக்கலாம் என ஒரு மறைமுக அதிகாரத்தை அளிக்கிறது.
நானோ நீங்களோ ஒரு வன்முறையை நிகழ்த்திவிட்டு தப்பிக்க முடியுமா? முடியாது. நம்மைக் கைது செய்து சிறையில் தள்ள ஆயிரம் அமைப்புகள் முன்னே வரும். ஆனால் நானோ நீங்களோ ஒரு கட்சியை நடத்தி மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று அதே குற்றத்தை செய்தால் நம்மை சட்டத்தாலோ காவல்துறையாலோ தண்டிக்க முடியாது. ஏனென்றால் இந்த நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது. ஒருவர் காவல் காக்கிறார், ஆனால் அவரை யார் கண்காணிப்பது? கண்காணிக்க யாரும் இல்லாத ஒருவர் மட்டற்ற அதிகாரத்தைப் பெற்றுவிடுகிறார் அல்லவா?
சரி நீதித்துறை அவரைக் கண்காணிக்கும் எனில் நீதித்துறையிடம் வழக்கை எடுத்துச் செல்வது யார்? குற்றவாளியாக அறியப்படுபவரின் ஆட்சியின் கீழுள்ள நிறுவனங்களே. அதாவது வேலைக்காரரே முதலாளிக்கு எதிராக தண்டனை பெற்றுத் தர வேண்டும். அது நடக்காத காரியம். அப்படி நடந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்கவும் அதைவிடப் பெரிய அதிகாரத்தை குற்றவாளி பெறவும் ஆயிரம் குறுக்குவழிகள் நம் அரசியல் சட்டத்தில் உள்ளன. ஆனால் சாமான்யனுக்கு இத்தகைய குறுக்குவழிகள் இல்லையென்பதை கவனியுங்கள். ஏனெனில் கற்பனை செய்ய முடியாத அதிகாரத்தை சில தனிமனிதர்களுக்கு நாடாளுமன்றம் எனும் பெயரில் நம் அரசியல் சட்டம் அளிக்கிறது. அதன் பிறகு அவர்கள் நீதியுடன் நடந்துகொள்ள வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது அபத்தமானது. அப்படி நீதியுடன் நடந்துகொண்டு அவர்களுக்கு எந்த வெகுமதியும் இல்லையே?
அடுத்து மக்களாட்சி என்பது முதலீட்டியத்துக்கு கூஜா பிடிக்கும் ஒரு தரகு அமைப்பு. பிரதிநிதிகள் நம் பிரதிநிதிகள் அல்ல, அவர்கள் சந்தையின் பிரதிநிதிகள். முதலீட்டியத்துக்கு இணக்கமாகவும், சமயங்களில் முதலீட்டியமாகவும் ஆவதே அவர்களுடைய நோக்கம். நடுவே மக்களுக்காக, மக்களால் என்கிற வசனங்கள் எல்லாம் மேட்டர் படங்களில் வரும் கதையம்சத்தைப் போன்றது. நம்மை முதலீட்டிய சந்தைக்காக நெறிப்படுத்தி சிறந்த அடிமைகளாகவும், வாடிக்கையாளர்களாகவும் உருவாக்குவதே ‘மக்களாட்சியின்’ நோக்கம். முதலீட்டிய சந்தையின் அறத்துக்கு என்ன மதிப்பு? சந்தையின் நோக்கம் முதலை மேலும் மேலும் பெருக்கி அதிகாரத்தை வசப்படுத்துவதே. சந்தையின் தரகர்களும் அவ்வாறு தானே சிந்திக்க முடியும்? வணிகர்களுக்கு வாடிக்கையாளர்களின் பணம் நோக்கம் எனில் ஆட்சியாளர்களுக்கு மக்களின் வாக்குகள். தம் முதலாளிகளைப் போன்றே தரகர்களும் பணமீட்டவும் அதிகாரத்தைப் பெருக்கவும் தானே தலைப்படுவார்கள்? இந்த சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பே அவ்வாறு அமைந்திருக்கையில் நாம் ஆட்சியாளர்களை மட்டும் ஏன் நாம் நீதி தேவர்களாகப் பார்க்கிறோம்? ஏனென்றால் நாம் அப்படியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். கலகங்கள், வன்முறை, பிரிவினை ஆகியவை அதிகாரத்தை வெல்ல முக்கியம் எனில் அவற்றை கட்சிகள் நடத்திக் கொண்டே தான் இருக்கும். கலவரங்களை, மக்களின் இடப்பெயர்புகள், வன்முறை, உயிரிழப்புகளைத் தவிர்க்க வேண்டும் எனில் அவை நிகழ்வதால் ஆட்சியாளர்களுக்கு லாபம் இருக்கக் கூடாது.
உ.தா., அனேகமாக எல்லா கலவரங்களும் ஆளும் வர்க்கத்தின் அனுமதியுடனோ வழிகாட்டுதலின் படியோ தான் நடக்கின்றன என்பது கண்கூடு. பிரிட்டீஷ்காரர்கள் நம்மை ஆண்ட போதும் இதுவே நடந்தது. பிரிட்டீஷ்காரர்களின் கால் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து நம் சுதேசிக் கட்சிகள் ஆட்சி நடத்த ஆரம்பித்த பின்னரும் அதே நடைமுறையே தொடர்ந்தது. இன்று வரை அதுவே தொடர்கிறது. மதத்துவேஷம், பிரிவினை இருக்கக் கூடாது என நமது அரசியலமைப்பை வகுத்தவர்கள் நினைத்திருந்தால் ஒரு மதக்கலவரம் நடந்தால் அப்போது ஆட்சியில் இருக்கும் கட்சியும் அதன் உறுப்பினர்களும் அடுத்த 100 ஆண்டுகளுக்கு தேர்தலில் பங்கேற்க முடியாது என தடைச்சட்டத்தை வகுத்திருக்கலாமே. மதத்தையோ சாதியையோ காட்டி கட்சி நடத்த முடியாது, ஒரு கட்சி மதத்துவேசத்தைத் தூண்டும் படியாக பேசினாலோ எழுதினாலோ நிரந்தரமாக தடை மற்றும் கட்சியின் உறுப்பினர்களுக்கு குடியுரிமை ரத்து எனும் சட்டங்களைப் போட்டிருக்கலாமே. ஏன் செய்யவில்லை? ஏனெனில் அந்த கால ஆட்சியாளர்கள் தம்மை சட்டத்திற்கு புறம்பானவர்களாக வைத்துக் கொள்ள விரும்பினார்கள். ஏனெனில் மதத்தை வைத்து மக்களைப் பிரித்தே வாக்கரசியலை செய்ய முடியும் என அவர்கள் அறிந்திருந்தார்கள். நேரு பிரதமர் ஆக இருந்த போன்றே வலதுசாரித் தலைவரான பட்டேல் நேருவை விட அதிகமாக கட்சி அதிகாரத்தை வைத்திருந்தார் என்று சொல்கிறார்கள். அந்த அதிகாரம் மென்மதவாதத்தில் இருந்து வருகிற அதிகாரம். பாஜக ஆட்சிக்கு வரும் முன்பே இது ரத்த பூமியாகவே இருந்தது. ஒரே வித்தியாசம் பாஜக இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டது. ஆகையால் இந்த தேசத்தந்தைகள் ஆட்சியில் தமக்கான பாதுகாப்பை உறுதி செய்து, அதிக பட்ச அதிகாரத்தை மக்களவை என சொல்லப்படும் எம்.பிக்களுக்கு கொடுத்தார்கள். மக்களின் பெரும்பான்மை வாக்குகளைக் கைப்பற்ற வேண்டுமெனில் என்ன வேண்டுமெனினும் செய்யலாம் என்பதே நம் சட்ட அமைப்பு மறைமுகமாக வழங்கும் உரிமை. அதை பயன்படுத்துவதும் பயன்படுத்தாமல் விடுவதும் கட்சிகளின் விருப்பம்.
இந்த இடத்தில் தான் நமது மக்களாட்சி பக்தர்கள் ‘நீதியுணர்வைக்’ கொண்டு வருகிறார்கள் - அறமும் நீதியுணர்வும் இருந்தால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இதைச் செய்யாமல் மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்வார்கள் என நம் காதில் பூ சுற்றுகிறார்கள். ஆனால் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அரசியல் என்பது நீதியுணர்வின் படி அல்ல அதிகாரத்தை வெல்வதன் படியே நடந்திருக்கிறது, அதற்கான எத்தனையோ லட்சம் பேரின் ரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது எனப் புரியும். கேரட்டையும் (வெகுமதி) கோலையும் (அதிகாரம்) கொண்டு கட்டுப்படுத்துவது எனச் சொல்வார்கள். ஆட்சியாளர்களையும் மக்களால் அப்படி மட்டுமே கட்டுப்படுத்த இயலும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இடும் வாக்குகளால் அல்ல.
அதற்கு முதலில் ஆட்சியாளர்களுக்கு உள்ள மட்டற்ற அதிகாரத்தை குறைக்க வேண்டும். சாதிய, மதவாத கலவரங்கள் மட்டுமல்ல தேசியவாதத்தை தூண்டி விடும் நோக்கில் இதுவரை நடத்தப்பட்ட இந்தியா-பாக் போர்களைத் தடுக்கவும் இதுவே சிறந்த வழி. ஒன்றிய அரசுக்கு சுலபத்தில் அதிகார அமைப்புகளை, காவலர்களை, ராணுவத்தை செயல்படுத்தும் உரிமையை அளிக்க கூடாது. நிர்வகிக்கலாம் ஆனால் முடிவெடுக்க மக்களின் கருத்துக்கணிப்பை நடத்தி முடிவை ஒவ்வொரு முறையும் அறிய வேண்டும் எனும் படி சட்டம் இருக்க வேண்டும். ஆனால் நாம் என்ன செய்கிறோம், ஒருமுறை வாக்களித்துவிட்டால் அடுத்த 5 ஆண்டுகளும் அவர்கள் என்ன வேண்டுமெனிலும் முடிவெடுக்கும் உரிமையைக் கொடுக்கிறோம். இது மிக மிக அபத்தமான முறை. நம் அண்டை நாடான இலங்கை இப்படித்தான் பொருளாதாரத்தை சிதைக்க தன் ஆட்சியாளர்களை அனுமதித்து மக்களே தெருவுக்கு வந்து பிச்சையெடுக்கும் நிலையை ஏற்படுத்தினார்கள். இங்கு பணமதிப்பிழப்பு கிட்டத்தட்ட அதைப் போன்றதொரு நிலையை ஏற்படுத்தியது. குடியுரிமை திருத்தச் சட்ட முயற்சியால் நாடே கொந்தளித்து தெருவுக்கு வந்தது. இப்படி மக்களைவில் எந்த சட்டம் எடுத்தாலும் அது மக்களுக்கு பாதகமாகவே முடிகிறது. இது ஏன் எனில் ஆட்சியாளர்கள் ‘எப்போதும்’ தமக்கும் தமது முதலாளிகளுக்கும் சாதகமாகவே சட்டம் இயற்றுவார்கள். மனிதர்கள் சுயநலமிகள். மனிதனை அச்சத்தினாலும் வெகுமதியாலும் மட்டுமே கட்டுப்படுத்த முடியும், அன்பினால் அல்ல. நம்முடைய அரசியலமைப்பின் பிரச்சினை அது ஆட்சியாளர்களை மனிதர்களாகப் பார்ப்பதில்லை. ஒருவித தெய்வமாகப் பார்க்கிறது என்பது. அதனால் குடிமக்களைக் கட்டுப்படுத்தும் எந்த சட்டமும் ஆட்சியாளர்களுக்கு இருப்பதில்லை. அவர்களே சுயமாகக் கட்டுப்படுத்தி, சுயமாக தணிக்கை பண்ண வேண்டும் என கடவுள் மீதான அதே எதிர்பார்ப்பை அவர்கள் மீதும் வைக்கிறது.
அடுத்து ஆட்சியை நாம் சேவையாகப் பார்க்கிறோம், ‘வேலையாக’ அல்ல. மிக மிக மோசமாக ஆட்சி செய்து நாட்டையே அழித்தாலும் அதனால் அவர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஒருமுறை இழந்த ஆட்சியை அடுத்தடுத்த தேர்தல்களில் பிடிக்கலாம். நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறுப்பில் இருந்து மிக மோசமாக நிர்வகித்து அதை சீரழித்து தரைமட்டத்துக்கு கொண்டு வந்தால் அதன் பிறகு மற்றொரு நிறுவனத்தில் நீங்கள் உச்ச நிர்வாகப் பொறுப்புக்கு வர முடியாது. வீட்டில் உட்கார வேண்டியதுதான். அதே போல ஒரு அமைச்சரவையால் நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டால், அதை புள்ளிவிபரங்களால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடிந்தால் அக்கட்சி பின்னர் தேர்தலில் போட்டியிடவே முடியாது எனும் நிலை வர வேண்டும். கட்சியின், தலைவர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும். எனில் எந்த கட்சியும் அலட்சியமாக ஆட்சி பண்ணாது. சாமான்ய மனிதனுக்கு வழங்கப்படாத அளவுக்கு எண்ணற்ற மன்னிப்புகளை ஏன் இந்த அமைப்பு ஆட்சியாளர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்? அதை வேலையென்று வரையறுக்காமல் சேவையென்று பார்ப்பதால் தான்.
இது நம் நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளிலும் உள்ள பிரச்சினை தான். தேர்தலில் இவர்களுக்கு வாக்களிப்பது ஒரு பைத்தியக்காரனின் கையில் துப்பாக்கியைக் கொடுத்து யாரை வேண்டுமானாலும் சுடு என்பதைப் போன்றது. ஒருவேளை அவன் ஆபத்து குறைவான பைத்தியக்காரனாக இருக்கலாம், அவன் யாரையும் சுடாமல் இருக்கலாம், அல்லது அவன் ஒரு சைக்கோ கொலைகாரனாக இருக்கலாம், ஆனால் அவனிடம் துப்பாக்கி உள்ளவரை மக்களுக்கு ஆபத்து தான். அந்த துப்பாக்கியைப் பிடுங்கி அலமாரியில் பூட்டி வைக்கிற வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் வர வேண்டும். அதைவிட்டு விட்டு அந்த சைக்கோ கொலைகாரனை நாம் ஏன் சபித்துக் கொண்டிருக்கிறோம் என எனக்குப் புரியவில்லை. அவன் காதில் விழவா போகிறது? அவன் ஒவ்வொரு முறையும் கலவரங்களை உண்டு பண்ணி அதிக வாக்குகளைப் பெற்று அதிகாரத்தில் இருப்பான். கஜானாவை தன் வசப்படுத்துவான். அவன் நல்லவன் என்பதால் கலவரம் நடத்த மாட்டான் என்பது லட்சியவாத பித்துக்குளித்தனம். லாபம் கிடைத்தால் எதையும் விற்கலாம் எனும் பொருளாதார அமைப்பின் தரகர் அல்லவா அவன்? ஒரு பொருளை விற்பதற்குப் பதில் அவன் உங்கள் உணர்வுகளை (வெறுப்பு, கசப்பு, பயம்) விற்று சம்பாதிக்கிறான்.
2) இம்மாதிரி பிரிவினைக் கருத்தியலை ஒழிப்பதற்கு முதல் வழி தனித்தொகுதி முறையை நாடு முழுக்க அமுல்படுத்துவதே. அப்போது மக்களைப் பிரித்து வாக்குவாங்கும் அவசியம் கட்சிகளுக்கு இருக்காது. எல்லா சாதி, இனக்குழு, மதத்தினருக்கும் சமமான பிரதிநுத்துவம் இதனால் கிடைக்கும். அப்போது அதிகார படிநிலையும், அதற்கான மோதல்களும் சமூக அளவில் இருக்காது. இன்னொரு விசயம் மாநிலங்களின் மக்கள் தொகையை வைத்து நாடாளுமன்ற இருக்கைகளைத் தீர்மானிக்கும் முறையும் தவறானது. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவிலான பிரதிந்துத்துவம் இருப்பதே சரி. அப்போது ஒரு மொழியை, பண்பாட்டை, மதத்தை அனைவர் மீதும் திணிக்கும் வெறி வராது. அந்த வெறி பெரும்பான்மைவாத வெறி. அதுவே நம்மூரில் மதவாதம் என அறியப்படுகிறது. ஆனால் அடிப்படையில் மக்களாட்சி பெரும்பான்மைவாத பாதுகாப்பின்மையைத் தூண்டு வாக்குகளை வாங்க அனுமதிக்கிறது. காங்கிரஸ் சிறுபான்மையிடம் பெரும்பான்மை கருணை காட்ட வேண்டும் எனக் கூறுகிறது, பாஜக அது அவசியமில்லை என்கிறது. ஆனால் இரு கட்சிகளுமே சிறுபான்மைக்கு முகமையை, சமத்துவத்தை நேரடியாக அளிக்க முன்வருவதில்லை. உனக்கான சமத்துவத்தை நான் தொடர்ந்து உத்தராவதம் செய்வேன், ஆனால் அதற்கு நீ என்னை சார்ந்திருக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் சித்தாந்தம், எனக்கான சமத்துவத்தை நானே உத்தரவாதம் செய்வேன், அதற்கு சிறுபான்மை நீ என்னை சார்ந்திருக்க வேண்டும் என்பது பாஜகவின் சித்தாந்தம். இரண்டுமே அசமத்துவத்தை பேணுபவை என்பதை கவனிக்க வேண்டும். நம்மூரில் இப்படி பெரும்பான்மைவாதத்தை ஏதோ பெரும் சமூக விடுதலை எனக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். என்னைப் பொறுத்த வரையில் இது காட்டு விலங்குகளின் ஆட்சி மட்டுமே.
அதனாலே நாம் பெரிய ஜீயையோ சின்ன ஜீயையோ பழிக்கவோ கண்டிக்க மாட்டேன். அவர்கள் கையில் துப்பாக்கியை கொடுத்த அரசியல் அமைப்பையே பழிப்பேன்.