Skip to main content

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே



பத்ரி சேஷாத்ரி என் நெருக்கமான நண்பர் அல்லவெனினும் எனக்குப் பிரியமான பரிச்சயங்களில் ஒருவர். ஒரு பதிப்பாளராகவும், கிரிக் இன்போ இணையதளத்தின் மூலவர்களில் ஒருவர் எனும் அளவிலும் அவர் மீது எனக்கு மரியாதையுண்டு. அவர் இன்னும் பெரிய உயரங்களுக்கு சென்றிருக்க வேண்டியவர். கிழக்குப் பதிப்பகம் ஒரு வித்தியாசமான பதிப்பகம். வெகுஜன வாசிப்புக்கு குறைந்த விலையில் பல நல்ல அறிமுக நூல்களுக்கு எடுத்துச் சென்றது, நல்ல லாபமும் பார்த்தது. இன்று யுடியூபில் சேனல்கள் செய்கிற அதே காரியத்தை (அறிமுகம்-சுவாரஸ்யம்-பரபரப்பு) அவர் ரெண்டாயிரத்தில் பதிப்பில் செய்து பார்த்தார். முதன்முதலாக காலக்கெடு விதித்து சம்பளம் கொடுத்து எழுத்தாளர்களைக் கொண்டு 150-180 பக்க அளவில் ஒரு தொழிற்சாலையைப் போல புத்தகங்களை உருவாக்கினார். நேர்த்தியான எளிமையான அறிமுக நூல்கள். என்.ஹெச்.எம் செயலியை அறிமுகப்படுத்தினார். என்னால் துல்லியமாக சொல்ல முடியவில்லை எனினும் 2010க்குப் பிறகு பதிப்பாளராக அவரது வீழ்ச்சி மெல்ல துவங்கியது என நினைக்கிறேன். வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைப் பெற்று இந்திய மொழிகளில் அவர் ஏற்கனவே தமிழில் வெற்றிகரமாக செய்த முயற்சிகளை செய்து பார்த்தார் என்றும், அவை தோல்வியுற்றன என்றும் கேள்விப்பட்டேன். ஆனால் அதன் பிறகும் அரைப் பத்தாண்டு கிழக்குப் பதிப்பகம் சில நல்ல நூல்களைக் கொண்டு வந்தது. அதனாலே 2017இல் எனது “90களின் தமிழ் சினிமா” நூலை அவர்களுக்கு அளித்தேன். அந்த புத்தகம் பரவலாக வாசிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் நான்காண்டுகளுக்கு மேல் ராயல்டியே தரவில்லை என்றதும் விசாரித்தேன். பதிப்பகம் நட்டமடைந்ததால் அதை விற்றுவிடப் போவதாகவும், ராயல்டி எப்படியாவது கொடுத்துவிடுவார்கள் என்றும் கூறினார்கள். அதன் பொருள் ராயல்டி கிடைக்காது என்றே எனப் புரிந்து விட்டுவிட்டேன்.

இந்த இடைப்பட்ட காலத்தில் பத்ரி தொழில்பூர்வமாக என்ன செய்தார் எனத் தெரியவில்லை, ஆனால் சமூகவலைதளங்களில் ‘கொடியேந்திய வலதுசாரி குமரன்’ ஆகிவிட்டார், ஒரு பக்கம் பி.ஏ கிருஷ்ணன் என்றால் இன்னொரு பக்கம் பத்ரியும் கிழக்கு மகாதேவனும். அதே கொடியுடனே இப்போது சிறைக்கும் சென்றுவிட்டார். இதைப் பார்க்கையில் கடந்த சில ஆண்டுகளாக அவர் இந்த புள்ளியை நோக்கித் தான் நகர்ந்து வந்திருக்கிறாரோ எனத் தோன்றுகிறது. ஏனென்றால் கிழக்கு பதிப்பித்த அரசியல், வரலாற்று நூல்களிலும் ஒரு மோசமான வலதுசாரிப் பார்வை தான் இருந்தது, அவற்றை எழுதுபவர் வலதுசாரி அல்லாது இருந்தாலும் கூட. இதை நான் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் காணவில்லை.
ஆனால் அவருக்கு இதனால் என்ன லாபம் கிடைக்கும் எனத் தெரியவில்லை. இந்துத்துவ வெறி, பார்ப்பனியம் போன்ற பதில்களை நான் ஏற்கவில்லை. அந்த காலம் முடிந்துவிட்டது. இன்று வணிக வெறி மட்டும் தான். பாஜக ஏன் தமிழகத்தை கைப்பற்ற நினைக்கிறது என்றால் இந்துத்துவத்தை தென்னகத்தே நிலைநாட்ட அல்ல. தமிழகத்தில பல லட்சம் கோடிகள் பணம் வணிக பரிவர்த்தனை அரசின் வழியாக நடக்கிறது. பாஜகவின் நோக்கம் அதை ஆட்டையப் போடுவதுதான். அதற்காகவே மத்திய அரசு அவ்வளவு பணத்தை இங்கே பாஜக வழியாக முதலீடு பண்ணுகிறது. தென்னகம் அவர்கள் கைக்குப் போனால் அவர்கள் இன்னும் வளமான பலமான கட்சி ஆவார்கள். அண்ணாமலையோ அல்லது அப்போது உள்ள எந்த தலைவரோ பல தலைமுறைகளுக்கான சொத்துக்களை சம்பாதிப்பார்கள், அவர்களுக்கு ஏற்ற மார்வாரி வணிகர்கள் இந்த சந்தையை முழுமையாக கைப்பற்றுவார்கள். மற்றபடி தமிழகம் முழுக்க கலவரங்கள் வெடித்து இது ரத்தபூமியாகும் என்றெல்லாம் நான் நம்பவில்லை. பாஜகவுக்கு இது வியாபார புரோஜெக்ட் மட்டுமே.
அதே நேரம் பாஜகவுக்கு இங்கே சித்தாந்த பலம் இல்லை. அவர்கள் கேரளாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிரான மேல்சாதி இந்துக்களின் கோபத்தை சீண்டிவிட்டு அங்கே பல போலி கதையாடல்களை ஊடகங்களில் முன்னெடுத்து ஓரளவுக்கு பலம் பெற்றார்கள். அதை இங்கே எப்படி செய்வது எனத் தவிக்கிறார்கள். அதனாலே ஊழல் எதிர்ப்பு கதையாடலும், சாதிய ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் பிரச்சாரமும் அவர்களுடைய கையில் ஏந்திய ஆயுதங்கள் ஆகின்றன. அதற்காக யுடியூபர்கள், தரகர்களை விலைகொடுத்து வாங்கி, பெரு ஊடக முதலாளிகளை வலைவீசிப் பிடித்து மாதாமாதம் பல கோடிகள் இதற்காக செலவு செய்கிறார்கள். செந்தில் பாலாஜிக்கு எதிராக இவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்து விட்டு ஒருநாள் அமலாக்கத்துறையை அனுப்பினார்கள், கைதுகள் நடந்தன, நாங்க தான் சொன்னோமே என சவுக்குகள் சிரித்தார்கள். மாரி தாஸ், சவுக்குக்கு அடுத்த ஒவ்வொரு ‘பிரச்சாரக்காக’ அண்ணாமலை களமிறக்குகிறார். ஒருவர் பிரச்சாரக்காக முழுமையாக குடமுழுக்கு ஆவதற்கு ஒருமுறையேனும் சிறைசெல்ல வேண்டும் போல.
பத்ரியை பேச அழைத்தது ஆதன் சேனல், அது பாஜக தரகர்களின் முகாம் எனத் தெரியும். அதன்படியே பத்ரி மணிப்பூர் கலவரங்களை மிகுந்த மதக் காழ்ப்புணர்வுடன் சித்தரித்துப் பேசினார். பத்ரி இதற்கு முன்பும் டிவி சேனல்களில் பேசியதுண்டு என்றாலும் இம்முறை அவர் ஒரு தெளிவான உத்தேசத்துடனே வந்ததாகத் தெரிகிறது. அதைப் பார்க்கையில் “நானும் ரௌடி தான்யா, என்னையும் அரெஸ்ட் பண்ணுய்யா” என அவர் கேட்பதைப் போலிருந்தது. நமது நடுநிலையாளர்கள் வருந்துவதைப் போல இக்கைது திமுகவின் முன்னெடுப்பாகத் தெரியவில்லை. நிச்சயமாக பாஜகவினரின் திரைக்கதையே தான், திமுக அதை நிறைவேற்றி இருக்கிறது என நினைக்கிறேன். ஏனென்றால் சவுக்கைப் போன்றே இவரும் நீதிபதியை கையைப் பிடித்து இழுத்து சிறைக்குப் போகிறார் பாருங்கள். பத்ரி கைதாவது தாமதமாகியிருந்தால் அண்ணாமலையே ஆபீஸர்களுக்கு போன் போட்டு “என்ன பிரதர் சீக்கிரமா அரெஸ்ட் பண்ணுங்க, நான் வேணும்னா செண்டர்ல இருந்து பேசச் சொல்லட்டா, ஓஹ் ஓக்கே பிரதர்” எனத் தூண்டி விட்டிருப்பார் என நினைக்கிறேன்.
பத்ரி பேசியதைப் போன்ற பேச்சுகளின் நோக்கமே ஒரு பக்கம் சலசலப்பை உண்டுபண்ணுவது தான். தமிழகத்தில் உள்ள சில ஆயிரம் பாஜக ஆதரவாளர்களில் கூடுதலாக சில நூறு பேர்களை இவ்வகையான பேட்டிகளால் உருவாக்கினாலே அவர்களுக்கு ஆதாயம் தான். கிழக்கு அறிமுகப்படுத்திய மாரி தாஸையும், பதிப்பித்த சவுக்கு சங்கரையும் பாருங்கள். இவர்களும் இதையே தான் செய்தார்கள். இவர்களுடைய கைதை பாஜகவும் ஆதனும் எதிர்கொண்டதைப் போன்றே பத்ரியின் கைதையும் எதிர்கொள்கிறார்கள். அண்ணாமலை காலையிலே கண்டன அறிக்கையை வெளியிட்டுவிட்டார். இனி பத்ரி வெளிவந்ததும் அவரை வரவேற்பார்கள். அவரை அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பேச வைத்து தியாகி ஆக்குவார்கள்.
கேரளாவில் இடதுசாரி யூனியன்கள் கிடைத்தவர்களை எல்லாம் பிடித்து ‘ரத்த சாட்சி’ ஆக்குவார்கள் என ஒரு கிண்டல் பேச்சுண்டு. அது உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் பாஜகவின் / ஆர்.எஸ்.எஸ்ஸின் வரலாறு முழுக்க ‘கற்பனையான ரத்த சாட்சிகளால்’ ஆனதே. இவர்களே குஜராத்தில் ரயிலைக் கொளுத்தி அப்பாவிகளைக் கொன்றுவிட்டு ‘செத்தது எங்க பிரச்சாரக்’ என்று பிண ஊர்வலம் நடத்தி அடுத்து உடனே காவலதுறையினரின் உதவியுடன் கலவரம் நடத்தி சிறுபான்மையினரைக் கொல்வார்கள். மணிப்பூரிலும் இதுவே நடந்தது. தமிழகம் மாதிரி மாநிலங்களில் ரத்த சாட்சிக்கு பதில் ‘சிறை சாட்சி’. ஒருவர் சிறை சாட்சி ஆன பின்னரே அவரை முழுநேர ஊழியராக அண்ணாமலை நியமனம் செய்வார்கள். அதன் பிறகு அவர்கள் ‘செழிப்பான’ வாழ்க்கையை வாழ்வார்கள். அவர் கொடுக்கும் தைரியத்தில் ‘அடேய் டி.ஐ.ஜி, அடேய் கமிஷ்னர் உன்னை சீவுறேண்டா, அடேய் ஜட்ஜு உன்னை ஓட விடுறேண்டா, அடே மினிஸ்டர் உன்னை கைது பண்ண வைக்காம தூங்க மாட்டேன்’ என்றெல்லாம் சூளுரைப்பார்கள். பத்ரி இவர்கள் இடையே இனி ஒரு ‘அறிவுஜீவி’ பாத்திரம் வகிப்பார் என நினைக்கிறேன்.
எனக்கு பத்ரியின் கருத்துக்களுடன் உவப்பில்லை என்றாலும் அவரை தனிப்பட்ட முறையில் பிடிக்கும். அதனாலே இந்த ‘சிறை சாட்சி’ படலத்துக்குப் பின்னர் அவர் யானைப் படை, குதிரைப்படை, அதிகாரம் செல்வாக்கு செல்வம் என மகிழ்ச்சியாக இருந்தால் எனக்கும் சந்தோஷம் தான். ஆனால் அமெரிக்காவில் படித்து வேலை செய்து எலான் மாஸ்க் போல இருக்க வேண்டியவர் இப்படி மாரிதாஸ், சவுக்கு போன்ற ஜேப்படித் திருடர்களின் குரூப்பில் சேர்ந்துவிட்டாரே என நினைத்தால் தான் சற்று வருத்தமாக இருக்கிறது.
பி.கு: எதிர்காலத்தில் நீங்கள் உயர்ந்து கிழக்குப் பதிப்பகமும் நிலைப்பெற்றுவிட்டால் என்னுடைய ராயல்டியை தர மறந்துவிடாதீர்கள் பத்ரி. நான் என்றும் உங்கள் நலம் விரும்பி தான்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...