இன்று நான் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது என் அருகில் இருந்த நண்பர் சாட் ஜிபிடி இணையதளத்துக்கு சென்று அந்த தலைப்பைக் கொடுத்தார். செயற்கை நுண்ணறிவு அரை வினாடியில் மொத்த உரையையும் கொடுத்தது. நண்பர் அந்த பேச்சாளர் பேசுவதற்கு பயன்படுத்திய பி.பி.டி சிளைடுகளைக் காட்டி “ரெண்டும் ஒண்ணுதானே?” என்றார். ஆமாம், ரெண்டும் ஒன்றுதான்! என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. முன்பு நாம் ஒரு தலைப்பின் கீழ் பேசவோ கட்டுரை எழுதவோ வேண்டுமெனில் இணையத்தில் கிடைத்தும் கட்டுரைகள், விக்கிபீடியாவை பயன்படுத்தி தகவல்களைத் தொகுத்து வடிவம் கொடுக்க வேண்டும் அல்லது ஏற்கனவே இருக்கும் கட்டுரையைத் திருட வேண்டும். இந்த திருட்டை எழுத்துத்திருட்டு என்கிறார்கள். பொதுவாக கட்டுரைகளிலோ கல்விப்புல இடுபணிகளிலோ இப்படியான திருட்டை செய்தால் சுலபத்தில் கண்டுபிடிக்கும். இதற்குத் தனியாக மென்பொருளும் உள்ளது. ஆனால் சாட் ஜிபிடியைக் கொண்டு செய்யப்படும் திருட்டை அப்படி சுலபத்தில் கண்டுப்பிடிக்க இயலாது - ஏனென்றால் சாட் ஜிபிடி தகவல்களை உருவி ஒரு புதிய மொழியில் தந்துவிடுகிறது. பத்து முறை கொடுத்தால் பத்தும் புதிய மொழியாக இருக்கும்.
என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு இது முற்றிலும் புதியதொரு சிக்கலை உருவாக்குகிறது:
- முதலில், நாங்கள் வகுப்பில் எந்த புதிய தலைப்பில் சென்று பேசினாலும் மாணவர்கள் அதை சாட் ஜிபிடியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். குறிப்புகளுக்காக ஆசிரியர்களை நாடுவார்கள். எந்த தலைப்பில் போட்டாலும் சாட் ஜிபிடி அடிப்படைத் தகவல்களுடன் ஒழுங்கான சீரான வடிவில் ஒரு சிறந்த குறிப்பை அவர்களுக்கு அரை நொடியில் கொடுத்துவிடும். அதை வைத்து தேர்வுக்குப் படிக்கலாம். பல புத்தகங்களில் இருந்து, இணையதளங்களில் இருந்து குறிப்புகளை எடுத்து ஒவ்வொரு தலைப்புக்கும் பி.பி.டி தயாரித்துக்கொண்டு வரும் ஆசிரியர்கள் இத்துடன் காலாவதி ஆகிவிடுவார்கள்.
- அடுத்து, மாணவர்கள் தமது உள்மதிப்பீட்டுத் தேர்வுக்கு இடுபணிகளைச் செய்வார்கள். பள்ளி துவங்கி பல்கலைக்கழகம் வரை மாணவர்கள் ஏராளமான எழுத்து இடுபணிகளை செய்வதும், குறிப்பிட்ட தலைப்புகளை பி.பி.டியைக் கொண்டு பேசுவதும் வழமை. இனி இந்த வேலைகளை அவர்கள் அரை வினாடியில் முடித்துவிடுவார்கள். அவர்கள் காப்பி அடிப்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.
- அடுத்து, மாணவர்கள் இப்படி இணையத்தில் திருடுவதைத் தடுக்கும் நோக்கில் என்னைப் போன்றவர்கள் இன்று சிக்கலான கேள்விகளைக் கொடுப்போம். உ.தா., ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்து அதில் ஒரு உத்தியை பயன்படுத்தி எப்படி வெற்றிபெறுவது என்று கற்பனையில் எழுத வேண்டும். அல்லது தெரிதாவின் கோட்பாட்டை ஒரு கதையில் பயன்படுத்தச் சொல்வோம். இப்போது மாணவர்கள் இத்தகைய கேள்விகளுக்கு கூட குத்துமதிப்பாக ஒரு பதிலை சாட் ஜிபிடியில் பெற்றுத் தந்துவிட முடியும். அதை மிகவும் ஊன்றிப் படித்தாலே அசலா போலியா என்று கண்டிபிடிக்க முடியும். அதனால் நாங்கள் இனி மிக மிக வித்தியாசமான, சிக்கலான கேள்விகளைக் கொடுக்க வேண்டும். அது சாட் ஜிபிடி பயன்படுத்தாத நடுத்தரமான மாணவர்களை பாதிக்கும்.
- இறுதியாக, சில மொழிப்பாடங்களுக்கு படைப்பாக்க இடுபணிகளை செய்ய முடியும். உ.தா., ஒரு கோட்பாட்டை பயன்படுத்தி ஒரு கதையை எழுதி சமர்ப்பிப்பது. இனி மாணவர்களுக்கு எப்படி கதை எழுதுவது, எங்கிருந்து ஆட்டையப் போடுவது எனும் பிரச்சினையே இல்லை. சாட் ஜிபிடி வெண்ணெய் வழுக்கிக்கொண்டு போவதைப் போல கதை எழுதுகிறது. சிறுவர் கதைகள், வணிக கதை எழுதுபவர்கள் சில குறிச்சொற்களை உள்ளிட்டால் நேர்த்தியான, ஆனால் ஆழமற்ற கதைகள் வந்துவிடுகின்றன. (anti-gpt எனும் இணையதளம் இதைத் தடுக்க உள்ளதாக ஒரு நண்பர் சொன்னார். ஆனால் அதில் நீங்கள் நூற்றுக்கணக்கான இடுபணிகளில் எவ்வளவு பக்கங்களைத் தான் கொடுத்து சோதிப்பீர்கள்?)
- கடைசியாக, இதைப் பயன்படுத்தி முனைவர் பட்ட ஆய்வாளர்கள் - மிக மிகப் புதுமையான, கள ஆய்வு தேவைப்படும் தலைப்புகள் தவிர பொதுவான சுலப தலைப்புகள் எனில் - நிச்சயமாக தமது 180 பக்க ஆய்வேட்டில் 50 பக்கங்களையாவது சில நிமிடங்களில் எழுதி முடிக்க இயலும். குறைவான மதிப்பீட்டு முறைமைகள் கொண்ட பல்கலைகளில் முனைவர் பட்ட ஆய்வு செய்வோர் மொத்த ஆய்வேட்டையும் கூட சாட் ஜிபிடியைக் கொண்டு எழுத முடியும். நடுநடுவே சில மேற்கோள்களை அதிரிபுதிரியாக திணித்து துணைப்பட்டியலையும் இணைத்தால் போதும். இது ஒரு ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தும். (ஒருவேளை சுலபத்தில் சோதிக்கும் anti-gpt மென்பொருட்கள் வந்தால் உண்டு.) எனக்கு "எந்திரன்" படம் தான் நினைவுக்கு வருகிறது.
இனி, பதிப்புச் சமூகத்தில் சாட் ஜிபிடி ஏற்படுத்தும் விளைவுகள் இப்படியிருக்கும்:
- முன்பு 150 பக்கங்களில் கிழக்குப் பதிப்பகத்தில் சுவாரஸ்யமான தலைப்புகளில் புத்தகஙக்ள் வருமே அவற்றை இன்று "நரேந்திர மோடி - ஒரு புயலின் கதை" என்று தலைப்பிட்டு சில நிமிடங்களில் சாட் ஜிபிடி எழுதும். எடிட் செய்கிறவர் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்து திருத்தினால் போதும்.
- தமிழ் செய்தித்தளங்களில் துணை ஆசிரியர்கள் பெரும்பாலும் தேவையிருக்க மாட்டார்கள்.
- யுடியூபில் நிகழ்ச்சிகளுக்கு வெகுசாதாரணமான, தேய்வழக்கான ‘திரைக்கதைகளை’, வரைவுகளை எழுத பொறியியல் படித்த கண்டெண்ட் எழுத்தாளர்கள் இருக்க மாட்டார்கள்.
- சமூக வலைதள நிர்வாகிகளின் இடத்தை சாட் ஜிபிடியே எடுத்துக்கொள்ளுமா? வாய்ப்புள்ளது.
- ஆங்கிலத்தில் நடிகர்களின் குரலைக் கொண்டு படங்களையும் கதையையும் எடுத்து ஒரு காணொளியாக மாற்றும் சாட் ஜிபிடி உள்ளது. எதிர்காலத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், திரிஷா, நயன்தாரா அல்லது அவர்களுக்கு டப்பிங் பண்ணுகிறவர்கள் தம் குரல்களை வாடகைக்கு விடும் பட்சத்தில் வெகுவிரைவில் நீங்கள் சாட் ஜிபிடியில் போய் புதிதாக வரும் படத்தைப் பற்றியோ வானிலையைப் பற்றியோ ஒரு காணொளியை உருவாக்க முடியும். டிவியில் வரும் சின்னச்சின்ன விளம்பரங்களை சாட் ஜிபிடியே உருவாக்கிவிடும். கொரோனாவின் போது அமிதாப் பச்சனின் குரலுக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டதே அது இனி இருக்காது.
என் நண்பர் சொன்னார், “இனிமேல் தான் ஒரிஜினலாக சிந்திப்பவர்களுக்கு ஒரு மதிப்பு ஏற்படும். ஒரு கருத்தைப் பற்றி பேசுபவருக்கு அல்ல அதைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொண்டு புதிய கோணத்தில் அதை அலசுபவர்களுக்கு தனி மதிப்புண்டாகும். தகவல்களை சேகரித்து வரிசைப்படுத்தித் தருவோருக்கு அவசியம் இருக்காது. புதிய அனுபவங்களை, பார்வைகளை, கற்பனைகளை வெளிப்படுத்தும் படைப்பாளிகளே நிலைக்க இயலும். கூகிளுக்கு முன்பு இருந்த மாதிரி ஆசிரியர்கள் இனித் தேவைப்படுவார்கள். புதியதை சொல்லிக்கொடுப்பவர்கள் அல்ல வேறெங்குமே இல்லாத ஒன்றைச் சொல்லித் தருபவர்களே இனி ஆசிரியர்கள்.”
