இந்த ஐ.பில்.எல் பருவத்தின் கண்டுபிடிப்பே சுயாஷ் ஷர்மாதான். இப்போதெல்லாம் வேகமாக பந்தை சுழற்றும் கூக்ளி பந்துவீச்சாளர்கள் பிரபலமடைந்து வருகிறார்கள். அனேகமாக எல்லா பந்துகளும் உள்ளே வர, லெக்ஸ்பின் பந்து ஒரு வெரைட்டியாக ஆச்சரியப் பந்தாக பயன்படுத்தப்படும்.
இன்றைய வலதுகை மட்டையாளர்கள் காலை முன்பு போல் நகரத்துவதில்லை என்பதாலும், இடதுகை மட்டையாளர்கள் பந்தை கால்பக்கம் சிக்ஸ் அடிக்க முயலும் அளவுக்கு கவர், எக்டிரா கவருக்கு மேல் அடிப்பதில்லை என்பதாலும் இத்தகைய பந்துவீச்சு எடுபடுகிறது. வலதுகையாளர்கள் பவுல்ட், இடதுகையாளர்கள் பாயிண்ட், கவர் பகுதிகளில் என லெக் ஸ்பின்னரின் கூக்ளிக்கு அவுட் ஆவது மாமூலாகி வருகிறது. சுயாஷும் அவ்வாறுதான் விக்கெட்டுகளை ஐ.பி.எல்லில் எடுக்கிறார்.
கூடுதலாக, அவரது ரன் அப், உடலின் அசைவுடன் ஒத்தியங்காத கை சுழற்சி , கையை அகலமாக ஒரு நிலைகுலைந்து விழும் பறவை போல அசைத்து பந்தை வெளிப்படுத்துவது ஆகிய காரணங்களால் இவரது கூக்ளிக்கும் லெக் பிரேக்குக்கும் வித்தியாசம் காண்பது சிரமம்.
இவருடைய துணிச்சல், தன்னம்பிக்கை, பந்தை தைரியமாக தூக்கிப் போடும் பாங்கு, அதிரடி ஆட்டம் என்னை வெகுவாக கவர்ந்தது. அடுத்த மூன்றாண்டுகளுக்கு தன் உடற்தகுதியை தக்க வைத்தால் ஐ.பி.எல்லில் ஒரு நட்சத்திரம் ஆகிவிடுவார். உள்ளுர் நான்கு நாள் போட்டிகளிலும் நன்றாக வீசினால் நிச்சயமாக இந்தியாவுக்காக டெஸ்ட் ஆடுவார்!