மது போதை, அதனால் உற்பத்தி திறன், ஆரோக்கியம் அழிகிறது, மக்கள் ஏழைகள் ஆகிறார்கள், குடும்பம் நொடிகிறது என்பதைவிட அடிப்படையான பெரும் சிக்கல் அது நம் பெருங்குடலில் உள்ள நல்ல நுண்ணுயிர்களை அழிக்கிறது என்பதே . வாரத்தில் ஒன்றிரண்டு முறை குடித்தாலே அது நம் பெருங்குடலில் உள்ள நுண்ணுயிர் அமைப்பை நாசமாக்கி பல நோய்களை ஏற்படுத்தும். ஆரோக்கியம், மகிழ்ச்சி, வலிமை எல்லாம் காலியாகிவிடும்.
என் முன் மதுப்போத்தலை யாராவது வைத்தால் நான் போதையை, ஈரலை, அதிக கலோரிகளைப் பற்றி கூட கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் "மிதமா குடிச்சா, சாலட் சாப்டா போதும்" என நம் மனம் அதை நியாயப்படுத்தும். நான் என் நுண்கிருமிகள் செத்துவிடுமோ என்றே அதிகம் வருந்துவேன். என்னைப் பொறுத்தவரையில் எனக்குள்ள மிகச்சிறந்த நண்பர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள், உறவுகள், பாதுகாப்பு சேனை, வழிகாட்டிகள் இந்த நுண்ணியிர்களே. அவற்றை பலிகொடுக்கவா என நினைத்தால் "ஐயய்யோ எவ்வளவு கவனமா சாப்டு அதுங்களைக் காப்பாத்தி வெச்சிருக்கேன், இன்னிக்கு அழிச்சிட்டா திரும்ப வளர்க்க ரெண்டு, மூன்று வாரங்கள் ஆகாதா, அப்படியே மீண்டாலும் இப்போதுள்ளவை பாவம் அல்லவா?" என்றே பதறுவேன்ன். ஒரு மிடறு போதைக்காக என் உடலுக்குள் நான் வளர்க்கும் தொட்டில் குழந்தைகளை, என் உடலின் ரெண்டாம் மூளையை, என் செல்களின் மென்பொருளை குருதிக்கொடை அளிக்க மனமில்லாமல் தவிர்த்துவிடுகிறேன்.
ஏனென்றால் இந்த நல்ல நுண்ணுயிர்கள் அழிந்துபோனால் சமநிலை குலைந்து dysbiosis எனும் பிரச்சினை வருகிறது. இதனால் மோசமான நுண்ணியிர்கள் பெருகுகின்றன. ஜெயாவின் மரணத்திற்குப் பின் பாஜக, மூன்றாவது அணி என நம் அரசியல் களம் சமநிலை குலைந்ததைப் போல. குடிபோதை ஒரு extreme நிலை. ஆனால் dysbiosis பரவலான பிரச்சினை. நாம் அதற்கே அஞ்ச வேண்டும்.