ஆணாதிக்கம் என்றால் என்ன? ஆணின் ஆதிக்கமா? ஆண் உடலின் ஆதிக்கமா?
ஆணாதிக்கவாதி என்றால் ஆண் + ஆதிக்கம். ஆணாக இருப்பதே ஆதிக்கம். அப்படித்தானே? எனில் 100% ஆண்கள் ஆதிக்கவாதிகளா? இல்லை இவர்களில் ஒரு பகுதி ஆண்கள் பெண் மீது கரிசனம் கொண்டவர்களா? அவர்கள் ஆணாதிக்கவாதிகள் அல்லரா? எனில் அவர்கள் ஆண்களே அல்லரா? ஆண்கள் தாம் எனில் ஆணாதிக்கவாதம் எனில் என்ன? பாலினமா பால் நிலையா? அடையாளமா உடலா? ஆண் என்பது உயிரியலா சமூகப் பண்பாட்டு கருத்தமைவா?
உடல் எனில் நீங்கள் பெற்றுக் கொள்ளும் ஆண் குழந்தையின் குறியை வெட்டி அந்த ஆதிக்கத்தை ஏன் நீக்கிடக் கூடாது? அதை உங்கள் பழக்கத்தால், வளர்ப்பால் சரி செய்ய முடியுமெனில் அவர்கள் தற்காலிக பெண்ணியவாதிகளாக இருந்து உங்கள் வசம் இல்லாத போது ஆணாதிக்கவாதி ஆவார்களா? ஏன் இந்த ரிஸ்கை எடுக்கிறீர்கள்? இதில் இருந்தே தெரியவில்லையா ஆண் பால்நிலையை அவன் உடலுடன் பிணைப்பது அபத்தம் என?
இதில் எந்த தெளிவும் ஏற்படாத நிலையில் ஏன் 90% ஆண்கள் ஆதிக்கவாதிகள், அதுவும் பெண்களுக்கு தலையசைக்காதவர்கள் நிச்சயம் ஆதிக்கவாதிகள் என எப்படி சொல்கிறார்கள்? ஜெயமோகன் இதையே பெண்களுக்கு திரும்ப சொல்லும் போது கோபம் வருகிறது அல்லவா? நீங்கள் மட்டும் என்ன புள்ளிவிபர கணக்கெடுத்து 90% ஆண்கள் கெட்டவர்கள் என முடிவெடுத்தீர்களா? தனிப்பட்ட அனுபவத்தில், பார்த்த சம்பவங்களில் இருந்து சொல்கிறீர்களா? அது பொதுமைப்படுத்தல் ஆகாதா? ஆண்கள் இதை திரும்ப செய்தால் மட்டும் ஏன் கோபம் வருகிறது? நீங்கள் புகட்டும் விஷத்தை திரும்பப் புகட்டினால் கசக்கிறதா?
மூன்றாம் கட்ட பெண்ணியம் பால்நிலையானது உடலில் இல்லை என்கிறது. எனில் அதை மட்டும் ஏன் தமிழ் பெண்ணியவாதிகள் ஏற்பதில்லை. ஏனெனில் அது அவர்களுடைய சந்தர்பவாத சூழ்ச்சிகளுக்கு வசதியாக இல்லை. பெண்ணை சதா பாதிக்கப்படுபவளாக காட்டிக்கொண்டு அதன் அனுகூலங்களை அனுபவிக்க, ஆணை தொடர்ந்து ஆதிக்கம் செய்ய அந்த காலாவதியான கருத்தமைவு பெண்ணிய 'போராளிகளுக்கு' தேவைப்படுகிறது.