Skip to main content

சுயசாதிக்கு வெளியே மணமுடிக்கும் ஆண்களின் கதி என்ன?

 கடந்த முறை சென்னை வந்த போது நண்பர் கண்ணனிடம் அவரது திருமணம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். விவாதம் அப்படியே காதல் திருமணங்கள், சாதி பேதம் பார்க்காமல் மணம் புரிவது பற்றி, அதனால் சாதியை ஒழிப்பதைப் பற்றி திசைதிரும்பியது. சாதி மீறி மணமுடிப்பது ஓரளவுக்கு சாதியமைப்பை தளர்த்திட உதவும் எனக் கூறப்பட்டாலும் அது பெரிய அளவில் எந்த புரட்சியையும் செய்வதில்லை, மாறாக அது அதில் சம்மந்தப்பட்ட ஆணின் வாழ்க்கையை அதோகதியாகுகிறது என்றேன். “என்ன இப்படி சொல்லிட்டீங்க?” என்றார். நான் என் காரணங்களை  சொல்லி விளக்கினேன்


முதலில், மாற்று சாதி பெண்ணை மணம் செய்யும் ஆணுக்கு நம் சமூகமோ போலீசோ சட்டமோ எவ்வித பாதுகாப்பையும் அளிப்பதில்லை. ஒரு தீப்பெட்டியை வாங்கினால் கிடைக்கும் நுகர்வோர் சட்ட பாதுகாப்பு கூட சாதிக்கு வெளியிலான திருமணம் செய்யும் ஆணுக்கு இல்லை. இதுவே ஒன்றைக் காட்டுகிறது - இந்திய இறையாண்மையோ அரசியலைமைப்போ நீங்கள் மாற்று சாதியில் திருமணம் முடியுங்கள் என ஊக்கப்படுத்தவில்லை


இதற்கு ஒரு காரணம் உள்ளது - சாதி எனும் அடுக்கின் அடிப்படையில் நமது வாக்குகள் அடையாளப்படுத்தப்பட்டு பிரிக்கப்படுகின்றன, அதன் அடிப்படையிலே வேட்பாளர்கள், அவர்களை சார்ந்து கட்சியின் நலன், அதிகாரம், ஆட்சி என பல விசயங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கிறது. ஆக சாதி ஒழிந்தால் வாக்கரசியலில் ஒரு குழப்பம் ஏற்படும். வாக்காளர்களை எப்படி அணுகி வாக்கு வாங்குவது என்பது தெளிவற்றுப் போகும். இதை நமது தேசத்தின் பிரதிநிதிகள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். சாதிகளை ஒன்றுக்கென்று மோத விட்டு (இருமையை உருவாக்கி), போட்டியுணர்வை வலுவாக்கிஉங்களுக்கு அதிகாரம் அதிகமாகத் தருகிறோம்என ஒவ்வொரு பக்கமாகப் போய் சொல்லி வாக்குகளை கவர்வது, மூன்றாவது நான்காவது அணிகளைக் கொண்டு சிறுபான்மை வாக்குகளைப் பிரிப்பது, ஒவ்வொரு சாதியையும் தொடர்ந்து தான் ஒடுக்கப்படுவதாக ஒரு பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தி அந்தபாதிக்கப்பட்டவர்கள்எனும் கோபத்திலே வைத்திருப்பது, அதன் அடிப்படையில் அரசியல் பண்ணுவது என நமது தேர்தல் அரசியல் சாதியமைப்பை நம்பியிருக்கிறது. அதனாலே சுதந்திரம் கிடைத்த இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் இதற்காக சிறுதுரும்பைக் கூட எடுத்துப் போடாமல் இருக்கிறார்கள். அவர்களே விரும்பாத போது நாம் மட்டும் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டு என்னவாகப் போகிறது?  


காதல் மணம் செய்வோரும் ஒன்றும் புனிதர்கள் அல்ல. அவர்களும் இந்த அமைப்புக்குள் தமக்கான அதிகாரத்தை பெருக்கிக் கொள்ளும் நோக்கிலே சாதிக்கு வெளியே ஒரு ஆணையோ பெண்ணையோ நாடுகிறார்கள். தேர்தல் அரசியலின் ஒரு அந்தரங்க அலகாகவே நான் சாதி மீறிய காதல் திருமணங்களைப் பார்க்கிறேன்.


இதை சொன்னதற்காக நான் சாதி மீறிய திருமணங்களை எதிர்ப்பவன் எனப் பொருள்பட வேண்டாம். சாதிக்குள்ளோ வெளியிலோ எங்கு நடந்தாலும் இத்திருமணங்கள் இன்று ஆணுக்கு விரோதமானவையே என நம்புகிறேன்.


ஏனென்றால் மிக அரிதாகவே ஆணவக் கொலைகளில் பெண் பலியாகிறாள். அனேகமாக இதில் கொல்லப்படுவது ஆணே. அவன் செத்த பிறகு இப்பெண் நிம்மதியாக அடுத்த திருமணத்துக்குள் போகிறாள். இங்கு நாம் எழுப்ப வேண்டிய கேள்வியை உயிரைக் கொடுக்கும் அளவுக்கு இது முக்கியமானதா என்பதே. அதாவது ஒரு பக்கம் அரசியலமைப்போ சட்டமோ அதிகார வர்க்கமோ ஆட்சியாளர்களோசாதி எதிர்ப்புதிருமணத்தை (எனக்கு இந்த சொல்லாடலுடன் உடன்பாடில்லை) ஆதரிக்கவில்லை, பாதுகாக்க நினைக்கவில்லை. சமூகமும் லுங்கியை மடித்துக் கொண்டு நான் காத்து நிற்கிறேன் என வரவில்லை. சாதியும் இதனால் ஒழியப் போவதில்லை. நஷ்டம் எப்போதும் ஆணுக்கே ஈடிணையற்றதாக (அவனுடைய உயிர்) இருக்கிறது


சாதியை எதிர்க்கணுமா? அதற்காக நாம் ஏன் அரசியல் செய்யக் கூடாது, ஏன் கலை சார்ந்த முயற்சியில் ஈடுபடக் கூடாது? அங்கு குறைந்தபட்ச பாதுகாப்பும் பலன்களும் உள்ளதே. அங்கு குறைந்த பட்ச சமத்துவம் உள்ளதே. ஒரு சாதி எதிர்ப்பு அரசியல்வாதி ஆணோ பெண்ணோ சமூகம் அவர்களை பாகுபாடாக பார்க்காது. ஆனால் சாதி எதிர்ப்பு காதலர்களில் ஆணுக்கு மரண தண்டனையும் பெண்ணுக்கும் அரவணைப்புமே பதிலீடாக கிடைக்கிறது


நான் எந்த லட்சியவாதமும் இன்றி இதை நடைமுறை சார்ந்து பார்க்க விரும்புகிறேன். அப்படி அந்த பெண்ணிடம் என்னதான் இருக்கிறது உயிரைக் கொடுக்கும் அளவுக்கு மதிப்பீடாக? (உடனே என்னை ராமதாஸுடன் ஒப்பிடுவீர்கள் எனத் தெரிந்தே இதை எழுதுகிறேன்.)


இதை நான் தர்க்கபூர்வமாக சொல்கிறேன், நீங்கள் உள்ளுணர்வில் அறிந்திருக்கிறீர்கள், அதனாலே இதைப் படிக்கும் கணிசமான ஆண்கள் உங்கள் சொந்த சாதிக்குள்ளே மணமுடித்திருக்கிறீர்கள். சாதி எதிர்ப்பு பேசும் போலி போராளிகளும் தத்தம் சாதிக்குள்ளே பெண்ணெடுத்திருப்பீர்கள். அதற்கு வேறு சில அனுகூலங்களும் உள்ளன. அதைப் பற்றி பேசுமுன்னர்சாதி எதிர்ப்புகல்யாணத்தினால் ஒருவேளை ஒரு ஆண் உயிரை விட நேரவில்லை, வெற்றிகரமாக மணவாழ்க்கையை நடத்துகிறார் எனில் என்னென்ன பிரச்சினைகள் வரும் என சொல்கிறேன்:


மனைவி உங்களை விட உயர்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர். ஆனால் அவர் முற்போக்கானவர். அதனால் தானே உன்னை கட்டிக்கொண்டார். அதனால் நீங்கள் இருவரும் சமமான தளத்தில் நின்று பரஸ்பரம் நேசிப்பதாக, அங்கீகரிப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் இங்கு தான் இன்னொரு பிரச்சினை வருகிறது - குடும்பத்தினர், உறவினர்களின் மதிப்பீடும் அது உங்கள் மனைவி மீது ஏற்படுத்தும் தாக்கமும்.


ஒருநீயா நானாநிகழ்ச்சியில் மனைவியின் பெற்றோர், கூடப்பிறந்தவர்கள், உறவினரிடம் அணுக்கமாக இல்லாத கணவர்கள் மனைவியிடமும் அவர்களிடமும் எதிர்கொள்ளும் அவமானங்களைப் பற்றி விவாதித்திருந்தார்கள். அதில் அவமானப்படும் பெரும்பாலான கணவர்கள் பொருளாதார ரீதியில் வாழ்க்கையில் தோற்றவர்கள். இப்பெண்களிடம் அப்போது ஒரு விசித்திரமான உளவியலை நான் கண்டேன். இதை நான் என் தனிப்பட்ட வாழ்விலும் சந்தித்திருக்கிறேன் என்பதால் அது என்னவென உடனடியாகப் புரிந்து கொண்டேன்


ஆணின் தன்னிலை உருவாக்கமும் பெண்ணின் தன்னிலை உருவாக்கமும் இருவேறானவை. பெரும்பாலான ஆண்கள் தமது வேலை, திறமை, சாதனை, அதனால் கிடைக்கும் அங்கீகாரத்தின் அடிப்படையிலே தம் தன்னிலையை, அடையாளத்தை உருவாக்க விழைகிறார்கள். நட்பும், உறவுகளும் ஆண்களுக்கு சமூகமாக்கலுக்கும் வேலைக்கான ஆதரவு வட்டத்தை உருவாக்குவதற்குமே தேவைப்படுகின்றன. இதனாலே தமது வேலையின், சாதனைகளின் விளைவாக தமக்கு கிடைக்கிற ஒரு உடைமையாக, சொத்தாகவே அவர்கள் தம் காதலியை / மனைவியை பார்க்கிறார்கள். ஆனால் கணிசமான பெண்களுக்கு - அவர்கள் படித்து வேலைக்குப் போகிறவர்களாக இருக்கும்பட்சத்திலும் கூட - தம் காதலனையோ கணவனையோ தம் சொத்தாக, உடமையாக மட்டும் காண்பதில்லை. அவர்கள் தமது தோழிகள், பெற்றோர், உறவினரின் கண்வழி அவனை பிரதிபலித்துப் பார்த்தே மதிப்பிடுகிறார்கள். அவன் அவளுடைய உடமை தான், ஆனால் அந்த உடமையின் மதிப்பானது அவள் அவனை அடைந்ததன் வழி தோன்றுவதில்லை. நான் அவனை இப்படி மதிப்பிட்டு முயன்று பெற்றேன் என்று அல்லாமல் பலவழிகளில் அவனை ஒரு மற்றமையாக (other) கருதி ஒரு சுழற்சி முறையில் அவனை அவள் மதிப்பிட்டுக் கொண்டே வருகிறாள். அவளுடைய மதிப்பீட்டு நடவடிக்கையானது வாழ்நாள் முழுக்க தொடர்கிறது


இதை ஏன் சுழற்சி முறை என்று சொல்கிறேன் என்றால் அவள் ஒரு ஆணை தன் மற்றமையாக காணும் போது அவனுடைய தகுதியைக் கொண்டே தன் தகுதியையும் அவள் உணர்கிறாள். அதனாலே தகுதியற்ற ஆணுடன் வாழ நேரும் போது தன் தகுதியும் தரைமட்டமாக போவதாக அவள் நினைக்கிறாள். ஒரு ஆண் ஒரு போதும் இப்படி பெண்ணைப் பற்றி எண்ணுவதில்லை. அடுத்து அவள் தன் தோழி, பெற்றோர், உறவினர்கள், உடனடி சமூகம் ஆகியோரை ஒருவித மற்றமைகளாக்கி இந்த மற்றமைகளின் மதிப்பிடலின் படி தன் முதலாம் மற்றமையான காதலன் / கணவனை மதிப்பிடுகிறாள். அதாவது மற்றமையை மற்றொரு மற்றமை வழியாக மேலும் மற்றமையாக்கி அந்த இறுதி மதிப்பீட்டின் வழியாக தன்னை சுயமதிப்பீடு செய்கிறாள். பின்னமைப்பியல் உளவியலாளரான லகான் இவ்வாறே நவீன மனிதன் தனது தன்னிலையை கட்டமைக்கிறான் என்று வரையறுக்கிறார்

முதன்முதலாக ஒரு குழந்தை தன்னை ஒரு கண்ணாடியில் நோக்கும் போது அந்த ஆடி பிம்பமே தனது தன்னிலை என நினைக்கிறது. ஆனால் அப்படி எண்ணுவதும் ஒரு தன்னிலை தானே? இப்போது அக்குழந்தை தன் தன்னிலையை பார்க்கும் தன்னிலையாக இரட்டைத் தன்னிலையாக மாறுகிறது; தன்னையே மற்றமையாக்குகிறது என்கிறார் லக்கான். இந்த சிக்கல் போகப் போக குறைகிறது, ஒருவன் சமூகத்தை மற்றமையாக கண்டு அதன் வழி தன் அதிகாரத்தை ஒருவன் நாடும் போது இச்சிக்கல் வெகுவாக குறைந்து அவன் வலுவான ஆளுமை பெற்றவனாகிறான். ஆனால் சிலர் இந்த கண்ணாடியில் தன்னை (மற்றமையாக்கி) அறியும் சிக்கலை தம் வாழ்நாள் முழுக்க தொடர்கிறார்கள். பெண்கள் அத்தகையானவர்கள் என்பது என் புரிதல்.


ஒரு பெண்ணால் தனக்கு சொந்தமான ஆண் தன்னளவில் மதிப்பிட முடிவதில்லை. அவளுக்கு யார் மீதாவது அவனைப் பிரதிபலித்துப் பார்க்க தேவையிருக்கிறது. அவளுடைய அம்மா, தோழி, அப்பா, சகோதரன், உறவினர்கள், சமூக வட்டத்தை சேர்ந்தவர்கள்ஏம்மா இவன் தான் உனக்கு கிடைச்சானா?” என்று கேலி செய்தால், அவளுடைய தேர்வை விமர்சித்தால், புகார் மேல் புகாராக சொன்னால் ஒரு கணம் அவளுடைய மனம் பதறி விடும். பின்னர் மெல்ல மெல்ல அவர்களுடைய மதிப்பீட்டின் வழி அவனை ஒரு புதிய கண்ணோட்டத்தில் அவள் பார்க்கத் தொடங்குவாள். இதனாலே பெண்கள் தம் காதலன் / கணவனைப் பற்றி பரஸ்பரம் கருத்து பரிமாறுவதைப் போல ஆண்கள் செய்வதில்லை. ஆண்கள் இதை ஒரு அந்தரங்கமான காரியமாக பார்க்க, பெண்களோ இதை தம் சமூக அந்தஸ்தை தீர்மானிக்கும் ஒன்றாக பார்க்கிறார்கள். நம் பண்டைய இலக்கியங்களில் காதலனின் சிறப்புகளை எடுத்து சொல்லி அவனை ஏற்க செய்யும் பொறுப்பை ஒரு தோழியின் பாத்திரம் எடுத்துக் கொள்வாள். அத்தோழி கிட்டத்தட்ட காதலியின் மற்றமையாக இருக்கிறாள். அவளின் ஊடாகவே காதலி தன் காதலனை காண்கிறாள், தன் உணர்ச்சிகளை அறிகிறாள், வெளிப்படுத்துகிறாள். அவள் ஒரு வார்த்தையை மாற்றி சொன்னால் காதலியின் மனமும் மாறிவிடும். இத்தோழியின் இடத்தையே திருமணத்துக்குப் பின்னர் அவளுடைய அம்மா, சகோதரி, உறவினர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதனாலேஉன் கணவன் ஒரு உதவாக்கரைஎன்று மருமகனைப் பற்றி மாமியார் திரும்பத் திரும்ப சொன்னால் அது நிச்சயமாக மனைவியின் மதிப்பீட்டை பாதிக்கும் என்பதைக் காண்கிறோம்


இப்போதுசாதி எதிர்ப்புதிருமணங்களுக்கு வருவோம் - கணவன் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவன் என்றால் அவன் ஆணவக் கொலை செய்யப்படவும் இல்லை என்றால் அவன் மறைமுகமாக அப்பெண்ணின் குடும்பம் மற்றும் உறவினரின் கேலி, அவமானங்கள், புறக்கணிப்பால் நோகடிக்கப்பட வாய்ப்பதிகம். (ஒரே விதிவிலக்கு அவன் உயர்த்தப்பட்ட சாதியை சேர்ந்த அந்த குடும்பத்தை விடவும் பல மடங்கு பெரும் பணக்காரனாகவும் அதிகாரம் படைத்தவனாகவும் இருப்பது மட்டுமே.) நான் என்ன இந்த மக்களோடா வாழ்கிறேன், எனக்கு என் மனைவியின் நம்பிக்கையும் அன்புமே முக்கியம் என்று அவன் நினைக்கிறான் எனில் அவன் ஒரு முட்டாள் என்று பொருள். அவன் ஒரு ஆணின் வரையறைப்படி ஒரு பெண்ணை மதிப்பிடும் தவறை அங்கு செய்கிறான். ஒரு பெண் இன்றில்லாவிடினும் நாளை தன் குடும்பத்தினராலும் உறவினராலும் நிராகரிக்கப்படும் அந்த ஆணை தரமற்றவனாக எண்ணி அவனிடம் ஏமாற்றமுற்று அவனை மெல்ல மெல்ல பிரிய எத்தனிக்க வாய்ப்பதிகம். ஏனென்றால் அவள் தன் குடும்பத்தாலும் உறவினராலும் தனிமைப்படுத்தப்பட்டால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவாள். அவளுடைய தன்னிலை என்பது அவர்களை மற்றமையாக்கி அதில் தன்னை பிரதிபலித்து, அதில் தன் கணவனையும் பிரதிபலித்து குழப்பிக் கொண்டே உருவாகிறது என்பதால், அது அவ்வளவு சிக்கலான ஒரு செயல் என்பதால், அந்த சமூக விலக்கமானது ஆணை விட பெண்ணை மிக அதிகமாக பாதிக்கும். அது அவளுக்கு வெறும் தனிமைப் பிரச்சினை மட்டுமல்ல, அது அவள் தன் தன்னிலையில் உணரும் நெருக்கடியும் ஆகும். இத்தகைய பெண்கள் தன்னுடைய ஆட்கள் தன் கணவனை தொடர்ந்து உதாசீனிக்கும், மறுக்கும் பட்சத்தில் - அவனும் வாழ்க்கையில் வெற்றி பெற்று அவர்கள் கூற்றை பொய்யாக்காத பட்சத்தில் - மெல்ல மெல்ல மன அழுத்தத்துக்கு ஆளாக வாய்ப்பதிகம்


ஆகையால்சாதி எதிர்ப்புதிருமணத்தில் ஆணை விட பெண்ணே - மேற்சொன்ன தன்னிலை நெருக்கடியால் - வெகு சீக்கிரமாக மணமுறிவை நோக்கி தள்ளப்படுகிறாள். அவளே மிக அதிகமாக குழம்பிப் போகவும், நெருக்கடிக்கும் அழுத்தத்துக்கு உள்ளாகவும் செய்கிறாள். தன் மனைவி ஒரு கூட்டுத்தன்னிலையின் (சாதிய சமூகத் தன்னிலையின்) பிரதிநிதியாக முடிவெடுக்கிறாள் என்பதே பல சமயங்களில் ஒரு ஆணுக்குப் புரிவதில்லை. ஏனென்றால் அவன் என்றுமே அப்படி சிக்கலாக யோசித்திருக்க மாட்டான். இதனாலே - பெரும் பொருளாதார மேம்பாடும் அதிகார வெற்றிகளும் இல்லாதபட்சத்தில் - தாழ்த்தப்பட்ட ஆணொருவன் உயர்த்தப்பட்ட மனைவியிடம் இருந்து செருப்படி வாங்க / கொலைக்களம் நோக்கி தள்ளப்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம். (இளவரசனை திவ்யா நடத்திய விதத்தை, பாலாஜி சக்திவேலின்காதல்திரைப்பட நாயகனை நினைவில் கொள்க.) இதை நான் சமூகத்தில் பார்க்கும் நிகழ்வுகளை வைத்து மட்டும் சொல்லவில்லை, என்னுடைய பல தனிப்பட்ட அனுபவங்கள்சாதியெதிர்ப்புதிருமணமானது ஒரு ஆணின் கௌரவத்தை, சுயமரியாதையை எந்தளவுக்கு குலைக்க கூடியது என்பதை எனக்கு உணர்த்தி இருக்கின்றன. அதைக் கொண்டும் தான் இதை சொல்கிறேன்.


சாதியின் ஒரு வினோதமான சுபாவம் என்னவெனில் நீங்கள் என்னதான் சுயமரியாதை மிக்கவர், தன்னம்பிக்கையானவர், பகுத்தறிவாளர் என்றாலும் உயர்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் வாழ நேரும் போது நம்மை அறியாமலே ஒரு ஆணாக நாம் நம்மை தாழ்த்திக் கொள்வோம், அவளை இழந்து விடாதிருக்க எந்தளவுக்கும் பணிய தயாராவோம். படுக்கையில் மனைவிபோ அந்தாண்ட, வந்து வந்து இரிட்டேட் பண்ணாதே, ஏன் உங்கிட்ட ஏதோ ஸ்மெல் இன்னிக்கு அடிக்குதுஎன்று சொன்னால் நம் உள்மனம்ஒருவேளை அதனால் சொல்லியிருப்பாளோஎன தன்பாட்டுக்கு யோசிக்கத் தொடங்கும். குழந்தையை நீங்கள் எடுத்துக் கொஞ்சும் போதுகை கழுவீட்டீங்களா?” என அவளோ மாமியாரோ கேட்டால் அது சுரீரென உங்கள் நெஞ்சில் குத்தும். அது மட்டுமல்லாமல், எத்தனையோ சந்தர்பங்களில் இந்த சாதிவெறுப்பை அவளும் அவளுடைய பெற்றோரும் உறவினர்களும் கேலி, பகடி, நேரடி அவமதிப்பு என உங்கள் மீது கக்கத்தான் செய்வார்கள். இப்படி ஆயிரம் முட்களின் மீது தினம் தினம் நடந்து ரத்தம் ஒழுக வாழ வேண்டும். ஏனென்றால் பல நூறு ஆண்டுகளாக நம் சமூகத்தில் ஊடுருவி இருக்கும் கலாச்சார / சமூக அதிகார படிநிலையானது நம் உள அமைப்புக்குள்ளும் ஒரு அளவுகோலாக மாறியிருக்கிறது, நாம் விரும்பாவிடினும் கூட அது வெகு நுட்பமான வகையில் நமக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கும். ஒருவன் தன் சுயசாதியை சேர்ந்த பெண்ணை மணக்கும் போது இச்சிக்கல் வராது. இதுவும் இத்தகைய அனுபவம் கொண்டவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் அளவுக்கு நூதனமானது.


ஆகசாதி எதிர்ப்புதிருமணமானது உறவு முறிவை நோக்கி சுலபத்தில் இட்டு செல்லக் கூடும் என்பதுடன் ஒரு ஆணின் தன்னம்பிக்கையை, சுயமரியாதையை சிதைத்து அவனை நிம்மதியற்றவனாக ஆக்கிவிடும். மனைவியை, குடும்பத்தை இழந்து அவன் தெருவுக்கு வரும் போது சமத்துவம், நீதி குறித்த அவன் நம்பிக்கைகள் சிதைந்து போயிருக்கும். ஒருபோதும் மாறாத ஒரு ஆழமான வடு ஏற்பட்டிருக்கும், அவமானத்தின் துர்வாடகை அவனை விலகாமல் துரத்திக் கொண்டே இருக்கும். ‘சாதி எதிர்ப்புதிருமணத்தில் நிராகரிப்பு என்பது ஒரு மோசமான அவமானம், அதன் வழியான தன்னழிப்பு, தன்னிழப்பு.


சரி உங்களை விட தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்ணை மணமுடித்தால் என்னவாகும்? அப்பெண் பணத்திலும் அதிகாரத்திலும் உங்களை விட மேலான இடத்தில் இல்லாதபட்சத்தில் அதனால் பிரச்சினை இருக்காது என நினைக்கிறேன். மேலும், சாதிய பேதமானது ஆணை பாதிக்கிற அளவுக்கு பெண்ணை பாதிப்பதில்லை. ஆணுக்கு தன் மனைவி ஒரு உடைமை. தான் சம்பாதித்தது என்பதால் தன் மதிப்பீட்டின் படியே அவளை அளக்க வேண்டும், தம் அப்பா, அம்மா சகோதர சகோதரி, உறவினர்களின் கண்ணோட்டத்தின் படி அல்ல என்பதில் அவன் உறுதியாக இருப்பான். அடுத்து ஆண்களை விட பெண்கள் சற்று சுலபமாக சமரசங்கள் பண்ணிக்கொண்டு தம்மை ஏற்றுக்கொள்ளாத குடும்பத்துடன் இணங்கிப் போகும் திறன் பெற்றவர்கள், அவர்கள் நுட்பமான சின்னச்சின்ன அவமதிப்புகளை சமாளிக்கத் தெரிந்தவர்கள், அவர்கள் அதிகார விளையாட்டில் கரைகண்டவர்கள் என்பதால் சிக்கல் இல்லை. வளைய வேண்டி வரும் போது வளைந்து நிமிர முடிகிற போது நிமிர்ந்து கரைதேறி விடுவார்கள். அல்லாவிடில் கணவனை மூளைசலவை செய்து தனியாக அழைத்து சென்றுவிடுவார்கள். அதுவும் முடியாவிடில் அவனிடம் இருந்து உடைத்துக் கொண்டு ஒரு புது வாழ்க்கை அமைத்துக் கொள்வார்கள். ஒரு ஆணுக்கு இந்த நெகிழ்வான இயல்பு இல்லையென்பதால் அவனே இதில் மிக அதிகமாக பாதிக்கப்படுகிறான்

 

இதை எந்தசாதி எதிர்ப்பு போராளி புலிகளும்பேச மாட்டார்கள். ஏனென்றால் ஒன்று அவர்கள் தத்தம் சாதிக்குள்ளே பத்திரமாக கல்யாணம் பண்ணிக்கொண்டிருப்பார்கள் அல்லது அடிபட்டு அவமானப்பட்டு அதை மறைத்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வாயையே திறக்க மாட்டார்கள். அதனால் நான் சொல்கிறேன் - ‘சாதி எதிர்ப்புதிருமணம் செய்யாதீர்கள். அதனால் எந்த பயனும் உங்களுக்கு இல்லை. பாதகங்களே அதிகம். சாதி ஒழிப்பு என்பது ஒரு லட்சியம். ஒரு கருத்து. அது வாழ்க்கை அல்ல. ஒரு கற்பனையான கருத்துருவுக்காக, கனவுக்காக நமக்கு உள்ள ஒரே ஒரு வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பது அபத்தம். மேலும் ஒரு பெண்ணுக்காக பலிகொடுக்க இந்த உயிரும் வாழ்க்கையும் அவ்வளவு மலினமானதா? சாதிக்க எவ்வளவோ இருக்கும் போது ஒரு அன்றாடத்தனமான விசயத்துக்காக (திருமணம் / காதல் / செக்ஸ்) போராடி அழிய வேண்டியதில்ல. அதற்குப் பதிலாக சமூக மாற்றத்துக்காக, சுய முன்னேற்றதுக்காக ரிஸ்க் எடுத்து முயன்று உயிரைக் கூட கொடுக்கலாம். நாளை நம்மை ஊரே போற்றும். இளவரசனை எத்தனை பேர் போற்றி அவருக்காக சிலை வைப்பார்கள்? சும்மா போலி கண்ணீர் வடித்து கடந்து விடுவார்கள். இவர்களை நம்பி காதலிப்பதைப் போன்ற அபத்தம் வேறில்லை

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...