கல்லுமேலே நின்னுகினு
கன்னிகுறை சொன்னாக்கா
கல்லும் கிடுகிடென்னும்
கல்லில் இருக்கும்
கருநாகம் கண்ணீர்விடும்!
புத்துமேலே நின்னுகினு
பொண்ணு குறை சொன்னாக்கா
புத்தும் கிடுகிடென்னும்
புத்தில் இருக்கும்
புதர்நாகம் கண்ணீர்விடும்!
(ஒப்பாரிப் பாடல்)
தற்போது நடந்து முடிந்துள்ள பிக்பாஸில் பங்கேற்ற ஒருவரைக் குறித்து கடந்த ஆண்டு ஒரு பாலியல் குற்றச்சாட்டு வந்தது - அவர் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக சொல்லி ஒரு இளைஞரை வீட்டுக்கு அழைத்து வந்து அங்கு அவரை பலவந்தப்படுத்தியதுடன், அவரை வெளியேற அனுமதிக்காமல் நிர்வாணப்படுத்தி வீட்டுக்குள்ளே பூட்டி வைத்ததாகவும், மிகவும் கெஞ்சிய பிறகே நீண்ட நேரத்திற்குப் பின்னர் விட்டிருக்கிறார் என்று. இந்த குற்றத்தை வெளியே சொன்னால் தான் ஒரு ஹோமோ என அம்பலப்படுவோம் என்றெண்ணி அந்த பாதிக்கப்பட்டவர் போலிஸில் புகார் அளிக்கவில்லை, சமூகவலைதளம் ஒன்றில் மட்டும் வெளிப்படுத்தினார். மேலும் தன்னை பலாத்காரம் பண்ணினவரின் போலீஸ், அரசியல் தொடர்புகள் குறித்து அவருக்கு அச்சம் இருந்ததால் அவர் தன் அடையாளத்தையும் வெளிப்படுத்தவோ தொடர்ந்து முயலவோ இல்லை. ஆனால் இந்த புகார் ஒரு சில இணையதளங்களைத் தவிர வேறெங்கும் கவனம் பெறவில்லை. சம்மந்தப்பட்ட அந்த நபரும் பதிலளிக்கவில்லை. ஆனால் இதே ஷோவில் முன்பு பங்கேற்ற டேனி மீது அவர் ஒரு இளம்பெண்ணுக்கு சாட் மூலம் தொந்தரவு கொடுத்தார் என்று புகார் வந்த போது அது எவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது எனப் பார்த்தோம். டேனி இதற்குப் பதிலாக வக்கீல் நோட்டீஸ் ஒன்றை வெளியிட நேர்ந்தது. இதற்கு முன்பு மீ டூவின் போது ட்வீட் செய்யப்பட்ட பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகள் எந்தளவுக்கு மைலேஜ் பெற்றன, நாடே அவற்றைப் பற்றி பேசின எனப் பார்த்தோம். இத்தனைக்கும் அவற்றில் பெண்கள் நேரடியாக பலாத்காரம் பண்ணப்படவில்லை; ஒன்று சீண்டல் அல்லது பாலுறவுக்கான நெருக்கடி அளிப்பது, சில இடங்களில் ஆசை காட்டி பயன்படுத்திக் கொள்வது என்றே குற்றங்கள் இருந்தன. ஒரு பெண்ணைத் தவறாகத் உரசுவது கூட மிகப்பெரும் குற்றமாகக் கருதப்பட்டு ஊடகங்களில் பேசப்படுவதையும் கண்டிக்கப்படுவதையும் கண்டிருக்கிறொம், ஆனால் ஒருவரை பலாத்காரம் பண்ணி வீட்டுக்குள் நிர்வாணப்படுத்தி நீண்டகாலம் பூட்டி வைத்திருப்பது ஒரு பொருட்டாகவே நம் சமூகத்துக்கு இல்லை. ஏனெறால் பாதிக்கப்பட்டவர் ஒரு ஆண்.
இன்னொரு விசயம் பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைப்பது போக அவர் இதை எங்கு சொன்னாலும் கேலி பண்ணப்படுவதே உறுதி. பலாத்காரம் பண்ணினவரையும், பாதிக்கப்பட்டவரையும் நம் சமூகம் வேடிக்கைப் பொருட்களாகப் பார்த்து சிரிக்குமே அன்றி பொருட்படுத்தாது. காவல் நிலையம் போனாலும் அதுவே நடக்கும். நம் சமூகம் எந்தளவுக்கு பிற்போக்காக, சுரணையற்றதாக உள்ளது பாருங்கள்! ஆனால் கிடைக்கும் கேப்பிலெல்லாம் அறம் முறம் என்றெல்லாம் ஜல்லியடிக்கத் தவற மாட்டோம்.
பலாத்காரம் மட்டுமல்ல ஆண்கள் கொலை செய்யப்படுவது, தற்கொலை பண்ணிக் கொள்வதையும் இச்சமூகம் கண்டுகொள்வதில்லை. தினசரியைப் பாருங்கள் - தினமும் ஒன்றிரண்டு ஆண் தற்கொலை செய்திகளாவது படுகின்றன. நான் கவனித்தவரையில் பெண்களை விட அதிகமாக ஆண்களே தற்கொலை பண்ணிக்கொள்கிறார்கள். பெண்கள் சாகும் போது அதை ஒரு பெரிய பிரச்சினையாக்கி போராடுகிறார்கள் குடும்பத்தினர். போலிசும் உடனே கைது பண்ணுகிறது. ஆனால் இந்த ஆண்கள் தற்கொலை பண்ணும் போது ஒரு அடிமைக் கப்பலில் உள்ள ஒரு அடிமை செத்ததைப் போல வீசிவிட்டுக் கடப்பதைப் போல அதைக் கையாள்கிறார்கள் குடும்பமும் போலிசாரும் நீதியமைப்பும். சில பத்தாண்டுகளாகவே ஒரு மீடியா பிரபலம் பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்து, குடும்பங்களை உடைத்து வந்தார்; அண்மையில் அவரிடம் சிக்கி சின்னாபின்னமான ஒரு இளைஞன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை பண்ணினார். அதை ஒரு செய்தியாக வெளியிட்டு ஒரு புலனாய்வு இதழ் முக்கியத்துவப்படுத்தினாலும் நம் சமூகம் வழக்கம் போல அதைப் பொருட்படுத்தவில்லை. இதுவரை அப்பெண் கைதாகவில்லை. கவிஞர் தாமரையைத் தவிர வேறு எவரும் இச்செய்தியை பொருட்படுத்திப் பேசவில்லை. இதுவே தற்கொலை பண்ணினது அப்பெண்ணாக இருந்திருந்தால் அடுத்த நாளே அந்த இளைஞன் சிறை சென்றிருப்பான். இதனால் தான் சொல்கிறேன் நம் சமூகத்தைப் பொறுத்தவரையில் ஆணும் பெண்ணும் சமம், ஆனால் பெண்ணுக்கு ஆண் சமம் அல்ல. ஏனென்றால் ஆணிடம் ‘கருப்பை’ இல்லை. கருப்பையைத் தாண்டி யோசிக்கவே முடியாது ஒரு காட்டுமிராண்டி சமுகமாக இந்த நம் சமூகம் இருக்கிறது.
ஒரு குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என விருப்பம் காட்டும் நம் குடும்பங்கள் அக்குழந்தையின் பாலியல் வளர்ச்சியில், பாதுகாப்பில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. பெண் பூப்பெய்துவதைக் கொண்டாடும் ஒரு சமூகம் ஆண் வயதுக்கு வரும் போது அதை ஒரு பொருட்டாக கருதுவதுண்டா? இச்சமூகத்துக்கு ஆண் என்பவன் இவர்களுக்கு ஒரு அடிமைத்தேனீ மட்டுமே; அவன் தன் குடும்பத்துக்காக உழைத்துக்கொண்டே, அபாயங்களை சந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். அவனை முக்கியமானவனாக ஒரு பாவனை பண்ணிக்கொண்டே சமூகம் அவனை பயன்படுத்தி தூக்கி வீசுவதே எப்போதும் நடக்கிறது. காவல்துறையிலும் ராணுவத்திலும் வன்முறையில் ஈடுபட வேண்டியவன், கடுமையான ஆபத்தான தொழில்களில் இறங்கி வேலை செய்ய வேண்டியவன் ஆண் தான். சாக்கடையை சுத்தம் பண்ண இறங்கி சாகிறவன் ஆண் தான். ஆணவக் கொலைகளில் பெரும்பாலும் பலியாகிறவனும் ஆண் தான். பெண் எல்லா பாதுகாப்பான பணிகளில் இருத்தப்பட்டு பாதுகாக்கப்படுபவள். ஒரு ஆண் செத்தால் அவனிடத்தில் இன்னொரு ஆண் வந்துவிடுவான், ஆனால் ஒரு பெண்ணோ ஈடுசெய்ய முடியாதவள் எனும் எண்ணம் நம் சமூகத்தின் கூட்டுமனத்தில் இருக்கிறது, நம் குடும்பங்களுக்குள் இருக்கிறது, அதனாலே ஒரு ஆண் இறந்தால் ரெண்டு மூன்று நாட்களுக்கு மேல் அவன் சுவரொட்டியாக மட்டுமே எஞ்சுகிறான். தாய் தந்தையர் கூட அவனை மறந்து நகர்ந்து விடுகிறார்கள்.
இதை ஆண்கள் புரிந்துகொண்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வது முக்கியம்! மேலே உள்ள செய்தியைக் கூட பாதிக்கப்பட்டவர் ஒரு பெண் என்று நான் மாற்றி எழுதினால் அது எத்தனையோ பேரை பதற்றத்துக்குள்ளாக்கி இருக்கும். இப்போது கூட அவர்களின் கவலை நாம் கொண்டாடிய அவன் ஒரு ஹோமாவா என்பதாகவே இருக்குமே அன்றி (ஹோமோபோபியா) அது ஒரு குற்றம் என்று தோன்றாது. என்னவொரு பண்பாடற்ற, நுண்ணுணர்வற்ற சமூகம் இது?