"பெண்கள் என்று வரும்போது "நீயா நானா" அரசியல் சரிநிலையின் போலித்தனத்துக்குள் சிக்கிக் கொள்கிறது, வேலைக்குப் போகாமல் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் அந்த வாழ்க்கை சௌகர்யமாக இருப்பதாலே அதைச் செய்கிறார்கள், காலையில் எழுந்து பயணம் செய்து மாலை வரை அலுக்க அலுக்க வேலை செய்து வியர்த்து நசுங்கி வீட்டுக்கு வந்து அப்படா என டீவி பார்த்து படுப்பதற்கு வீட்டிலேயே உட்கார்ந்து கொள்வது தானே சௌகர்யம்? அதுவும் குறைவான நபர்கள் கொண்ட, வீட்டு வசதிப் பொருட்கள் கொண்ட ஒரு வீட்டில்? அதே நேரம் இவர்களுக்கு சொந்த செலவுக்கு பணமில்லையே, சுயசார்பு இல்லையே எனும் வருத்தமும் உண்டு. ஆனால் இவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, தாம் எடுத்த முடிவின் சாதக பாதகங்களை அனுபவிப்பவர்கள். அது மட்டுமல்ல, இவர்கள் படித்துள்ள படிப்புக்கு 1-2 லட்சம் மாத வருமானம் வருமெனில் வீட்டில் உட்கார மாட்டார்கள். உ.தா இந்த வரிசையில் ஒரு மருத்துவர் கூட வீட்டு மனைவியாக இருக்க மாட்டார். இருக்க வேண்டுமெனில் அது கோடீஸ்வர குடும்பமாக இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு முடிவும் பொருளாதார அடிப்படையில், தத்தம் வசதிக்காக எடுக்கப்பட்டு என்னை வீட்டில வேலை பார்க்க விடல எனப் புலம்புவது என்ன நியாயம்? ஒரு முடிவை எடுத்து விட்டு ஏன் பழியை அடுத்தவர்கள் மீது போட வேண்டும்? இது தான் எதார்த்தம்!
இதில் எத்தனை பேர் தம் கணவன் "நான் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன், நீ வேலைக்குப் போ" என்றால் ஒப்புக் கொள்வார்களா? பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உடனே உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்கள். அப்படியென்றால் பெண்ணின் லட்சணம் என்ன?
விதிவிலக்குகள் இருக்கலாம் - ஆனால் வீட்டில் இருப்பதை விட வேலைக்குப் போவதே சுலபம், வசதி, லாபகரம் எனத் தெரிந்தால் இவர்கள் வேலைக்குப் போவது உறுதி.
இதையெல்லாம் எடுத்துக் கேட்காமல் சதா பெண்கள் என்றால் விக்டிம்கள் என உருட்டுவது என்ன நியாயம் நீயா நானா டீம்?" என நான் நேற்றைய ஷோவைப் பார்த்துக் கொண்டிருக்கையில் பொறுக்க மாட்டாமல் ஒரு தோழரிடம் கேட்டுக் கொண்டிருந்த போது அவர் கிளிக்கிய படம்!