விக்ரம் இந்த பிக்பாஸ் பருவம் முழுக்க நிலைமாறாமல், சமநிலை தவறாமல், கொஞ்சம் கூட தன் இயல்புணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருந்தார். அது ஒரு போலித்தனம். அதாவது விக்ரம் இந்த ஷோவுக்காக இப்படிச் செய்தார் என்று நான் சொல்லவில்லை - அதுவே அவர் இயல்பு, அவர் வேலையிடங்களில், பொதுவிடங்களில் இப்படியே இருப்பார், அவர் மனதில் என்ன ஓடுகிறதென நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. ஒரு அரசியல்வாதிக்குத் தேவையான மிக முக்கியமான இயல்பு இந்த செயற்கைத்தனம். உள்ளுக்குள் எவ்வளவு எரிமலைகள் வெடித்தாலும் வெளியே எப்படி ரம்யா பாண்டியனும் அவரது குடும்பத்தினரும் எப்போது சிரித்த மேனிக்கு இருந்தார்களோ அப்படியே தான் விக்ரமும், இது இப்படியானவர்களின் அடிப்படை சுபாவம். இந்த கேமராக்கள் இல்லாவிடில் அந்தரங்கமான சூழல் கிடைத்தால் இவர்கள் வேறுவிதமாக இருப்பர். 24 மணிநேரமும் ஒருவரால் அப்படி இருக்க முடியுமா என்றால் முடியும் - ஆயுள் பூரா கூட இருக்க முடியும்.
அவ்விதத்தில் நாம் பார்த்தது விக்ரம் எனும் ஒரு மனிதனை அல்ல, ஒரு முகமூடியை.
அஸீம் ஒரு சகிக்கத்தக்க ஆளுமை அல்ல. ஆனால் அவர் பொதுவெளியில் தன்னை வெளிப்படையாக மிகையாக முன்வைப்பார். மேலும் இந்த நிகழ்ச்சியின் அமைப்புக்கு ஏற்ப அவர் வில்லன் பாத்திரத்தில் பக்காவாகப் பொருந்திப் போனார். அவ்வாறே அவரைக் காட்டினார்கள், அவரும் அதைப் பொருட்படுத்தவில்லை, அதுதான் அவரது வெற்றி, நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ நான் இப்படித்தான் இருப்பேன் என்பதில் உள்ள நாணயம்! நிஜத்தில் அணுக்கத்தில் கேமரா இல்லாமல் அஸீம் இன்னும் சற்று கனிவாக மென்மையாக இருப்பார், தன் ரத்தக்கொதிப்பு அதிகமாகும் போது மட்டும் கொந்தளிப்பார் எனத் தோன்றுகிறது. அதாவது அவர் பிக்பாஸில் அணிந்ததும் ஒரு முகமூடிதான் - சிலரால் அப்படித்தான் தன்னை வெளிப்படுத்த இயலும். ஆனால் அது அவரது இயல்புக்கு நெருக்கமான முகமூடி!
அப்புறம் அவரது நார்ஸிஸம் - அதை ஊக்கப்படுத்தும் போக்கை அவரது அப்பாவின் மேடை உரையில் கவனித்தேன். சிறுவயது முதலே அப்படி நார்ஸிஸம் முன்னெடுக்கப்பட்ட ஒரு சூழலிலே அஸீம் வளர்ந்திருக்க வேண்டும். அப்புறம் அஸீமின் நார்ஸிஸம் எனக்கு சில முக்கிய தமிழ் எழுத்தாளர்களை நினைவுபடுத்தியது!